ஏற்றுமதிக்கான விருதைப் பெற்ற நித்யா வியாபாரக் குழுமம் | தினகரன் வாரமஞ்சரி

ஏற்றுமதிக்கான விருதைப் பெற்ற நித்யா வியாபாரக் குழுமம்

Nithya Paper and Boards Lanka தனியார் நிறுவனம் அதிகூடிய நாணயமாற்று வருமானத்தை ஈட்டியமைக்காக 2017/2018ம் ஆண்டிற்குரிய ஏற்றுமதிக்கான ஜனாதிபதி விருதினை பெற்றுக்கொண்டதுடன் ISO 9001 2015 தரச்சான்றிதழையும் பெற்றுக்கொண்டுள்ளது.

இந்நிறுவனம் 2010ம் ஆண்டு இலங்கை முதலீட்டு சபையின் அனுமதியுடன் கழிவு காகிதத்தின் மூலம் சீரான பேப்பர் தயாரிப்பதற்காகன உற்பத்தியை ஆரம்பித்தது. நித்யா Packaging (Pvt) Ltd நிறுவனம் இலங்கையில் காணப்படும் கழிவு காகிதப் பொருட்களைப் பயன்படுத்தி காகித உற்பத்திகளை மேற்கொள்ளும் நோக்கில் இதனை ஆரம்பித்தது.

இதன் அங்குரார்ப்பண நிகழ்வுகள் 2010ம் ஆண்டு நடைபெற்றதோடு கட்டுமான வேலைகள் 2014ஆம் ஆண்டு பூர்த்தி செய்யப்பட்டது. 2015 ஒக்டோபர் அளவில் இயந்திரங்கள் பொருத்தும் வேலை நிறைவுக்கு வந்தது. பொருத்தப்பட்டுள்ள இயந்திரங்களின் அடிப்படையில் 4.4 மீற்றர் விளிம்பு கொண்ட 9000 மெட்ரிக் தொன் காகித உற்பத்தியை மேற்கொள்ள முடியும்.

2016ம் ஆண்டு ஜனவரி மாதம் தனது வணிக நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான வெள்ளோட்டத்தை 2015 டிசம்பரில் மேற்கொண்டது. முதல் வருடத்தில் நிறுவனத்தினால் இலாபம் ஈட்ட முடியாமைக்கு பிரதானமாக சந்தைப்படுத்தல், நிதியியல் ரீதியான போதாமையே காரணமாகும். பின்னர் பங்கு மூலதனம் கொண்ட Abdullah International நிறுவனத்துடன் கைகோர்த்துக் கொண்டது.

படிப்படியாக முன்னேறி 2016 ஏப்ரலில் பங்களாதேஷ் நாட்டுக்கு நிறுவனம் தனது முதலாவது ஏற்றுமதியை மேற்கொண்டது. இந்நிறுவனம் FSC தரச்சான்றிதழைப் பெற்றுக் கொண்டதன் மூலமும் சர்வதேச சந்தைப்படுத்தல் முகவர்களை நியமித்ததன் காரணமாகவும் குறுகிய காலப்பகுதியில் சர்வதேச சந்தையில் பங்களாதேஷ், சீனா, கென்யா, நைஜீரியா, சூடான், கொங்கோ, மெக்சிகோ, சைப்ரஸ் மற்றும் ஏனைய பல நாடுகளில் தனக்கான சந்தையை உறுதிப்படுத்தியதன் மூலமும் ஏற்றுமதிக்கான ஜனாதிபதி விருதைப் பெற்றுக்கொண்டது. இவ்விருது 2017, 2018 காலப்பகுதியில் அதிக வெளிநாட்டு வருமானத்தை ஈட்டியமைக்காக வழங்கப்பட்டாலும் உண்மையில் இதன் வெற்றி மிகப்பெரிய சாதனையாகும்.

Comments