நந்திக்கடலை சுத்தப்படுத்தித் தாருங்கள்! | தினகரன் வாரமஞ்சரி

நந்திக்கடலை சுத்தப்படுத்தித் தாருங்கள்!

‘நந்திக் கடலை ஆழப்படுத்தத்தர வேண்டு என்று கோரவில்லை. சுனாமியாலும், வெள்ள நீர் அள்ளி வந்த வண்டல்களையும் அகற்றி சுந்தப்படுத்தித்தந்தால் வருடம் முழுவதும் எங்களால் தொழில் செய்ய முடியும் என்பது மீனவர் தரப்பு வாதம்’.

 ‘ஆழப்படுத்துவதற்கான நிதி கிடைத்திருக்கிறது. முட்டுக்கட்டைகளை அகற்றினால் அடுத்த வருடம் சாத்தியமாகும் என்கிறார் அரச அதிபர்’

குறிப்பிட்ட இரண்டு மூன்று வருடங்களாக நந்திக்கடல் வற்றி மீன்கள் இறப்பதால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பட்டினிச்சாவை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை காணப்படுவதாக முல்லைத்தீவு நந்திககடல் பகுதியில் தொழில் செய்து வரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் கவலையோடு சொல்கின.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள நந்திக்கடல் பகுதியானது மிகவும் இயற்கை வளம்கொண்ட பகுதி. இயற்கையாகவே இந்தக் கடற் பகுதியில் இறால் நண்டு மற்றும் மீனினங்கள் பெருகிக் காணப்படுகின்றன.

முல்லைத்தீவு பெருங்கடல் தொடுவாய் தொடக்கம், புதுக்குடியிருப்பு வரை நீண்டு காணப்படுகின்ற இக்கடற்பகுதியானது சுமார் பதினான்கு மைல் சுற்றளவைக்கொண்ட ஒரு களப்பாகும்.

முன்னைய காலங்களில் வருடம் முழுவதும் தொழில் செய்யக்கூடிய ஒரு சூழல் காணப்பட்டதாகவும் தற்போது இந்தப் பகுதியில் ஆழம் குறைந்து காணப்படுவதாலும் மற்றும் வறட்சி காரணமாகவும் மீன்கள் இறந்து கரையோதுங்குகின்றன. இதனால் தொழில் செய்ய முடியாத சூழல் உருவாகியுள்ளது.

கடந்த வாரம் இக்கடற் பகுதியில் ஏற்பட்ட அதிக வெப்பம் காரணமாக பெருமளவான மீன்கள் இறந்து கரையோதுங்கியதால் இப்பகுதியில் தொழில் முழுமையாக பாதிக்கப்பட்டது.

இவ்வாறு பாதிக்கப்பட்ட தமக்கு நிவாரணம் பெற்றுத்தர வேண்டும் என்றும் மீனவர்கள் கோரியுள்ளனர்.

கரையோரங்களில் காணப்பட்ட நீர்த் தடுப்பின்மையால் வெளியிடங்களில் இருந்து வருகின்ற மழை வெள்ளநீர் மற்றும் முத்து ஐயன் கட்டுக்குளத்தின் மேலதிக நீர் என்பன பரந்தளவில் இதன் வழியே பாய்வதனால் இந்தக் கடற் பகுதியானது ஆழம் குறைந்த கடற்பகுதியாக மாறியுள்ளது.

இதனால் தற்போதைய வறட்சியை தாங்கிக்கொள்ள முடியாமல் வற்றி மீன்கள் இறப்பதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது இதனை ஆழப்படுத்துமாறு மீனவர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இதனை ஆழப்படுத்துவது தொடர்பில் பல்வேறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன.

அதாவது, ஆழப்படுத்துவதனால் உவர் நீர் உட்புகும் அல்லது இயற்கையாக வளர்கின்ற நண்டு இறால் என்பன இல்லாமல போகும் என்று சிலர் சுட்டிக் காட்டுகின்றனர். இது தொடர்பில இந்தக் கடலை நம்பியே வாழ்கின்ற வட்டுவாகல் மீனவர்கள் தொடர்பில்வட்டுவாகல் கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் உப தலைவர் செல்லையா யோகேந்திரராஜா (வயது 60) தன் கருத்தை முன்வைத்தார். “உண்மையான விடயம் என்னவென்றால் எனக்கு இப்போது அறுபது வயது, இதற்கு முன்னமே பெருங்கடலில் காணப்படுகின்ற மீன்கள் இறால், நண்டு போன்றவை இங்கே இயங்கையாக உற்பத்தியாகின்றன.

இப்போது இதனை ஆழப்படுத்த வேண்டும், சிலர் தவறான கருத்துக்களை கொண்டிருக்கின்றார்கள், இதனை ஆழப்படுத்துவதன் மூலம் கிராமங்களிற்குள் உவர் புகுந்து விடும் என்றும் சொல்கின்றனர்.

ஆனால் உண்மை அதுவல்ல. ஏற்கனவே இது ஒரு ஓரளவு ஆழமானகடல், இங்கு ஏற்பட்ட சுனாமி அனர்த்தம், மற்றும் வெள்ள வரத்துக்கள், என்பவற்றால் இக் கடலின் ஆழம் குறைந்துள்ளது.

ஆழப்படுத்துவது என்றால், இதற்குள் இருக்கின்ற கழிவுகளையும் கழிவு மண்ணையும் அகற்றுவதே நாங்கள் சொல்லுகின்ற விடயம்.

இப்போது கடல் வற்றி மீன்கன் இறந்தமையால் இந்தக் கடலை நம்பி வாழ்ந்த எமது சங்கத்தைச் சேர்ந்தர்கள் முழுமையாகவே பாதிக்கப்பட்டுள்ளனர்.

இப்போது 240 இற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குமாறு கோரி ஜனாதிபதிக்கும் சம்பந்தப்ட்ட அமைச்சுக்களுக்கும் மஜர்களை அனுப்பியிருக்கின்றோம்,

எங்களைப்போல் கிட்டத்தட்ட பன்னிரண்டாயிரம் குடும்பங்களுக்கு மேல் இந்த நந்திக்கடலில் தொழில் செய்கின்றனர்.

இங்கு பாரம்பரிய முறையில் வீச்சுவலை, தூண்டில் போன்ற முறைகளே பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால் இப்போது சட்டவிரோத் தொழில்களும் அதிகரித்திருக்கின்றன.

இதனைக் கட்டுப்படுத்துமாறு மாவட்ட கடற்தொழில் திணைக்களத்திற்கு தெரியப்படுத்தியிருக்கின்றோம், ஆனால் எந்தவித முன்னேற்றங்களும் இல்லை.

இப்போது எங்ளுடைய ஒரேயொரு கோரிக்கை இந்த ஆற்றிலே தேங்கியிருக்கின்ற சேற்றுமண் கழிவுகளை அகற்றி எங்கள் வாழவாதாரத்தொழிலுக்கு வழிவகை செய்யவேண்டும் என்பதுதான்.

இதேவேளை இதேபிரதேசத்தைச் சேர்ந்த அ.நடனலிங்கம் குறிப்பிடுகையில், நந்திக்கடல் ஆழமான பகுதியாகவேமுன்பு இருந்தது, என்கிறார். “சுனாமியாலும் வெள்ளப் பெருக்குகளாலும் கழிவுகள் வந்து சேர்ந்து ஆழம் குறைந்து விட்டது.

முன்பு நந்திக்கடல் எல்லைக் கட்டை என்று சொல்லப்படுகின்ற கடற்பகுதி என்னைவிட உயரம் கூடிய பகுதியாகக் காணப்பட்டது. இப்போது அதில் ஒரு அடித்தண்ணீர் கூட இல்லை.

இதைத் துப்பரவு செய்வதற்கு அரசாங்க அதிபர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் வந்து பார்த்திருக்கின்றார்கள், இதனை துப்பரவு செய்து தரவேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கையாகும்.

இதேவேளை நந்திக்கடலில் தொழில் செய்து வருகின்ற கேப்பாப்புலவைச் சேர்ந்த சண்முகம் சௌந்தர் ராஜா என்ன சொல்கிறார் என்பதைப் பார்ப்போம்.

இந்தக்கடலை ஆழப்படுத்தினால் நண்டு, இறால் போன்ற மீனினங்கள் உற்பத்தியாகாது என்று பலர் குறிப்பிடுகின்றார்கள், இதை ஆழப்படுத்தினால், தங்களுடைய தொழில் பாதிக்கப்படுமா என்ற சந்தேகம் தனக்கு உள்ளதாக அவர் சொன்னார்.

இவ்விடயம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரிடம் தொடர்புகொண்டு கேட்டேன். “ மாவட்டத்தில் நிலவுகின்ற கடும் வறட்சியினாலும் நந்திக்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பம் காரணமாகவும் ஒட்சிசன் இல்லாத

காரணத்தினாலும் கடந்த வருடத்தைப்போன்று இந்த மீன்கள் இறந்துள்ளன” என்கிறார் இவர். இதேவேளை குறித்த நந்திக்கடல் பகுதியினை ஆழப்படுத்துவது தொடர்பில் கருத்துத் தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர், நந்திக்கடல் மற்றும் நாயாறு சிறு கடல் பகுதிகளை ஆழப்படுத்துவதற்கு இந்த வருட வரவு செலவுத் திட்டத்தின் கீழ் நிதி கிடைக்கப்பெற்றுள்ளது. எனினும் இதனை ஆழப்படுத்துவதற்கு சில தடைகள் காணப்படுகின்றன என்கிறார்.

“அதாவது, வனஜீவராசிகள் திணைக்களத்தினால் நாயாறு மற்றும் நந்திக்கடல் போன்ற பிரதேசங்கள் தேசிய பாதுகாப்பிற்குரிய பிரதேசங்களாக பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதனால் அந்த திணைக்களங்களின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டே இத்திட்டத்தை செயற்படுத்த வேண்டியுள்ளது.

இதுதொடர்பான கூட்டம் ஒன்றை கடந்த மாதத்தில் கூடி உரிய திணைக்களங்களுடன் கலந்துரையாடி தீர்மானம் எடுத்துள்ளோம்.

மீளவும் இதனை செயற்படுத்தலாம் ஆனால் எவ்வகையில் என்பது தொடர்பில் ஆராய்ந்து இந்த வருடத்தில் அதனை செய்வதற்கு எண்ணியிருக்கின்றோம். எனவே அடுத்து வருடத்தில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாணக் கூடியதாக இருக்கும்” என்பது அரச அதிபரின் பதிலாக இருக்கிறது.

எது எவ்வாறு இருப்பினும் இந்தப் பகுதியில் கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக பாதிக்கப்பட்டு வருகின்ற மீனவர்களின் வாழ்வாதாரம் கருத்தில் கொள்ளப்பட்டு, நாயாறு, கொக்கிளாய் ஆறு, போன்ற பகுதிகளில் வருடம் முழுவதும் தொழில் செய்யக்கூடிய சூழல் காணப்படுவது போன்று நந்திக்கடலும் துப்பரவு செய்யப்பட்டு வருடம் முழுவதும் தொழில் செய்யும் சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதே இதை நம்பி வாழும் குடும்பங்களின் எதிர்பார்ப்பாகும்.

படங்களும் கட்டுரையும்

யது பாஸ்கரன்

Comments