பன்வாரிலாலை பதவி நீக்க வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

பன்வாரிலாலை பதவி நீக்க வேண்டும்

தமிழக எதிர்க்கட்சிகள் போர்க்ெகாடி!

அருள் சத்தியநாதன்

[email protected]

கடந்த, ஒன்பதாம் திகதி செவ்வாய் பகல் பொழுது. திருவல்லிக்கேணி அரசு மருத்துவமனை முன்பாக சலசலப்பை ஏற்படுத்தும் வகையில் கூட்டம் கூடி நிற்க பொலிசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கே ஒரு கார் வந்து நிற்க தி.மு.க தலைவர் ஸ்டாலின் கருணாநிதி இறங்கி மருத்துவமனைக்குள் செல்ல முயல்கிறார். அவரைப் பொலிஸ், உள்ளே போக வேண்டாம் எனத் தடுக்கிறது. கேள்விக் குறியோடு அவர்களை ஏறிட்டுப் பார்க்கும் ஸ்டாலின், “நான் ஒரு நோயாளி. சிகிச்சைக்காக வந்திருக்கிறேன். டொக்டரைப் பார்க்க உள்ளே போக வேண்டும். விடுகிறீர்களா இல்லையா?” என்று உஷ்ணமாகக் கேட்கிறார். நோயாளியைத் தடுக்க முடியாது என்பதால் பொலிஸ் வழி விடுகிறது. அவர் விடுவிடுவென உள்ளே போகிறார்.

இதன் பின்னர் திருவல்லிக்கேணி 13ஆம் இலக்க பெருநகர் நீதிமன்றத்தில் ஒரு பரபரப்பு சூழல் காணப்படுகிறது. பல அரசியல் பிரமுகர்கள் வருகிறார்கள். பொலிஸார் அவர்களைத் தடுக்கிறார்கள். அப்போது விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் தன் வாகனத்தில் வந்திறங்குகிறார். அவருடன் கூடவே கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் முத்தரசனும் வருகிறார். தான் ஒரு வழக்கறிஞர் என்றும் உள்ளே போக வேண்டும் என்றும் திருமாவளவன் கூறவே, நீதிமன்றத்தினுள் வழக்கறிஞர் செல்வதைத் தடுக்க முடியாது என்பதால் அவரை உள்ளே அனுமதிக்கிறார்கள். அவருடன் முத்தரசனும் உள்ளே போக முனையும் போது பொலிஸ் அவரைத் தடுக்கிறது. “அவர் வழக்கறிஞர் உள்ளே போகட்டும், நீர் வெளியே நில்லும்” என்கிறது பொலிஸ் முத்தரசனோ,” நான் அவருடைய குமாஸ்தா. நான் அவருடன் இல்லாவிட்டால் எப்படி?” என்று கேட்க அவருக்கு அனுமதி கிடைக்கிறது. அவர் தமிழ் நாடு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவர் என்பதை அறியாத பொலிஸ்காரர்கள் அவரை ‘வக்கீல் குமாஸ்தா’ என நினைத்து வழிவிட, திருமாவும் முத்தரசனும் சிரிப்பை அடக்கிக் கொண்டு உள்ளே போகிறார்கள்.

இச் சுவையான சம்பவங்கள் அரங்கேறுவதற்குக் காரணமாக இருந்தவர் நக்கீரன் கோபால். தன் அதிரடி புலனாய்வுகளுக்காக மட்டுமின்றி அவருக்கே உரிய ‘ட்ரேட் மார்க்’ புன்னகை, அதற்கு இசைவான பெரிய வீரப்பகிருதா என்பனவற்றுக்காகவும் தமிழர்கள் மத்தியில் வெகு பிரசித்தமான பத்திகையாளர் இவர்.

காஞ்சி சங்கராச்சாரியன் வழக்கு, நித்தியானந்தா பாலியல் விவகாரம், கன்னட நடிகர் ராஜ்குமாரை விடுவிப்பதற்காக சந்தன வீரப்பனை பல தடவைகள் காட்டில் சந்தித்த துணிச்சல என்று பல அதிரடியான விஷயங்களுடன் சம்பந்தப்பட்டவர். இறுதிவரை ஜெயலிலதாவை எதிர்த்து வந்தவர். ஜெயலலிதாவும் இவரை முடக்கிப் போடும் வகையில் தன் அதிகாரங்களைப் பாவித்து கடும் நெருக்கடிகளைத் தந்தார். இப்போதும் கூட, ஜெயலலிதா மறைந்தபோது அவரது கால்கள் நீக்கப்பட்டிருந்தன என்ற வாதத்தை முன் வைத்து வரும் அவர், கால்கள் நீக்கப்படவில்லை என்பதை அப்பல்லோ மருத்துவமனையோ அல்லது ஆறுமுகசாமி விசாரணை ஆணையமோ ஆதார பூவகமாக நிரூபித்துக் காட்டட்டும் என்று சவால் விடுகிறார். ஜெயலலிதாவின் சடலத்தை தோன்டி எடுத்துப் பார்த்தால் உண்மை வெளிவரும் என்று துணிச்சலுடன் பேசுகிறார்.

இவர் ஜெயலலிதாவினால் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மாதக் கணக்கில் உள்ளே வைக்கப்பட்டவர். கடந்த செவ்வாய்க்கிழமையும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் வேண்டுகோளுக்கு அமைய தமிழக பொலிஸாரினால் 124A பிரிவின்கீழ் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கும் ஆணையைப் பெறுவதற்காக நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். அதற்கு முன்பாக அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்யப்படுகிறது. அப்போதுதான் தன்னை நோயாளி எனச் சொல்லிக் கொண்டு உள்ளே நுழையும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கருணாநிதி, கோபாலைப் பார்த்து நலன் விசாரித்து, தெரிய மூட்டிச் செல்கிறார். நீதிமன்றத்துக்கு வரும் திருமாவும் முத்தரசனும் பொய் கூறி உள்ளே நழுவிச் செல்கிறார்கள். நீதிமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் எனத் திரண்டிருந்தனர். ஊடகச் சுதந்திரத்துக்கான ஆதரவுக் குரலாக மட்டுமன்றி பா.ஜ.கவின் அராஜகத்தை எதிர்க்கும் வகையிலும் அக் கூட்டம் அமைந்திருந்தது என்பதே உண்மை.

நக்கீரன் கோபால், தனக்கும் தமிழக ஆளுநருக்கும் இடையே எந்தப் பிரச்சினையும் கிடையாது. அவரை நான் பார்த்ததும் இல்லை. என் பெயரை அவர் கேள்விப்பட்டிருக்கவும் வாய்ப்பில்லை என்கிறார். ஆனால் ஆளுநரின் தனிச் செயலாளர் ராஜகோபாலன் தமிழக அரசிடம் வைக்கும் வேண்டுகோளில், கவர்னர் தன் பணிகளைச் செய்யவிடாமல் தடுத்த குற்றத்துக்காக நக்கீரன் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார். இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டதற்கு இரண்டு தினங்களுக்கு முன், திடீரென தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக ஆளுநரைச் சந்திக்கிறார். துணை முதல்வர் பன்னீர் செல்வத்துக்கும் எடப்பாடிக்கும் இடையிலான பனிப்போர் முற்றிய நிலையிலேயே இச் சந்திப்பு நிகழ்கிறது. மறுதினம் ஆளுநர் ஒரு அறிக்கையை விடுக்கிறார். தான் பதவி ஏற்பதற்கு முன்னர் தமிழகத்தில் நடைபெற்ற பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனங்களில் ஊழல் நிலவி வந்திருக்கிறது. முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன என்றும் தனது துணைவேந்தர் நியமனங்கள் நேர்மையான வகையில் நடைபெற்றவை என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மறுதினமே தமிழக முதல்வர் அவசரமாக புதுடில்லி சென்று பிரதமரைச் சந்திக்கிறார். அதற்கு மறுநாள் ஆளுநர் மாளிகையில் இருந்து வந்த வேண்டுகோளுக்கு அமைய நக்கீரன் கோபால் கைது செய்யப்படுகிறார்.

இவை ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவை என்பது தமிழக எதிர்க்கட்சிகளின் கருத்தாக இருக்கிறது. தமிழகத்தில் அரசியல் நிலைமைகள் சீர்கெட்டு வருவதோடு எப்போது வேண்டுமானாலும் எடப்பாடியின் ஆட்சி கவிழலாம் என்ற சூழல் எழுந்திருக்கிறது. அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலுடன் தமிழக சட்டசபைத் தேர்தலையும் நடத்திவிடலாம் என மத்திய அரசு கருதுகிறது. தேர்தல் வருமானால் பாஜகவையும் அ.தி.மு.கவையும் வேரடி மண்ணோடு பிடுங்கி எறிய வேண்டும் என்பதில் திராவிடக் கட்சிகளும் தினகரன் அணியும் உறுதியாக உள்ளன. பெரும்பாலும், தி.மு.க வின் ஆட்சியே அமையும் என எதிர்பார்க்கப்படுவதால், பா.ஜ.கவுக்கு சாதகமான சூழலை தமிழகத்தில் ஏற்படுத்த வேண்டும் என்பது மோடி அரசின் வேலைத்திட்டமாக உள்ளது.

பெரும்பாலான தமிழ்ப் பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகள் பா.ஜ.க.வுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதால், நிர்மலா தேவி பாலியல் விவகாரத்தில் பன்வாரியாலுக்கும் சம்பந்தம் இருப்பதாக ஆதாரங்களை அவ்வப்போது வெளியிட்டுவரும் நக்கீரன் பத்திரிகை ஆசிரியரை, ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையை பெற்றுத்தரக் கூடிய 124A பிரிவின் கீழ் கைது செய்து உள்ளே வைத்தால் ஏனைய ஊடகங்கள் அடங்கிவரும் என்பது இக் கைதின் பின்னணி அரசியல் எதிர்பார்பாக இருக்கலாம் என்று தமிழக அரசியல் வாதிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இங்கே, மதுரை பல்கலைக்கழக பேராசிரியர் நிர்மலா தேவி பாலியல் நோக்கங்களுக்காக மாணவியரை அழைத்த விவகாரம் பற்றி கொஞ்சம் நினைவூட்ட வேண்டும்.

நிர்மலா தேவி மாணவிகளிடம் நேரிலும், கைபேசி ஊடாகவும் பேசி வந்திருக்கிறார். ‘நீங்கள் அதிக புள்ளிகள் பெற்றுத் தேர்வுகளில் சித்தியடையவும் பரிசுகள் பெறவும், நல்லதொரு எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. நான் சொல்கிறபடி நடந்து கொள்ளுங்கள். ‘அவர்’களுக்கு அழகான மாணவியர் தேவை. ‘அவர்’களின் விருப்பத்துக்கு இணக்கமாக நடந்து கொள்ள வேண்டியது மட்டுமே அவசியம். இதெல்லாம் புதிய விஷயங்கள் அல்ல. ஏற்கனவே பலர் நன்மை அடைந்திருக்கிறார்கள். நானும் அப்படி நன்மை அடைந்தவள்தான். இதனால் உங்களுக்கு எந்தப் பிரச்சினையும்வராது நீங்கள் கவனித்துக் கொள்ளப்படுவீர்கள்’ என்பதுதான் நிர்மலா தேவி தான் மயக்க விருப்பும் மாணவியரிடம் கூறியவற்றின் சாராம்சம். இணங்க மறுத்த மாணவியரிடம் இவர் மென்மேலும் தயவாகப் பேசி மனதை மாற்ற முயற்சித்திருக்கிறார்.

நிர்மலா தேவி இவ்வாறு ஒரு மாணவியுடன் உரையாடியபோது அந்த உரையாடல் இரகசியமாகப் பதிவு செய்யப்பட்டு ஊடகங்களில் வெளியானது. நக்கீரனிலும் வெளிவந்தது, அடுத்தடுத்த இதழ்களில் நிர்மலாதேவி விவகாரம் பற்றித் தேடி எழுதியதோடு, இதற்கும் கவர்னர் மாளிகைக்கும் இடையே தொடர்பு இருப்பதாக கூறவும் செய்தது. இதையடுத்தே, விவகாரம் அரசியல் வடிவெடுத்தது.

அக்டோபர் இதழில் நக்கீரன் ஒரு அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டிருந்தது. அட்டைப்படம், நிர்மலாதேவி முகம் ஒரு புறமும் கருணாஸ் முகம் மறுபுறமுமிருக்க, நடுவில் பன்வாரிலாலின் முகம் இருக்கும் வகையில் சித்தரிக்கப்பட்டிருந்தது. உள்ளே நிர்மலா தேவியின் வாக்குமூலம் பிரசுரிக்கப்பட்டிருந்தது. ஆளுநரின் ஆத்திரத்தை இந்த வாக்குமூலம் தான் கிளறி விட்டிருக்க வேண்டும்.

ஆளுநரை எனக்குத் தெரியும் என ஏற்கனவே அவர் மாணவிகளுடன் பேசும் போது குறிப்பிட்டிருந்ததால்தான் இவ்விவகாரத்துக்குள் ஆளுநரின் பெயர் இழுக்கப்பட்டது. தனது வாக்கு மூலத்தில், கிண்டி ஆளுநர் மாளிகைக்கு 130 மாணவியரைத் தான் அழைத்துச் சென்றிருப்பதாகவும், ஆளுநரை தனக்கு தனிப்பட்ட ரீதியாகத் தெரியும் என்றும் அவரைத் தனியாக மிக நெருக்கமாக சந்தித்திருக்கிறேன் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

மதுரைக்கு ஆளுநர் வரும்போதெல்லாம் ஆளுநர், தன்னை வந்து பார்க்கும்படி அழைப்பார். நானும் அவரைச் சென்று பார்ப்பேன். கவர்னர் மாளிகை அதிகாரிகளுக்கும் என்னை நன்கு தெரியும் என்றும் தன் வாக்கு மூலத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வாக்கு மூலம் தமிழக ஆளுநரை நிர்மலா தேவி விவகாரத்துடன் நேரடியாக தொடர்புபடுத்துவதோடு எய்தவன் எங்கோ இருக்க அம்பை பழிப்பது போல, ஒரு முகவர்போல செயற்பட்டிருக்கும் நிர்மலாதேவி ஒரு சூழ்நிலையின் கைதி என்பது நக்கீரனின் வாதம். அதைத்தான் தமிழக எதிர்க்கட்சிகளும் எதிரொலிக்கின்றன.

மாநிலமொன்றின் மிக உயர்ந்த பதவி வகிக்கும் பன்வாரிலால் சந்தேகநபராக சுட்டப்படுவதால் இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்கிறது தி.மு.க. பன்வாரிலாலை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அல்லது இடமாற்றம் செய்ய வேண்டும் என்பது தி.மு.க. கூட்டணியின் கோரிக்கை.

நிர்மலாதேவிக்கு துணைவேந்தர் பதவி வாங்கித் தருவதாக ஆசைகாட்டப்பட்டே மாணவியரை கவர்னர் மாளிகைக்கு அழைத்துச் செல்லும் ‘ஒப்பந்தம்’ வழங்கப்பட்டதாகவும், குறுக்கு வழியில் சில உயர் பதவிகளையும் பெறுவதை அறிந்திருந்த நிர்மலா தேவியும் பதவிக்காக இந்த ‘ஒப்பந்த’த்தை செய்து முடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இந்த வாக்கு மூலத்தை வெளியிட்டு, உண்மைகளை வெளிக்கொண்டு வந்ததால் நிர்மலாதேவியின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கிறது என்றும் இல்லையேல அவர் சிறையில் வைத்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

இந்தப் பின்னணியில்தான் நக்கீரன் கோபால் கைது, செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட 124ஏ பிரிவு, கவர்னரையும் ஜனாதிபதியையும் பணி செய்யவிடாமல் கிரிமினல் நோக்கத்தோடு தடை விதிப்பது மற்றும் தாக்குவது தொடர்பானது. உயர் பதவிகளில் இருக்கும் இவர்களை பணி செய்யவிடாமல் தடுத்தால், பிணை மறுக்கப்பட்டு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிக்கப்பட முடியும். ஆனால் நக்கீரனை விசாரித்த நீதிபதி கோபிநாத், அப் பிரிவு வரையறை செய்யும் குற்றங்களுடன் நக்கீரன் கைது பொருந்திப் போகவில்லை எனக் கருதுவதாகக் குறிப்பட்டு அன்று மாலையே விடுதலை செய்தார்.

ஆளுநருக்கு நக்கீரன் விடுதலை பெரிய பின்னடைவாக அமைந்தது மாத்திரமின்றி தமிழக பா.ஜ.கவிற்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச செல்வாக்கின் மேலும் அடி விழுந்திருக்கிறது. தமிழக அரசையும், பா.ஜ.கவையும் எதிர்க்கும் தி.மு.க கூட்டணியின் செல்வாக்கு அதிகரிக்கவும் செய்திருக்கிறது.

எனினும் கோபால் விடுதலை செய்யப்பட்டது கைதில் இருந்து தான். வழக்கு அப்படியே உள்ளது. அதை அவர் சந்தித்தேயாக வேண்டும். அவர் கைதான மறுதினம் நக்கீரன் அலுவலகத்தைச் சேர்ந்த ஊழியர்கள் 35 பேர் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டனர். நிர்மலாதேவி விவகாரத்தை ஆளுநர் மாளிகை எவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

கோபால் கைதான மறுதினம் 10ஆம் திகதி மாலை, வேப்பேரி பெரியார் திடலில் ‘நக்கீரன் கோபால் பாராட்டு விழா ஊடக சுதந்திரம் காப்போம்’ என்ற தலைப்பில் ஒரு கூட்டத்தை கி.வீரமணி ஏற்பாடு செய்திருந்தார். அக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்களும் தலைவர்களும் தமிழக ஆளுநரை காரசாரமாகக் கண்டித்துப் பேசி, முடியுமானால் என்னைக் கைது செய்யுங்கள் என்று சவால்விடவும் செய்தனர்.

மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவஹிருல்லாஹ் இங்கு ஆவேசமாக பேசியபோது, கவர்னர் மீது வழக்கு போடுவோம் என்று குறிப்பிட்டார்.

டான்சி வழக்கு விசாரிக்கப்படலாம் என அன்றைய ஆளுநர் சென்னாரெட்டி அனுமதி வழங்கியபோது அப்போது முதல்வராக வீற்றிருந்த ஜெயலலிதா, சென்னா ரெட்டி செல்லும் இடமெல்லாம் ஆர்ப்பாட்டங்கள் இடம் பெறச் செய்தார் என்றும் ஆளுநர் கார்மீது கல்வீச்சு நடைபெற்றது என்றும் இங்கு உரையாற்றிய ஒருவர் குறிப்பிட்டதோடு,

124ஏ பிரிவின் கீழ் ஏன் அப்போது ஜெயலலிதா கைது செய்யப்படவில்லை? கவர்னரின் பணிக்கு இடையூறு விளைவித்தது ஜெயலலிதா தான் என்பதையும் சுட்டிக்காட்டினார்!

கோபால் கைது விவகாரம், பா.ஜ.க.வுக்கு தேன்கூட்டை கலைத்த மாதிரி ஆகியிருக்கிறது!

Comments