அரசை நிந்திப்பது தீர்வாகாது | தினகரன் வாரமஞ்சரி

அரசை நிந்திப்பது தீர்வாகாது

கருணாகரன்

“அரசியல் கைதிகள்“ என்றழைக்கப்படும் “சிறைப்படுத்தப்பட்ட விடுதலையாளர்கள்” தங்களின் விடுதலைக்குத் தாங்களே போராட வேண்டும் என்ற நிலையில் தொடர்ந்து போராடுகிறார்கள். அவர்களுடைய விடுதலைக்கு ஆதரவாக ஒரு தொகுதி மக்களும் போராடுகிறார்கள்.

மக்களுடைய விடுதலைக்கான அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்டதால் சிறைக்குள் தள்ளப்பட்டவர்கள், சிறையிலிருந்தும் போராட வேண்டியுள்ளது என்பது கொடுமையானது. அதுவும் தங்களுடைய விடுதலைக்காக.

மக்களுடைய விடுதலைக்காகப் போராடியவர்கள் இன்று தங்களுடைய விடுதலைக்காகப் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றால் அது அந்தச் சமூகத்தின் அரசியல் தலைமைகளின் தவறேயாகும். இந்த நாட்டின் அரசியல் அதிகாரம் ஜனநாயக மறுப்பின் அடித்தளத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்றே அர்த்தமாகும். இந்தத் தலைகீழ் மாற்றத்தை என்னவென்று சொல்வது?

ஆனாலும், இந்த விவகாரத்தைத் தமது அரசியல் ஆதாயங்களுக்காக அரசியல் கட்சிகள் பயன்படுத்த விளைகின்றன. சிறைப்படுத்தப்பட்டிருப்போரின் விடுதலையை விடவும் அவர்களை வைத்துப் பிழைக்கும் முனைப்பே இங்கு மேலோங்கியுள்ளது. இது மனிதாபிமானமற்ற செயல். நாகரீகமற்றது. ஆகவே கண்டிக்கப்பட வேண்டியது.

இந்த விடுதலையாளர்களின் (கைதிகளின்) மீது மெய்யான அக்கறையை இந்தக் கட்சிகள் கொண்டிருந்தால் இவை அதற்கான போராட்டத்தைச் சுயாதீனமாக நடத்தியிருக்கும். சிறைக்கூடத்திலிருப்பவர்கள் போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்பே இதை நடத்தியிருக்க வேண்டும். இதுவரை (போர் முடிந்து, ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகும்) இந்தப் பிரச்சினை நீடிக்காமல், சிறையிலிருந்து இவர்களை விடுவித்துமிருக்கும். அல்லது குறைந்த பட்சம் இந்த விடயத்தைக் குறித்த தீர்மானத்தை எடுக்கும் நிர்ப்பந்தத்தை அரசாங்கத்துக்கு உண்டாக்கியிருக்கலாம். இதில் கூடுதல் பொறுப்பு தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு உண்டு.

தேர்தல் மேடைகள் தொடக்கம் தேவையேற்படும் இடங்களில் எல்லாம் விடுதலைப் புலிகளால் ஆசீர்வதிக்கப்பட்ட கட்சி தமது எனவும் பிரபாகரனின் அங்கீகாரத்தைப் பெற்ற தரப்பு தாமே என்றும் காட்டிக் கொள்ள முற்படும் கூட்டமைப்பு, “புலிகளின் ஆட்கள்” என்று சொல்லப்படும் இந்த விடுதலையாளர்களுடைய விடுதலைக்காக எதையும் செய்யவில்லை. இது மறுக்க முடியாத பகிரங்கமான உண்மை. இதனையிட்ட கோபம் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் விடுதலையாளருக்கும் உண்டு. அவர்களைச் சேர்ந்த குடும்பத்தினருக்கும் மக்களுக்கும் உண்டு. இதனால்தான் கடந்த வாரம் வவுனியாவில் இந்தச் சிறைப்படுத்தப்பட்ட விடுதலையாளர்களுக்கான போராட்டத்தின்போது கலந்து கொண்ட மாவை சேனாதிராஜாவின் முன்னிலையில் மக்கள் கூட்டமைப்பைக் கண்டித்துக் குரல் எழுப்பினார்கள்.

இதையடுத்து “அரசியல் கைதிகளின் (சிறைப்படுத்தப்பட்ட விடுதலையாளர்களின்) விடயத்தை அரசியல் ரீதியாகவே அணுக வேண்டும்” என கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறவேண்டியேற்பட்டது. உண்மையில் இந்த விடயம் அரசியல்ரீதியாகவே அணுகப்பட வேண்டும் என்பதை இந்தப் பத்தியாளர் உள்பட பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர். இலங்கையில் அப்படி அணுகப்பட்டு விடுதலை செய்யப்பட்ட வரலாற்றையும் அவர்கள் உதாரணம் காட்டியுள்ளனர். இதையெல்லாம் கவனத்திற் கொண்டிருந்தால், இந்தச் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் விடுதலையாளர்கள் எப்போதோ விடுதலையாகியிருப்பர்.

அப்படியென்றால் இந்தக் கரிசனையீனத்துக்கான காரணம் என்ன என்ற கேள்வி எழக்கூடும். உண்மைதான். மக்களைப் பற்றியும் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றியும் சிந்திக்க முற்படாதபோது எதன்பொருட்டும் கரிசனை யாருக்கும் ஏற்படாது. மக்களையும் விட அரசாங்கத்தை ஆதரிப்பது, பாதுகாப்பது, அதற்கு அனுசரணையாக இருப்பது முக்கியம் என்று எண்ணினால் இதுதான் நடக்கும்.

ஆனால், இதை நீண்டகாலமாகச் செய்ய முடியாது. மக்கள் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து போராடுவதற்கு மேலேழுவார்கள். இதுவே கடந்த மூன்று ஆண்டுகளாக வடக்குக் கிழக்கில் நடந்து கொண்டிருக்கும் நில மீட்புப் போராட்டங்களும் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் நடத்தும் போராட்டங்களும் நில ஆக்கிரமிப்பு, பௌத்த விரிவாக்கத்துக்கு எதிரான போராட்டங்களாகும்.

அரசியல் தலைவர்களும் தரப்புகளும் தங்களுக்கான விடுவிப்புகளைச் செய்ய மாட்டா என்ற நிலையில் மக்கள் தாமாக முன்னெழுந்து போராடத்தொடங்கினார்கள். அப்படிப் போராட முன்னெழுந்த மக்களுக்கு சமூகச் செயற்பாட்டியக்கங்களும் செயற்பாட்டாளர்களும் ஊக்க விசையாகவும் உதவியாகவும் இருந்தனர். இன்னும் இருக்கின்றனர்.

இதுபோன்றே இப்பொழுது சிறைப்படுத்தப்பட்டிருக்கும் விடுதலையாளர்களின் விடயத்திலும் நடக்கிறது. பாதிக்கப்பட்டிருப்போர் தமது விடுதலைக்காகப் போராட வேண்டிய நிலை. அதற்கு சமூகச் செயற்பாட்டியக்கங்களும் செயற்பாட்டாளர்களும் ஊக்கமாகவும் உதவியாகவும் இருப்பது.

இதில் முக்கியமான பங்கை – பொறுப்பை -ஏற்று முன்தூண்டலாகவும் மையச் செயற்பாட்டாளர்களாகவும் செயற்பட்டிருக்க வேண்டிய அரசியலாளர்கள் (கூட்டமைப்பினர் மட்டுமல்ல, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்பட அனைத்துத் தமிழ் அரசியல் தரப்புகளும் இதில் சேர்த்து) அவ்வாறு செயற்படவில்லை. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் தமிழ்மக்கள் பேரவையும் இதில் முக்கியமான பாத்திரமேற்றிருக்க வேண்டும். இவை இரண்டும் தமிழ்த்தேசியக் கருத்தாடலை அதன் உச்ச நிலையில் கொண்டிருப்பவை. ஆகவே, அந்தக் கருத்தியலின் அடிப்படையில் செயற்பட்டுச் சிறையிடப்பட்டிருப்போரை மீட்கும் நடவடிக்கையில் - பணியில் இவை முதன்மைப் பங்களிப்பைச் செய்திருக்க வேண்டியவை. ஒரு நாள் கூத்தாகப் போராட்டத்தை மலினப்படுத்தாமல் முழுமையான அளவில் தொடர்ச்சியாக நடத்துவதற்கு இவை முன்வந்திருக்க வேண்டும்.

இப்பொழுது இதை மேலும் குற்றப்படுத்திக் கூறிக் கொண்டிருப்பதில் எந்தப் பயனுமில்லை. பதிலாக இனிவரும் சூழலில் இந்தப் பிரச்சினையை – இந்த விவகாரத்தை எப்படிக் கையாள வேண்டும் என்பதே முக்கியமானதாகிறது.

இப்பொழுது அரசாங்கம் இந்த விடுதலையாளர்களை பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிப்பதைப் பற்றி ஆலோசிப்பதாகத் தெரிகிறது. இதை அமைச்சர்கள் பாட்டலி சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன் உள்ளிட்ட பலர் வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்கள். இதை மனதிற் கொண்டே சம்பந்தனும் அரசியற் கைதிகளின் (சிறைப்படுத்தப்பட்ட விடுதலையாளர்களின்) விடயத்தை அரசியல் ரீதியாக அணுக வேண்டும் என்று கூற முன்வந்திருப்பதாகும்.

ஆனால், இந்தப் பொதுமன்னிப்பின் கீழ் போர்க்குற்றங்களோடு தொடர்புடைய படையினரும் அரச பிரதானிகளும் உள்ளங்கி விடுவர் என்ற எண்ணம் தமிழ்த்தரப்பில் சிலருக்குண்டு. இதனால் இவர்கள் சிறைப்படுத்தப்பட்ட விடுதலையாளர்களுக்குப் பொது மன்னிப்பளிக்க வேண்டாம் எனக் கூறுகின்றனர். அதற்கப்பால் இதை அரசியல் ரீதியாக அணுக வேண்டும் என்பது அவர்களுடைய நிலைப்பாடு. அரசியல் ரீதியாக அணுகமுற்படும்போது இரண்டு தரப்பின் லாப நட்டங்களைப் பற்றியும் அரசு சிந்தித்தே தீரும். ஆகவே, அது இதிலிருந்து பின்வாங்கப்போவதில்லை.

அப்படியென்றால் இதற்கு அடுத்த கட்டம் என்ன என்ற கேள்வி எழுகிறது. இப்பொழுது நடக்கிற, நடத்தப்படுகிற போராட்டங்கள் மேலும் வலிமைப்படுத்தப்பட வேண்டும். அது அரசாங்கத்துக்கு நெருக்கடியை உண்டாக்கக் கூடிய அளவுக்கு வளர்ச்சியடைய வேண்டும். அதற்கான பொறிமுறையும் செயற்பாட்டுத் தொடர்ச்சியும் தேவை. இதை மக்களோ சிறைப்படுத்தப்பட்டிருக்கும் விடுதலையாளர்களோ தனியே செய்ய முடியாது. செயற்பாட்டியக்கங்களுக்கும் அந்தளவுக்கு வலுவிருக்கும் என்று தோன்றவில்லை. ஆகவே, இதை மேலும் வளர்த்தெடுப்பதற்குக் கட்சி அரசியலுக்கு அப்பால், ஒருங்கிணைந்த முறையில் ஒரு பொது வேலைத்திட்டமாக்கி, அதில் அனைத்துத் தரப்பினரும், அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து வேலை செய்ய வேண்டும். இதற்குரிய பங்களிப்பை – ஒருங்கிணைப்புப் பணியை செயற்பாட்டியக்கங்களைச் சேர்ந்தவர்கள் செய்வது அவசியம். இதில் பொதுமன்னிப்பு என்ற நிலைப்பாட்டை ஏற்க முடியாது என்பவர்களுக்கு மேலும் கூடிய பொறுப்புண்டு. ஏனெனில் பொதுமன்னிப்பின் அடிப்படையில் இவர்களுடைய விடுதலை இல்லை என்றால் மாற்று வழியைக் காண வேண்டுமல்லவா. இதுவே இவர்களுடைய விடுதலை குறித்த நெருக்கடியாக வளர்ச்சியடையும்.

இதுவொன்றும் கடினமான விசயமல்ல. நடைமுறைப்படுத்தக்கூடிய எளிய சங்கதி. சிறைப்படுத்தப்பட்ட விடுதலையாளர்களின் விடுதலை அவசியமா இல்லையா என்ற கேள்வியை முன்வைப்பதன் மூலம் அனைவரையும் ஒரே பதிலின் கீழ் கொண்டு வர இயலும்.

இல்லை, முடியாது, தமக்கு வேறு நிகழ்ச்சி நிரலும் வேறு அணுகுமுறைகளும் உண்டு என்போர் அதைப் பகிரங்கப்படுத்த வேண்டும். அதை ஏன் இதுவரை செய்யவில்லை என்ற கேள்விக்கான பதிலையும் சொல்ல வேண்டும்.

இவ்வாறு நமக்கு முன்னே உள்ள ஒவ்வொரு பிரச்சினைகளுக்குமான தீர்வுகளைக் காண முற்படும்போது நம்மைச் சுற்றியிருக்கும் பிரச்சினைகள் மெல்ல மெல்லக் குறைவடையத் தொடங்கும். இதைச்செய்யாமல் ஒவ்வொன்றுக்கும் பல வியாக்கியானங்களைச் சொல்லிக் கொண்டிருப்பதும் எல்லாவற்றிலும் நம்பிக்கையீனமாக இருப்பதும் அரசை நிந்திப்பதும் தீர்வாகாது. பிரச்சினைகளின் மத்தியில் நெருக்கடிப் பட்டுக்கொண்டே வாழ்வதை எந்த முற்போக்குச் சமூகமும் – வளர்ச்சியை நோக்கிய சமூகத்தினரும் விரும்பார். பிரச்சினைகளைத் தீர்த்து வாழும் முறையே ஒரு சமூகத்தை முன்னகர்த்தும்.

வளர்ச்சிக்குட்படுத்தும். இதற்கிடையில் இந்த விடயத்தில் ஒரு வெடிகுண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோறள. அவர் கண்டியில் சட்டத்தரணிகள் சங்கத்துடன் நடைபெற்ற சந்திப்பில் சொல்லியிருக்கிறார், “அரசியற் கைதிகள் என்று யாருமே இல்லை. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களே சிறைகளில் உள்ளனர்” என்று. இது எப்பிடியிருக்கு? இதற்குத்தான் மீளவும் சொல்கிறோம், இந்த விடயம் அரசியல் ரீதியில் அணுகப்பட வேண்டும். வெறுமனே சட்டரீதியாக அல்ல என்று.

Comments