கல்வியை அபிவிருத்தி செய்ய பணம் ஒரு பிரச்சினையல்ல! | தினகரன் வாரமஞ்சரி

கல்வியை அபிவிருத்தி செய்ய பணம் ஒரு பிரச்சினையல்ல!

கல்வியை அபிவிருத்தி செய்வதற்கு பணம் ஒரு பிரச்சினையல்ல. மனம்தான் பிரச்சினை என்கிறார் கிழக்கு மாகாணத்திற்குப் புதிதாக நியமிக்கப்பட்ட மாகாணக் கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் .

முன்னர் மாகாணக்கல்விப்பணிப்பாளராகவிருந்த எம்.ரி.ஏ.நிஸாம் கிழக்கு மாகாண கல்வியமைச்சில் சிரேஸ்ட மேலதிக செயலாராக ஆளுநரால் நியமிக்கப்பட்டதையடுத்து மன்சூர் மாகாணக் கல்விப்பணிப்பாளராக கடந்த திங்களன்று நியமிக்கப்பட்டார்.

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகமவின் அறிவுறுத்தலுக்கமைவாக கடந்த புதனன்று பதவியேற்ற புதிய மாகாணக்கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூரை தினகரன் வாரமஞ்சரிக்காக பிரத்தியேகமாக செவ்விகண்டோம்.

கேள்வி : இலங்கையின் கல்வி அபிவிருத்தியில் கிழக்கு மாகாணம் கடைநிலையிலுள்ளது. இதனை முன்னேற்ற தங்களிடமுள்ள உபாயங்கள் என்ன?

பதில்: கல்வி அபிவிருத்தியில் கிழக்குமாகாணம் இலங்கையின் இறுதியிலுள்ளது என இன்னும் எத்தனை காலத்திற்குச் சொல்லிக் காலத்தை கடத்துவது? அது முடியாது. எனவே புதிய புதிய யுக்திகளைப்பயன்படுத்தவேண்டிய தேவையுள்ளது. இதற்கு சகலரதும் ஒத்துழைப்பு மிகமிக அவசியமாகும்.

இதுவிடயத்தில் வலயக்கல்விப்பணிமனையின் பங்களிப்பு மிகவும் கூடுதலாக வேண்டப்படுகின்றது. அன்று தண்டாயுதபாணி மாகாணக் கல்விப்பணிப்பாளராகவிருந்தபோது அந்த நடைமுறை பின்பற்றப்பட்டது.

பாடசாலை செயற்பாடுகளில் மாகாணக்கல்விப் பணிப்பாளரை விட வலயக்கல்விப் பணிப்பாளருக்கும் அவரது கல்விசார் குழாத்தினருக்குமே ஈடுபாடு அதிகமுள்ளது. பாடசாலையின் உயர்வுக்கும் தாழ்வுக்கும் அவர்கள்தான் வகைகூறவேண்டியவர்கள்.

அன்று மாகாணத்தில் வலயக்கல்விப்பணிப்பாளர்களுக்கு மாதாந்த கூட்டமென்றால் இருநாட்கள் நடக்கும். ஒருநாள் பணிப்பாளர்கள் மற்றும் அபிவிருத்திக்குப்பொறுப்பாக கல்விப்பணிப்பாளருக்குமாக நடக்கும். மறுநாள் பணிப்பாளர்களுடன் கணக்காளர் பொறியியலாளருக்கானது.

எனவே, இனிமேல் கிழக்கில் கல்வி அபிவிருத்தியில் கூடுதல் பங்களிப்பை வலயக்கல்விப் பணிமனையே முன்னேடுக்கும். அதற்கேற்ப திட்டங்களை வகுத்துள்ளேன்.

கேள்வி: இதைவிட வேறு உபாயங்கள் உண்டா?

பதில்: ஏன் இல்லை. இன்னும் பல உள்ளன.

பொதுப்பரீட்சை என்று சொல்லக்கூடிய தரம் 5புலமைப்பரிசில் பரீட்சை கபொத. சா.த கபொத. உ.த ஆகிய 3 பரீட்சைகளும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியவையாகும். இதைவிட பல போட்டிகள் உள்ளன.

முக்கிய 3 பரீட்சைகளும் அறிவுசார்ந்தவை. இதற்கு அறிவுசார் குழாத்தினராகிய மேற்பார்வையிலீடுபட்டுவரும் மாகாண வலய பணிமனைகளில் கடமையாற்றும் உதவிக் கல்விப்பணிப்பாளர்களும் ஆசிரிய ஆலோசகர்களுமே பொறுப்புதாரிகள். அவர்களது துறைசார்ந்த அறிவுமட்டம் மெச்சத்தக்கதாக இருந்தால் மட்டுமே ஆசிரியர்களது மாணவர்களது அறிவுமட்டத்தை குறிப்பாக பெறுபேற்றை அதிகரிக்கச் செய்யமுடியும்.

உதவிக் கல்விப்பணிப்பாளர்கள் ஆசிரியர் ஆலோசகர்கள் அறிவு தொடர்பாக மேலாட்சியைக் கொண்டிருக்கவேண்டியதவசியம். கட்டாயம்.

இவர்கள் பாடரீதியாகவும் கற்பித்தல் ரீதியாகவும் சிறந்த தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். உதாரணமாக விஞ்ஞான பாடமென்றால் தரம் 6முதல் தரம் 11வரையிலான பாடஅறிவு விரல்நுனியில் இருக்க வேண்டும். கற்பித்தல்முறைமை தொடர்பில் பூரண அறிவு வேண்டும். அதற்காக அவர்களை வாண்மைவிருத்தி செய்யவேண்டும். அறிவுகூடியவர்களாலேயே இயல்பாக இவற்றைக்கையாளமுடியும்.

கேள்வி: சித்தி வீதத்தைக்கூட்டுவதற்கு என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்?

பதில்: சித்திவீதத்தைப்பொறுத்தவரை எங்களைவிட பாடசாலைக்கு கூடுதல் பொறுப்புண்டு எனக்கருதுகிறேன். மீட்திறன்கூடிய மாணவர்களைக் கையாள்வது இலகு.ஆனால் மீட்திறன்குறைந்த மாணவர்கள்தான் எமது இலக்கு.

மீள்திறன்குறைந்த மாணவர்களை இனங்கண்டு பயிற்றுவிக்க வலயக்கல்விப் பணிப்பாளர்கள் பலநுட்பங்களை பல யுக்திகளைக் கையாளவேண்டும். அதனூடாக சித்தியடையும் வீதத்தைக்கூட்டலாம்.

கேள்வி: இவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு பணம் தேவையென பணிப்பாளர்கள் கூறினால்.?

விடை: கல்வி அபிவிருத்தி செய்ய பணம் ஒரு பிரச்சினையே அல்ல. அரசாங்கம் யுனிசெவ் என்று பலவழிகளில் பணத்தைத்தருகின்றார்கள். இங்குள்ள பிரச்சினை மனமும் அதற்கான சிந்தனையுமே. நல்ல சிந்தனை நல்ல நோக்கு இருக்கவேண்டும்.

கேள்வி: கிழக்கில் கடந்த காலங்களில் ஆசிரியர் இடமாற்றம் ஒரு சவாலாக இருந்துவந்துள்ளதே. அதனை எவ்வாறு நீங்கள் அணுகுவீர்கள்?

விடை: கிழக்கிற்கு மட்டுமல்ல சகல மாகாணங்களிலும் ஆசிரியர் இடமாற்றம் என்பது சவால்தான். இருந்தும் அதனை நேர்மையாக கொள்கையுடன் எதிர்கொண்டால் பிரச்சினையில்லை.

கிழக்கில் ஆசிரிய இடமாற்றக்கொள்கையொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. கல்வியமைச்சிலுள்ளது. ஆளுநர் அதனைக் கேட்டுள்ளார். விரைவில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் ஆளுநர் கலந்துரையாடிவிட்டு அதனை அமுலுக்கு கொண்டவரவிருக்கிறார். அந்தக்கொள்கை அமுலுக்கு வரும்பட்சத்தில் எந்தப்பிரச்சினையும் எழப்போவதில்லை.

நீதிமன்றம் மனிதஉரிமை என்று அலையவேண்டிய தேவை ஏற்படாது என நினைக்கிறேன்.

இனிமேல் அந்த இடமாற்றக்கொள்கையின்படிதான் ஆசிரிய இடமாற்றங்கள் நடைபெறும்.

கேள்வி: அப்படியானால் ஏலவே ஆளுநரால் நிறுத்திவைக்கப்பட்ட இந்த ஆண்டுக்குரிய ஆசிரிய இடமாற்றம் எதிர்வரும் ஜனவரியில் அமுலாகும் எனக்கூறப்பட்டதே.

பதில்: அது நடக்கும். அதற்கான கடிதங்கள் அனுப்பிவைக்கப்படவிருக்கின்றன. நான்கூறுவது புதிய இடமாற்றங்களை.

கேள்வி: விலங்கியல், பாட ஆசிரியராகக் கொடிகட்டிப்பறந்த நீங்கள் கல்வி நிருவாகத்துறைக்கு வரக்காரணங்கள் ஏதாவது உண்டா?

பதில்: நிச்சயமாக. இருகாரணங்கள் உண்டு.

ஒன்று நான் ஆசிரியராக இருந்தகாலத்தில் காதர்மொகைதீன் என்றொரு கல்வி நிர்வாகியொருவர் இருந்தார். அவர் ஒரு தடவை புலமைப்பரிசில் பெற்று 6 மாதகாலம் இந்தியா சென்றுவந்தார். அந்த வாய்ப்பை நாம் பெற முடியாதா? என்றொரு உணர்வு என்னுள் ஏற்பட்டது.

இரண்டாவது மருதமுனையில் ஏ.ஆர்.ஏ.அசீஸ் என்றொரு கல்வியாளரொருவர் இருந்தார். ஏதாவது பரீட்சை என்றால் பலரும் அவரிடம் போய் எவ்வாறு எழுதுவது நடைமுறை என்ன என்பது பற்றியெல்லாம் கேட்டுச்செல்வார்கள். அவரிடம் அந்தக் கவர்ச்சி வரக்காரணம் என்ன என்று சிந்தித்தேன். கல்விநிருவாகம் தெரிந்தவர் அவர். இவை இரண்டுமே என்னை கல்வி நிருவாகத்துறைக்குள் ஈர்த்த அம்சங்கள் எனலாம்.

கேள்வி: அதிபர் இடமாற்றம் அமுலாகுமா?

பதில்: நிச்சயமாக அதிபர்கள் இடமாற்றம் கட்டாயம் தேவை. அதிபர்கள் புதிய பாடசாலைக்கு இடமாற்றலாகும் பட்சத்தில் புதிய உணர்வு பிறக்கும். புது உத்வேகம் பெறுவார்கள். பாடசாலையை கல்வியை முன்னேற்றுவார்கள். அதிபர்கள்தான் பாடசாலை. பாடசாலைதான் அதிபர். பாடசாலை வளர்ச்சிக்கு மூலகாரணமே அதிபர்கள்தான். பாடசாலையைப் பொறுத்தவரை மாகாண வலயக் கல்விப்பணிப்பாளர்கள் முக்கியமல்ல அதிபர்களே முக்கியமானவர்கள்.

கேள்வி: உங்கள் நியமனத்தின்போது ஒருசிலர் எதிர்ப்பும் தெரிவித்தனரே. அது தொடர்பாக ஏதாவது கூறுகின்றீர்களா?

பதில்: எல்லோருக்கும் நல்லவனாக நடப்பதற்கு நான் ஒன்றும் நயவஞ்சகன் அல்ல.

வி.ரி.சகாதேவராஜா

காரைதீவு குறூப் நிருபர்

Comments