கடும் மழை தொடர்ந்தால் மண்சரிவு ஏற்படும் அபாயம் | தினகரன் வாரமஞ்சரி

கடும் மழை தொடர்ந்தால் மண்சரிவு ஏற்படும் அபாயம்

பதுளை மாவட்டத்தின் பசறை ஹல்தும்முல்ல பிரதேசங்களில் தற்போது பெய்துவரும் கடும் மழை தொடரும் பட்சத்தில் இவ்விரு பிரதேசங்களிலும் மண்சரிவுகள் ஏற்படலாம் என எச்சரிக்ைக விடுக்கப்பட்டுள்ளது. இப் பிரதேசங்களிலுள்ள மக்கள் எந்நேரமும், அவதானத்துடனும், முன்னெச்சரிக் கையுடனும், செயற்பட வேண்டுமென பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரி ஈ.எம்.எல். உதயகுமார தெரிவித்துள்ளார். இவ் விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர், பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தால் அனர்த்த பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு ஏற்கனவே அனர்த்தம் ஏற்படும் போது எவ்வாறு செயற்பட வேண்டும் என செயற்பாட்டு ரீதியான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. அத்தோடு தோட்டங்களுக்கும், கிராமங்களுக்கும்

மழையை அளவிடுவதற்காக மழை மானிகள் வழங்கப்பட்டுள்ளதோடு மழைமானியில் மழை வீழ்ச்சியை அளக்கும் முறை தொடர்பாகவும் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

தொடரும் கடும் மழை காரணமாக பதுளை மாவட்டத்தின் ஏனைய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மண்சரிவு ஏற்படக் கூடிய வாய்ப்பு உள்ளது. ஒரு மணி நேரத்தில் 75 மில்லி மீற்றர் மழை அல்லது 24 மணி நேரத்தில் 150 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகுமானால் பிரதேச கிராம சேவகரை அறிவுறுத்திவிட்டு முகாமில் தங்குவதற்கு தேவையான முன் ஆயத்தப் பொருட்களுடன் தெரிவு செய்யப்பட்ட பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும்.

அத்தோடு கடந்த ஆறு மாத காலமாக விஷமிகள் காடுகளுக்குத் தொடர்ந்து தீ மூட்டி வந்ததால் அம் மண் இலகுவாகி கற்பாறைகளும் நகர்ந்துள்ளன.

கடும் மழை காரணமாக கற்பாறைகள் உருண்டு பள்ளத் தாக்குகளில் விழக் கூடிய அபாயம் உள்ளது. எனவே, மலையடிவாரங்களில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுவதோடு பாதுகாப்பாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Comments