கூட்டு ஒப்பந்தம் ஒரு பொறி! | தினகரன் வாரமஞ்சரி

கூட்டு ஒப்பந்தம் ஒரு பொறி!

விசு கருணாநிதி

``பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்துடன் சம்பந்தப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பதற்கான பேச்சுவார்த்தை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையைப் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனமே ஒத்தி வைப்பதாக அறிவித்திருக்கிறது.

யார் ஒத்தி வைத்தாலும் வையப்படுவது தொழிற்சங்கங்கள்தான். அவர்கள் சம்பள அதிகரிப்பை வழங்கினால் பாராட்டைப் பெறுவதும், வழங்காவிட்டால் விமர்சனத்திற்குள்ளாகுவதும் சங்கங்கள் என்பது சம்மேளனத்திற்கு நன்கு தெரியும்.

உடன்படிக்ைக புதுப்பிக்கப்படுவது கால தாமதம் ஆகுவதையிட்டு அவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. ஏனெனில், உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட காலந்தொட்டு, அதனை மீளப்புதுப்பித்தல் என்பது ஒரு வருடமாவது உரிய காலத்தில் நடைபெற்றிருக்கவில்லை. குறைந்தபட்சம் சில வாரங்களேனும் கடந்த பின்னரே மீளக்ைகச்சாத்திடப்பட்டிருக்கிறது.

பேச்சுவார்த்தை நடத்துவதும் இணக்கமில்லை என ஒத்திவைப்பதும், உடன்படிக்ைக விடயத்தில் சகஜமப்பா என்றாகிவிட்டிருக்கும் நிலையில், முன்பெல்லாம் தொழிலாளர்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம், போராட்டம் என்ற நாடகத்தை சங்கங்களே அரங்கேற்றும். ஆனால், அந்தப் பணியைத் தற்போது மலையகத்தில் உள்ள சில நிருபர்கள் பொறுப்பேற்றிருப்பதாகத் தெரியவருகிறது. அதுதான், ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாகப் பத்திரிகைகளிலும் இணையத்தளங்களிலும் படங்களைப் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. சங்கங்கள் தலைமையேற்று தலவாக்கலையில் ஓர் ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தன. அதுவும், உடன்படிக்ைகயில் கைச்சாத்திடாத சங்கங்கள். அதனைத் தவிர, இப்போது நடப்பதெல்லாம், நிருபர்களுக்குச் செய்திக்காகத் தூண்டப்படும் ஆர்ப்பாட்டங்கள் என்று மலையகத் தகவல்கள் மூலம் தெரியவருகிறது.

எவ்வாறாயினும், சங்கங்கள் செய்ய வேண்டியதைப் பத்திரிகையாளர்களாவது செய்கிறார்களே என்று திருப்தியடைவதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார்கள் பெருந்தோட்ட ஆர்வலர்கள்.

சம்பள அதிகரிப்பு விடயத்தில் அரசாங்கம் தலையிட வேண்டும் என்ற கோரிக்ைக காலாகாலமாகவே விடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த முறை (2016) ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது அரசாங்கம் தலையிட்டது. ஆனால், அந்தத் தலையீடு முதலாளிமார் சம்மேளனத்திற்குச் சாதகமானது என்று இப்போது சங்கங்கள் அம்பலப்படுத்தியுள்ளன. அதன் காரணமாகத்தான் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்துடன் தொடர்புடைய கூட்டு ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பதற்காக, வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி நடைபெறாதென்று பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம், கைச்சாத்திடும் சங்கங்களுக்கு அறிவித்துள்ளதாகச் சங்கத் தலைவர்கள் கூறியிருக்கிறார்கள்.

அன்றைய தினத்திற்குப் பதிலாக நாளை திங்கட்கிழமை (15) பேச்சுவார்த்தையை நடத்தலாம் என்று முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது. சரியென்றால், திங்கட்கிழமை முதல் தொழிலாளர்களுக்குப் புதிய உடன்படிக்ைகயின் கீழ் சம்பளம் வழங்கப்பட வேண்டும்.

அதனால், திங்கட்கிழமை உடன்படிக்ைக காலாவதியாகவுள்ளதால், சம்மேளனத்தின் இந்த அறிவிப்பு தொழிற்சங்கத் தலைவர்களுக்கு மாத்திரமன்றித் தொழிலாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. என்றாலும், சங்கங்கள் பதற்றமடையாமல், முதலாளிமார் சம்மேளனத்திற்கு ஒரு நிபந்தனையை முன்வைத்துள்ளன.

அதாவது, திங்கட்கிழமை பேச்சுவார்த்தையில் பங்குபற்றுவதாயின், பேச்சு ஆரம்பித்து நிறைவடையும் காலப்பகுதி வரையில் நிலுவைச் சம்பளத்தை வழங்குவதாக எழுத்து மூலம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று தொழிற்சங்கத் தலைவர்கள், சம்மேளனத்திற்கு அறிவித்துள்ளனர்.

அவ்வாறு உத்தரவாதம் வழங்காதபட்சத்தில், பிரதமரைச் சந்திப்பதற்குச் சங்கங்கள் முடிவுசெய்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் அருள்சாமி தெரிவிக்கின்றார்.

முதலாளிமார் சம்மேளனத்தின் இந்த இழுத்தடிப்புக்குக் காரணம் கடந்த முறை உடன்படிக்கையில் சேர்க்கப்பட்ட புதிய சரத்தாகும் என்று அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். அதாவது, உடன்படிக்ைக சிலவேளை புதுப்பிப்பதற்குக் கால தாமதமானால், அதே உடன்படிக்ைகயை மேலும் ஈராண்டுகளுக்குத் தொடரலாம் எனும் ஒரு சரத்து கடந்த உடன்படிக்ைகயில் உள்வாங்கப்பட்டுள்ளது. இந்தச் சரத்தின் வாய்ப்பைப் பயன்படுத்தியே பேச்சுவார்த்தையை அவர்களாகவே ஒத்திவைத்திருக்கிறார்கள் எனக் கருத வேண்டியிருக்கிறது. அதனால்தான், மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் தொழிலாளர்களுக்கு ஒரு பொறியாக மாறியிருப்பதாக அருள்சாமி கூறுகிறார்.

சென்ற முறை இந்தக் கூட்டு ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கும்போது அரசாங்கத்தின் அமைச்சர்கள் தலையிட்டு இந்தச் சிக்கலைத் தோற்றுவித்திருக்கிறார்கள். முதலாளிமார் சம்மேளனம் கூட்டு ஒப்பந்தத்தின் பிடியிலிருந்து தப்புவதற்கு அன்று அமைச்சர்கள் வழி வகுத்துச் செயற்பட்டிருக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டுகிறார் அருள்சாமி.

அதேநேரம், நியாயமான சம்பள அதிரிப்பை வழங்காவிட்டால், உடன்படிக்ைகயில் கைச்சாத்திடுவதிலிருந்து விலகியிருப்போம் என்று தோட்டத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எஸ்.இராமநாதன் கூறியிருக்கிறார்.

எனினும், இது சாத்தியமற்றது என்பது அருள்சாமியின் நிலைப்பாடு. கைச்சாத்திடாவிட்டால், உடன்படிக்ைக இராது. உடன்படிக்ைக இராவிட்டால், தொழிலாளர்களுக்கு ஆபத்து. உடன்படிக்ைக கைச்சாத்திடப்பட்டிருக்கும்போதே அநேகமான தோட்டங்களில், அது மீறப்பட்டு வருகிறது. தற்போது வழங்கப்பட வேண்டிய 730 ரூபாய் சம்பளத்தை வழங்காதிருப்பதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் தோட்ட நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன.

75% வேலைக்குச் சென்றால், 60 ரூபாய் வழங்க வேண்டும். அதனைத் தவிர்ப்பதற்குக் குறைந்த நாட்கள் வேலை வழங்குவது. ஊக்குவிப்புக் கொடுப்பனவாக வழங்க வேண்டிய 140 ரூபாயைத் தவிர்ப்பதற்காகத் தொழிலாளர்களுக்குக் குறைந்த பணிப்பொறுப்பைச் செய்யச்செய்வது. இந்த இரண்டையும் தவிர்த்துவிட்டால், 200 ரூபாய் வழங்க வேண்டியதில்லை. தேயிலை/இறப்பர் விலைக்கேற்ற கொடுப்பனவான 30 ரூபாயையும் அடிப்படை நாட்சம்பளமான 500 ரூபாயையும் வழங்கினால் போதுமானது. இந்த நிலை மலையகத்தின் பெரும்பாலான தோட்டங்களில் இடம்பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே, அடிப்படைச் சம்பளத்தை அதிகரிக்காமல், கொடுப்பனவுகளை அதிகரிப்பதாகச் சொல்லி ஏற்றுக் ெகாண்டுவிட்டு, அதனைக் கொடுக்காமல் இருக்கும் சூட்சுமத்தைக் கம்பனிகள் கற்றுக்ெகாண்டிருக்கின்றன. அதனால், இம்முறை இந்தக் கொடுப்பனவு விளையாட்டெல்லாம் வேண்டாம், எங்களுக்கு அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபாய் கொடுங்கள்! என்ற கோரிக்ைகயை முன்வைத்திருக்கிறார்கள் சங்கத்தினர்.

சிலவேளை, இந்தக்ேகாரிக்ைகயை முதலாளிமார் சம்மேளனம் ஏற்றுக் ெகாள்ளாவிட்டால், சங்கங்கள் சொன்னதைப்போல, உடன்படிக்ைகயிலிருந்து விலகிவிட முடியுமா?

முடியாது!

ஏன்?

அவ்வாறு உடன்படிக்ைகயிலிருந்து விலக வேண்டுமாயின், ஒரு மாதம் முன்னறிவித்தல் கொடுக்க வேண்டும். இப்போது அதற்கான கால அவகாசம் கிடையாது. ஏனெனில், நாளையுடன் உடன்படிக்கை முடிவுக்கு வருகிறது. அதன் பின்னர், கம்பனிகள் நினைத்தவாறு செயற்படுவதற்குத்தான் கடந்த முறை அமைச்சர்கள் தலையிட்டிருக்கிறார்கள். இதுதான் உண்மை.

தோட்டத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை கூட்டு ஒப்பந்தம் மிக முக்கியமானது. சிலர் உடன்படிக்ைகயிலிருந்து வெளியே வாருங்கள் என்கிறார்கள். அப்படி வெளியில் வந்துவிட்டால், இதனைவிடப் பாரதூரமான அநீதிகள் இழைக்கப்படலாம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தொழிலாளர்கள் விடயத்தில் தற்போது கைச்சாத்திடுகின்ற சங்கங்களைவிடவும் வெளியில் சுவரொட்டி ஒட்டி ஆர்ப்பாட்டம் நடத்தும் சங்கங்களும் தம்மை ஈடுபடுத்திக்ெகாள்ள வேண்டும். அதற்கான பொறிமுறை யாதெனக் கண்டறிய வேண்டும். அதனைவிடுத்து தொழிலாளர்களைக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்வதால் ஆகப்போவது எதுவுமில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்னர் கேரளாவின் மூணாறு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்குச் சம்பள அதிகரிப்பு கேட்டு ஒட்டுமொத்த பெண் தொழிலாளர்களும் களத்தில் இறங்கினார்கள். ஆண்கள் உணவு சமைத்துக்ெகாண்டு வந்து கொடுப்பதோடு நின்றுகொண்டார்கள். பெண்கள்தான் போராட்டத்தை முன்னெடுத்தார்கள். இறுதியில், அந்தப் பெண்கள், தொழிலாளர்களின் பிரதிநிதிகள் அல்லர் என்றும் அவர்கள் ஓர் அமைப்பினர் அல்லரென்றும் காரணம் கூறி அவர்களுடன் பேச்சு நடத்த பெருந்தோட்டக் கம்பனி நிர்வாகம் மறுத்துவிட்டது.

அதுபோல், ஊடகவியலாளர்களும் சரி வேறு அமைப்புகளும் சரி, தொழிலாளர்களை ஆர்ப்பாட்டம் செய்யத் தூண்டுவதன் மூலம் எந்தப் பலனும் ஏற்படாது. மாறாக அவர்களுக்கு வருமான இழப்பே ஏற்படும். மலையகப் பெருந்தோட்டங்களில் தற்போது நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களில் பெரும்பாலும் பெண்கள்தான் பங்கு பற்றுகிறார்கள். மிக அரிதாகவே ஆண்கள் காணப்படுகிறார்கள்.

தொழிலாளர்களுக்குச் சம்பள அதிகரிப்பு பெறுவதற்கு ஆண் தொழிலாளர்களும் ஒரு காரணம் என்றும் சொல்லப்படுகிறது. ஆண்கள் தோட்டங்களில் அக்கறையுடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றுவதில்லை என்று குற்றச்சாட்டை முதலாளிமார் சம்மேளனம் முன்வைத்திருக்கிறது. முன்னரைப்போன்று தோட்டங்களில் ஆண்களுக்கென்று தனித்துவமான பணியென்று வழங்குவதற்கில்லை. அதனால், கொடுக்கப்படும் வேலையைப் பட்டும் படாமல் செய்துவிட்டுச் சுகமாக வேலையோடு வீட்டுக்குச் சென்றுவிடுகிறார்கள். பெண்கள் காலை முதல் மாலை வரை கடுமையாக உழைக்கிறார்கள். குளவி கொட்டுக்கு ஆளாகுவது அதிகமாகப் பெண்களென்பதை அறியும்போது இந்தக் குற்றச்சாட்டை முற்றாக மறுக்கவும் முடியாதுதான்.

முன்னர் புல்லுகளை வெட்டிச் சுத்தம் செய்தார்கள். இப்போது தேயிலை மலைகள் காடாகி வருகின்றன. புல்லுவெட்டுவதற்குப் பதிலாக, களை நாசினியைப் பயன்படுத்தினார்கள். அதுவும் இப்போது நிறுத்தப்பட வேண்டு என்று சொல்கிறார்கள். ஆகவே, ஆண்களுக்கும் பெண்களுக்கும் அதிகரிப்பு வழங்குவது சாத்தியமில்லை என்ற ஒரு கருத்து முன்பு முன்வைக்கப்பட்டிருந்தது.

அதேநேரம், இப்படியெல்லாம் கூறும் நிர்வாகம், தோட்டங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் தமது சொந்தப் பணிக்காகவும் வீட்டு வேலைகளைச் செய்வதற்கும் பத்து முதல் பதினைந்து தொழிலாளர்களைப் பயன்படுத்திக்ெகாண்டு, அவர்களுக்குத் தோட்டத்தில் சம்பளம் வழங்குகிறார்களே, இதனால், ஏற்படும் நட்டத்தை யார் ஈடுசெய்வது? மாதாந்தம் எத்தனைபேரின் சம்பளத்தை ஏப்பம் விடுகிறார்கள் என்பது கம்பனிகளுக்குத் தெரியுமா? என்று கேட்கிறார்கள் ஆண் தொழிலாளர்கள்.

1992ஆம் ஆண்டிலிருந்து கைச்சாத்திடப்படும் கூட்டு ஒப்பந்தத்தில் உள்ள அனைத்துச் சரத்துகளும் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பையும் தொழில் உத்தரவாதத்தையும் வழங்கும் வகையில் அமைந்துள்ளபோதிலும், கடந்த 2016ஆம் ஆண்டு ஒக்ேடாபரில் உடன்படிக்ைக கைச்சாத்திடப்பட்டபோது உடன்படிக்ைகயில் இரண்டாவது சரத்தாக, ஏதாவதொரு காரணங்களுக்காக உடன்படிக்ைக கைச்சாத்திடப்படுவது தாமதமாகும் பட்சத்தில், அதே உடன்படிக்ைக அமுலில் இருக்கும் என்ற விடயம் சேர்க்கப்பட்டுள்ளது. இது நிலுவைச் சம்பளம் பெறுவதையும் பேரம்பேசுதலையும் பலவீனப்படுத்தியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அப்படியாயின் புதிதாகத் தற்போது உடன்படிக்ைக கைச்சாத்திடப்படும்போது அந்தச் சரத்தை நீக்க வேண்டும்.

கடந்த முறையைப்போன்று இம்முறை எந்தவிதமான அரசியல் அழுத்தத்திற்கும் சங்கங்கள் அடிபணியாதென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஒரு சிலர் கம்பனி நிர்வாகத்துடன் பேரம்பேசலைத் தனியாக முன்னெடுத்துச் செல்வதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. அவ்வாறெனின், அது தொழிலாளர்களுக்குச் செய்யும் மாபெரும் துரோகமாகும்.

தோட்டத் தொழிலாளர்களுக்குச் சம்பள அதிகரிப்பைப் பெற்றுக்கொள்வதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்ைகக்கு, முழுமையான ஆதரவினைப் பெறுவதற்காகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக அருள்சாமி தெரிவித்திருக்கிறார்.

சம்பள அதிகரிப்பை வழங்குமாறு அழுத்தம் கொடுப்பதற்குத் தமிழ்க் கட்சிகளின் சார்பில் உள்ள பாாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் வரவுசெலவுத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதாகவிருந்தால், 1200 ரூபாய் நாட்சம்பளம் வழங்குமாறு முதலாளிமார் சம்மேளனத்திற்குப் பணிப்புரை வழங்க வேண்டும் என்றும் யோசனை முன்வைக்கப்பட்டிருக்கிறது. மலையகத்தைச் சேர்ந்த அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்ைக விடுக்க தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

அதேநேரம், தமிழ்க் கைதிகள் விடயத்திலும் வரவு செலவுத் திட்டத்தைத் துரும்பாகப் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்ைகயும் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்க் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எந்த விடயத்திற்கு முன்னுரிமை வழங்குவார்கள் என்று தெரியவில்லை.

தொழிலாளர்களின் நாட்சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக அதிகரிப்பதாக தலவாக்கலையில் நடைபெற்ற கூட்டமொன்றில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்திருக்கிறார். இம்முறை ஆயிரம் ரூபாய் அதிகரிப்பை கம்பனிகளாக முன்வந்து வழங்கினால், ஏற்றுக்ெகாண்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதாகவும் இல்லையேல் அரசாங்கத்தைக் கொண்டு 1200 ரூபாய் அதிகரிப்புக்குச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை என்றும் சங்கங்களின் சார்பில் திரு.அருள்சாமியும், எஸ்.இராமநாதனும் கூறியுள்ளனர். அவ்வாறு அரசாங்கம் சம்பள அதிகரிப்பை வழங்குமாறு கம்பனிகளுக்கு உத்தரவிட்டாலும், கூட்டு ஒப்பந்தத்தில் சங்கங்கள் கைச்சாத்திட்டதன் பின்னரே அந்த அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என்பதும் கவனிக்கத்தக்கது.

நிறைவாக இங்கே கவனிக்க வேண்டிய ஒரு விடயம் என்னவென்றால், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையானாலும் சரி, அல்லது தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பாக இருந்தாலும் சரி, தமிழ் அரசியல்வாதிகள் பிரதேச, அரசியல் பேதங்கள் கடந்து ஒன்றுபட்டுச் செயற்படுவதன் மூலம் மாத்திரமே சாதிக்க முடியும் என்பதை இந்த ஆண்டு தெள்ளத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும் என்பது மட்டும் உண்மை.

Comments