ஆயிரம் ரூபாய்க்கு அபிவிருத்தி செய்து பத்தாயிரத்திற்கு விளம்பரம் செய்யவில்லை | தினகரன் வாரமஞ்சரி

ஆயிரம் ரூபாய்க்கு அபிவிருத்தி செய்து பத்தாயிரத்திற்கு விளம்பரம் செய்யவில்லை

அரசாங்கத்தின் பணிகள் பற்றிய செய்தி மக்களை சென்றடையவில்லை -சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் யெஹியா எம். இப்ளார்

நல்லாட்சியில் சிறுபான்மையின மக்கள் மட்டுமன்றி அனைத்து இன மக்களும் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்கின்றனர் என்று தெரிவித்த சபரகமுவ மாகாண சபையின் முன்னாள் ஐ.தே.க. உறுப்பினர் யெஹியா எம்.இப்ளார், இந்த அரசாங்கம் நாட்டு மக்களுக்குப் பல சேவைகளையும் நிவாரணங்களையும் வழங்கிய போதிலும் அது குறித்து அவர்கள் பூரண திருப்தி கொள்ளாதது வேதனையளிக்கின்றது என்றும் கூறினார்.

இந்த அரசாங்கம் பல அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டுள்ளது. பெரும் எண்ணிக்கையானவர்களுக்குத் தொழில் வாய்ப்புகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. கடந்த அரசாங்கத்தால் அபிவிருத்தி செய்யாமல் கைவிடப்பட்ட தோட்ட மற்றும் கிராம வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. பாடசாலைகள் “அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” என்ற செயற்றிட்டங்களின் கீழ், அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. பல வீடமைப்பு திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வீடமைப்புக்கடன்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டு;ள்ளன. சுய தொழில்வாய்ப்புக்கான உபகரணங்கள், நிதியுதவிகள் என்பன பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் முதற் தடவையாக தலா பத்தாயிரம் ரூபாயும் சேதங்கள் மதிப்பிடப்பட்டு அதற்கேற்றாற்போல் இலட்சக்கணக்கில் இழப்பீட்டுத்தொகையும் வழங்கப்பட்டன. ஆனால், இவை சரியாகப் பொதுவெளியில் பரப்புரை செய்யப்படவில்லை. இதுவே உண்மை.

அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதற்கமைய மக்களின் ஆதரவு வலுவடைந்திருக்கின்றது என்று சொல்ல முடியுமா?

நீங்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நாம் தோல்வியடைந்தது குறித்து வினவுதாக நினைக்கின்றேன். நாம் செய்த சேவைகள் மக்களிடம் சென்றடைந்த போதிலும்; யார் செய்தார்கள் என்ற குழப்ப நிலை மக்களிடையே காணப்பட்டது. அதேநேரம், தேர்தலின்போது எமது தரப்பைச் சேர்ந்தவர்களே எமக்குச் சாதகமற்ற விதத்தில் பிரசாரம் செய்தார்கள். இதனாலும் நாம் எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்கவில்லை. மேலும் கடந்த அரசாங்கம் ஆயிரம் ரூபாய்க்கு அபிவிருத்தி பணிகளை செய்து விட்டு பத்தாயிரம் ரூபாய்க்கு விளம்பரம் செய்தது. நாம் அவ்வாறு செய்யவில்லை.

இரத்தினபுரி மாவட்டத்திற்கு எவ்வாறான அபிவிருத்திப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் உங்களின் வகிபாகம் பற்றி?

இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள கிராம மற்றும் தோட்ட வீதிகள் செப்பனிடப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. இப்பகுதிகளிலுள்ள பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலானவர்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. பெரும் எண்ணிக்கையானவர்களுக்கு தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. இன மத பேதமின்றி நகரங்கள், கிராமங்கள், தோட்டங்கள் ஆகிய பகுதியிலுள்ள அனைத்து மத ஸ்தாபனங்களின் அபிவிருத்திற்கும் பொருளாதார ரீதியாக பெருமளவு பங்களிப்பு செய்துள்ளேன். அத்துடன் கிராம, தோட்டப்பகுதியிலுள்ள ஏழை, எளிய மக்களுக்கு சபரகமுவ மாகாணசபையினூடாகவும் மத்திய அரசாங்கத்தினூடகவும் மலசல கூடங்கள், வீடமைப்பதற்கான நிதியுதவிகள், சுயதொழில் வாய்ப்புக்கான உபகரணங்கள் மற்றும், நிதியுதவிகள், பாடசாலைகளுக்கான கட்டடவசதிகள், குடி நீர் வசதிகள், பௌதீக வசதிகள், இலவச கூரைத்தகடுகள் என்பன பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.

இரத்தினபுரி மாவட்ட முஸ்லிம் மக்களுக்கு எந்த அபிவிருத்திகளும் செய்யவில்லையென குற்றம் சாட்டப்படுகின்றதே?

என்ன செய்யவில்லை? இம்மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு சேவை அல்லது அபிவிருத்திகள் செய்யாமல் இருந்திருந்தால் நான் தொடர்ந்து 25 வருடங்கள் மாகாணசபையில் அங்கத்துவம் பெற்றிருக்க முடியுமா? இவ்வாறு கூறுவது வெறும் கட்டுக்கதைகளாகும். இம்மாவட்ட முஸ்லிம் மக்களின் அபிலாசைகள் பெருமளவு நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக முஸ்லிம் பாடசாலைகள் மற்றும் முஸ்லிம் பள்ளிவாசல்கள் எனபனவற்றிற்குப் போதியளவு கட்டடங்கள், பௌதீக வளங்கள, குடி நீர்வசதிகள் என்பன பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. எனினும், முஸ்லிம் மக்களின் தேவைகள் பலவுள்ளன. அவற்றை நிறைவேற்ற உறுதி பூண்டுள்ளேன். இம்மாவட்டத்தில் ஒரு தேசிய பாடசாலைக உள்ளிட்ட 8 முஸ்லிம் பாடசாலைகள் உள்ளன. இவற்றில் சுமார் 4750 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இவர்களுக்குத் தேவையான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பாடசாலைகளின் அபிவிருத்திற்கும் கட்டடங்களைப் பெற்றுக்கொடுக்கவும் நேரடியாகவும் மறைமுகமாகவும் கூடுதலாக உதவி செய்துள்ளேன். மேலும் பொது சேவைக்கு வந்தால் தனிப்பட்ட இனங்களுக்கு மட்டும் சேவை செய்வதோ, முன்னுரிமை வழங்குவதோ தென்னிலங்கையைப் பொறுத்த மட்டில் உசிதமில்லையெனக் கருதுகிறேன். இது எனக்கு மட்டுமல்ல அனைத்து அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும்.

இரத்தினபுரி அல்மக்கியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பாரிய இட நெருக்கடி காணப்படுவதாகச் சொல்லப்படுகிறதே?

நீங்கள் கூறுவது உண்மை தான். இப்பாடசாலைக்கு “அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” என்ற செயற்றிட்டங்களுக்கமைய புதிய மாடிக்கட்டடம் ஒன்றை அமைக்க கடந்த காலத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதிலும் ஒப்பந்தக்கார்களின் குளறுபடிகள் காரணமாக அக்கட்டடம் இதுவரை அமைக்கப்படவில்லை. கூடிய விரைவில் புதிய ஒப்பந்தக்காரர்களின் கீழ் இக்கட்டடம் அமைக்கப்படும். இதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இப்பாசாலையில் உயர்தரத்தில் கணித விஞ்ஞான பாடநெறி இல்லாமையைப் பெருங்குறையாகச் சொல்கிறார்களே இதனை நிவர்த்திக்க திட்டங்கள் உண்டா?

இம்மாவட்டத்தில் கணிதம் மற்றும் விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்கள் இல்லை. அதனைப் பெற்றுக்கொள்ள முயற்கொம்புகளைப் பிடிப்பதற்குச் சமமாகவுள்ளது. காரணம் வெளிமாவட்டத்திலிருந்து இம்மாவட்டத்திற்கு கணிதம் மற்றும் விஞ்ஞான பட்டதாரிகள் வர மறுக்கின்றனர். வந்தாலும் குறிப்பிட்ட காலத்தின் பின்னர் அவர்களது சொந்த மாவட்டத்திற்கே இடமாற்றலாகி செல்கின்றனர். இது பாரிய பிரச்சினையாக இருக்கின்றது.

கடந்தகால அரசாங்கமும் இதனையே கூறி வந்தது. எனினும்; இதுவரை தீர்வில்லை. தற்போது தங்களது பதிலும் அவ்வாறுதானே அமைந்துள்ளது.?

தமிழ் பேசும் அரசியல்வாதி என்ற ரீதியில் நான் யாரையும் ஏமாற்ற விரும்பவில்லை. அத்துடன் கடந்த காலத்தில் ஏமாற்று அரசியல்தான் நடைபெற்றது. தற்போதும் ஏமாற்றி ஆட்சியமைக்க அவர்கள் முயற்சி செய்கின்றனர். அதற்கு நாம் இடம் கொடுக்க மாட்டோம். இப்போதைய அரசாங்கம் தமிழ் பேசும் மக்களின் பேராதரவுடனேயே ஆட்சிக்கு வந்தது. அக்கட்சி தொடர்ந்து இருக்க வேண்டுமெனின் தமிழ் பேசும் மக்களின் பூரண ஆதரவு தேவையாகும். அதனால் கூடிய விரைவில் உயர் மட்ட அதிகாரிகள் அரசியல்வாதிகளுடன் கலந்தாலோசித்து இதற்கு முடிவு காணப்படும்.

இங்குள்ள அனைத்து நகரங்களிலும் சகல வசதிகளும் கொண்ட சிங்கள மொழிப் பாடசாலைகள் பல உள்ளன. ஆனால்; சகல வசதிகளும்கொண்ட தமிழ் மொழி மூலப் பாடசாலை ஒன்று கூட இல்லையே. இதனைக் கல்வியில் சம வாய்ப்பற்ற ஒரு நிலை என்று நீங்கள் கருத வில்லையா?

நிச்சயமாக கருதுகின்றேன். இதற்குத் தீர்வு காண வேண்டும். அதற்காகதான் போராடி வருகின்றோம். அத்துடன் தமிழ்பேசும் மக்கள் யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சில விடயங்களை மேற்கொள்ளும் போது கல்லில் நாருரிப்பது போல் அமைகின்றது. அதற்கு மக்களின் பலம் அவசியமாகும். அடுத்த மாகாண சபை அமையும் போது உரிய தீர்வு காணப்படும். மேலும் தற்போதுள்ள பாடசாலைகளுக்குத் தேவையான வளங்களை பெற்றுக்கொடுத்து வருகின்றோம். மெது மெதுவாகவே அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

அடுத்த சபரகமுவ மாகாண சபை தேர்தல் எப்போது நடைபெறும் எனக் கருதுகின்றீர்கள்.?

கூடிய விரைவில் நடைபெற வேண்டுமென எதிர்ப்பார்க்கின்றோம். எப்போது நடைபெறும் என்பதை மத்திய அரசாங்கம் தான் தீர்மானிக்க வேண்டும்.

Comments