வேறுபாடுகளை முழுமையாக அறிந்துகொண்ட ஆசியானின் தெளிவான பயணம் | தினகரன் வாரமஞ்சரி

வேறுபாடுகளை முழுமையாக அறிந்துகொண்ட ஆசியானின் தெளிவான பயணம்

  • வியட்நாம் உலக பொருளாதார மாநாடு ஒரு நோக்கு
  • நான்காவது கைத்தொழில் புரட்சியில் ஆசியானின் எதிர்காலம்

 

(கடந்த வாரத் தொடர்)

எவ்வாறு இரண்டாம் உலகப்போர் ஐரோப்பியாவில் உள்ள நாடுகளையெல்லாம் ஒன்றிணைத்து ஐரோப்பிய ஒன்றியம் உருவாகக் காரணமாக இருந்ததோ, அதேபோல் சீனாவின் வளர்ச்சியும் எல்லைப் பிரச்சினையில் சீனா காண்பிக்கும் தீவிரமும் தென்கிழக்காசிய நாடுகளை ஒருங்கிணைத்து, ஆசியான் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த பராக் ஒபாமா, மேற்காசியாவிடம் காட்டிய அக்கறையைக் கிழக்காசியாவிடம் காட்டவில்லை என்ற ஒரு குறை நிலவிய காலத்தில், அவருக்குப் பின் வந்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் இதனைக் கண்டுகொள்ளவில்லை. அதனால்தான் ஆசியான் நாடுகள் அடுத்தகட்ட வெளிவிவகாரக் கண்ணோட்டத்திற்கு முற்பட்டிருப்பதாகச் சொல்ல முடியும்.

தென்கிழக்காசிய நாடுகள் ஏதோ ஒரு வகையில் சீனாவுடன் நெருக்கமாக இருந்தாகவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. இதில் இலங்கையும் விதிவிலக்கல்ல. சீனாவுக்கும் ஆசியானுக்கும் நெருக்கமான பொருளாதாரத் தொடர்புகள் காணப்படும் அதேநேரத்தில், சீனாவை மட்டும் முழுமையாக நம்பியிருக்கும் சூழலையும் ஆசியான் நாடுகள் விரும்பவில்லை என்பதும் புரிந்துகொள்ளப்படவேண்டும். அது மாத்திரமல்லாமல், ஆசியானைச் சேர்ந்த சில நாடுகள் சீனாவின் தென்சீனக் கடல் ஆதிக்கம் குறித்து மாறுபட்ட நிலைப்பாட்டைக்கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், கடல்சார் பாதுகாப்பு, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்த ஆசியான் நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வியட்நாம் உலகப் பொருளாதார மாநாட்டில் தொடர்ந்து வலியுறுத்தி உள்ளார்.

இலங்கையைப் பொறுத்தவரை 650 மில்லியன் சனத்தொகையைக் ெகாண்ட ஆசியானுடன் நெருக்கமான வரலாற்றுத் தொடர்பினைக் கொண்டுள்ளது. இலங்கை கடந்த பல ஆண்டுகளாகக் 'கிழக்கு நோக்கிய கொள்கை'யைப் பின்பற்றி வருவதன் காரணமாக தென் கிழக்காசிய நாடுகளுடன் நெருக்கமான அரசியல், பொருளாதார, கலாசார உறவுகளைக் கொண்டுள்ளது. 2017ஆம் ஆண்டு முதல் தடவையாக ஜகார்த்தாவுக்கான இலங்கைத் தூதுவருக்கு அங்கீகாரமளித்து ஆசியானுடன் நிறுவனமய ரீதியாக இணைந்துகொண்டது இலங்கை. அப்போதிருந்து முக்கியமாக அரசியல் பாதுகாப்பு ஒத்துழைப்பு விடயத்தில் ஆசியானுடன் இலங்கை நெருங்கிச் செயற்பட்டு வருகிறது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய இந்த அறுபதாண்டு காலத்தில், நாடுகளின் கூட்டமைப்புகள் உருவாகிய வண்ணம் உள்ளன. இவை பாதுகாப்பு, வணிகம், அரசியல் எனப் பல தளங்களில் இயங்குகின்றன. தொடக்கத்தில் பகட்டான குடைகளாக விரிந்து, காலப்போக்கில் நைந்து போனவை பல ஆரவாரமின்றித் தொடங்கி வலுவான அமைப்புகளாக வடிவெடுத்தவை சில. நிரந்தரக் கூரைகளாக உருவாகி உறுப்பு நாடுகளின் நலனைக் காப்பவை சில.

அந்த வகையில் வியட்நாம் தலைவர் ஹோ சி மின்னின் தீர்க்கதரிசனத்திற்கு அமைவாக இன்று அவரின் வழிகாட்டலைப் பின்தொடர்கிறார்கள் தற்போதைய வியட்நாம் தலைவர்கள். அவ்வாறான ஒரு தொடர் தலைமைத்துவ செல்நெறி இலங்கையில் பின்பற்றக்கூடியதாகவிருக்கிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் தலைமைத்துவம் என்பது தென்கிழக்காசிய தலைவர்களிடையே தனித்துவமானது என்பதைப் பல தடவை அவர் நிரூபித்திருக்கிறார். சிங்கப்பூரில் நடைபெற்ற பொருளாதார மாநாட்டிலும் சரி, அண்மையில் நடந்த வியட்நாம் உலகப் பொருளாதார மாநாட்டிலும் சரி, பிராந்திய நாடுகளுக்குத் தலைமைத்துவம் வழங்க்கூடிய திறன் உள்ளது என்பது வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. என்றாலும், அவ்வாறான ஒரு தலைமைத்துவத்தின் அவசியத்தையோ, அதன் அனுபவத்தையோ இலங்கையில் முழுமையாகப் புரிந்துகொள்ளப்படாத நிலைதான் நீடிக்கிறது. ஏனெனில். அரசியல் எதிர்பார்ப்புகளும் அவநம்பிக்கைகளும் வலம் வந்துகொண்டிருக்கும் நிலையே இலங்கையைப் பற்றிக்கொண்டிருக்கிறது.

ஆசியான் உறுப்பு நாடுகள் பொருளாதார வளர்ச்சியையும், ஒத்துழைப்பையும், சமாதானத்தையும் நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. கூட்டங்களில் உள்நாட்டு அரசியல் விவாதிக்கப்படுவதில்லை என்பது முக்கியமானதொன்று.

ஐரோப்பிய ஒன்றியத்தைப் போல கிழக்காசியாவில் ஒரு கூட்டமைப்பை உருவாக்க வேண்டுமென்று 1990களிலேயே முன்மொழிந்தவர் மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது. 25 நாடுகள் ஒன்றுகூடி ஐரோப்பிய ஒன்றியத்தையும், அதற்கு யூரோ எனும் பொதுச் செலாவணியையும், ஒருமித்த குரலையும் உருவாக்கியது அவரைக் கவர்ந்தது. மேலும், கிழக்காசியாவின் கூட்டமைப்பால் அமெரிக்க ஆதிக்கத்தையும் எதிர்கொள்ள முடியும் என்றார் மகாதீர். அப்போது அவருக்கு ஆதரவு கிட்டவில்லை. 1997இல் தென்கிழக்காசிய நாடுகள் பெரும் பொருளாதார வீழ்ச்சிக்கு உள்ளாயின. அந்தத் தருணத்தில் அமெரிக்கா இந்த நாடுகளுக்கு வழிகாட்டுதலையோ தலைமையையோ நல்கவில்லை. பல ஆசியான் நாடுகள் அமெரிக்காவின் மீது கொண்டிருந்த நம்பிக்கையும் சரியத் தொடங்கியது.

டிசம்பர் 1997இல், வடகிழக்கு ஆசிய நாடுகளான சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகியவற்றுடன் ஆசியான் இணைந்து, ஆசியான்+ 3 உருவாகியது. நாடுகளிடையே நிதி, வேளாண்மை, தகவல் தொழில்நுட்பம் முதலான பல்வேறு தளங்களில் ஒத்துழைப்பு வளர்ந்தது. இந்த நாடுகளுக்கிடையில் 1981இல் 32 சதவீதமாயிருந்த இறக்குமதி, 2001இல் 50 சதவீதமாக உயர்ந்தது என்கிறார் பொருளாதார வல்லுநர் எட்வர்ட் லிங்கன்.

தனது அபரிமிதமான ஏற்றுமதிக்கு அவசியமான மூலப் பொருள்கள் பலவற்றை ஆசியான் நாடுகளிடம் வாங்குகிறது சீனா, இதன் மூலம் பிராந்தியத்தில் தனது செல்வாக்கை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பை அது நழுவ விடவில்லை. 2010இல் முழுமையாக அமுலுக்கு வரும் ஆசியான் - சீனா தாராள வணிக ஒப்பந்தம் மூலம் 170 கோடி பயனீட்டாளர்களைக் கொண்ட உலகின் மிகப் பெரிய சந்தை உருவாகும் என்று நம்பியது.

1990 முதலே ஆசிய நாடுகளின் நிரலில் இருந்து வரும் கிழக்காசியக் கூட்டமைப்பு 1997இல் கூர்மையடைந்தது எனலாம். 2001இல் புருணையில் நடந்த ஆசியான் 3 கூட்டத்தில், கிழக்காசியச் சமூகத்தை ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதன் அவசியத்தை வலியுறுத்தியது தென் கொரியா.

கிழக்காசியா என்பது இப்போது பூகோள ரீதியாக அல்லாமல், அதன் கருத்து ஒற்றுமையாலேயே வரையறுக்கப்படுகிறது என்கிறார்கள் ஆசியான் தலைவர்கள்.

இலங்கை அங்கம் வகிக்கும் தெற்காசிய நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பால் (South Asian Association for Regional Cooperation) ஒரு பொருளாதாரக் கூட்டமைப்பாக உருவாக முடியவில்லை. பாகிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், மாலத்தீவு, நேபாளம், இந்தியா, இலங்கை ஆகியவை இடம்பெறும் சார்க்கில், நாடுகளுக்கிடையிலான பாதுகாப்புப் பிரச்சினைகள் பொருளாதார ஒத்துழைப்பிற்குத் தடையாக இருக்கின்றன. பிராந்தியத்திற்கு இடையிலான ஏற்றுமதி, உறுப்பினர்களின் மொத்த ஏற்றுமதியில் 5 சதவீதமே. மாறாக, ஆசியான் நாடுகள் தமக்குள் வணிகத்தில் அக்கறை செலுத்துகின்றன.

எனவே, உறுப்பினர்களின் நம்பிக்கையைப் பெறுவதன் மூலமே அமைப்பின் முக்கியப் பங்காளியாக முடியும் என்பது இலங்கையின் நம்பிக்கை. ஆசியான் நாடுகள் பலவற்றில் இலங்கை நெருங்கிய வர்த்தகப் பொருளாதார உறவுகளைக்கொண்டிருப்பதே இதற்குக் காரணம். தென் கிழக்காசிய நாடுகளால் அதிகம் சாதிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் மற்றும் பொருளாதார சக்தி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி நகர்வதன் அவசியத்தை ஆசியான் தலைவர்கள் வலியுறுத்துகிறார்கள். ஒரு தடவை சிங்கப்பூரில் நடந்த பொருளாதார மாநாட்டிலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனைச் சுட்டிக்காட்டியிருந்தார்.

ஆசியான் நாடுகளுடன் சீனா, ஜப்பான், தென் கொரியா மற்றும் இந்தியா அமைக்கும் கூட்டணி உலகின் மிக வலுவான பொருளாதாரக் குழுவாக விளங்கும் மற்றொரு சாராரின் கருத்தாக உள்ளது.

எதிர்பார்ப்புகளைப் போலவே சந்தேகங்களுக்கும் குறைவில்லை. ஆசிய நாடுகளிடையே பரஸ்பர அவநம்பிக்கை அதிகம் என்றார்; சியோல் தேசியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹா யங் சுன். சில நாடுகளுக்கிடையே நிலவும் பகைமை மற்றும் இடைவெளிகளைச் சிலர் சுட்டிக் காட்டியிருந்தனர். வளமை - வறுமை, ஜனாயகம் - ஒரு கட்சி ஆட்சி - இராணுவ ஆட்சி, பழைமை - நவீனம் போன்ற முரண்பட்ட நடைமுறைகள் உள்ள நாடுகளிடையே ஒத்திசைவு எங்ஙனம் சாத்தியம் என்பது அவர்களின் கேள்வியாக இருந்தது.

வேறுபாடுகளையும் குறைபாடுகளையும் அறிந்ததைப் போலவே, ஒத்துழைப்பின் பலன்களையும் உறுப்பு நாடுகள் அறிந்துகொண்டதால் ஆசியானின் திசை வழியும் கொள்கைகளும் தெளிவாகத் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றன. பரந்துபட்ட அமைப்புகளைவிடவும் பிராந்திய அமைப்புகள் வரலாற்றுப் பாதையில் தடம் பதித்திருக்கின்றன. அந்த வகையில் பிராந்தியத்தின் குரலையும் உலகுக்கு ஒலிக்கச் செய்ய முடியும் என்பதை உலகப் பொருளாதார மாநாட்டில் பங்குபற்றிய ஆசியான் தலைவர்கள் பறைசாற்றிச் சென்றிருக்கிறார்கள்.

அவர்கள் தாமாக சுயத்தை இழந்துவிடாத ஒரு நவீனத்துவத்தில் தம்மை இணைத்துக்கொள்ளவும் தகவமைத்துக்கொள்ளவும் தயாராக இருக்கிறார்கள். அதாவது வேற்றுமையில் ஒற்றுமை என்பதில் அவர்கள் உறுதிபூண்டிருக்கிறார்கள்.

டிஜிற்றல் பொருளாதாரத்திற்குப் புறம்பாக, எதிர்காலக்கல்வி, பாலின சமத்துவம், தொழில்வாய்ப்பு போன்ற விடயத்தில் ஆசியான் நாடுகள் கவனம் செலுத்தியுள்ளன. குறிப்பாக, சர்வதேச வர்த்தக, முதலீடுகளை எதிர்காலத்தில் எவ்வாறு வடிவமைத்துக்ெகாள்வது என்பதுபற்றிய சிந்தனை வியட்நாம் மாநாட்டில் தீவிரமாக ஆராயப்பட்டுள்ளது. பௌதிக ரீதியில் காணப்படுகின்ற பொருள்கள் அனைத்தும் தற்போது இணைய வௌிக்கு வந்திருக்கும் நிலையில், சேவைகளும் விற்பனையாக மாறியிருக்கின்றன. ஆகவே, ஆசியான் பொருளாதாரச் சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்குப் புதிய அணுகுமுறையைக் கையாள வேண்டிய தேவை எழுந்துள்ளது. ஆதலால், பிராந்திய ஒருங்கிணைப்புக்குப் புதிய சிந்தனைகள் அவசியமாகின்றன.

கடந்த பல தசாப்தங்களில் உற்பத்தியில் வளர்ச்சி கண்டுள்ள ஆசியான் நாடுகள் தமது நாட்டுக்கு மாத்திரமன்றி அவற்றின் விநியோக வலையமைப்பை உலகை நோக்கி விரிவுபடுத்தியுள்ளன. எனினும், இந்த வலையமைப்பிற்கு நான்காவது கைத்தொழில் புரட்சி தடைகளை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு எவ்வாறு முகங்கொடுத்து முன்னேறிச் செல்வது என்பதுதான் வியட்நாம் மாநாட்டின் கருப்பொருள்.

விசேடமாக, மனித உரிமைகள், சட்டம் ஒழுங்கு, நல்லாட்சி, முரண்பாடுகளைத் தீர்த்தல், நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், போருக்குப் பின்னரான அபிவிருத்தி, சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் உள்ளிட்ட விடயங்களில் ஆசியானுக்கும் இலங்கைக்கும் வித்தியாசமான அனுபவங்களைக் கொண்டிருந்தாலும், இரண்டு தரப்பிற்கும் பொதுவான விடயங்களில் இணைந்து செயற்பட்டு வருகிறது.

அந்த வகையில், வியட்நாம் உலகப் பொருளாதார மாநாட்டின் பெறுபேற்றின் விளைவுகள் ஆசியானுக்கு மாத்திரமன்றி இலங்கைக்கும் எதிர்காலத்தில் சுபீட்சத்தை ஏற்படுத்தும் என்று நம்பிக்ைக கொள்ளலாம்.

(நிறைவு)

Comments