தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளுக்காக பிள்ளைகளை வதைக்க வேண்டாம் | தினகரன் வாரமஞ்சரி

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளுக்காக பிள்ளைகளை வதைக்க வேண்டாம்

ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை பிள்ளைகளின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஒரேயொரு தடை தாண்டல் பரீட்சை என்று பெற்றோர்கள் நம்புகின்ற காரணத்தினால், நாட்டின் சிறுவர் தலைமுறை பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார், 5ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தாலும் சித்தியடையாவிட்டாலும் தொந்தரவுகளின்றி பிள்ளைகளை அரவணைப்பது எவ்வாறு என்பது பற்றி ஒவ்வொரு வருடமும் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் பெற்றோருக்கு அறிவூட்டும் நிகழ்ச்சித் திட்டமொன்றை தயார்படுத்துமாறு அனைத்து அதிபர்களுக்கும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

கண்டி முன்மாதிரி பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் நேற்று (06) கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.

புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளைத் தொடர்ந்து கடந்த காலங்களில் நாட்டின் பிள்ளைகள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்ததை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, இது பற்றி அனைத்து கல்வித்துறை அதிகாரிகளும் கவனம் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

ஆசிரியர் தினத்தையொட்டி அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்த ஜனாதிபதி, ஆசிரியர்கள் மேற்கொண்டுவரும் உன்னதமான பணியைப் பாராட்டினார்.

இலவசக் கல்வியின் மூலம் சமூகத்திற்கு பயனுள்ள பிரஜைகளை உருவாக்குவதற்கு ஆசிரியர்கள் மேற்கொண்டுவரும் அர்ப்பணிப்பை பாராட்டிய ஜனாதிபதி, ஆசிரியர் தொழிலின் உரிமைகள், சலுகைகளை வெற்றி கொள்வதற்கும் ஆசிரியர்களுக்கு உயர்ந்த கௌரவத்தை பெற்றுக்கொடுக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.

கல்லூரிக்குச் சென்ற ஜனாதிபதியை மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

“அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இரண்டு மாடி விஞ்ஞான ஆய்வுகூட கட்டிடத்தையும் மூன்று மாடி வகுப்பறைக் கட்டிடத்தையும் ஜனாதிபதி மாணவர்களிடம் கையளித்தார். கல்லூரியின் 2017ஆம் ஆண்டில் விசேட திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கான விருதுகள் மற்றும் பரிசில்களையும் ஜனாதிபதி வழங்கினார்.

கல்லூரியின் முன்மாதிரி பயிர்ச்செய்கை நடவடிக்கைகளையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.

மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏகநாயக்க, கல்லூரியின் அதிபர் ஆர்.எம்.தேசப்பிரிய ரத்நாயக்க உள்ளிட்ட ஆசிரியர் குழாம், பெற்றோர், பழைய மாணவர்கள் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதேநேரம், கண்டி சிற்றி சென்டரில் இடம்பெற்ற Ayur Ex Kandy 2018 என்ற சர்வதேச ஆயுர்வேத கல்வி மற்றும் வர்த்தக கண்காட்சியையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனநேற்று பார்வையிட்டார்.

கண்காட்சியின் இரண்டாம் நாளான நேற்று ஜனாதிபதி கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்.

பாரம்பரிய வைத்தியத்துறை அறிவை உலகிற்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் மத்திய மாகாண சுகாதார, சுதேச மருத்துவ அமைச்சு, ஆயுர்வேத திணைக்களம் மற்றும் மத்திய மாகாண சபையுடன் இணைந்து இரண்டு வருடங்களுக்கொருமுறை ஏற்பாடு செய்யும் இக்கண்காட்சி நான்காவது தடவையாக நடைபெறுகிறது. இக்கண்காட்சி தொடர்ந்து மூன்று நாட்களுக்கு நடைபெறும்.

கண்காட்சியை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி, கண்காட்சிக் கூடங்களை பார்வையிட்டதுடன், பணிக்குழாமினருடனும் கலந்துரையாடினார்.

அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, மத்திய மாகாண ஆளுநர் பீ.பீ.திசாநாயக்க, மத்திய மாகாண சுகாதார தேசிய மருத்துவத்துறை அமைச்சர் பந்துல யாலேகம, உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதி கலாநிதி கீத கிறிஷ்ணன், உள்ளூராட்சி ஆயர்வேத ஆணையாளர் தம்மிக அபேசுந்தர ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

 

Comments