அப்பக்கார ஆச்சி | தினகரன் வாரமஞ்சரி

அப்பக்கார ஆச்சி

“அப்பம் இரிச்சியோ... அப்பம்

அப்பம் இரிச்சியோ... அப்பம்”

வறுமைக் கோட்டிற்குள் வாடி. இலட்சியப் போராட்டத்தில் எதிர்நீச்சலடிக்கும் ஒரு ஆச்சியின் கணீரென்ற குரல்தான் இது. அப்பகுதியின் ஒவ்வொரு மூலைமுடுக்குகளிலும் பல வாடிக்கையாளர்களை தன்பால் ஈர்த்து, பல்லாண்டு காலப்பரிச்சயமான இக்குரலின் சொந்தக்காரி வேறு யாரும் அல்ல; அப்பக்காரி ஆமினா உம்மாவேதான்.

சும்மா சொல்லப்படாது, இவவின் இலட்சிய வாழ்க்கையை திரைப்படமாக்கி, திரையரங்குகளில் சுழலவிட்டால்... நிச்சயம் அது கின்னஸ் சாதனைக்கும் அப்பால் விரியும் என்பது என்னைப் போன்று ஏனையோருடையதும் அசைக்கமுடியாத கருத்து அப்படி என்னவாயிருக்குமென்று மூக்கில் விரல்வைக்கிறீர்களா? இதோ பொறுமையுடன் கேளுங்கள். அவவின் புனிதமான சோகக் கதையை.

இயற்கை எழில்கொஞ்சும் அப்பகுதியின் அழகிய கிராமத்தில் பிறந்தவள்தான் ஆமினா உம்மா. வறுமை அவளை வாட்டிப் பிசைந்தாலும் பொறுமை என்கின்ற கேடயத்தால் புறமுதுகு காட்டி ஓட வைத்த புண்ணியவதி அவள். இருபத்து மூன்றாவது இளவயதில், அன்றாடம் கூலித் தொழில் புரியும் இசுமான் காக்காவை இல்லறப்பந்தலில் இணைத்து, நல்லறம் என்ற சொல்லுக்கு அர்த்தம் கற்பித்த அபூர்வ தம்பதிகள். இக்கால கணவன், மனைவி போல எடுத்தற்கெல்லாம் சீறிப்பாயும் நாயும் கறிச்சட்டியுமாக இல்லாமல் ஓருயிரும் ஈருடலுமாக இற்றைவரை, காய் நகர்த்தும் கலங்கரை விளக்குகள் என்றால் மிகையாகாது.

பக்கத்தில் உள்ள பலகோடிச் சொத்துக்களுக்கும், நிலபுலன்களுக்கும் அப்பகுதியிலேயே முதன்மை செல்வந்தரான அச்சுமுகம்மதுப் போடியின் வளைந்தவட்டைக் காணி பத்தேக்கரை பல வருடங்காலமாக நம்பிக்கைக்குப் பாத்திரமாக வயற்காரனாய் கூலிவேலை பார்த்தவர்தான் இசுமான் காக்கா.

ஆமினா உம்மாவுக்கும், இவருக்கும் கல்யாணப் பந்தத்தில் கிடைத்த வாரிசுச் சொத்துக்கள், நான்கு குழந்தைகள். அதில் மூத்தவன் றியாஸ், மற்ற மூவரும் பெண் குழந்தைகள். இக்காணியின் ஊடாகவரும் சிறிய வருமானத்தைக் கொண்டுதான், “போதும் என்ற மனமே பொன்செய்யும் மருந்து” எனும் மந்திரத்தை தலைமேல் தாங்கி நகர்ந்து கொண்டிருந்தது. வாழ்க்கை வண்டி.

காலப்போக்கில் வாழ்க்கைச் செலவு வான்முட்ட, தந்தையின் சிறிய வருமானம், பிள்ளைகளின் படிப்பு மற்றும் செலவுகளுக்கு பற்றாக்குறையாக இருந்ததால்தான்... அப்பப்பெட்டியை தலைமேல் சுமந்தவாறு வீதி வீதியாக அலைமோதிக் கொண்டிருக்கிறாள் ஆமினா உம்மா. “அப்பம் இரிச்சியோ அப்பம், அப்பம் இரிச்சியோ அப்பம்” என்கின்ற தாரகமந்திரத்தை தினமும் தவறாது உச்சரித்தவாறே.

அந்தி மழை அழுதாலும் விடாதென்பதுபோல வாழ்க்கைச் சுமை நாளுக்கு நான் கூடியதே தவிர குறைந்த பாடில்லை. கூடிக்கொண்டே இருந்தது. மூன்று பெண் குழந்தைகளும் “ஓயெல்” வகுப்போடு படிப்பை இடைநிறுத்த மூத்தவன் றியாஸ் மட்டும் கல்வியைத் தொடர்வதில் கண்ணும், கருத்துமாக இருந்தான். படிப்பென்றால்... பாகற்காய் அல்ல, பாலும் பசும் தேனும்போல இனிப்பாகவே இருந்தது அவனுக்கு.

ஆரம்ப வகுப்பில் இருந்து தொடர்ந்து முதலாம் பிள்ளையாகி ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சையிலும், அம்பாறை மாவட்டத்தில் முதலிடம் பெற்று, க.பொ.த சாதாரண தரப் பரீட்சையிலும், ஒன்பது 'ஏ' சித்தியோடு, திறமையை வெளிப்படுத்தியதால் பாராட்டுக்களும், விருதுகளும், தாராளமாக அவனை நாடிவரத் தொடங்கின.

இந்த வேளையில்தான், “நீ போற இடமெல்லாம் நானும் வருவேன் போ... போ..." என்றவாறே பொருளாதார அரக்கன் அவன் கழுத்தில் பொல்லாத விலங்கு மாட்டிக்கொண்டிருந்தது. “ஏயெல்” ரியூசன் கிளாஸ், புத்தகம் அது இது என்ற மேலதிக செலவுகளால் ஆடிப்போன தாய் ஆமினா உம்மாவுக்கு உள்மனதில் ஒரு யோசனை தாமாகவே பிறக்க,

“ஏங்க ஒங்களத்தான், கொஞ்சம் வாறியளா?" என்று தன் அன்புக் கணவனை அழைக்க, ஓரமாக ஒதுங்கி நின்ற இசுமான் காக்கா, "என்னங்க கூப்புட்டியளா?" என்று அழைப்புக்கு குரல் கொடுக்க, ஆமினா மிக அடக்கமாக சொன்னாள். “ஏங்க இருபது வருஷகாலமாக உங்க போடியாருக்கிட்டானே வேல செய்து வாறிங்க, இப்ப இரிக்கிற அவசர கேஸிக்கி அவரிட்ட ஒரு உதவி கேட்டா செய்யாமலா போவாரு, ஒரு பத்தாயிரம் ரூபா காசி கேட்டுப் பாருங்க புள்ளட ரியூசன் கிளாசில சேக்குறத்துக்கு வசதியாக இரிக்கும்."

மனைவியின் வேண்டுதலில் தலைசுத்திய இசுமான் காக்காவுக்கு போடியாரின் பழைய ஞாபகம் ஒவ்வொன்றாய் முட்டிமோத, மனைவியின் வேண்டுதலை தட்டிக்கழிப்பதா? என்ற தைரியத்தில் கொடியில் கிடந்த சால்வையை எடுத்து தோளில் போட்டவாறு, கள்ளக்கோழி பிடிக்கப் பதுங்கும் பூனை போல நின்று கொண்டு, "போடியார்... போடியார்" என தலைசொறிந்தவாறே கதவைத் தட்டினார்.

குரல் கேட்டு, மெல்லக் கதவைத் திறந்த அச்சுப்போடியார். "ஆ... என்ன இசுமான் இந்த நேரத்துல?" கேள்விக்கு பதில் செல்லமுடியாமல், திக்குவாயாய்த் தவித்துக் கொண்டிருந்தபோது, போடியார், "செல்லண்டாப்பா வந்த விசயத்த, சென்னாத்தானே விளங்கும்?" என்ற போது, இசுமான், "அது... வந்து... போடியார் ஒங்களுக்கிட்ட ஒரு உதவி கேக்கலாம் இண்டுதான் வந்த நான்.", "அப்படியா? அப்புடி என்ன உதவி? சொல்லு", முடிஞ்சா பாப்பம் என்றபோது அவன் தான் வந்த விசயத்த சொல்லத் தொடங்கினான்.

“போடியார், என்ர மகன் றமீஸ், 'ஏயெல்ல' பாஸ் பண்ணி கெம்பசுக்கும் எடுபட்டு, பயோ படிக்கப் போறானாம். படிப்பு செலவுக்கு இப்ப அவசரமா காசு பத்தாயிரம் ரூபா தேவப்படுகுது, எப்படியும் தந்திருவன்" என்று இழுக்கும் போதே போடியாருக்கு மட்டுமல்ல, இருவர் பேச்சையும் உசிப்பாம ஒட்டுக்கேட்டுக் கொண்டிருந்த அவர் அன்பு மனைவி மரியம் பீவிக்கும் கொடுப்பு நிறைய வழிஞ்ச சிரிப்ப அடக்கமுடியாமல் போடியார் வாய் திறந்தார். இசுமான், நான் தெரியாமத்தான் கேக்கன். விரலுக்குத்தக்கதான் வீக்கம். இந்த அப்பச்சட்டிக்குள்ள ஒண்ட வாழ்க்க எவ்வளவோ கஷ்டத்தின் மத்தியில் உருளேக்க, குருடன் கொம்புத் தேனுக்கு ஆசப்பட்ட கதபோல இல்லியா இரிக்கி ஒண்ட கத. பேசாம பயோ, டொக்டர் எங்குற கதைய உட்டுப்போட்டு பொடியன எண்ட சில்றக் கடைக்கி அனுப்பிவை. மாதம் பத்தாயிரம் ரூபா சம்பளம் குடுக்கன்” என்ற ஏளனச் சிரிப்போடு போடியாரும் மனைவியும் சேர்ந்து கொக்கரிக்க, அசடுவழிந்த முகத்தோடு சால்வையை இழுத்து முகத்தை மூடிக்கொண்ட இசுமான், மெல்லமெல்ல நடந்து தன் இல்லம் நோக்கிவந்தான்.

அங்கே, ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த மனைவி ஆமினா உம்மாவுக்கு கணவன் சொன்ன பதில் போடியார் மீது ஆத்திரம் ஆத்திரமாக வந்தாலும் காட்டிக் கொள்ளாமல், இனி ஆருட தயவிலும் வாழ்றது சரிப்பட்டுவராது. அப்பச்சட்டிய கொஞ்ச கொஞ்சம் விஸ்தரிக்கிறத தவிர வேற வழி இல்ல என்று முடிவெடுத்துக் கொண்டாள். இரவு மூணு மணிக்கே எழுந்து, உசாருக்கு கோப்பியொன்றை அருந்தி தஹஜ்ஜத் தொழுது பிரார்த்தனையில் ஈடுபட்டுவிட்டு உரலும் கையுமான மாவிடிக்கும் வாழ்க்கை போராட்டத்தில் மும்முரமாக ஈடுபடத் தொடங்கினாள். வீடு வீடாக விற்ற அப்பம் இப்பொழுது கடைகளுக்கும் உருளத்தொடங்கின. நேரம் கிடைக்கும் போதெல்லாம் மகன் றமீசும் தந்தை இசுமானும் பக்க துணையாக செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

இதற்கிடையில் இறைவன் விதியோ என்னவோ, பட்டகாலிலேபடும் கெட்ட குடியே கெடும் என்பதுபோல யாருமே எதிர்பாராத விதமாக கணவன் இசுமான் பாரிசவாதத்தால் பாயில் கிடக்க, அவரையும் சேர்த்து பராமரிக்கும் பாரிய பொறுப்பு அப்பக்கார ஆச்சி ஆமினா உம்மாவின் தலைமேல் விழுந்தது.

இப்படியான இருண்ட யுகத்தில் இருந்து படித்து முன்னேறி டொக்டர் ஆகி, அதிலும் சத்திர சிகிச்சை நிபுணராய் ஆளுமையுடன் வலம் வந்தபோது ஊரில் மட்டுமல்ல அகில இலங்கை ரீதியிலும் றமீஸின் புகழ் கொடிகட்டத் தொடங்கியது. அப்போதுதான் பிறந்த ஊரில் உள்ள புத்திஜீவிகள் பலர் ஒன்று சேர்ந்து, டொக்டர் றமீஸுக்கான மிகப் பிரமாண்டமான பாராட்டு விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஊரே திரண்டிருந்த அவ்விழாவிற்கு தலைமை தாங்குவதற்காக மிகப் பெரும் கேடீஸ்வரனும், கனவான் எனப் பெயர் பெற்ற அச்சுமுகம்மதுப் போடியார் அழைக்கப்பட்டிருந்தார். மாப்பிள்ளைபோல மணமும் குணமுமாக வருகை தந்திருந்த போடியார், தனது தலையை உரையில் டொக்டர் றமீஸை மட்டுமல்ல அவன் பெற்றோர்களையும் அளவுக்கதிகமாக புகழ்பாடிக் கொண்டிருந்தபோது, ஒரு கட்டத்தில் அப்பச்சட்டிக்குள் கப்பலோட்டிய வீரமிக்க இலட்சியத்த தாயே; இங்கு, மகனுக்குப் பொன்னாடை போர்த்துவதற்கு முன் உனக்கல்லவா போர்த்த வேண்டும். எனக் கூறியதும் சபையில் இருந்து எழுந்த கரகோஷம் வானைப் பிழந்து கொண்டிருந்தது. வக்காலத்து எதற்காகவோ புரியவில்லை; மீண்டும் இப்படியான வசதி குறைந்த கெட்டித்தனமான ஏழைப்பிள்ளைககைத் தட்டிக் கொடுத்து கட்டிக்காப்பது, நம் ஒவ்வொருவரினதும் தலையாய கடன் என்பதைக் கேட்ட றமீஸ் உட்பட அங்கு அமைதியாக அமர்ந்திருந்த பெற்றோர்களின் கொடுப்புகளுக்குள்ளும் ஒரு அசட்டுச் சிரிப்பு அலைமோதியதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. பொன்னாடை புகழாரம், பொற்கிழி வழங்கி பூரித்த கையோடு சில வாரங்கள் கழிந்த பின்தான் புரியவந்தது, வக்காலத்து எதற்காக என்ற புதிருக்கான விடையின் தாற்பரியம்.

ஆமாம், அன்று றமீஸின் இல்லம் நோக்கி சில விலைகூடிய ஆடம்பரக்கார்களின் அணிவகுப்பு கச்சிதமாக நிற்பதைக் கண்ட ஆமினா உம்மா கதவைத் திறந்தபோது போடியார்தான் அங்கு புன்முறுவலோடு நின்று கொண்டிருந்தார். அதனைத் தொடர்ந்து ஏனைய பெரும் புள்ளிகளும் வரவழைக்கப்பட்டு, வழக்கத்திற்கும் மேலான உபசரணை நடந்து கொண்டிருந்தது. அப்போது போடியார் இசுமானின் தலையை லேசாகத் தடவியவாறே வந்த விடயத்தை தானாகவே அவிழ்த்துக் கொண்டிருந்தார். “எனக்கிட்ட இரிக்கிற அத்தன சொத்துகளும் எனது ஒரேயொரு மகள் சபீனாவுக்குத்தான். தெரியும்தானே, நான் எதுவும் செல்லத்தேவல்ல. மகன கல்யாணம் கேட்டுத்தான் இங்க வந்த நாங்க. யோசிச்சி முடிவச் சென்னா சரிதான் என்றபோது எங்கே ஒருவித மயான அமைதி ஊசலாடிக் கொண்டிருந்தது. அந்த அமைதியையும் கிழித்துக் கொண்டு ஆமினா உம்மா அடக்கமாகப் பதில் சொன்னாள். பிறகு யோசிச்சி பதில் செல்றம் போடியார் என்றதும் அவரும் தனது மகிழம் பூ சிரிப் பொன்றை உதிர்த்து வெளியேற ஊரெங்கும் இந்த விடயம் காட்டுத் தீபோலப் பரவத் தொடங்கிவிட்டது.

“பாத்தியாடி, அப்பக்காரிர மகனுக்குக் கிடைச்ச அதிர்ஷடத்த பிள்ளைய படிக்க வெச்சத்தால, கோடி, கோடியா செல்லும் குவியத்தான் போகுது” என்று சிலரும். அந்தப் பொடியனுக்கென்ன அழகிய ஆண்சிங்கம். தரமான உத்தியோகம், பலரும் போட்டிபோடத் தானே செய்வாங்க என்று இன்னும் சிலரும் தத்தம் அபிப்பிரயாங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இத்தனைக்கும் மத்தியில். ஆமினா... வெக்கமில்லாம, ரோஸமில்லாம குருடன் கொம்புத்தேனுக்கு ஆசப்பட்டு இங்க மாப்புள்ள கேட்டு வந்திரிக்கப் போடாதே; போடியாராம் போடியார் அவரும்... அவர்ர காசி பணமும் சிக... என்று காறி உமிந்தவாறே, காரியத்தில் கச்சிதமாக இறங்கத் தொடங்கினாள். நீண்ட காலமாக தனது அப்பத்தோடு வாடிக்கையாக இருந்த ஒருபுச்சி வீட்டுப் பூம்புனல், குர்ஆன் ஓதுவதும், தொழுவதும், துஆ கேட்பதுமான ஓர் அழகிய பதுமை, ஆயிஸாவின் போக்கு அப்பக்காரிக்கு எப்பவோ பிடித்திருந்தது. கல்லொன்றை வைத்து அதற்குத்தாலி கட்டுடா மகனே என்றால் கண்ணை மூடிக்கொண்டு செயல்படக் காத்திருந்தான் டொக்டர் ரமீஸ்.

இரவோடிரவாக யாருக்குமே தெரியால் அப்புச்சுக்குடிலுக்குள் பூத்திருந்த சுபைதாவின் மகள் ஆயிஸாவின் கழுத்தில் தாலி அரங்கேறிக் கொண்டிருந்தது. விடிந்ததும்தான் விசயம் தெரியவர மூக்கில் விரல் வைத்தனர் இன்னும் சிலர். பணம், பொருள் ஆதனத்தக்காட்டி டொக்டர் றமீனை இலகுவில் விலைகொடுத்து வாங்கிவிடலாம் என்று தப்புக் கணக்குப்போட்ட போடியாரின் மனக்கோட்டையில் இடிவிழ, அவரதும், அவரது குடும்பத்தினர் முகங்களில் ஈயாடவில்லை. மரண வீடுபோல் காட்சியளித்துக் கொண்டிருந்தது.

எனக் கிட்ட கூலி வேல செய்து புழைச்சவண்ட மகனுக்கும் அப்பக்கார பிச்சக்காரிக்கும் அவ்வளவு திமிரா? என்று தன் ஆத்திரத்தை திட்டித் தீர்த்த வேதனையில், வெட்கத்தால் சனத்தின் முகத்தில் முழிக்க முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த போடியார். யோசனை கூடி அதிகூடிய மனஅழுத்தம் காரணமாக திடீரென ஒருநாள் பாத்றூமில் மயங்கி விழ, உணர்வற்ற மயக்க நிலையில், ஊரே திரண்டு, ஆசுபத்திரி ஒன்றின் அவசரப்பிரிவு வாட்டில் சேர்த்தனர்.

அங்கே, ஊருக்குப் பெரிய மனிதர் என்பதனாலோ என்னவோ, பிரதான டொக்டர் ஒருவருடன், இன்னும் பல டொக்டர், தாதிமார்களின் பாரிய கண்காணிப்பில் சிகிச்சை மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. உணர்வற்று, மூர்ச்சையாகி கோமா நிலையில் கிடந்த போடியாரின் விழிச்சாளரம் மெல்லமெல்லதன் திரையை நீக்கி, அவர் கண்முன்னே யாரோடுதன் கோபக்கனவை கக்கிக் கொண்டிருந்தாரோ அதே கதாநாயகன் அப்பக்கார ஆச்சியின் அன்பு மகன் பிரதம வைத்தியநிபுணர் றமீஸ், தன் நெஞ்சில் குழல் வைத்துப் பரிசோதித்ததைப் பார்த்த போடியாருக்கு கோபம் வரவில்லை; மாறாக அவன் கையைப் பற்றிப் பிடித்துக் கொண்டு அழுத அழுகை இருக்கிறதே, தன்னால் ஏற்கனவே நடந்த தவறுக்கு மன்னிப்புக் கேட்பது போலவும், தனது உயிரைக் காப்பாற்ற உதவிய றமீஸுக்கு நன்றி கூறுவதற்கான நல்ல சமிச்ஞையாகவும் அமைந்திருந்தது.

இதற்குள் எங்கிருந்தோ காற்றோடு காற்றாய் காணமிசைத்துக் கொண்டிருந்தது. அந்த இலட்சியத்தாய் அப்பக்கார ஆச்சி ஆமினா உம்மாவின் அர்த்த புஸ்டியான குரல்...

அப்பம் இரிச்சியோ... அப்பம்

அப்பம் இரிச்சியோ... அப்பம்

இது வெறும் வெற்றுக் குரல் அல்ல

அடுத்த மூன்றுகுமர்களையும்,

கௌரவமாக வாழவைக்க

கரைசேர்க்கத் துடிக்கின்ற கணீரென்ற குரல்...

அப்பம் இரிச்சியோ அப்பம்...

அப்பம் இரிச்சியோ அப்பம்....

 

சாய்ந்தமருதூர் கேயெம்மே அஸீஸ்

Comments