சர்வதேச தகவல் அறியும் உரிமை தினம் | தினகரன் வாரமஞ்சரி

சர்வதேச தகவல் அறியும் உரிமை தினம்

சர்வதேச தகவலறியும் உரிமை தினம் எதிர்வரும் 28 ஆம் திகதியாகும். இலங்கையில் இம்முறை இதனை விரிவாக மக்கள் மயப்படுத்தும் பொருட்டு செப். 21 முதல் 28 வரையிலான காலப் பகுதியை தகவலறியும் உரிமை வாரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஏதாவதொரு தகவலை அறிந்துகொள்வதற்கு நாட்டின் பிரஜை உரித்துடையவனாவான். அந்த உரிமையை பெற்றுக் கொள்வதற்கு பொதுநிறுவனம் ஒத்துழைக்காவிட்டால்.

தகவல் ஆணைக்குழுவிடம் மேன்முறையீடொன்றை முன்வைக்கும் உரிமை உள்ளது.

இந்த மேன்முறையீடுகளை பரீட்சிக்கும் முறை, தகவலறியும் உரிமை மற்றும் ஆணைக் குழுவின் வகிபாகங்கள் குறித்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பியதிஸ்ஸ ரணசிங்க அளித்த நேர்காணல்:-

Q தகவலறியும் சட்டத்தை அமுல்படுத்துவதில் ஆணைக்குழுவின் வகிபாகத்தை சற்று தெளிவுபடுத்துங்கள்?

ஒரு பிரஜை தகவல்களை கேட்டு அனுப்புகின்ற விண்ணப்பம் தொடர்பில் பொதுநிறுவனம் சபை உரிய முறையில் பதிலளிக்காவிட்டால் அல்லது கிடைக்கப்பெற்ற தகவல் தொடர்பில் பிரஜை திருப்தியடையாவிட்டால் அது குறித்து மேன்முறையீடொன்றை தாக்கல் செய்ய முடியும். கீழ்க்காணும் விடயங்களின்படியே மேன்முறையீட்டை தாக்கல் செய்ய முடியும். முதலில் தகவல் அதிகாரியிடம் விண்ணப்பத்தை ஒப்படைக்க வேண்டும். இங்கு திருப்திகரமான பதிலேதும் கிடைக்காவிட்டால் பெயர் குறிப்பிடப்பட்ட அதிகாரியிடம் மேன்முறையீடு செய்யலாம். இங்கும் திருப்திகரமான பதிலேதும் கிடைக்காவிடடால் தகவல் அறியும் ஆணைக்குழுவிடம் விண்ணப்பிக்க முடியும். மக்கள் இவ்வாறு விண்ணப்பிக்கும் மேன்முறையீடுகளை பரிசோதிப்பதே எமது ஆணைக்குழுவின் மிக முக்கிய பணியாக உள்ளது. தற்போது எமது ஆணைக்குழுவில் 632 மேன்முறையீடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

Q இவ்வகையில் கிடைக்கப்பெறுகின்ற மேன்முறையீடுகளின் தன்மைகள் குறித்து தெளிவுபடுத்துவதாயின்?

மேல் மாகாணத்திலிருந்தே கூடுதலான மேன்முறையீடுகள் கிடைக்கின்றன. மேன்முறையீடுகளுள் 30 வீதமானவை மேல் மாகாணத்தை சேர்ந்தவை. இரண்டாவது தென் மாகாணத்திலிருந்து அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. மூன்றாவது மத்திய மாகாணத்திலிருந்தும், நான்காவது வட மாகாணத்திலிருந்தும் மேன்முறையீடுகள் கிடைத்துள்ளன. வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலிருந்து குறைந்தளவிலான மேன்முறையீடுகளே கிடைக்கப்பெற்றுள்ளன. கிடைக்கப் பெற்றுள்ள மேன்முறையீடுகளை விடய வாரியாக வேறுபடுத்தினால் அவற்றை 12 விடயங்களின் கீழ் பட்டியலிட முடியும்.

இதில் மனித வளப் பிரச்சினை மிக முககியமானது. நிறுவனத்தில் சேவை புரிகின்ற சேவையாளரின் நியமனம், பதவி உயர்வு, பரீட்சை, ஓய்வூதியம் போன்றவற்றையும இதன் கீழ் கொண்டு வரலாம். இது தொடர்பில் 30 வீதமான மேன்முறையீடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. 20 வீதமானவை காணி மற்றும் சொத்துக்கள் தொடர்பானவையாகும். நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகள் மூன்றாம் இடத்தை பெறுகின்றது. இது தொடர்பில் 10 – 15 வீதமான பிரச்சினைகள் முன்வைக்கப்படுகின்றன. அடுத்த விடயமாக சுற்றாடல் பிரச்சினைகளை குறிப்பிடலாம். சூழல் மோசடி குறித்தும், மத்திய சுற்றாடல் அதிகாரசபை குறித்தும், நீர் வடிந்தோடுவதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

அடுத்த விடயமாக கல்வி மற்றும் சுகாதாரம் பற்றிய பிரச்சினைகள் முன்வைக்கப்படுவதைக் குறிப்பிடலாம். பிள்ளைகளை பாடசாலைகளில் சேர்த்தல், பரீட்சைகளை நடாத்துதல் தொடர்பான பிரச்சினைகளையும் மக்கள் குறிப்பிடுகிறார்கள்.

இதேநேரம் தேசிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்தும் மக்கள் கேள்வியெழுப்புகிறார்கள். உதாரணமாக ஒருவர், இலங்கை விமான நிறுவனத்திற்கும் பாகிஸ்தான் விமான நிறுவனத்திற்கும் இடையிலான சேவை உடன்படிக்கை குறித்தும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குவைட், பஹ்ரைன், சவூதி அரேபியா போன்ற நாடுகளுடன் கொண்டுள்ள சேவை உடன்படிக்கைகளின் பிரதிகளையும் கோரிய சந்தர்ப்பத்தைக் குறிப்பிட முடியும். இவற்றை நாம் மக்களுக்கு வழங்க கடமைப்பட்டுள்ளோம்.

Q தகவல் அதிகாரியிடமிருந்து மக்களுக்கு தகவல்களை பெற்றுக்கொள்வதற்கும் ஆணைக்குழு உத்தரவு பிறப்பிக்கும் போது தகவல்களை பெற்றுக்கொள்வதற்குமான காரணங்களை குறிப்பிட முடியுமா?

மாதமொன்றிற்கு 1000 – 1200 இற்கு இடைப்பட்ட முறைப்பாடுகள் பொது நிறுவனங்களுக்கு கிடைக்கின்றன. 2017 இல் 10,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. இவற்றுள் 355 விண்ணப்பங்கள் மாத்திரமே மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளன. இதன்படி எமது அரச பிரிவு பிரஜைகளுக்கு பதிலளிக்கும் வீதம் அதிகரித்திருப்பதை காண முடியும். இந்த மேன்முறையீடுகளை பார்க்கும் போது மற்றுமொரு விடயத்தை இங்கு குறிப்பிட முடியும். ஒரு சில நிறுவனங்கள் இச்சட்டம் தொடர்பில் கொண்டுள்ள புரிதல் கீழ் மட்டத்தில் இருப்பதை சுட்டிக்காட்ட முடிகிறது.

எவ்வாறிருப்பினும் ஒரு அதிகாரி தகவல்களை வழங்காத போது நாம் தகவல் கோரியவரையும் அதிகாரியையும் அழைத்து விசாரணை செய்கிறோம். அப்போது மேல் அதிகாரிகள் சொன்னால் நாங்கள் தகவல்களை வழங்குகிறோம் என உத்தியோகத்தர்கள் கூறுகிறார்கள். தகவல்களை வழங்குவதற்கு இவர்கள் அச்சப்படுகிறார்கள். ஏனெனில் இப்படியொரு கலாசாரம் முன்பு எம்மிடம் காணப்படவில்லை. ஆனால் தற்பொழுது அப்படி வழங்காமல் இருக்க முடியாது. தகவல்களை வழங்கியே ஆக வேண்டும்.

Q கிடைக்கும் மேன்முறையீடுகளுள் தகவல்களை வழங்க முடியாத மேன்முறையீடுகளை தவிர வேறுமுறையில் நிராகரிக்கப்படுகின்ற மேன்முறையீடுகளும் காணப்படுகின்றனவா?

ஆம். முறையற்ற வகையில் அனுப்பப்படுகின்ற மேன்முறையீடுகளை நாம் நிராகரிக்கின்றோம். 600 மேன்முறையீடுகள் சரியாகக் கிடைத்தால் அதில் 500 மேன்முறையீடுகள் பிழையானதாக இருக்கும். உதாரணமாக ஒருவர் அண்மையில் ஒரு மேன்முறையீட்டை அனுப்பியிருந்தார். அதாவது, தனது நிலத்தை அரசாங்கம் கைப்பற்றியுள்ளது. அதை நான் திரும்பக் கேட்டேன் கிடைக்கவில்லை. அதை எனக்கு பெற்றுத்தாருங்கள் என்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இது தகவல் கோரும் நடவடிக்கை அல்ல. இது சமூகப் பிரச்சினைகள். மற்றுமொரு தரப்பினர் நிறுவனப் பிரதானியிடம் மேன்முறையீடு செய்யாமல் எம்மிடம் மேன்முறையீடு செய்கிறார்கள். தகவல் உத்தியோகத்தரிடம் மேன்முறையீடு செய்ததன் பிறகே நிறுவனப் பிரதானியிடம் மேன்முறையிடு செய்ய வேண்டும். நிறுவனப்பிரதானியிடம் மேன்முறையீடு செய்யப்படாத மேன்முறையீட்டு விண்ணப்பங்கள் குறித்து எமக்கு நடவடிக்கை எடுக்க முடியாது.

இன்னும் சிலர் தகவல் உத்தியோகத்தருக்கு அனுப்பிய கடிதம் மற்றும் நிறுவனப் பிரதானிக்கு அனுப்பிய கடிதங்கள் இன்றியே நேரடியாக மேன்முறையீடு செய்கிறார்கள். இவ்வாறான மேன்முறையீடுகளை நாங்கள் ஏற்றுக்கொள்வதில்லை. மற்றுமொரு தரப்பு எம்மிடம் நேரடியாகவே தகவல்களை கோருகின்றார்கள். சகல தரப்பினருக்கும் நாங்கள் பதில் அனுப்புகின்றோம். உங்களது மேன்முறையீட்டில் இன்னின்ன பிழைகள் காணப்படுகின்றன. அவற்றை சரிசெய்யுங்கள் என்பதாக குறிப்பிட்டு அனுப்புகிறோம்.

Q பொது நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்குவதும் ஆணைக்குழுவின் மற்றுமொரு பணியாக உள்ளதா?

ஆம். பொது நிறுவனங்களுக்கு தகவல்கள் தொடர்பில் பிரச்சினைகள் இருக்கும் என்றால் அவை தொடர்பான தகவல்களை வழங்குவது எமது ஆணைக்குழுவின் மிக முக்கிய பொறுப்பாக உள்ளது. இவ்வாறு பொது நிறுவனங்கள் முன்வைக்கின்ற பிரச்சினைகள் தொடர்பில் ஓரிரு வாரங்களில் பதில்களை அனுப்புகிறோம். இது தவிர, தகவலறியும் சட்டத்தின் கீழ் அரச நிறுவனம் வெளியிடுகின்ற 3 அறிக்கைகள் காணப்படுகின்றன. அவை, காலாண்டு தகவல் வௌயீடு, செயற்திட்ட தகவல் தயாரிப்பு மற்றும் வருடாந்த தகவல் வெளியீடு என்பதாகும்.

இந்த தகவல் அறிக்கைகளின் மாதிரிகளை நாமே தயாரிக்க வேண்டும். இது தவிர, ஆவண முகாமைத்துவம் தொடர்பான சட்டங்களை விதித்தல் மற்றும் பெற்றுக்கொடுத்தல் போன்றவற்றுக்கான கட்டண விதிப்புக்களையும் செய்ய வேண்டும். இவ்விடயங்களைத் தற்பொழுது நாம் நிறைவுசெய்துள்ளோம். அதிகாரிகளை பயிற்றுவிப்பதும் எமது மற்றுமொரு பணியாக விளங்குகின்றது. தற்பொழுது இவ்விடயம் ஊடக அமைச்சுடன் இணைந்து முன்னெடுக்கப்படுகிறது.

Q ஆணைககுழுவினால் குறிப்பிட்ட நிறுவன அதிகாரிக்கு தகவல்களை வழங்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ள சந்தர்பப்த்தில் அதிகாரி அவ் உத்தரவை மீறினால் அவருக்கு எப்படியான தண்டனை வழங்கப்படும்?

தகவல் உத்தியோகத்தர் அல்லது திணைக்களத் தலைவரின் சுய தீர்மானத்தின்படி தகவல்களை நிராகரிப்பது சட்டத்தின் தவறல்ல. எனினும் ஆணைக்குழு உத்தரவு வழங்கியதன் பின்னர் அதை பின்பற்றாமல் இருப்பது தவறாகும்.

இந்த உத்தரவை மீறினால் 2 வருட சிறைத்தண்டனையுடன் 50,000 ரூபா தண்டப் பணமும் செலுத்த வேண்டும். ஆணைக்குழு பிறப்பிக்கும் உத்தரவை மீறும் பட்சத்தில் அல்லது ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகாத பொழுது அல்லது ஆணைக்குழுவுக்கு போலியான தகவல்களை வழங்கினால் குறித்த அதிகாரியை தண்டிக்குமாறு நீதிமன்றில் முறையிடும் அதிகாரம் எமக்கு உள்ளது.

Q இறுதியாக நாட்டு மக்களுக்கு நீங்கள் சொல்லும் செய்தி?

மூன்று காரணிகளின் அடிப்படையிலேயே இவ்விடயம் வெற்றி அளிக்கின்றது. முதலாவது போதிய அளவு மக்கள் தகவல்களை கோரவேண்டும். இரண்டாவது அரசாங்க உத்தியோகத்தர்கள் தகவல் வழங்கும் கலாசாரத்திற்கு மாற வேண்டும். மூன்றாவது வேண்டுவதற்கு முன்னர் தகவல்களை அம்பலப்படுத்தும் கொள்கைகளை அமுல்படுத்த வேண்டும்.

Comments