வன்முறை என்பது வெறும் உடல் தாக்கமல்ல | தினகரன் வாரமஞ்சரி

வன்முறை என்பது வெறும் உடல் தாக்கமல்ல

மனிதனானவன் தனது அதிகாரத்தையும் ஆளுமையையும் பயன்படுத்தி தன்னைச் சார்ந்த மக்களையும் தன்னைச் சாராத மக்களையும் தனது ஆளுமைக்குள் உட்படுத்துகின்ற போது அதனையே நாம் வன்முறைகள் என்று குறிப்பிடுகின்றோம்.

இன்றைய காலப்பகுதியில் உலகில் பல்வேறு வன்முறைகள் காணப்படுகின்றது. யுத்தங்கள், இனமுரண்பாடுகள், ஆர்ப்பாட்டங்கள் என்பன அவற்றில் சில. அதைவிட குடும்பங்களுக்கு இடையிலும் அதன் உறுப்பினர்கள் மத்தியில் தோற்றம் பெறுகின்றது. இதனை நாம் பெண்களுக்கு எதிரான வன்முறை என்று பொதுப்பெயர் கொண்டு அழைக்கின்றோம்.இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குடும்பத்துக்கு குடும்பம் அதிகரித்த வண்ணமே உள்ளதுடன் அதன் விளைவுகளும் அதிகமாகவே காணப்படுகின்றது.

கணவன், மனைவி, குடும்ப அங்கத்தவர்கள் மத்தியிலும் அதிகமான வன்முறைகள் காணப்படுகின்றது.இலங்கையில் மட்டுமன்றி உலகிலும் பல வகையான வன்முறைகள் காணப்படுகின்றது. குறிப்பாக அவற்றில் ஒன்றாகவே பெண்களுக்கு எதிரான வன்முறையாகக் கருத முடியும்.

வன்முறை ஒன்று ஏற்படுமிடத்து அதனால் பாரிய விளைவுகளையும் தாக்கங்களையும் நாம் எதிர் கொள்கிறோம். குடும்பத்துக்குள்ளும் அதன் வெளியிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவனவாக இந்த வன்முறைகள் காணப்படுகின்றன. கணவன், மனைவி, பெற்றோர், பிள்ளைகளுக்கிடையிலான தகராறுகள் பாரிய வன்முறைகளுக்கும் கொலைச் சம்பவங்களுக்கும் வித்திட்டுள்ளது.

வன்முறைகள் பல்வேறு காரணங்கள், நோக்கங்கள் அடிப்படையில் தோற்றும் பெறுபவையாகும். வன்முறை பொதுவாக தோன்றுவது வீடுகளில் ஆகும். வீட்டு அங்கத்தவர்கள் உடல், உள ரீதியாக பாதிக்கப்படும் போது குறித்த நபர்கள் அதனை வன்முறைகளாகவும் தகாத செயல்கள் மூலமாகவும் தமது குடும்ப அங்கத்தவர்களிடம் பிரயோகிக்கின்ற போது அதனை நாம் வீட்டு வன்முறை என்ற வரையறைக்குள் வைக்கிறோம்.

குடும்ப செயற்பாடுகளில் அத்தியாவசியமான சில விடயங்கள் கிடைக்காத பட்சத்தில் குறிப்பாக பொருளாதாரம், உற்பத்தி நடவடிக்கைகள் மற்றும் சொத்துடைமைகள் கிடைக்காத சந்தர்ப்பங்களில் அதிருப்தி நிலை தோன்றி வன்முறைகள் வெடிக்க வாய்ப்புள்ளது. அதையும் வன்முறையாகவே கொள்ள வேண்டும்.

வறுமை மற்றும் மனஅழுத்தம், சமூக பண்பாட்டுக் காரணிகள் காரணமாக இலங்கை மட்டுமன்றி உலகிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஏற்பட காரணமாகின்றன.

இலங்கையைப் பொறுத்தவரையில் பெருந்தோட்ட துறைகளிலேயே அதிகளவான வன்முறைச் சம்பவங்களும் வீட்டு வன்முறைகளும் இடம் பெறுகின்றன. உலகில் வன்முறைகளின் காரணமாக பாதிக்கப்படுகின்றவர்கள் பெண்களாகவே காணப்படுகின்றனர் என்று பெண்கள் தொடர்பான ஆய்வு குறிப்புகள் குறிப்பிடுகின்றன.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இன்று பரவலாகப் பேசப்படும் ஒரு விடயமாகும். வன்முறை என்றவுடன் வெறும் உடல் தொடர்பான புறத்தாக்கம் என்று மட்டும் நினைக்காமல் அகத்தைப் பாதிக்கக் கூடிய நீண்ட கால நிரந்தர மனக் காயங்களைத் தரக் கூடிய உளவியல் ரீதியான தாக்கங்களையும் ஏற்படுத்துகிறது. வன்முறைகள் உடலியல் ரீதியானவை, உளவியல் ரீதியானவை என்று வகைப்படுத்தப்படும்.

மனைவியை அடிப்பது, மாமியார் கொடுமை, பலாத்காரம், கட்டாய உடலுறவுக்கு வற்புறுத்தல், பாலியல் துன்புறுத்தல்கள், கற்பழிப்புப் போன்றவை அடிப்படையான வன்முறைகளாகக் காணப்படுகின்றன. அத்தகைய பாதிப்புக்களின் சுவடுகள் உடல் வடுக்களையும், மாறுதல்களையும் உருவாக்கக் கூடியன. அத்தோடு மனத் தாக்கத்தையும் உருவாக்கக் கூடியன.

ஆதிக்க உணர்வுகளின் மிகையான செல்வாக்கினால் இன்றைய உலகில் இத்தகைய கொடுமைகள் மிக அதிகமாகக் காணப்படுகின்றன. இத்தகைய வன்முறைகளை பெண்கள் மீது கட்டவிழ்த்து விடுபவர்கள் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் தான். உளவியல் ரீதியான வன்முறைகள் பெண்கள் மீது பெண்களே அதிகமாகப் பிரயோகிக்கின்றனர்.

அடையப்பட வேண்டிய இலக்குகள் தெளிவாக இருந்தும் கூட பெண்கள் மேம்பாடு தடைப்பட்டுக் கொண்டு இருப்பது தெளிவாக புலப்படும் காரணியாகும். வழிகள் பல இருந்தும் கூட வாய்ப்புக்கள் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதும் கண்கூடு. இந்தத் தடைக்குக் காரணம், ஆணாதிக்கம் அதிகமாக இருக்கும் சமூதாயத்தில் பெண்ணிய மேம்பாட்டிற்கென தனியான கவனம் செலுத்துவது என்பது சிக்கலானதே.

இப்படிப்பட்ட சூழ்நிலைகளையும் தாண்டி முன்னுக்கு வரக் கூடிய பெண்கள் உடல் ரீதியிலான தாக்கங்களை உண்டுபண்ணக் கூடிய ஆபத்துக்களை திணிக்கிறார்கள். பணியில் ஆணும் பெண்ணும் சரியாக சமமாக நடாத்தப்படாமை பெண்கள் செய்யும் பணிகளில் குற்றங்கண்டு பிடித்தல், பெண்களின் நடத்தையைத் தூற்றுதல், ஊதியத்தில் சமமின்மை போன்ற பல தீமைகள் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படுகின்றன. இவை அனைத்துமே பெண்களை மன ரீதியாகப் பாதிக்கின்றன.

வன்முறைகள் பெண்களை மட்டுமன்றி முழுக் குடும்பத்தையுமே பாதித்து விடக் கூடியன. குடும்பத்தகராறுகள் அதனால் ஏற்படும் வன்முறைகள் போன்றவை முழுக் குடும்பத்தையுமே குறிப்பாக குழந்தைகளை மிகவும் பாதித்து விடக் கூடியன. எனவே, இதனால் குடும்ப முன்னேற்றமே தடைப்படும் என்பதை நாம் முதலில் உணர வேண்டும். அப்படிப்பட்ட சூழ்நிலைகளை எப்படிச் சமாளிப்பது என்பதைப்பற்றி நாம் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும்.

6 நிமிடத்திற்கு ஒரு பெண் பலாத்காரம் செய்யப்படுகின்றாள். இதில் 5 சதவீதமானோர் பொலிசில் முறையிடுகின்றனர். பப்புவா நீயுக்கினியில் 67.7 வீதமான கிராமப்புறப் பெண்கள் வன்முறைக்கு உள்ளாகின்றார்கள். கனடாவின் 4 பேருக்கு ஒரு பெண் வன்முறையை அனுபவிக்கிறாள். தாய்லாந்தில் இருந்து சுமார் 10,000 பேர் விபசாரத்திற்காகக் கடத்தப்படுகின்றனர். ஆபிரிக்காவில் பல மில்லியன் பெண்கள் பிறப்புறுப்பு சிதைக்கும் சடங்குகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்தியாவில் வரதட்சணை கொடுமை காரணமாக மரணங்களும் அதிகமாக காணப்படுகின்றன. கென்னியாவில் 42 சதவீதமான பெண்கள் கணவனின் வன்முறைகளுக்கு உட்படுகின்றனர். இலங்கையிலும் இதே நிலைதான்.

உலகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஏதோ ஒரு ரூபத்தில் நடந்து கொண்டு தான் இருக்கின்றது.

இன்று பல நடைமுறைச் சட்டங்கள் பெண்கள் பாதுகாப்புக்கென இருந்தாலும் அதனை மீறி பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. பலாத்காரம் போன்றவற்றிற்கு கடுமையான தண்டனை முறைகளைப் பின்பற்ற வேண்டும். தண்டனை முறைகளை அமுல்படுத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் களையப்பட்டாலே பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கலாம் என்பது எமது வாதமாகும்.

Comments