ஐந்து கட்டு விறகு விற்றால் தான் சோற்றில் கை வைக்க முடியும் | தினகரன் வாரமஞ்சரி

ஐந்து கட்டு விறகு விற்றால் தான் சோற்றில் கை வைக்க முடியும்

யது பாஸ்கரன்

  • முல்லைத்தீவு கிராம மக்களின் வறுமைப் போராட்டம்!

“ஒரு ஐந்து கட்டு விறகு விற்றால் தான் சோற்றில் கை வைக்க முடியும்”

ஒரு ஐந்து கட்டு விறகு விற்றால் தான் நாங்கள் சோற்றில் கை வைக்க முடியும், விறகு விற்காவிட்டால் சாப்பிடில்லை என்கிறார் இந்த விறகுவெட்டி. முல்லைத்தீவு மாவட்டத்தின் பனிக்கன்குளம் கிராமத்தில் அன்றாடம் விறகு வெட்டி அதை விற்று கிடைக்கும் வருமானத்தில் வாழ்வைக்கொண்டு நடத்தும் பல குடும்பங்களின் நிலை இவ்வாறு தான் இருக்கின்றது.

கடந்த முப்பது வருட கால யுத்தத்தம் உயிரிழப்புக்களையும் பொருட் சேதங்களையும் ஏற்படுத்தியது மட்டுமல்லாது யுத்தத்தின் பின்னர் மீள்குடியேறிய மக்களின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியுமாக்கி இருக்கிறது.

யுத்தத்தின் பின்னர் மீள்குடியேற்றக் கிராமங்களில் குடியேறி வாழ்ந்து வருகின்ற அதிகளவான மக்கள் அன்றாட உணவிற்கே அல்லாடுகின்ற நிலை காணப்படுகின்றது.

குறிப்பாக பெண் தலைமைத்துக் குடும்பங்கள் முதியவர்களைக் கொண்ட குடும்பங்கள் மாற்றுத் திறனாளிகள் எனப் பல தரப்பட்டவர்கள் இவ்வாறான நெருக்குதல்களுக்கு முகங்ககொடுத்து வருகின்றனர்.

இலங்கையின் இருபத்தி ஐந்து மாவட்டங்களிலும் வறுமை நிலையில் முதல் மூன்று நிலைகளிலும் உள்ள மாவட்டங்களில் ஒன்றான முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழ்ந்து வருகின்ற பல குடும்பங்கள் வாழ்வாதாரம் அற்ற நிலையில் வறியவர்களாவே காணப்படுகின்றனர்.

ஏ-9 வீதியின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள பனிக்கன்குளம் கிராமத்தின் ஏ-9 வீதியின் இரு மருங்கிலும் ஆங்காங்கே விற்பனைக்காக விறகுகள் அடுக்கப்பட்டிருக்கும்.

அதன் அருகில் பெண்கள், சிறுவர்கள் முதியவர்கள், வறுமையின் கோடுகள் விழுந்த முகத்துடன் வீதியால் செல்லும் வாகனங்களை பார்த்து இவர்கள் விறகு வாங்குவார்களா? அடுத்து வருபவர்கள் வாங்குவார்களா? என்ற எதிர்பார்ப்போடு காத்திருப்பார்கள்.

இந்தக்கிராமத்தில் வாழுகின்ற மக்களில் அதிகளவானோர் வறிய குடும்பங்களாகவே காணப்படுகின்றன.

காடுகளில் கூலிக்கு மணல் அகழ்வுகளில் ஈடுபடுதல், விறகுகளை வெட்டுதல் போன்ற கடின வேலைகளை மாத்திரம் செய்ய முடிவதாகவும் வேறு எந்தக்கூலி வேலைகளுக்கும் செல்ல முடியாதிருப்பதாகவும் இவர்கள் சொல்கிறார்கள். இதற்குக் காரணம் உண்டு.

கூலி வேலை செய்யக்கூடிய விவசாயக் கிராமங்கள் அல்லது வேலை வாய்ப்புக்கள் இந்த கிராமத்தினை அண்மித்த பகுதிகளில் இல்லை.

இங்கிருந்து வேலை தேடிச்செல்வதாயின் பயணத்திற்கு ஐந்நூறு அல்லது ஆயிரம் ரூபா செலவழித்து வேலைத்தேடிச்செல்ல வேண்டும்.

அங்கு வேலை கிடைக்காவிட்டால் திரும்புவதற்கு பணம் இன்றி சிரமப்படவேண்டும் என்றும் கூறுகின்றனர்.

இந்தக் கிராமத்தில் அன்றாடம் விறகு விற்று வாழ்க்கை நடாத்தும் குடும்பத் தலைவர் ஒருவர் கருத்துத்தெரிவிக்கும் போது, நாங்கள் அன்றாடம் காடுகளுக்குள் சென்று விறகுகளை வெட்டி வந்து வீதியில் வைத்து அதை விற்றால் தான் ஒரு வேளையாவது சாப்பிடமுடியும்,

விறகு விற்காவிட்டால், அயலவர்களிடம் கடன் வாங்க வேண்டும். அப்படிக் கடன் வாங்குவதற்கும் அவர்களிடமும் பணம் இருக்கவேண்டும்.

ஆனால் இங்கே வாழ்கின்ற பலர் எங்களைப்போன்றே வறியவர்கள்.

பலருக்கு சமுர்த்திகள் இல்லை. அரசாங்க உதவிகள் இல்லை. வீட்டுத்திட்டங்கள் இல்லை.

இதனால் இங்கிருப்பவர்கள் கஷ்டப்பட்டவர்களாகவே இருக்கின்றனர். நாங்கள் ஒரு நாள் முழுதும் காட்டிற்குள் விறகு சேகரித்து வீதியில் வைத்து விற்றால் தான் அரைவயிற்றையேனும் நிரப்பமுடியும், அதுவும் கஷ்டம்தான்!

காடுகளுக்குள் சென்று விறகுகளை சேகரிக்கும்போது வனவள அதிகாரிகள் விரட்டுவார்கள். காட்டு யானை, கரடி போன்ற விலங்குகளின் சுபாவத்தையும் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இவற்றையெல்லாம் தாண்டி விறகை வெட்டிவந்து வீதிகளில் வைத்தால், இப்போது காஸ் அடுப்பு, கரண்ட் அடுப்பெல்லாம் வந்து சமையல் இலகுவாகிவிட்டதால், விறகு வாங்குபவர்கள் குறைவு எனவும் இங்கு வாழும் பலர் வேதனையுடன் சொல்கிறார்கள்.

இதேவேளை இந்தக் கிராமத்தில் மக்களுக்கு ஆசை வார்த்தைகளைக்காட்டி கடன்களை வழங்கின்ற நிறுவனங்கள் அதிக வட்டிக்கு கடன்களை வழங்கி விட்டு அதனை அறவிடுகின்றனவாம்.

இதைக் கட்டமுடியாது பல குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன.

கிளிநொச்சி உதயநகர் கிழக்கிலிருந்து சுமார் இருபது கிலோ மீற்றர் தூரத்திற்கும் அப்பால் தினமும் சென்று விறகு வெட்டி வாழ்க்கை நடாத்தும் மாணிக்கம் கிட்டினன் என்ற 60 வயது முதியவர்,

தான் அன்றாடம் விறகு வெட்டி விற்று அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக்கொண்டு வாழ்வதாகவும் துவிச்சக்கர வண்டியில் தினமும் அதிகாலை வேளை ஏ-9−வீதியால் கொக்காவில் காட்டிற்குச்சென்று விறகு வெட்டிக்கொண்டு வந்து கிளிநொச்சியின் பல கிராமங்களுக்குள் கொண்டு சென்று 700 அல்லது 800 ரூபாவிற்கு விற்று அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைப்பெற்று வாழ்க்கைச்செலவை சமாளிப்பதாகவும் கூறினார்.

இதேவேளை வீட்டுத்திட்டங்களைப் பெற தகுதியிருந்தும் வீட்டுத்திட்டங்கள் வழங்கப்படாது பல குடும்பங்கள் தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றன.

இதே கிராமத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் கடன் அடிப்படையில் வழங்கப்பட்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட வீடுகள் ஆட்களற்ற வீடுகளாக காணப்படுகின்றன.

இவ்வாறு அன்றாடம் ஒரு நேர உணவிற்கே அல்லற்படுகின்ற கிராமவாசிகளும் உணவின்றி, வீடின்றித் தவிக்கும் மக்களும் ஏராளம் இவர்களின் குறைகளைத் தீர்க்க உரிய வழிவகைகள் கண்டறியப்பட்டு இவர்களின் பஞ்சம் போக்கப்படவேண்டும்.

Comments