தினகரனில் பணியாற்றிய ராஜசிங்கனின் கொள்ளுப்பேரன் | தினகரன் வாரமஞ்சரி

தினகரனில் பணியாற்றிய ராஜசிங்கனின் கொள்ளுப்பேரன்

(சென்றவார தொடர்)

எகேலப்பொல, எக்னெலிகொட, மொல்லிகொட, பிலிமத்தலாவை (ஜூனியர்) தெல்வல ஆகியோருடன் எஸ். டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கவின் மற்றும் ஜே.ஆர். ஜயவர்தனவின் பாட்டன்மார்களும் இடம்பெற்றனர்.

இது குறித்து வல்பொல ராஹுல தேரரின் சுயசரிதையில், “ஆம்! அப்படியே! மன்னரைக் கைது செய்வதற்கு பண்டாரநாயக்காவின் பாட்டனாரும், எனது பாட்டனாரும் சென்றுள்ளனர். வெள்ளையர்களுக்கு செய்த உதவிகளுக்காக கைம்மாறாக எனது பாட்டனாருக்கும், பண்டாரநாயக்காவின் பாட்டனாருக்கும் பெருமளவு நிலப்பரப்புகளும், சொத்துக்களும் கிடைத்தன்” என ஜே.ஆர். ஜயவர்தன கூறியதாக தெரிவித்துள்ளதோடு, சிங்கள தேசத்தின் மன்னனை ஆங்கிலேயரிடம் காட்டிக் கொடுப்பதற்காக சென்ற துரோகிகளின் வாரிசுகள் நாட்டை ஆளும் தலைவர்களானார்களென குறிப்பிட்டுள்ளார்.

இராஜசிங்கனைக் கைது செய்வதற்காக நெருங்கும் போது “உங்கள் அரசன் மீது கைவைக்காதீர்கள்!” என உரத்தக் குரலில் இராஜசிங்கன் கர்ஜித்ததாகவும் அதனால் சிலர் பின்வாங்கியதாகவும், அவர்களை தைரியமூட்டி மன்னனைக் கைது செய்ய ஆவண செய்வதில் எக்னெலிகொட வெற்றி கண்டதாகவும் அந்த இடத்தில் இருந்த மொழிபெயர்ப்பாளன் டயஸ் தெரிவித்துள்ளான்.

எக்னெலிகொடையில் அடியாள் கிரிபோருவ மொஹட்டால, மன்னனின் துணைவியரின் காதுகளைக் கிழித்து நகைகளை பறித்தெடுத்ததாகவும், அதனால் காதுகளிலிருந்து இரத்தம் பீறிட்டதாகவும் இம்புலவல ஆராச்சி மூலமாக காட்டு மூலிகை இலைகளைக் கசக்கி காதுகளில் சாற்றைத் தடவி இரத்த பெருக்கத்தைத் தடுத்ததாகவும் டயஸ் மேலும் தெரிவித்துள்ளன.

ஜோன் டொய்லியின் டயறியில் 1815 பெப்ரவரி 24ஆம் திகதி, “முதல்நாள் என்னிடம் ஒப்படைக்கப்பட்ட அரசனின் மேலாடைகள், தலைக்கவசம் அணிவதற்கு உகந்தவையாக இருக்கவில்லை. அதனால் தையல் செய்து அரசனின் அறைக்கு அனுப்பிவைத்த போதும் மன்னன் அவற்றை திருப்பி அனுப்பியிருந்தான்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“கி.பி 1941ல் இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னர் வெளிவந்த லேக்ஹவுஸ் பத்திரிகையாகிய சிறுமின, மேற்படி அரச உடைகளைக் கண்டுபிடித்து அருங்காட்சிச்சாலைக்கு ஒப்படைக்கும் படத்தை வெளியிட்டது. அன்றைய கரந்தன ஆரம்ப பாடசாலையின் அதிபராக கடமை புரிந்த டி. குணதாச என்பவர் அவ்வாடைகளை இவ்வாறு ஒப்படைத்தார்.

மன்னன் ஸ்ரீவிக்கிரம இராஜசிங்கனையும் மனைவியர் இருவரையும் கொழும்புக்கு பல்லாக்குகள் மூலம் கொண்டு வந்த போதும் ஏனைய உறவினர்கள் சுரங்கப்பாதை மூலமாகவும் கால்நடையாகவும் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இராஜசிங்கனை கைது செய்யும் இம்மாபெரும் புரட்சிக்கு உண்மையில் வித்திட்டவன் ஆளுநர் பிரவுன்ரிக் எனவும், பிரித்தாளும் தந்திரத்தை சரியாக கடைப்பிடித்து கண்டியர்கள் மத்தியில் பெரும் பிளவையும் பகையையும் வளர்ப்பதற்கு காரணமானவன் ஜோன் டொய்லி எனவும் வரலாறு கூறுகின்றது.

டொய்லி பிரபுத்துவ குடும்பங்களுக்கு விலையுயர்ந்து மதுபான வகைகளை அடிக்கடி பரிசளித்துள்ளான். 1996ஆம் ஆண்டு பேராசிரியர் பிரேமகுமார எப்பிட்டவல எழுதிய ஒரு வரலாற்று ஆய்வு கட்டுரையில் இந்நாட்டு அரச பரம்பரையின் அழிவுக்கு வெளிநாட்டு குடிவகைகளே காரணமென குறிப்பிட்டுள்ளார்.

கொழும்புக்கு அழைத்துவரப்பட்ட மன்னனைத் தடுத்து வைப்பதற்கான இடத்தை தெரிவு செய்வதில் ஆங்கிலேயர் சிரமமப்பட்டுப் போனார்கள். 1815 மார்ச் 02ஆம் திகதி கண்டி உடன்படிக்கைக்கு (உடரட்ட கிவிசும) எதிராக எவரும் தலைதூக்கா வண்ணம் டொய்லி பார்த்துக் கொண்டான். அவ்வொப்பந்த மூலநகலில் முதலாம், இரண்டாம், மூன்றாம் பந்திகளில் இராஜசிங்கனைப் பற்றியே குறிப்பிட்டான். ஸ்ரீவிக்கிரம இராஜசிங்கன் சிம்மாசனத்திலிருந்து அகற்றப்படுவதாகவும் மன்னனுக்கோ அவனது உறவினருக்கோ எக்காரணம் கொண்டும் அரசுரிமை வழங்கப்பட மாட்டாதென அவற்றில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.

ஒப்பந்தத்தின் மூன்றாம் பந்தியில் மன்னனின் ஆண் உறவினர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் நாடு கடத்தப்படுவார்களென குறிப்பிடப்பட்டிருப்பதாக வண.பிதா எஸ்.ஜி.பெரேராவின் History of Ceylon for Schools என்னும் நூலில் சுட்டிக்காட்டியிருப்பதோடு மன்னன் இராஜசிங்கன் தனது நாயக்கர் உறவினர்களின் தேவைகளுக்காக தனக்கு அன்பளிப்பாக கிடைத்த பொருட்களையும், அரச சொத்துக்களையும் விற்றதாகவும் குறிப்பிடுகின்றார்.

1965ம் ஆண்டு கலாநிதி என்.எம்.பெரேரா ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கனின் இந்திய சந்ததியினகருக்கான இலங்கை அரசு வழங்கி வந்த கொடுப்பனவு நிறுத்தப்பட வேண்டுமென கூறியுள்ளார். அதன் மூலம் 1965ஆம் ஆண்டுவரை இராஜசிங்கனின் சந்ததியினரின் விபரங்கள் அரச கோவையில் இடம்பெற்றுள்ளமை தெரியவருகின்றது. தமக்கு மாதாந்தம் வழங்கப்படும் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்ட வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்தமையினால் சிறிமாவோ பண்டாரநாயக்கா அக்கொடுப்பனவை நிறுத்திவிட்டதாக கூறப்படுகின்றது. இலங்கை குடியரசாக மாறிய பின்னர் இந்தியாவில் வசிக்கும் ராஜசிங்கனின் உறவினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ‘பென்ஷன்’ பணம் நிறுத்தப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

ஸ்ரீவிக்கிரம இராஜசிங்கனை கைது செய்வதில் பண்டாரநாயக்களும், ரத்வத்தையினரும் பங்குகொண்டிருந்ததோடு எக்னெலிகொடையின் வளவு கலாநிதி என். பெரேராவின் மூன்று கோரளை வாசஸ்தலமாக விளங்கியமையும் ஸ்ரீவிக்கிரம இராஜசிங்கனின் சந்ததியினருக்கு பாதிப்பை ஏற்படுத்தியமை அதிசயமன்று.

ஸ்ரீவிக்கிரம இராஜசிங்கனின் கொள்ளுப்பேரன்களின் ஒருவர் சென்னை மெரினா கடற்கரையோரமாக நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார். மற்றொரு கொள்ளுபேரன் லேக்ஹவுஸ் நிறுவனத்தில் தினகரன் ஆசிரிய பீடத்தில் பணிபுரிந்துள்ளார்.

கண் காணாத கடவுளை நினைத்துருகி துதிப்பது போன்று கண் காணாத பிரித்தானிய மாமன்னரை தமது அரசனாக ஏற்றுக் கொள்வது கண்டி மக்களுக்கு சிரமமாகத்தான் இருந்தது. (தொடரும்...)

சி.கே. முருகேசு

Comments