வரவு − செலவுத்திட்ட உருவாக்கப் பணி வெறும் சம்பிரதாய நடவடிக்ைகயா ? | தினகரன் வாரமஞ்சரி

வரவு − செலவுத்திட்ட உருவாக்கப் பணி வெறும் சம்பிரதாய நடவடிக்ைகயா ?

இன்னும் சில நாட்களில் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அந்த வரவு செலவுத்திட்டத்தில் நிச்சயமாக மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைப்பதற்கான நீதி கிடைக்கும் என்று நம்புவதற்கில்லை. பதிலாக வாழ்க்கைச் சுமை ஏறியிருப்பதற்கான நியாயப்படுத்தல்களே (காரண காரியங்களை விளக்குவதே) நடக்கப்போகிறது.

“இதைப்பற்றி எப்படி இவ்வளவு துல்லியமாகக் கூறுகிறீர்கள்?” என்று யாரும் கேட்கலாம்.

“இல்லை. இது வெறுமனே ஊகநிலைப்பட்ட கருத்து. அரசின் மீதான அதிருப்தியின் வெளிப்பாடு. அரசை எதிர்க்கும் மன நிலையில் இருந்து கொண்டு தெரிவிக்கப்படும் கருத்து” எனச் சிலர் மறுத்துரைக்கவும் முற்படலாம்.

நாட்டின் வளர்ச்சி என்பது ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது. அரசியல் ஸ்திரம், பொருளாதாரக் கட்டமைப்பும் வளர்ச்சியும், உற்பத்தியும் உற்பத்தித்திறனும் வளர்ச்சியடைதல், வினைத்திறனுள்ள – ஊழலற்ற நிர்வாகம், சிறப்பான அரசாட்சி, சமூக ஒருங்கிணைவு, சட்டம், நீதித்துறையின் செழுமையான நடவடிக்கைகள், இயற்கை வளப்பேணுகை, கல்வி மற்றும் அறிவுத்துறைச் செயற்பாடுகள், ஜனநாயச் செயலாக்கம், சமூகப் பாதுகாப்பு, சிறந்த தொடர்பாடல் எனப் பலவற்றில் தங்கியுள்ளது.

இலங்கையில் இவை எல்லாமே கடந்த பல தசாப்தங்களாக பலவீனப்பட்டேயுள்ளன. சிலது சீர்கெட்டிருக்கின்றன. இந்த நிலையில் ஒரு சீரான வரவு செலவுத்திட்டத்தை எந்தக் கொம்பராலும் உருவாக்கவே முடியாது. இதற்குப் பிரதானமாகச் சில காரணங்கள் உண்டு.

1. இனச்சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் பல்லினத்தன்மை உடைய அரசியலமைப்பை உருவாக்க முடியாமையும் அவ்வாறான ஒரு ஆட்சியை மேற்கொள்ள முடியாமையுமாகும்.

2. நாட்டின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட சுதேச உற்பத்தி சார் பொருளாதாரத் திட்டங்களை அரசு தன்னகத்தில் கொண்டிருக்கவில்லை. பதிலாக வெளிச் சக்திகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையிலான அரசியல், பொருளாதார அடிப்படைகளிலேயே கவனம் கொண்டிருப்பது.

3. நிர்வாகச் சேர்கேடுகளையும் ஊழலையும் கட்டுப்படுத்தி, ஒழுங்குபடுத்தத் தவறுகின்றமை. இதனால் மக்களுக்கு ஏற்படும் இழப்புகளும் சலிப்பும் ஏனைய துஷ்பிரயோகங்களும்.

4. நீடித்து வரும் சமூக – இன – முரண்பாடுகள் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளைச் செய்ய முடியாத நிலையைத் தோற்றுவித்துள்ளன. இதில் பொருளாதார விருத்தி தொடக்கம் அரசியல் தீர்மானங்கள், பிற செயற்பாடுகள் அனைத்தும் உள்ளடங்கும். ஊர் கூடினாலே தேரிழுக்கலாம். அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு. ஒன்றுபட்டால் உணடு வாழ்வு என்ற அனுபவ உண்மைக்கு மாறான நிலையே தொடர்ந்தால்?

5. இயற்கை வளப்பேணுகை பாதிக்கப்பட்டுள்ளது. இன்னொரு நிலையில் மூலவளச் சிதைவுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இது சமூகத்தையும் சூழலையும் கடுமையாகப் பாதிக்கிறது. இதைக் கட்டுப்படுத்தி, ஒழுங்கமைக்காத போது சமூகப் பதற்றமும் இயற்கைச் சேதங்களும் நிகழ்கின்றன. இவை பெரும் தாக்கத்தை உண்டாக்கிக் கொண்டிருக்கின்றன.

6. கல்வித்துறையும் அறிவாற்றலும் துறைசார் நிபுணத்துவதத்தை வழங்க வேண்டும். இந்த நிபுணத்துவப் பங்களிப்புக்குரிய ஏற்பாடுகளை அரசு நாட்டில் உருவாக்க வேணும். ஆனால், இதுவும் பலவீனமாகவே உள்ளது. ஆகவே நிபுணர்களும் ஆற்றலர்களும் அறிஞர்களும் நாட்டில் இருந்து செயற்படுவதையும் விட வெளியேறிச் செல்வதையே விரும்புகிறார்கள். இதற்கு மாற்றுத்திட்டங்களை அரசாங்கம் உருவாக்கவில்லை. இது சட்டங்களால் கட்டுப்படுத்தக்கூடிய ஒன்றல்ல. பதிலாக செயற்படுவதற்கான தளங்களை உருவாக்குதன் மூலமாகச் சாத்தியப்படுத்துவது. அப்படிச் சாத்தியப்படுத்தினால், அது பல்துறை வளர்ச்சிக்கு ஏதுவாகும்.

7. அடுத்தது, ஜனநாயகச் செழுமையை உருவாக்குதலாகும். இதைச் சரியாகச் செய்வதற்கு எவரிடத்திலும் அக்கறையில்லை. கட்சிகள் தொடக்கம் அரசாங்கத்தின் கட்டமைப்புகள் வரையில் இது பெருங்குறைபாட்டுடனேயே உள்ளன. இதனால் உள்ளூராட்சி சபைகள் தொடக்கம் மாகாணசபைகள், பாராளுமன்றம் வரையிலான ஆட்சி அதிகாரக்கட்டமைப்புகள் சிதைவுற்றுக் காணப்படுகின்றன. எந்தத்திட்டங்களையும் ஒருங்கிணைக்க முடியாமலும் சரியாக நிறைவேற்ற முடியாமலும் புதிய திட்டங்களை உருவாக்க முடியாமலும் உள்ளது. ஆகவே இதைச் சீர்ப்படுத்துவது அவசிய – அவசரப்பணியாகும்.

இப்படிப் பல நிலைகளில் சீராக்கங்களைச் செய்ய வேண்டிய நிலையில் அரசாங்கமும் பிற தரப்புகளும் உள்ளன. இதைச் செய்தால்தான் ஒரு சீரான – சரியான – பொருத்தப்பாடுடைய வரவு செலவுத்திட்டத்தை உருவாக்க முடியும். இல்லையெனில் ஏதோ சம்பிரதாயத்துக்கு ஆண்டு தோறும் சமர்ப்பிக்கப்படும் ஒரு அறிக்கையாகவே இது அமையும்.

இதனால்தான் வரவு செலவுத்திட்டத்தைக்குறித்து மக்கள் மகிழ்ச்சியோடு கவனிப்பதில்லை. வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படப்போகிறது என்றாலே மக்களுடைய மனதில் இனம்புரியாத ஒரு பதட்டம் உருவாகி விடுகிறது. ஏதோ தங்களுக்கு எதிரானதொரு சதி உருவாக்கப்படுகிறது – வருகிறது என்று அச்சமடைகிறார்கள்.

இது சமானிய மக்களிடம் என்றால், புத்திஜீவிகள், துறைசார்ந்தோரிடத்திலும் எதிர்மறை நிலையே காணப்படுகிறது. வரவு செலவுத்திட்டத்தையிட்டு புத்துணர்ச்சியும் ஊக்கமும் ஏற்படுவதற்குப் பதிலாக எரிச்சலும் நம்பிக்கையீனமுமே அவர்களிடம் ஏற்படுகிறது. தாம் செயற்படுவதற்கான நெகிழ் நிலையை – வாய்ப்புச் சூழலை ஏற்படுத்தத் தவறும் விதமாகவே ஒவ்வொரு வரவு செலவுத்திட்டமும் என்ற எண்ணமே பலரிடத்திலும் உண்டு.

எனவே வரவு செலவுத்திட்டத்தை அரசாங்கம் தனது கட்சியின் நிலை நின்று நோக்காமல், ஒரு குறிப்பிட்ட தரப்பின் நலன் நோக்கு நிலையில் நின்று வரையாமல் மக்கள், நாடு என்ற அடிப்படையில் உருவாக்க வேண்டும். இதற்குப் பொருத்தமான கள ஆய்வையும் நிபுணத்துவ அறிவையும் சமூக மனப்பாங்கையும் தேசப்பற்றையம் வரவு செலவுத்திட்ட உருவாக்கத்திலும் அரசாட்சியிலும் பங்கு வகிப்போர் கொள்வது அவசியம். அவ்வாறான சக்திகளை இனங்கண்டு, அவற்றின் கைகளில் அதிகாரத்தைக் கொடுக்காதது மக்களின் தவறு என்பதையும் இங்கே சுட்டிக்காட்டுவது அவசியமானது.

இலங்கையின் கடந்த இருபது ஆண்டுகால வரவு செலவுத்திட்டத்தில் எது சிறப்புடையது என்று யாராவது கூற முடியுமா? என்ற கேள்வியை இங்கே எழுப்பலாம்.

முப்பது ஆண்டுகளுக்கு மேலாக பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு என்ற பேரில் யுத்த செலவுக்கு மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலான நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலமாக இன ஒடுக்கு முறையே பிரதானப்படுத்தப்பட்டது. இது நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் சமூக ஒருங்கிணைவையும் மிக ஆழமாகப் பாதித்தது. இந்தப் பாதிப்பிலிருந்து நாடு இப்போதைக்கு மீளும் என்றும் தோன்றவில்லை. யுத்தம் முடிந்த பிறகும் இந்த நிதி ஒதுக்கீடும் அதன் மூலமான பாரபட்சப்படுத்தும் நடவடிக்கைகளின் பண்பும் அப்படியே தொடர்கின்றன. இது வளர்ச்சியை இடைநிறுத்துகிறது. இதையிட்டு எவரும் பெரிதாகக் கேள்வி எழுப்பியதில்லை. வரவு செலவுத்திட்டத்தில் உள்ள குறைபாடுகள், போதாமைகள், தவறுகளை எதிர்த்து வந்த ஜே.வி.பி.போன்ற தரப்புகளும் அடிப்படையான விடயங்களைக் குறித்துக் கவனம் செலுத்தவில்லை. முக்கியமான நாட்டின் பொருளாதாரக் கொள்கை என்ன, அரசியல் கொள்கை என்ன, சமுதாயக் கொள்கை என்ன என்ற கேள்விகளுக்கு யாரிடத்திலும் தெளிவான உடனடிப் பதில் இல்லை. இதுதான், இந்தக் குறைபாடுகள்தான் வரவு செலவுத்திட்டத்தையும் அதனோடிணைந்த நாட்டின் ஏனைய அம்சங்களையும் பாதிக்கிறது.

எனவே இந்த நிலையில் இதைக்குறித்துச் சிந்திப்பதற்கு அனைத்துத் தரப்பும் முன்வர வேண்டும். தமக்குள் சிறைப்பட்டிருக்கும் குறுகிய அரசியல் அடையாளங்களையும் அதன் வழியான எண்ணங்களையும் விட்டு விடுதலையாவது இவற்றின் முதற் பணியாகும். அப்படி விடுதலையாகும்போது நாட்டின் பொது விடயங்களைக் குறித்துத் சிந்திக்கக் கூடிய மன விரிவும் துணிவும் ஏற்படும்.

அச்சமும் பதற்றமும் சந்தேகமும் தடுமாற்றமும் இல்லாத ஒரு நிலையில்தான் பெரும் பணிகளைப் பற்றிச் சிந்திக்கலாம். அதுவே இன்று நாட்டுக்குத் தேவை. ஆகவே வரவு செலவுத்திட்டத்தை உருவாக்குவதென்பது சம்பிரதாய நடவடிக்கை என்பதற்கு அப்பால், ஒரு நிதி அமைச்சரின் பணி என்ற முறைக்கு அப்பால், அது நாட்டின் பொதுப்பணிக்கான அடிப்படை வேலை என்ற புரிதலோடு அணுகப்பட வேண்டும்.

அதையே நாடு எதிர்பார்க்கிறது. ஆமாம் போரிலே சிக்கியழிந்த இந்த நாடு.

 

Comments