44 ஆவது தேசிய விளையாட்டு விழா: | தினகரன் வாரமஞ்சரி

44 ஆவது தேசிய விளையாட்டு விழா:

இறுதி நாள் நிகழ்வுக்கு அதிதியாக ஜனாதிபதி பங்கேற்பு

பொலன்னறுவையிலிருந்து பரீத்.ஏ.றகுமான்

பொலன்னறுவை தேசிய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றுவரும் 44 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் இரண்டாம் நாளில் காலை வேளையில் இடம்பெற்ற ஆண்களுக்கான சம்மட்டி எறிதல் போட்டியில் வடமேல் மாகாணத்தை சேர்ந்த சரித் கப்புகொட்டுவ 50.86 மீற்றர் எறிந்து புதிய போட்டி சாதனையை நிலைநாட்டியுள்ளார்.தனது சாதனையாக இருந்த 49.69 மீற்றர் தூரத்தையே அவர் முறியடித்துள்ளார். அவர் 2014 ஆம் ஆண்டு நிலைநாட்டியிருந்தார். அத்துடன் சரித் கப்புகொட்டுவ 2015 ஆம் ஆண்டு 52.53 மீற்றர் எறிந்து தேசிய சாதனையை தன்னகத்தே வைத்துள்ளார். இப் போட்டியில் தென்மாகாணத்தைச் சேர்ந்த சிசிர குமார 46.97 மீற்றர் எறிந்து இரண்டாமிடத்தையும் மூன்றாமிடத்தை வடமத்திய மாகாணத்தைச் சேர்ந்த குமாரசிறி 46.84 மீற்றர் எறிந்து பெற்றார்.

அத்துடன் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் மத்திய மாகாணத்தைச் சேர்ந்த கே.சண்முகேஸ்வரன் 30:49.99 நிமிடங்களில் ஓடி முதலாமிடத்தையும் இரண்டாம் மூன்றாம் இடங்களை அதே மாகாணங்களை சேர்ந்த சமரஜீவ, பண்டார ஆகியோர் பெற்றனர். சண்முகேஸ்வரனின் தனிப்பட்ட ஓட்ட நிமிடங்களாகவும் பதிவு செய்து கொண்டார்.பெண்களுக்கான 5 ஆயிரம் மீற்றர் ஓட்ட போட்டியில் முதலாமிடத்தை சப்பரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த நிலானி ரத்நாயக்க 17:18.70 நிமிடங்கள் ஓடி முதலாமிடத்தையும் இரண்டாமிடத்தை சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த ஏ.என். லங்கா 17:32.37 நிமிடங்களிலும் மூன்றாமிடத்தை ஊவா மாகாணத்தைச் சேர்ந்த சாமலி அனுஷ்காக 17:52.96 நிமிடங்களில் ஓடி பெற்றார்.

மற்றுமொரு போட்டியாக இடம்பெற்ற பெண்களுக்கான கோலூன்றிப்பாய்தலில் மேல்மாகாணத்தை சேர்ந்த சச்சினி கௌசல்யா 3.20 மீற்றர் பாய்ந்து முதலிடத்தையும் இரண்டாமிடத்தை இருவர் பெற்றனர் மத்திய மாகாணத்தைச் சேர்ந்த கே.ஏ.சி.கே.கொடித்துவக்கு 3.00 மீற்றர் தூரம் பாய்ந்தும் வடமாகணத்தைச் சேர்ந்த சி .ஹெரினா 3.00 மீற்றர் பாய்ந்து பெற்றார்.

44 ஆவது தேசிய விளையாட்டு விழா கடந்த 11 ஆம் திகதி பொலன்னறுவையில் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா தலைமையில் கோலாகலமாக ஆரம்பமானது. வடமத்திய மாகாணத்தில் இம்முறை இடம்பெறும் தேசிய விளையாட்டு விழா இரண்டாவது தடவையாக நடைபெறுகிறது.இதற்கு முன்னர் 2009 ஆம் ஆண்டு இதே மைதானத்தில் இடம்பெற்றது.

இறுதி நாள் இன்று இடம்பெறுகிறது இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்கிறார். அதிதிகளாக அமைச்சர்கள் , பிரதியமைச்சர்கள் மாகாண ஆளுநர்கள் மற்றும் மாகாண விளையாட்டுத்துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர்

(ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்- எம்.ஐ.எம் றியாஸ், சாய்ந்தமருது தினகரன் நிருபர்- ஏ.எம்.எம்.றியாத், அட்டாளைச்சேனை விசேட நிருபர் எஸ்.எம். அறூஸ்)

Comments