ஒலுவில் துறைமுகமும் அதன் தாக்கங்களும் | தினகரன் வாரமஞ்சரி

ஒலுவில் துறைமுகமும் அதன் தாக்கங்களும்

நிலத்தை விழுங்கிவரும் கடலரசன்

 தென்கிழக்குப் பிராந்தியத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபினால் ஆரம்பிக்கப்பட்ட, ஒலுவில் துறைமுகம் அந்தப் பிராந்தியத்திற்கே மிகப் பெரும் சவாலாக மாறியுள்ளது.

ஒலுவில் துறைமுக அபிவிருத்தியினால் இப்பிராந்தியம் சந்தித்த இன்னல்களும் அவலங்களும் தொடர்ந்த வண்ணமுள்ளன.

இந்த இட அமைவினால் ஏற்பட்ட தாக்கம் இப்பிரதேச மக்களது வாழ்வியலை புரட்டிப்போட்ட ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக வருடத்தில் பல தடவைகள் மிகமோசமான கடலரிப்பினால் ஒலுவில் பிரதேசம் மட்டுமல்ல நிந்தவூரும் அதனை அண்டிய பிரதேசங்களும் கடலால் மெல்ல மெல்ல விழுங்கப்படும் காட்சி தொடர்ந்த வண்ணமுள்ளது.

இத்துறைமுக நிர்மாணத்தால் அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் ஆகிய பிரதேசங்களிலுள்ள ஆழ்கடல், மற்றும் கரைவலை மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். கரைவலை மீனவர்களின் அன்றாட தொழில் நடவடிக்கைகள் முற்றாக தடைப்பட்டன. அட்டாளைச்சேனை முதல் ஒலுவில் முகத்துவாரம் வரையான கரைவலை மீன்பிடிப் பிரதேசங்களில், தற்போது துறைமுகம் அமைந்துள்ள பாலமுனை - ஒலுவில் கடற்கரைப் பிரதேசமே கரைவலை இழுவைக்கும் அதிக மீன்பிடிக்குமான பிரதேசமாகவிருந்தது. இப்போது கரைவலை மீன்பிடியை மேற்கொள்ள முடியாத நிலையில் அதை நம்பி வாழ்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் நிர்க்கதியாகியுள்ளன.

ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பட்டுவரும் கடலரிப்பினால் மிக மோசமான பாதிப்பை இக்கிராமம் சந்தித்து வருகிறது.

80 இற்கு மேற்பட்ட ஏக்கர் தென்னந்தோப்புக்கள் அழிவடைந்துள்ளதுடன் 5000 இற்கு மேற்பட்ட தென்னை மரங்கள் கடலரிப்பினால் காவுகொள்ளப்பட்டுள்ளன.

400 மீற்றருக்க மேற்பட்ட தூரம் வரையான மணற் பிரதேசம் கடலாக மாறி நிலப்பரப்பில்லாத கடற்கரையாக மாறியுள்ளது.

களியோடை ஆற்றிலிருந்து பிரிந்து ஒலுவில் கிராமத்தை இரண்டாகப் பிரித்திருந்த வனப்புமிக்க வடிச்சல் ஆறு முற்றாக மூடப்பட்டுள்ளது. இதனால் மழை காலங்களில் வெள்ள நீர் வடிந்தோட முடியாத நிலை எற்பட்டுள்ளது.

ஏனைய தொழில்கள் பன் உற்பத்தி, கிடுகு உற்பத்தி, தெங்குப் பொருட்கள் சார் உற்பத்திகள், பாய் உற்பத்தி போன்ற பல ஜீவனோபாய தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஆடு, மாடு போன்ற கால் நடை உற்பத்திகளும் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

கடற்கரையை அண்மித்திருந்த வடிச்சல் ஆற்றங்கரையோரம் வசித்து வரும் குடும்பங்கள் எப்போது கடல் உள்ளே வந்துவிடுமோ , என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.

இவ்வடிச்சல் ஆற்றை நம்பி நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டு ஜீவனோபாயம் நடத்தி வந்த 150 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளன.

கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த சுமார் 80 மீனவ வாடி வீடுகள் கடலினால் அடித்துச் செல்லப்பட்டு அழிவடைந்துள்ளன. ஒலுவில் கிராமத்தின் பிரதான தொழிலாக மீன்பிடி அமைந்துள்ளது. தற்போது இது பெரும் சவாலாக மாறியுள்ளது.

ஒலுவில் கிராமத்தின் ஜீவனோபாயமான மீன்பிடி தற்போது அருகி வருவதால் அங்கு வாழும் மீனவக் குடும்பங்கள் நாளாந்த ஜீவனோபபாயத்திற்கு கஷ்டப்படுகின்றார்கள்.

கடந்த சுனாமி அனர்த்தத்தின்போது கடற்கரையை அண்டியதாக இருந்த வடிச்சல் ஆற்றின் காரணமாக கடல் அலை மக்கள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வராது தடுக்கப்பட்டு ஒலுவில் கிராமம் பெரும் அழிவுகளிலிருந்து பாதுகாக்கபட்டது.

கடலரிப்பை தடுப்பதற்கு 100 மீற்றருக்கு அப்பால் அவசர அவசரமாக திட்டமிடப்படாத வகையில் கருங்கல்லிலான தடுப்புச் சுவர் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. துறைமுக வடிவமைப்பில் எற்பட்ட குளறுபடியே இதற்கப் பிரதான காரணமாகக் கூறப்படுகின்றது.

துறைமுக நிர்மாணிப்பினால் காணியை, தொழிலை இழப்பவர்களின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை கொடுத்து இப்பிரதேசத்தைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு தொழில் வழங்கப்படும் என அப்பொழுது உத்தரவாதமளிக்கப்பட்டது. ஆனால், கரைவலைத் தொழிலை இழந்த ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 850 குடும்பங்கள் தொழிலை இழந்தது மட்டுமல்லாமல் தமக்குத் தெரியாத கூலித்தொழில்களைச் செய்தவாறு, வறுமைக் கோட்டின் கீழ் வசித்து வருகிறார்கள்.

இன்று ஒலுவில் துறைமுகத்திக்கு அவ்வூர் மக்கள் ஆர்பாட்டம் மூலம் தங்கள் ஆதங்கத்தையும் வெளிப்படுத்திவருகின்றனர்.

அம்பாறை மாவட்ட மீனவர்களின் பிரதான கடற்றொழில் இறங்கு துறையாக ஒலுவில் மீன் பிடித்து துறைமுகத்தின் மூலம் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 03 ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்களும் தமது தொழில் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.

மீன்பிடித் துறைமுகத்தின் நுழைவாயில் கடந்த சில மாதங்களாக கடல் மண்ணால் மூடப்பட்டு காணப்படுவதால் மீனவர் சமூகம் பாரிய பின்னடைவை எதிர்கொண்டுள்ளதுடன் கடற்றொழில் நடவடிக்கைகளும் ஸ்தம்பித்த நிலையை அடைந்துள்ளதோடு மீனவர் சமூகம் பொருளாதார ரீதியாக பெரும் இன்னல்களை எதிர்கொண்டுள்ளது

இம் மண் அகழ்வின் மூலம் ஒலுவில் பிரதேசம் பாரிய அழிவை எதிர்கொள்ளுமெனவும், இம் மண்ணை அகழ்வதால்தான் மீனவர்களின் ஜீவனோபாயத்திற்கு வழி பிறக்குமெனவும், மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இரண்டு தரப்பினர்களினதும், கோரிக்கைகள் நியாயமானதும், எல்லோராலும், ஏற்றுக் கொள்ளக் கூடியதுமாக இருக்கின்றது. ஆனால் அரசியல்வாதிகள் இதில் மெளனம் காப்பது மக்களிடத்தில் பல்வோறு கோணத்திலான எண்ணங்களை உருவாக்கியுள்ளது.

மண் அகழ்வினால் தொடர்ச்சியான கடலரிப்பு ஏற்படுமெனவும், மண் அகழாவிட்டால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமெனவும், இரண்டு தரப்பினரினதும், கருத்தாகும்.

ஒலுவில் துறைமுகம் அரசியல்வாதிகளுக்கு அரசியல் தளமாக மாறியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றார்கள். எது எவ்வாறு இருந்த போதிலும் இப் பிரச்சினை தொடர்பாக அரசியல் தலைமைகள் பாதிக்கப்படும் பொது மக்களிடமும், மீனவர்சமூகத்தினரிடமும், பேசி ஒருமித்த கருத்துடன் சில விட்டுக் கொடுப்புடன் இதனை முன்னெடுத்துச் செல்வதற்கு வழி வகை செய்ய வேண்டுமென்பது மக்களின் கோரிக்கையாகும்.

அரசியல்வாதிகள் தொடர்ந்தும் மெளனமாக இருப்பது அப்பாவிப் பொது மக்களை பெரும் பாதிப்புக்கு கொண்டு செல்லும் என்ற ஒரு அச்சநிலை ஏற்பட்டுள்ளது. எது எவ்வாறானாலும், இப் பிரச்சினையை அரசியல்வாதிகள் தீர்த்து வைப்பதோடு இவ் விரு சாராருக்கும், பாதிப்பு ஏற்படாத வகையில் தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமென்பது அவசரமாகவும், அவசியமாகவும் தேவைப்படுகின்றது.

Comments