பிறந்த தினத்தன்று கேக்குக்குப் பதிலாக மரக்கன்று | தினகரன் வாரமஞ்சரி

பிறந்த தினத்தன்று கேக்குக்குப் பதிலாக மரக்கன்று

சுற்றாடலுடன் மனிதர்களுக்குள்ள தொடர்புகளை மிக ஆழமாகவும் அறிவுபூர்வமாகவும் உலகிற்கு எடுத்துணர்த்தியவர்களில் செவ்விந்தியர்களின் உரிமைகளுக்காக குரல்கொடுத்த சியெட்டலே முதலிடம் வகிக்கின்றார். இந்த பூமி மனிதனுக்கு சொந்தமானது அல்ல எனவும் மனிதனே பூமிக்கு சொந்தமானவன் என்றும் எவ்வாறு எமது உடலில் அனைத்து உறுப்புக்களும் குருதியுடன் தொடர்புபட்டிருக்கின்றதோ அவ்வாறே மனிதனுக்கும் மண்ணுக்குமான தொடர்பு அமைந்திருப்பதாகவும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே அவர் கூறிச் சென்றதை புரிந்து கொள்ளாது செயற்பட்டமையினால் ஏற்பட்டுள்ள விளைவுகளுக்கே இன்றைய சமூகம் தற்போது முகங்கொடுத்து வருகின்றது. ஏனைய உயிரினங்களுடன் ஒப்பிடுகையில் அறிவால் உயர்ந்த உயிரினமாகக் கருதப்படுகின்ற மனிதனே தனது இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் சுகபோகங்களை அடைவதற்காகவும் இயற்கைக்கு எதிரான முதன்மை எதிரியாக மாறியிருக்கின்றான்.

தாவர வகைகள், விலங்குகள் உள்ளிட்ட இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டிய மனித சமூகமே அவற்றை எல்லை மீறி உபயோகப்படுத்தி இயற்கையை மாசடையச் செய்வதில் இன்று முதன்மை நிலை வகித்து வருகின்றது. இது ஒரு நாடு என்ற வகையில் மட்டுமன்றி ஒட்டுமொத்த உலகிற்கும் பொதுவான நிலையாக இருப்பதனால் இதனைக் கட்டுப்படுத்த வேண்டியது நம் அனைவரதும் தலையாய கடமையாகும். இந்தப் பின்னணியிலேயே இன்றைய முழு உலகத்தினதும் கவனம் சுற்றுச்சூழலை பாதுகாப்பதைப் பற்றி திரும்பியிருப்பதுடன், இலங்கை அரசாங்கமும் அவ்விடயம் தொடர்பில் தனது கவனத்தை செலுத்த தொடங்கியுள்ளது.

ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்து இயற்கையுடன் ஒன்றுகலந்து வாழ்ந்தது மட்டுமன்றி அதனை உண்மையாக நேசிக்கும் ஒருவர் என்ற வகையில் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான பரந்த செயற்திட்டங்களை உறுதியாக செயற்படுத்துவதன் மூலமாக எமது நாட்டின் சுற்றுச்சூழலையும் இயற்கை வளங்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தூரநோக்காக அமைந்திருக்கின்றது. அதன் அடிப்படையிலேயே “மைத்திரி ஆட்சி - நிலையான நாடு” எனும் கொள்கையை முன்னிலைப்படுத்தி இயற்கையினைப் பாதுகாக்கும் நோக்கில் மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் “சுற்றுச் சூழல் எம்மைக் காக்கின்றது. நாம் சுற்றுச்சூழலைக் காப்போம்” எனும் தலைப்பில் நமது நாட்டில் இயற்கை வளங்களை பாதுகாக்கும் செயற்திட்டங்கள் 2015 ஆம் ஆண்டு முதல் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் கீழ் நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்வாங்கும் வகையில் சுற்றாடல் மாநாடுகளும் சுற்றாடல் பாதுகாப்பு செயற்திட்டங்களும் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஓர் அங்கமாகவே மன்னார் மாவட்ட சுற்றாடல் பாதுகாப்பு செயற்திட்டமும் வனரோபா தேசிய மர நடுகை நிகழ்ச்சித் திட்டமும் கடந்த 05 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

மாணிக்கக்கல் அகழ்வு முதல் மணல் அகழ்வு வரையும் மரங்களை வெட்டுவது முதல் காடழிப்பு வரையும் மாசற்ற நீரை மாசடையச் செய்வதோடு உயிர் வாழ்வதற்காக உள்வாங்கும் சுவாசக் காற்றையே விசக் காற்றாக மாற்றுவது வரையிலான மனித செயற்பாடுகளே மண்சரிவு, புவி வெப்பமடைதல், பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயர்வடைதல், வறட்சி, வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட பல்வேறு பாரிய இயற்கை அனர்த்தங்களுக்கு முதன்மைக் காரணமாக அமைகின்றன. இந்த பின்னணியிலேயே இயற்கைச் சூழலை பாதுகாக்க வேண்டிய தேவையும் ஏற்படுகின்றது. முதலில் இயற்கையை மாசடைய செய்துவிட்டு அதன்பின்னர் அதனால் ஏற்படும் பாதக விளைவுகளை குறைப்பதற்கும் அவற்றிலிருந்து விடுபடுவதற்கும் முயற்சிப்பதை விட இயன்றளவு இயற்கையை மாசடைய செய்யாதிருப்பதற்கான செயற்பாடுகளை கொண்டிருப்பதே சாலச் சிறந்ததாகும்.

தற்போது நமது நாட்டின் வனப் பரம்பலின் விகிதாசாரம் 29 சதவீதம் வரை குறைவடைந்து காணப்படுகின்றது. அது மழை வீழ்ச்சியின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் அதேவேளை, மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட பாரிய இயற்கை அனர்த்தங்களுக்கும் மூலகாரணமாக அமைகின்றது. அதனைக் கவனத்திற் கொண்டே நாளுக்கு நாள் குறைவடைந்துவரும் நாட்டின் வனப் பரம்பலை 32 சதவீதம் வரை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் வனரோபா தேசிய மர நடுகை செயற்திட்டம் மகாவலி அபிவிருத்தி, சுற்றாடல் துறை அமைச்சு மற்றும் வனப் பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. ஜனாதிபதி செயலகத்தின் பூரண அனுசரணையுடன் இச்செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதனால் அதனை ஒரு தேசிய செயற்திட்டமாக முன்னெடுக்கக் கூடியதாக இருக்கின்ற அதேவேளை, நாடு தழுவிய ரீதியில் அதனை வியாபிக்கக்கூடியதாகவும் இருக்கின்றது.

அத்தோடு நாட்டின் பல துறைகளிலும் காணப்படுகின்ற சுற்றுச்சூழலுடன் தொடர்புபட்ட பல்வேறுபட்ட பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றிற்கு தீர்வுகாணும் செயற்திட்டங்களும் தற்போது அமுல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் சுற்றாடலை பாதுகாப்பதற்கான திட்டங்களை செயற்படுத்தும் நிறுவனங்களை ஊக்குவிப்பதுடன், குறிப்பாக பாடசாலைகளில் பாடசாலை தோட்டம் அமைத்தல் உள்ளிட்ட இயற்கையை நேசிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் சுற்றாடலை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணக்கருவை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் வேலைத்திட்டங்களும் ஜனாதிபதி செயலகத்தின் நேரடி வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பேண்தகு பாடசாலை செயற்திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்கள் மத்தியில் சுற்றாடலின் முக்கியத்துவம் பற்றிய அறிவை ஏற்படுத்துவதுடன் இயற்கையுடன் மனிதன் உட்பட உயிரினங்களுக்கு இருக்கின்ற பிரிக்க முடியாத பந்தத்தைப் பற்றிய செயற்பாட்டு ரீதியிலான அனுபவங்களைப் பெற்றுக் கொடுக்கும் செயற்திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. அனைத்து பாடசாலைகளிலும் தத்தமது வசதிக்கேற்ப பாடசாலை தோட்டங்களை உருவாக்குவதற்கு நிதியுதவி உட்பட விவசாயம் தொடர்பான அறிவும் வழிகாட்டலும் பெற்றுக் கொடுக்கப்பட்டு வருகின்றது.

ரவி ரத்னவேல்     

 

மன்னார் மாவட்டத்தில் மட்டுமன்றி பொலன்னறுவை, மாத்தளை, கொழும்பு, திருகோணமலை, கேகாலை ஆகிய மாவட்டங்களில் நடத்தப்பட்ட சுற்றாடல் மாநாடுகளிலும் அந்தந்த மாவட்டங்களில் கண்டறியப்பட்ட முக்கிய சுற்றாடல் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருக்கின்றன.

இதன் மூலமே சுற்றாடல் மாசடைவதை தடுக்கும் அதேவேளை உயிரினங்களின் இருப்பையும் உறுதிப்படுத்தக்கூடியதாக இருக்கும்.

இயற்கையின் தாக்கத்திற்கு மனிதர்கள் உட்பட அனைத்து விலங்கினங்களுக்கும் முகங்கொடுக்க நேரிடுவது தவிர்க்க முடியாத விடயமாகும். ஆயினும் இயற்கை அனர்த்தங்களிலிருந்து மனிதர்களினதும் ஏனைய உயிரினங்களினதும் உயிரை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கடப்பாடும் இயலுமையும் மனித இனத்திற்கே இருக்கின்றது.

இயற்கையை பாதுகாப்பது மனிதன் தன்னையே பாதுகாத்துக் கொள்வதற்கான செயற்பாடாகும் என்பதை மனிதன் உணர வேண்டுமாயின் அதற்கான விழிப்புணர்வும் புரிந்துணர்வுமே முதன்மை தேவையாக அமைகின்றது. அந்த புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்வதற்கு மனிதன் இயற்கையை நோக்கும் விதத்திலும் இயற்கை பற்றிய அவனது எண்ணத்திலும் சாதகமான மாற்றம் ஏற்பட வேண்டும்.

இயற்கையின் மிக முக்கிய கொடையான சுற்றுச் சூழல் மீது மனிதனின் கவனத்தை திருப்பும் வகையில் காலத்திற்கேற்ற கருத்துக்களை முன்னெடுப்பது ஆட்சியாளர்களின் கட்டாய கடப்பாடு ஆகும்.

அதனை மிக நன்கு உணர்ந்திருக்கும் ஜனாதிபதி அவர்கள் நடந்து முடிந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூட்டத்தொடரில் ஆற்றிய உரையின் போதும் சுற்றாடல் பாதுகாப்பிற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன், அதில் உலக நாடுகள் உணர்வுபூர்வமாக ஒத்துழைக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

இக்கருத்துக்களை மன்னார் சுற்றாடல் மாநாட்டிலும் வலியுறுத்திய ஜனாதிபதி வளர்ந்தோரைப் போன்றே இளம் சமுதாயமும் இயற்கை மீது அக்கறையும் அன்பையும் செலுத்த வேண்டியதன் அவசியத்தை இரத்தின சுருக்கமாக எடுத்துக் கூறினார்.

சிறுவர்களின் பிறந்த நாளின் போது கேக் வெட்டி விழா எடுத்து அதனை கொண்டாடுவதற்குப் பதிலாக பெற்றோர் தமது குழந்தைகளின் பிறந்த நாளின் போது ஏதாவது பயன்மிக்க மரக்கன்றுகளை நாட்டும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் சிறுவர்கள் தமது பெயரை அம் மரக்கன்றுகளுக்கு சூட்டி அவற்றை அன்போடும் அரவணைப்போடும் வளர்த்தெடுக்க வேண்டும் என்றும் அப்படி செய்வதன் மூலமே இந்த நாட்டுக்கு தேவையான வனப் பரம்பலை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்றும் அந்த இலக்கை அடையும் பயணத்திற்கு அரசாங்கம் தன்னாலான அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்கும் என்றும் தெரிவித்த ஜனாதிபதி வனப் பரம்பலையும் இயற்கை சூழலையும் பாதுகாப்பதில் அரச உத்தியோகத்தர்களுக்கும் பொலிஸாருக்கும் முதன்மை பொறுப்பு இருப்பதாக தெரிவித்ததுடன் அதனை சாத்தியமாக்கிக் கொள்வதற்கு பொதுமக்களும் தமது பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

 

Comments