வருவேன் என்பார் வரமாட்டார்! | தினகரன் வாரமஞ்சரி

வருவேன் என்பார் வரமாட்டார்!

ஒருவர் இருவர் அல்லர். அநேகமானோர் இன்று இப்பிடித்தான் இருக்கிறார்கள். அந்த நேரத்தில் எதையாவது சொல்லிச் சமாளித்துச் செல்லும் போக்கு எல்லாரிடமும் கிஞ்சித்தும் வெட்கமின்றித் தொடர்கிறது.

ஒரு நண்பரைச் சந்தித்தால், நாளை மறுநாள் வருகிறேன்; வந்து நேரில் பேசிக்ெகாள்வோம் என்பார். ஆனால், அவர் போனதிலிருந்து அந்த விடயத்தை மறந்துவிடுவார். உண்மையில் இவற்றுக்கெல்லாம் மறதிதான் காரணமா? இல்லை. மறதியும் ஒரு காரணம். அநேகருக்கு அலட்சியப்போக்குதான் காரணம். அடுத்தவர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார், நமது பிம்பம் என்னவாகும்? சொன்ன சொல் தவறக்கூடாதே! பழிச்சொல் வந்து சேருமே என்று வாழ்பவர்கள் மிகச் சொற்பமானவர்களே என்பதை அன்றாடம் காண்கின்றோம்.

இவ்வாறு நாம் சந்தித்த நஷ்டங்களை, எப்படி எதிர்கொள்வது என்பதைப்பற்றி லேனா தமிழ்வாணன் பகிர்ந்துகொண்டுள்ள விடயங்களைப் பாருங்கள்.

பள்ளி நாட்களிலிருந்து இன்று வரை நம்மைத் தொடர்ந்து வந்து, காலை வாரி விடுகிற விஷயம், நம்மிடம் உள்ள மறதிதான் என்கிறார் லேனா.

இதன் மூலம், மதிப்பெண்களை மட்டுமா இழந்தோம்... பல நேரங்களில், இது கவிழ்த்த கவிழ்ப்பில், நம் மதிப்பையும், இழந்திருக்கிறோம்.

'சொல்வார்; பின்பற்ற மாட்டார். வருவேன் என்பார்; வரமாட்டார். தருகிறேன் என்பார் தர மாட்டார்...' என்பன போன்ற, நம்முடைய முரண்பாடுகளைப் பலர் முன்னிலையில், மற்றவர்கள் விமர்சிக்கும் போது, நேருக்கு நேராக முகம் பார்க்கும் நிலை மாறி, நாம், நிலம் பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்!

உண்மையில், இந்த மூன்று முரண்பாடுகளிலும், மறதி என்கிற சக்தி தான், நம்மை புரட்டிப் போட்டிருக்கும். உதவுகிறேன் என்போம்; உண்மையாய், உதவும் எண்ணம் இருந்தும், மறதி நம்மை கவிழ்த்து விடும்.

'உங்கள் வீட்டுத் திருமணம்... நான் இல்லாமலா...' என்று பெருமிதம் பேசுவோம்; திகதியை நாட்குறிப்பேட்டிலும், நெஞ்சிலும் பதிக்க மறந்து, கொடுத்த அழைப்பிதழையும், எங்கோ கை மறதியாய் வைப்போம். திருமணம் முடிந்து போன பின் தான், நினைவிற்கே வருகிறது; அதுவும், மற்றவர் மூலம், உரியவர் மூலம் அந்தப் பேச்சு வரும் போது!

'அடடே... ஐயையோ...' என்கிற வார்த்தைகளை உதிர்த்தபடி, துன்பத்தில் ஆழ்ந்து போகிறோம்; சோகமும், கவலையும் சேர்ந்து கொள்கின்றன.

மறதியில், கைப்பேசியைத்தொலைப்போம்; ரயிலை கோட்டை விடுவோம்; பாஸ்போர்ட்டை புதுப்பிக்க மறப்போம்; காப்புறுதி தொகையை, உரிய நேரத்தில் செலுத்தத் தவறுவோம்; மின்சாரத்தைத் துண்டிப்பதற்கு மின் ஊழியர் வந்த பிறகு தான், 'அடடா... மின் கட்டணம் கட்டாமல், கோட்டை விட்டோமே...' என, வருந்துவோம்.

'என்னைத் தெரியுதா?'

'ஹி... ஹி... தெரியலைங்களே சாரி...'

'நீங்க விபத்துல அடிபட்ட போது, மருத்துவமனையில கொண்டு போய் சேர்த்தேனே... அதுக்குள்ள மறந்திட்டீங்களே...' என்று அவர் சொல்லும் போது, சிலருக்கு, 'சே... எவ்வளவு பெரிய தவறு; நம் நன்றியுணர்ச்சிக்கு, பங்கம் வந்து விட்டதே...' என்று வருந்துவர்.

பரவாயில்லை வருந்தாதீர்கள்... குற்ற உணர்ச்சியின் அடித்தட்டிற்கு போய் விடாதீர்கள். மாறாக, 'இந்த அவப்பெயரை, கறையைத் துடைத்து எடுக்க, வாய்ப்பு வராதா...' என்று எதிர்பார்த்துக் கொண்டே இருங்கள்!

வாய்ப்பு வராவிடில், அதை உருவாக்குங்கள். 'நான், ஒரு நிறுவனம் ஆரம்பிக்கிறேன்; நீங்க தான் திறந்து வைக்கணும்...' என்றும், 'எங்க வீட்டுல விசேஷம்; உங்க காலடி படணும்...' என்றும் ஏதாவது ஒன்றை முடுக்கி விடுங்கள்.

'உங்களை நான் தப்பா நினைச்சிட்டேன்... நான் சொன்னது எதையும் மனசில வச்சுக்காதீங்க...' என்று, அவரையே பழியைத் துடைக்க வையுங்கள்; உங்களால் முடியும்!

'என்னைப் போய் அப்படி சொல்லிட்டாரே...' என, நாம் முன்னதை மட்டுமே நினைத்து, நாம் உள்வாங்குகிற போதே, அவர் கணித்த கணிப்பு, உண்மை தான் என்றாகி விடுகிறது.

இன்று, மொபைல் போனை தொலைத்தவர்களுக்கு, அது இரணமாகத் தெரிகிறது; சில தினங்களிலேயே, அது குணமாகி விடுகிறது. கால ஓட்டமும், மறதியும் தான், எந்த ரணத்தையும் ஆற்றவல்ல மருந்துகள்!

'அவர் இல்லாமல், நான் எப்படி வாழ்வேன்... நானும் அவர் கூடவே போயிருக்கணும்...' என்று, கணவனின் மறைவன்று புலம்புகிற ஒரு பெண்ணிற்கு, ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திற்கு அலையாய் அலைகிற தெம்பு எப்படி வந்தது என்கிறீர்கள்... மேற்கூறிய அதே இரு மருந்துகள் தாம்!

இழந்து விட்ட சொத்துகள், தவற விட்ட வாய்ப்புகள், கோட்டை விட்ட சந்திப்புகள், வராத கடன்கள், உறவினர்களின் துரோகங்கள், நண்பர்களின் பழிவாங்கல்கள், அடுத்தவர்கள் செய்த அயோக்கியத்தனங்கள், பொது இடங்களில் நேர்ந்த அவமானங்கள் மற்றும் வாங்கிக் கட்டிக் கொண்ட திட்டுகள் இவற்றையெல்லாம் உதிர்த்து விட்டு, ஒன்றுமே நடக்காதது போல, அடுத்தடுத்து நடக்க வேண்டியதை பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கா, மறதிகளால் இழந்தவை பெரிது! எல்லாம் கடந்து போகும் நம்பிக்ைகயோடு நடந்து வாருங்கள்.

Comments