காணாமல் போனோர் அலுவலகம் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த 10 பேர் கொண்ட அமைச்சர்கள் உப குழு | தினகரன் வாரமஞ்சரி

காணாமல் போனோர் அலுவலகம் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த 10 பேர் கொண்ட அமைச்சர்கள் உப குழு

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தலைமையிலான அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை உபகுழுவின் மேலும் 10 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியது. இதன்படியே மேற்படி அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களான கலாநிதி சரத் அமுனுகம, ரவூப் ஹக்கீம், வஜிர அபேவர்தன, மஹிந்த அமரவீர, ரஞ்ஜித் மத்தும பண்டார, பழனி திகாம்பரம், தலதா அத்துகோரள, மனோ கணேசன், மஹிந்த சமரசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழுவுக்கு ஆலோசனைகள் வழங்கவென உதவிக்குழுவொன்றை நியமிப்பது தொடர்பாகவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக்குழுவில்

சட்ட மாஅதிபர் அல்லது அவரால் நியமிக்கப்படும் ஒரு பிரதிநிதி, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் அல்லது அவரால் நியமிக்கப்படும் பிரதிநிதி, நீதி அமைச்சின் செயலாளர் அல்லது அவரால் நியமிக்கப்படும் பிரதிநிதி, பொதுநிர்வாக, முகாமைத்துவ சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் அல்லது அவரால் நியமிக்கப்படும் பிரதி, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அல்லது அவரால் நியமிக்கப்படும் பிரதிநிதி இக்குழுவில் அங்கத்தவர்களாக நியமிக்கப்படுவர்.

அத்துடன் இந்த ஆலோசனைக்குழுவுக்கு அமைப்பாளராக தேசிய நல்லிணக்க இராஜாங்க அமைச்சின் செயலாளரை நியமிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை உபகுழுவின் நடவடிக்கைகள் இன்னும் 3 வருடத்திற்கு (2019-2021) முன்னெடுக்கும் நோக்கில் அடுத்துவரவுள்ள வரவு – செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் 2018 ஓகஸ்ட் மாதம் 05ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அமைச்சரவை உபகுழு கூடுதல் கவனம் செலுத்தவுள்ளது.

Comments