அறுவைக்காட்டு குப்பை விவகாரம் அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

அறுவைக்காட்டு குப்பை விவகாரம் அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும்

கற்பிட்டி தினகரன் விஷேட, புத்தளம் தினகரன், புத்தளம் விஷேட நிருபர்கள்

கொழும்பு குப்பைகளை அருவைக்காடு பிரதேசத்தில் கொட்டும் திட்டத்தை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டுமென அமைச்சர் ரவூப் ஹக்கீம் புத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளைப் புத்தளத்தில் கொட்டுவதற்கு எதிராக புத்தளம் கொழும்பு முகத்திடலில் சுழற்சி முறையில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களை அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று முன்தினம் (05) வெள்ளிக்கிழமை மாலை சந்தித்து உரையாடினார்.

புத்தளம் நகர மண்டபத்தில் குப்பை விவகாரம் தொடர்பில் விஷேட கலந்துரையாடலொன்றும் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் அமைச்சர் உரையாற்றினார்.

புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில், வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ் உட்பட மு.காவின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், சூழலியலாளர் முபார் ஆசிரியர் உட்பட சமூக ஆர்வலர்கள், மகளிர், இளைஞர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

கலந்துரையாடலில் பங்கேற்ற சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள், மகளிர், இளைஞர் அமைப்பினரும் கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை புத்தளத்தில் கொட்டுவதால் நேரடியாக, மறைமுகமாக ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் அமைச்சருக்கு சுட்டிக்காட்டியிருந்தனர்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் குறிப்பிட்டதாவது,

கொழும்பு குப்பைகளைப் புத்தளத்தில் கொட்டும் திட்டத்திற்கு எதிராக இங்கு வாழும் மூவின மக்களும் ஒன்றாக இணைந்து போராட்டத்தில் ஈடுபடுகின்ற போது, இந்த விவகாரத்தில் யாரும் மூடிமறைத்து அரசியல் செய்ய முடியாது. இஃது அவசியமாக பேசப்பட வேண்டிய ஒரு விடயமாக இன்று உருவெடுத்திருக்கிறது. சொந்த ஊரில் உள்ள குப்பைகளை அந்த பகுதியிலேயே கொட்ட முடியாத ஒரு நிலைமை காணப்படுகின்ற போது, கொழும்பு மாவட்டத்தில் சேகரிக்கப்படும் குப்பைகளை 80 மைல் தூரத்திலுள்ள புத்தளம் அருவைக்காடு பகுதியில் கொட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அதுபோல கண்டி முகாகொட பகுயில் ௯டப் பல வருடங்களாக குப்பைகள் கொட்டப்பட்டன. அதனால், அந்தக் குப்பைத் தொட்டியில் இருந்து வெளியேறும் ஒருவித இரசாயன திரவக் கசிவினால் அதனை அண்டியுள்ள மஹாவலி ஆற்றுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

அதுமாத்திரமின்றி, முகாகொட குப்பை கொட்டும் பகுதியை அண்டியே கண்டி மாவட்டத்தில் வாழும் அரைவாசி மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் மிகவும் அவசரமாக முகாகொட பகுதியில் உள்ள குப்பைகளை வேறு பகுதிக்கு அப்புறப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

இது கண்டியில் மாத்திரமல்ல அக்குறணையில் உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சொந்த ஊரான பொலனறுவை ஹிங்குராகொடயிலும் ஆற்றுக்குப் பக்கத்தில் ஏராளமான குப்பைகள் கொட்டப்பட்டிருப்பதை நான் அண்மையில் அங்கு சென்ற போது பார்த்தேன்.

எனவே, அதையும் அந்தப் பிரதேசத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்காக வேறு இடத்தைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் போகும் இடமெல்லாம் அதற்கு எதிர்ப்புக்களே தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இதன் பின்னணியிலேயே கொழும்பு குப்பைகளை ரயில் மூலம் கொண்டு வந்து புத்தளத்தில் கொட்டும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதற்காக தனியான ரயில் இன்ஜின், பெட்டிகளைக் கொள்வனவு செய்ய கேள்விப் பத்திரமும் கோரப்பட்டிருக்கிறது.

எனவே, புத்தளத்தில் வாழும் மூவின மக்கள் விடுக்கும் கோரிக்கைகளுக்கு கௌரவமான முறையில் உரிய பதிலை வழங்குவது அரசாங்கத்தின் கடமையாகும். மக்களின் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும்.

இந்த விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் புத்தளத்திற்கு விஜயம் செய்து மக்களுடன் கடுமையாக நடந்துகொண்டார் என்ற விடயம் கவலையளிக்கிறது.

கொழும்பு மீதொட்டமுல்ல பகுதியில் உள்ள குப்பைகளை புத்தளம் அருவைக்காடு பகுதியில் கொட்டிவிட்டு, நாளாந்தம் சேகரிக்கப்படும் குப்பைகளை வேறு இடத்தில் கொட்டுகின்ற ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றுதான் நான் இதுவரை அறிந்து வைத்திருந்தேன்.

ஆனால், மீதொட்டமுல்ல குப்பைகள் மாத்திரமின்றி, நாளாந்தம் சேகரிக்கப்படும் குப்பைகளும் இங்கு கொண்டுவந்து கொட்டப்படவுள்ளது பற்றித் தெரிந்துகொண்டதும், திட்டத்திற்கு பொறுப்பானவர்களைத் தொடர்புகொண்டு திட்டம் தொடர்பாகக் கேட்டறிந்துகொண்டேன்.

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் அவர் எனக்கு விளக்கமளித்தார்.

எனினும், திட்டம் தொடர்பில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அல்லது புதன்கிழமை ஆகிய நாட்களில் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முழுமையான விளக்கமொன்றை வழங்குமாறும் கேட்டுக்கொண்டேன்.

ஆகவே, இந்தக் குப்பை விவகாரம் தொடர்பில் அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றார்.

Comments