மியன்மார், யங்கூனில் பிரமிக்க வைத்தது 'பேசு தமிழா பேசு' பேச்சுப் போட்டி! | தினகரன் வாரமஞ்சரி

மியன்மார், யங்கூனில் பிரமிக்க வைத்தது 'பேசு தமிழா பேசு' பேச்சுப் போட்டி!

பல்கலைக் கழக மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக அனைத்துலக அளவில் தொடங்கப்பட்ட ்பேசு தமிழா பேசு் எனும் பேச்சுப் போட்டி இவ்வாண்டு மியன்மாரின் புகழ்பெற்ற யங்கூன் (ரங்கூன்) நகரில் அண்மையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. மலேசியாவின் அஸ்ட்ரோ வானவில் தொலைக்காட்சி அலைவரிசையும் வணக்கம் மலேசியா செய்தி நிறுவனமும் இணைந்து மலேசிய கல்வி அமைச்சு மற்றும் தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக் கழகம் ஆகியவற்றின் அனுசரணையுடன் நடத்தி வரும் இந்த அனைத்துலக பேச்சுப் போட்டி கடந்த 2016ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதலாவது அனைத்துலகப் போட்டி சென்னை மாநகரிலும் இரண்டாவது போட்டி கடந்த ஆண்டு கொழும்பு மாநகரிலும் நடந்தன.

இந்த ஆண்டு யங்கூன் நகரில் நடத்தப்பட்ட 3வது 'பேசு தமிழா பேசு் போட்டியில் இந்தியா, மலேசியா, இலங்கை, அவுஸ்திரேலியா, மியன்மார், சிங்கப்பூர், மற்றும் மொரீசியஸ் நாடுகளைச் சேர்ந்த 16 மாணவர்கள் மாபெரும் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகி இருந்தார்கள். போட்டியின் நடுவர்களாகச் செயலாற்ற மலேசியாவின் நவராஜன் சுப்பிரமணியம், இலங்கையைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.விஸ்வநாதன், மியன்மாரின் வெ.பொ.அ. சந்திரன் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். சிறப்பு அதிதியாக உலகப் புகழ் பெற்ற பேச்சாளரும் பேராசிரியருமான தமிழகத்தைச் சேர்ந்த கு.ஞானசம்பந்தன் வருகை தந்தார்.

நிகழ்வினை மலேசியாவின் வானவில் தொலைக்காட்சியினைச் சேர்ந்த நதிகாவும் இலங்கை ரூபவாஹினியைச் சேர்ந்த விஜய அபிநந்தனும் தொகுத்து வழங்கினர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிந்துஜா தவராசா, கொழும்பு மொரட்டுவ பல்கலைக் கழகத்தின் சாரங்கன் ஜனகன், இந்திரகுமார் வினு ஆகியோர் இறுதிப்போட்டியில் பங்குபற்றி விருதுகளையும் பரிசில்களையும் பெற்றார்கள். இப்போட்டியில் இந்தியாவின் நரேன் கெளதம் முதல்நிலை வெற்றியாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.

Comments