தேசப்பற்று, தேசத்துரோகம்: சிக்கலான பிரச்சினைக்கு பதிலளிக்க முடியாது | தினகரன் வாரமஞ்சரி

தேசப்பற்று, தேசத்துரோகம்: சிக்கலான பிரச்சினைக்கு பதிலளிக்க முடியாது

முன்னாள் சபாநாயகர் தேசமான்ய எம்.ஏ பாக்கீர் மாக்காரின் 21ஆவது நினைவுப் பேருரை கடந்த புதன் கிழமை, இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றபோது, பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய ஆற்றிய உரையினை வாரமஞ்சரி வாசகர்களுக்குத் தருகின்றோம்.

அனைவரையும் ஒன்றுதிட்டுகின்ற இலங்கைக்கான நோக்கு இத்தடவை தேசமான்ய எம்.ஏ. பாக்கீர் மாக்காரை நினைவு கூர்கின்ற ஞாபகார்த்தப் பேருரையின் தலைப்பாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தேசமான்ய எம்.ஏ. பாக்கீர் மாக்காரை நினைவுகூர்வதற்காக முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரின் வழிகாட்டலின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட தேசிய நல்லிணக்கத்திற்கான பாக்கீர் மாக்கார் நிலையம் ஒவ்வோராண்டிலும் ஞாபகார்த்தப் பேருரையினை ஏதேனும் பயனுறுதிமிக்க உரையாடலுக்கான தலைப்பில் கீழ் ஏற்பாடு செய்துவருவது மிகவும் முக்கியமான எடுத்துக்காட்டு.

பாக்கீர் மாக்கார் நிலையமானது கடந்த பல ஆண்டுகளாக நடைமுறைப்படுத்திய நிகழ்ச்சித் திட்டங்களின் உள்ளடக்கத்தை ஆராய்கையில் இன்று கவனத்திற்கு கொண்டு வரப்படுகின்ற தலைப்பிற்கான பின்புலம் அமைந்துள்ளமை தெளிவாகின்றது. குறிப்பாக பாக்கீர் மாக்கார் நிலையம் பல வருடங்களுக்கு முன்னர் பிரகடனஞ் செய்த ‘வெலிகம பிரகடனம்’ மிக முக்கியமான ஒரு பிரகடனமென நினைக்கின்றேன்.

சமூகத்தை மாற்றியமைக்க மிக நீண்ட காலந்தொட்டே செயலாற்றிய புத்தபிரான், நபிகள் நாயகம், இயேசு கிறிஸ்து நாதர், மகாவீரர் போன்ற உத்தமர்களைப் போன்றே....

கொன்பியுசியஸ் போன்ற தத்துவஞானிகளும் தமது அரும்பணியை நிறைவேற்ற எடுத்துள்ள முயற்சிகள் எமக்கு சிறந்த முன்னுதாரணங்களாக எஞ்சியுள்ளன.

அண்மைக்கால வரலாற்றில் மஹாத்மா காந்தி, மார்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா போன்ற தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ள உதாரணங்கள் இத்தகைய முயற்சிகளுக்கு பல முன்னுதாரணங்களை வழங்கியுள்ளன. இவை பற்றி நன்றாக புரிந்து கொள்வதும் கற்பதும் மிகவும் முக்கியமானதாகும்.

ஒரு மதத்தை வேரொரு மதத்தை விடவும் உயர்வாக மதித்தல், இனமொன்றை இன்னுமொரு இனத்தை விடவும் உயர்வாக மதித்தல், சாதியொன்றை இன்னுமொரு சாதியை விடவும் உயர்வாக மதித்தல் போன்ற துரதிர்ஷ்டவசமான காரணிகளால் இன்று உலகம் பூராகவும் மோதல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் அரசியல், அதிகார வேட்கை போன்ற காரணங்கள் சேர்க்கப்படுவதால் பாரிய அழிவு ஏற்படுகின்றது.

ஆகையால் பாக்கீர் மாக்கர் நிலையம் தனது அரும்பணிகளின் போது மேற்படி விடயங்களை கவனத்திற்கொண்டு நிகழ்ச்சிகளை திட்டமிடுவது மிக முக்கியமானதாகும்.

மூன்று தசாப்த கால கொடிய யுத்தத்திற்கு பின் இலங்கை இன்று எதிர்நோக்கியுள்ள நெருக்கடி யாது?

இலங்கையில் யுத்தம் ஏன் ஆரம்பமானது? அதனை பகுப்பாய்வு செய்வது மிகவும் சிக்கலான ஒரு விடயம். ஆனாலும், எளிதாகக் கூறுவதாயின், எமக்கு அனைவரையும் ஒருங்கிணக்கக்கூடியவாறான ஒரு சமூக, அரசியல் தத்துவத்தை கட்டியெழுப்ப முடியாமற்போனமையே அதற்கான முக்கிய காரணமாகும்.

எமக்கு சுதந்திரத்தை வழங்கிய, இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ். சேனாநாயக்க சுதந்திர தினத்தில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் முக்கிய பகுதி, எமக்கு புகட்டும் பாடம் அளப்பரியது.

சிங்கள, தமிழ், முஸ்லிம், யுரேஷிய, பௌத்த, இந்து, இஸ்லாம், கத்தோலிக்க மக்கள் அனைவருமே இனிமேல் இலங்கையர்களாக இருத்தல் வேண்டுமென அவர் கூறினார்.

இன்று உங்கள் கதையாடலுக்கான முன்னுரையை 1948இல் டி.எஸ். சேனாநாயக்க வழங்கியுள்ளார். துரதிர்ஷடவசமாக எமக்கு அதனை வாசிக்க முடியவில்லை. மூன்று தசாப்தகால யுத்தத்தின் முடிவிலும் நாங்கள் அந்த கற்பிக்கப்பட்ட பாடத்துக்கு ஏற்ப நடந்து கொண்டிருந்திருக்க வேண்டும்.

ஆனால், நடந்தது என்ன? அதிகார அரசியலை அடிப்படையாகக் கொண்ட கருத்திட்டமொன்றின் மூலம் சகலரையும் ஒன்றிணைப்பதை விடுத்து வெற்றியாளர்கள் மற்றும் தோல்வி அடைந்தவர்களென்று சமூகத்தில் பிரிவினை உருவாக்கப்பட்டது.

அதனால் சர்வதேச அரங்கில் நாம் தனிமைப்படுத்தப்பட்டதுடன் நின்று விடாது சர்வதேச அழுத்தங்களையும் எதிர்கொள்ள நேர்ந்தது. அது தொடர்பாக ஆழமாக விபரிப்பதற்கு இந்த தருணத்தில் நான் எதிர்பார்க்கவில்லை.

ஆனால், விடுக்கப்பட்ட அச் சவாலினை வெற்றிகொள்வதற்கு, இலங்கையில் அரசியல் மாற்றமொன்று தேவைப்பட்டது. இலங்கையில் முதல் தடவையாக சமூக நீதி கருதி இலங்கை மக்களை அணிதிரட்டும் பணியானது, 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போதே இடம்பெற்றது.

நாட்டுக்கு விடுக்கப்பட்ட பாரிய சவாலுக்கு முடிவு கட்டவே அனைவரும் ஒன்றிணைந்தார்கள். உண்மையிலே இச்சவால் என்ன? போருக்கு பின்னர் அனைவரையும் ஒன்றிணைக்கும் இலங்கையை கட்டியெழுப்புவதை அடிப்படையாக கொண்ட நோக்கு ஒன்றை உருவாக்க நாம் தவறிவிட்டோம்.

அதற்கான வேலைத் திட்டமொன்றை ஒரு நாட்டின் ஆட்சியாளர்களே உருவாக்குதல் வேண்டும். அது நிறைவேற்றுத்துறை, சட்டவாக்கத்துறை மற்றும் நீதித்துறையின் பொறுப்பாகும். அரசியலமைப்புத் திருத்தம், புதிய அரசியலமைப்பொன்றின் கருத்தாடல், சுயாதீன ஆணைக்குழுக்களின் தேவை, தகவலுக்கான உரிமையை உறுதிப்படுத்தல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல் போன்ற சகல விடயங்களும் அனைவரையும் ஒன்றிணைக்கும் இலங்கையினை கட்டியெழுப்புவதற்கான நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு ஏற்புடையதாகும் விடயங்களாகும்.

இதன் போது, ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமைகள் ஆணைக்குழு, ஐரோப்பிய ஆணைக்குழு போன்ற சர்வதேச உறவுகள் தொடர்பாக நாம் அதிக கரிசனையுடன் பயன்மிக்கதாக செயற்படுதல் வேண்டும்.

இவ்வாறான சர்வதேச அமைப்புகளுடன் பணியாற்றுகையில் எமது நேர்மைத்தன்மை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. எம்மால் தனித்துச் செயற்பட முடியாது. குறுகிய மனப்பான்மையில் செயற்படவும் முடியாது.

நாம் 2015ஆம் ஆண்டுக்கு முன்னர், இவ் விடயம் தொடர்பாக செயற்பட்ட விதம் மிகவும் கவலைக்குரியது. இறுதியில் நாம் பொருளாதாரத் தடைகள், வெளிநாட்டுப் பயணத் தடைகள் போன்ற தீர்மானங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்தோம்.

தேசப்பற்று, தேசத்துரோகம் போன்ற சொற் பதங்களின் மூலம் இவ்வாறானதொரு சிக்கலான பிரச்சினைக்கு பதிலளிக்க முடியாது.

நானும் இராணுவத்தில் சேவையாற்றியவன், இந்ந நாட்டில் முதலாவது கிளர்ச்சி ஏற்பட்ட 1971இல் அந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு தரைப்படையில் உத்தியோகத்தராக இணைந்து பணியாற்றி இருக்கிறேன்.

போரின் போது உயிரிழப்புகள் ஏற்படுவது இயற்கையே, ஆனால், அதையே காரணங்காட்டி, காணாமல் ஆக்கப்படுதல், கடத்தல்கள், கைது செய்தவர்களை படுகொலை செய்தல் போன்ற சம்பவங்கள் இடம்பெறுமானால், அது ஏற்றுக்கொள்ளப்பட்ட யுத்த நெறிகளுக்கு முரணாகும்.

தற்பொழுது, மூன்று தசாப்த சிவில் யுத்தத்தின் போது, இவ்வாறான சவால்கள் எழுந்ததாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன.

இவற்றை சரி செய்வது, ஒழுக்கமிக்க, புகழ்மிக்க வரலாற்றைக் கொண்டுள்ள இராணுவமொன்றுக்கு செய்யக்கூடிய மரியாதையே அன்று அவமரியாதை அல்ல.

எந்தவொரு நிறுவனத்திலும், சமூகம் அமைப்பிலும் நல்ல மனிதர்களைப் போன்றே கெட்ட மனிதர்களும் வாழ்கின்றார்கள். நல்லதைப் பேணிப்பாதுகாக்க வேண்டுமாயின், கெட்டதை அடையாளம் காணவும் அதனைத் தவிர்க்கவும் வேண்டும்.

அனைவரையும் ஒன்றிணைக்கும் இலங்கைக்கான ஒரு நோக்கினை உருவாக்கும். வேலைத்திட்டத்தில் மூன்று தசாப்தகால யுத்தத்தின் கசப்பான நினைவுகளை நீக்குவதற்கான வேலைத்திட்டத்தை குறுகிய மனப்பாங்குகளை விடுத்து நடைமுறைப்படுத்துவது முக்கியமானதாகும்.

தற்போதைய அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள நல்லிணக்கம் பற்றிய தேசிய வேலைத்திட்டம், காணாமற்போனோர் பற்றிய அலுவலகம், பாதிக்கப்பட்டவர்களுக்காக உத்தேசிக்கப்பட்டுள்ள இழப்புகளை எதிரீடு செய்வதற்கான அலுவலகம், உண்மையைக் கண்டறிதல் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய நடவடிக்கைகள் தொடர்பில் மக்களை தெளிவாக அறிவுறுத்துதல் முக்கியமானதாகும்.

தேசிய நல்லிணக்கம் பற்றி பாக்கீர் மாக்கார் நிலையத்துக்கு இது தொடர்பில் ஆற்றக்கூடிய ஏராளமான பணிகள் இருப்பதாக நான் கருதுகின்றேன். இந்த செயற்பாடுகள் தொடர்பில், அதிகாரவெறி பிடித்த அரசியலினால் உருவாக்கப்படும் பூதாகரமான விடயங்களை வெளிப்படுத்துவதில் உங்களுக்கு பாரிய பணிகளை ஆற்ற முடியும். இத்தகைய வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துகையில் அதற்கு தலைமைத்துவம் வழங்குவோரது வகிபாகம் மிகவும் முக்கியமானதாகும்.

பிரத்தியேக ஒழுங்குப் பத்திரத்தை புறந்தள்ளிவிட்டு பொது ஒழுங்குப் பத்திரமொன்றுக்கேற்ப ஒழுகும் பலம் அவர்களிடம் காணப்படுதல் வேண்டும்.

தம்மைப் பற்றி சிந்தியது நம்மைப் பற்றி சிந்திக்க வேண்டும். இத்தகைய வேலைத்திட்டமொன்றின் இறுதியில் தாம் இருக்கும் நிலையைப் பற்றி அல்லாது நாடு இருக்கும் நிலை பற்றி நினைவுக்குமளவுக்கு அவர்கள் தூரநோக்குடையவர்களாக இருத்தல் வேண்டும்.

தேசிய ஒற்றுமைக்கான பாக்கீர் மாக்கார் நிலையமானது அத்தகைய பரந்த ஒரு சூழமைவில் செயற்படுவதற்கு தேவையான அடிப்படையை தயார் செய்துள்ளதாகவே நான் நினைக்கின்றேன். அதற்கான பாரிய பலமும் வழிகாட்டலும் உள்ளது. அது இந்த நிலையத்தின் உருவாக்கத்திற்கு வழிகோலியவர் பாக்கீர் மாக்கார் ஆவார். அவரது வாழ்க்கை முறை தங்களுக்கு வழிகாட்டும். இஸ்லாம் மதத்தவரான அவர் ஒருபோதும் மதவாதியாக இருக்கவில்லை. முஸ்லிம் இனத்தவரான அவர் ஒருபோதும் இனவாதியாக செயற்படவில்லை. சட்டத்தரணியான அவர் ஒருபோதும் வசூல்ராஜா என்ற பட்டத்தை பெறவில்லை. ஒரு அரசியல்வாதியாக அவர் அரசியலில் பல முன்னுதாரணங்களை வழங்கியுள்ளார். எப்போது மக்களை ஒரு சொத்தாகக் கருதி செயற்பட்டார். சவால்களுக்கு மத்தியில் மனச்சாட்சிக்கு நேர்மையான நடந்துகொண்டார். ஒருபோதும் கேடுவிளைவிப்பவராக இருக்கவில்லை. தியாகம் மற்றும் அர்ப்பணிப்புக்களையும் அவரது அரசியல் வாழ்க்கையில் எமக்கு காணக்கூடியதாக உள்ளது.

நாம் இவற்றைப் பற்றி ஆழமாகச் சிந்திக்க வேண்டும். பாக்கீர் மாக்காரிடம் காணப்பட்ட உன்னதமான பண்புகளை நான் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரிடமும் காண்கிறேன். இன்றளவில் இம்தியாஸ்பாக்கீர் நாட்டில் பிரதான சவாலாக காணப்படும் நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் இலக்காகக் கொண்டு இந்த நிலையத்தினூடாக தன்னால் முடிந்தளவில் செய்துவரும் அரும்பணியை நாம் பாராட்ட வேண்டும்.

மாஓ சேதுங் கூறியது போல “இருளை சபித்துக்கொண்டிருக்காமல் ஒளி ஏற்றுவதே சிறந்தது” அவ்வாறான ஒரு முயற்சியில் ஈடுபடும் தேசிய ஒற்றுமைக்கான பாக்கீர் மாக்கார் நிலையத்திற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றேன்.

 

Comments