தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான பிரச்சினைகளுக்கு தீர்வில்லாமல் வட-க்கு, கிழக்கு இணைப்பு சாத்தியமற்றது | தினகரன் வாரமஞ்சரி

தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான பிரச்சினைகளுக்கு தீர்வில்லாமல் வட-க்கு, கிழக்கு இணைப்பு சாத்தியமற்றது

தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் பிரதியமைச்சரும், முஸ்லிம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அலிஸாஹிர் மௌலானாவுடனான நேர்காணல்:

வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் வேறு வேறாக வாழ்ந்தாலும் அவர்களுடைய மொழி ஒன்றாக இருக்கிறது. பல ஒருமைப்பாடான கருத்துக்களும் இருக்கின்றன என்கின்றார்

தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சின் பிரதியமைச்சரும், முஸ்லிம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அலிஸாஹிர் மௌலானா. வாரமஞ்சரிக்கான நேர்காணலின்போது இவ்விரு சமூகங்களுக்குடைமிடையில் எரிந்து கொண்டிருக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டாலன்றி வடக்கு கிழக்கு இணைப்பென்பது சாத்தியமில்லை என்கின்றார். அவரது பேட்டியின் முழு விபரம் வருமாறு....

கேள்வி: இலங்கை பல்லின மக்கள் வாழ்கின்ற ஒரு நாடு. இந்த நாட்டில் யுத்தம் நிறைவடைந்தாலும் இன்னும் சமூகங்களிடம் முரண்பாடுகள் அவ்வப்போது எழுந்த வண்ணம் இருக்கின்றன. இதற்கு மத்தியில் நாட்டில் சகவாழ்வை ஏற்படுத்த உங்களது அமைச்சினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை தெளிவுபடுத்த முடியுமா?

பதில்: உண்மையில் நாட்டில் தற்போது யுத்தம் இல்லாத ஒரு சூழ்நிலை காணப்படுகிறது. அது பெரியதொரு விடயம். நாட்டில் மோதலுக்குப் பின் அபிவிருத்திகள், நல்லிணக்கம், நிலைமாறுகால நீதி, மொழி அமுலாக்கல் என்பன கவனத்தில் எடுக்கப்பட்டுள்ளன. அந்த அடிப்படையில்தான் எங்களுடைய அமைச்சு வீடில்லாதவர்களுக்கு வீடு, பொருளாதார வசதி இல்லாதவர்களுக்கு வாழ்வாதாரம், வட, கிழக்கில் உள்ளவர்களுக்கு உட்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றில் அபிவிருத்திகளை முன்னெடுக்கின்றது.

எனினும், யுத்தம் இல்லாத சூழ்நிலையாக இருந்தாலும் மக்களுக்கு அவ்வப்போது பிரச்சினைகள் ஏற்படுத்தப்படுகின்றன. உதாரணமாக அண்மையில் அம்பாறையில், கண்டியில் முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தப்பட்ட வன்முறைகளை குறிப்பிட முடியும். இந்நிலையில் இலங்கையில் வாழும் சிறுபான்மை மக்கள் இரண்டாம் தரப் பிஜையாக இருக்க முடியாது. இலங்கையர்கள் என்ற ரீதியில் எல்லா மக்களும் அரசியல் ரீதியாக சம அந்தஸ்தோடு கௌரவமாக வாழ வேண்டும். அதை உறுதிபடுத்தக் கூடிய அரசியல் அமைப்பு வந்தாலே போதும். அப்படியென்றால் ஒன்றிணைந்த அரசாங்கத்திலே நாங்கள் வாழலாம். இந்த நாட்டில் பல்லினம் வாழ்வது ஒரு சக்தியாக இருக்க வேண்டும். ஒரு இனம் மற்றைய இனத்தை மதிக்க வேண்டுமே தவிர ஒருவருக்கொருவர் குரோதமான முறையில் இருக்கக் கூடாது.

கேள்வி: யுத்தத்தின் பின் முக்கியமான பணிகளில் ஒன்றாக கருதப்பட்ட நல்லிணக்க வேலைத்திட்டத்திற்கு என உருவாக்கப்பட்ட உங்களது அமைச்சின் வேலைத்திட்டங்கள் போதியளவு மக்களிடம் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றனவா?

பதில்: எமது அமைச்சில் உள்ள விடயங்களை அமுலாக்குவதற்கு எமது அமைச்சர் மனோ கணேசன் உட்பட அமைச்சினூடாக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். அதற்காக வடகிழக்கில் இடம்பெயர்ந்த குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களுடைய வீடுகளையும் மற்றும் மாகாண சபை, உள்ளூராட்சி சபை, பெருந்தெருக்கள் அமைச்சுக்குரிய வீதிகள் எல்லாம் எமது அமைச்சினூடாக புனர்நிர்மாணம் செய்து கொடுக்க இருக்கின்றோம். கிட்டத்தட்ட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கப் போகின்றோம். அத்தோடு பாதிக்கப்பட்ட மக்களினது வாழ்வாதாரம், கல்வி, சுகாதாரம் போன்றவற்றை சம்பந்தப்பட்ட அலுவலகங்களினூடாக எமது அமைச்சின் நிதிஉதவியோடு அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம்.

அதேபோன்று எமது அமைச்சினூடாக சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளை அரச ஊழியர்களுக்கு அவர்கள் பணியாற்றும் இடத்துக்கு ஏற்ப கட்டாயம் பயிற்றுவித்து அனுப்புகின்றோம். இன்னும் மொழி அமுலாக்கலில் அரச அலுவலகங்களின் விளம்பரப் பலகைகளில் சிங்களம் அல்லது தமிழ் மொழிக் கொலைகள் இடம்பெற்றிருப்பின் அவற்றை திருத்தம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். அதற்கு குறித்த அலுவலகத்திடம் பணமில்லாவிட்டால் அதை எமது அமைச்சினூடாக வழங்குவதற்கும் நாங்கள் ஏற்பாடு செய்கிறோம். அதேபோன்று விண்ணப்பப்படிவங்கள் இரண்டு மொழிகளிலும் வழங்கப்படுவதை உறுதிசெய்கிறோம். மேலும் ஒவ்வொரு கிராமசேவகர் பிரிவுகளிலும் சகவாழ்வை ஏற்படுத்துவதற்காக கிட்டத்தட்ட 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நல்லிணக்கக் குழுக்களை உருவாக்கி அவர்களினூடாக அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க இருக்கின்றோம்.

கேள்வி: அலுவலகங்களின் விளம்பரப் பலகைகளில் மொழிப் பிழைகள் பல இடங்களில் காணக்கூடியதாக இருக்கிறது. இவற்றை எவ்வாறு உங்களது அமைச்சினூடாக நிவர்த்திக்க திட்டமிட்டிருக்கிறீர்கள்?

பதில்: இதற்காக எல்லா அரச நிறுவனங்களுக்கும், அரசாங்க அதிபர்களுக்கும், பிரதேச செயலகங்களுக்கும் மொழி அமுலாக்கள் சம்பந்தமாக 25க்கும் அதிகமான சுற்றுநிருபங்கள் பொது நிருவாக அமைச்சின் மூலம் அனுப்பப் பட்டிருக்கிறது. இதை அமுல்படுத்துவதற்கு நிறுவன பொறுப்பாளர்களுக்கு பூரண அதிகாரமும் கூட கொடுக்கப்பட்டிருக்கிறது.

கேள்வி: நாட்டின் அரசகரும மொழிகளாக சிங்களமும். தமிழும் காணப்படுகின்றன. ஆனால் வடகிழக்கில் கூட அரச ஸ்தாபனங்களில் தமிழில் கடமைகளைச் செய்வதிலும், இங்கிருக்கும் அலுவலகங்களுக்கு சுற்றுநிருபங்கள் இன்னும் சிங்கள மொழியில் வருவதாலும் பிரச்சினைகளை மக்கள் எதிர்கொள்கின்றனர். இப்பிரச்சினைக்கு நீங்கள் என்ன தீர்வை முன்வைக்கப் போகின்றீர்கள்?

பதில்: உண்மையில் இது ஒரு பெரிய பிரச்சினை தான். இதற்கு இரண்டாம் மொழியைக் கற்றல் என்ற திட்டத்தை அமுல்படுத்தி வருகின்றோம். தாய் மொழி சிங்களமாக இருந்தால் இரண்டாம் மொழியாக தமிழைக் கற்க வேண்டும். தாய் மொழி தமிழாக இருந்தால் இரண்டாம் மொழியாக சிங்களத்தைக் கற்க வேண்டும். இவ்வாறு கற்ற அரச ஊழியர்கள் கடமைக்கு வருகின்ற நேரத்தில் மொழி பெயர்ப்பு பிரச்சினைகளை அவர்கள் நிவர்த்தி செய்வார்கள்.

இப்போது ஆட்பலம் குறைவாக இருப்பதனால் சிங்களத்தில் வருகின்ற ஒரு சுற்றுநிருபம் தமிழில் வர காலதாமதமாகின்றது. இதனால்தான் அண்மையில் க.பொ.த. சாதாரண தரத்தில் இரண்டாம் மொழியில் சித்தியடைந்த 30 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்களை சுகததாச அரங்கில் அழைத்து ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஊடாக அவர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தோம். அவர்கள் கட்டாயம் இரண்டாம் மொழியைக் கற்க வேண்டும் என்ற ஊக்கத்தை வழங்குவதற்காகச் செய்தோம். அவர்கள் படித்து எதிர்காலத்தில் அரச சேவைக்கு வருகின்ற போது இரண்டு மொழியிலும் சேவையாற்றும் தகுதியுடையவர்களாக இருப்பார்கள். இவ்வாறாக முற்கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

கேள்வி: கடந்த ஆட்சிக் காலத்தில் அரச சார்பற்ற நிறுவனங்களின் சுதந்திரமான நடவடிக்கைகளில் தலையீடுகள் காணப்பட்டன. ஆனால் இந்த ஆட்சிக் காலத்தில் அவ்வாறு இல்லாமல் அவர்கள் சுதந்திரமாக செயற்படுவதற்கு வழிவகுக்கப்படுகிறதா?

பதில்: அரச சார்பற்ற நிறுவனங்கள் எல்லா சமூகங்களும் பயனடையும் வகையில் சேவையாற்ற வேண்டும். கடந்த காலங்களில் பல அரச சார்பற்ற நிறுவனங்கள் தேவையில்லாத இடங்களிலெல்லாம் கட்டிடங்களைக் கட்டிவிட்டு போயிருக்கிறார்கள்.தேவையுடைய மக்கள் கட்டிடங்கள் இல்லாமல் தவிக்கிறார்கள்.

கேள்வி: வடகிழக்கு இணைப்புத் தொடர்பில் உங்களதும் உங்களது கட்சியினதும் நிலைப்பாடு என்ன?

பதில்: வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் வேறு வேறாக வாழ்ந்தாலும் அவர்களுடைய மொழி ஒன்றாக இருக்கிறது. பல ஒருமைப்பாடான கருத்துக்களும் இருக்கின்றன. ஆனால் காணி போன்ற விடயங்களில் சில சிக்கல்கள் எம்மத்தியில் உள்ளன. அவற்றைத் தீர்த்துத் தரமுடியுமென்றால் நாங்கள் இணைந்து வாழ்வதில் பிரச்சினை இல்லை. இவ்வாறான பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்கின்ற போது எப்படி மக்கள் ஒன்றாக வாழ்வதற்கு யோசிப்பார்கள். அப்படி பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு சுமூகமான நிலை ஏற்படுமானால் இணைப்பதற்கு தயார். ஆனால் நிலைமை அப்படி இல்லை.

ஆனால் கடந்த காலங்களில் ஆர். சம்பந்தன் போன்ற தமிழ் தலைவர்களுடன் முஸ்லிம் தலைவர்களும் பேசி சில விடயங்களில் உடன்பாடுகள் எட்டப்பட்டிருக்கின்றன. அதேபோன்று பல விடயங்களில் உடன்பாடுகள் எட்டப்படாமலும் இருக்கின்றன. எதிர்கால சந்ததிக்கு நல்லவிடயங்களைக் கொடுக்க முடியும் என்று நல்லெண்ணத்துடன் இறங்கினால் அங்கு எல்லா கட்சிகளும், தலைவர்களும் அதற்கு உடன்படுவார்கள் என்ற நம்பிக்கை உண்டு.

நேர்காணல்: எம். ஐ. சம்சுடீன்  (கல்முனை விசேட நிருபர்)

Comments