குந்த ஒரு கோடியில்லை; சீதனம் மட்டும் கோடிக்கணக்கில் | தினகரன் வாரமஞ்சரி

குந்த ஒரு கோடியில்லை; சீதனம் மட்டும் கோடிக்கணக்கில்

வாழ்வாதாரமா  சேதாரமா

உலகிலேயே காதலித்த அல்லது கட்டிய மணத்துணையை கைவிட்டுவிட்டு ஓடும் அல்லது விலகும் பிராணி மனிதப் பிராணிதான். ஜீவனாம்சம், மணமுறிவு, கைவிடல். பெண்ணை தாய்மையடையச்செய்து கைவிடல், காதலித்து மணமுடிப்பேன் என்று கூறி ஊரெல்லாம் அறிய கூடி அலைந்தபின் நான் மணமுடிக்க மாட்டேன் என்பது, எல்லாமே மனிதப் பிறவியில்தான் உண்டு. ஏன் ஏனிப்படி ஆணுக்குப்பெண் சளைக்காமல் இந்த நடவடிக்கைகள் தொடர்வதன் காரணம் என்ன?

இருமனம் கலந்தால் திருமணம் என்ற நிலை மாறி இருவீட்டாரின் பொருள் பணம், அந்தஸ்து, சாதி சாதகம் என்று பலதரப்பட்ட விடயங்கள் பொருந்தினால்தான் திருமணம் என்பது வழமையாகிவிட்டது. இப்படியான கட்டத்தில் காதல் வலுவற்றுப்போகும் சாத்தியப்பாடுகள் ஏராளம்.

காதல் மணமும் கற்புமணமும் அனுமதிக்கப்பட்டவைதான். ஆனால் வாழ்க்கைக்கான ஆதாரத்தை தேடும் நிலை வரும்போது காதல் கரைந்து போகிறது. அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை. பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை யாகியாங்கு என்ற வள்ளுவர் காலத்திலும் கூட இதுதான் நிலை.

போர் நடந்த காலத்தில்கூட இந்த நிலை மிக மோசமாக இருந்தது. மிக வசதியாக வெளியே செல்வதற்கான கடவுச்சீட்டை பெற்று வைத்துக் கொண்டு, ஒரு பெண்ணை ஏமாற்றிவிட்டு, வன்னிக்கு வெளியே ஓடிவிட்டவர்களை எதுவும் செய்ய முடியாது. இப்படி கொலை செய்து விட்டுத்தப்பியவர்களும் உண்டு. என்னதான் சீதனமில்லாத பெண் என்றாலும் அவளை நாடாத மனம் ஆண்களுக்கு இல்லை. அதேபோல உள்ளூரில் தான் விரும்பிய ஆணை விட வெளிநாட்டிலிருந்து ஒரு கோரிக்கை வந்து விட்டால் காதலனுக்கு டாட்டா காட்டிவிட்டு பறந்துவிட்ட பெண்களும் அநேகம். முதல்மாதத்தில் நடந்த பிறந்தநாளில் காதலன் கேக் வெட்டினான். வெளிநாட்டவன் அனுப்பிய பரிசு ஒருவாரம் கழித்தே கிடைத்தது. விளைவு காதலனை விட்டுவிட்டு பொருள் மிகுந்த வாழ்க்கையை தேடி பெண் போய்விட்டாள். என்னசெய்வான் காதலன். தேவதாசும் நானும் ஒரு ஜாதிதானடி என்று பாடவா முடியும். தற்கொலைக்கு தூண்டிய மனம் அவனை போராட்டத்தில் இணையவைத்தது.

போராட்டம் ஒரு பெரும் சூனியக்கிடங்காகி பரீட்சையில் தோற்றவர்களையும் காதலில் தோற்றவர்களையும், வீட்டிலிருந்து ஓட விரும்பியவர்களையும் உள்வாங்கிக் கனத்தது. பொருளாதாரம் தான் வாழ்க்கையை தீர்மானிக்கிறது. காதல் மோகம் எல்லாம் தூசு ஏன் பொருளுக்கு முன்னால் சகோதர பாசம் தாய், தந்தை மீதான பாசம் எல்லாமே வெறும் வேசமாகி மறைந்து போகும்.

பொருள் என்ற கட்டுக்குள் அடங்காத விலங்குகளை பாருங்கள். ஒரு கோழிச்சேவல் தன்னால் உண்டான கருவைச் சுமக்கும் கோழிக்கு முட்டையிடும் இடத்தை காட்டி உதவமுனைகிறது. கேவலம் நாய்கூட தன் கருவைச்சுமக்கும் பெட்டைக்கு வலிகண்டதுமே அதற்கான இடத்தை தேடவும் அது குட்டி ஈனும்வரை கூடவே நின்று கொள்கிறது. இந்தக்காட்சிகளை இன்றும் கிராமப்புறங்களில் காணலாம். பட்டண வாசிகளுக்கு இது கிடைக்காத காட்சிதான். ஆனால் மனிதன் தன்மூலம் கருவான ஒரு பெண்ணை நிராகரிக்கிறான். அது தன்னுடையதே இல்லை என்கிறான். அவனை மலைபோல நம்பி தன்னையே கொடுத்த பெண்ணை இழிவாக்கி நடத்தை கெட்டவள் என்று நாமம் சூட்டுகிறான். நீதிமன்றம் வரை சென்று அதை நிரூபிக்க வாதாடுகிறான்.

போர் நடந்த காலத்தில் இப்படி நீதிமன்றம் வரை சென்று வாதிட்டவன் தன் தாயின் சொற்கேட்டு தன் காதலியின் கருவை மறுத்தவன், பின்நாளில் குழந்தை பிறந்ததும் தாயின் பேச்சை தூக்கிவீசிவிட்டு குழந்தையை பார்க்க ஓடிவந்தான். தன் கணவன் இயக்கத்தால் பிடித்து செல்லப்பட்டபோதும் அவனை மீட்கப் படாத பாடுபட்டு வெளியே கொண்டு வந்தாள் ஒரு பெண் ஆனால் வெளியே வந்தவன் என்ன சொன்னான் தெரியுமா? யாரோடு கூடிக்கொண்டு என்னைத் தேடி வந்தாய் அவன்தானே உன் கள்ளக்காதலன்? என்று. இயன்ற அளவு அவளை நிந்தித்தான். காரணம் அவனை அவனுடையதாய் வெளிநாட்டுக்கு அனுப்ப திட்டம் போட்டாள். பாவம் அந்தப்பெண், மீண்டும் நீதிமன்றப்படி ஏறவேண்டியதாயிற்று. ஏன் இப்படி என்று கேட்டால்,

என்ன செய்வது அவனுடைய குழந்தை என் வயிற்றில் இருக்கிறதே அதற்கு தந்தை வேண்டுமே என்றழுதாள்.

பிள்ளை பிறந்தது. பதிவும் முடிந்தது. அவள் இவனை துரத்தியே விட்டாள்.

 

பிள்ளையை பார்க்கக் கூட அனுமதிக்கவில்லை. பதிவைக்கூட அவன் காவற்றுறையின் மிரட்டலுக்காகவே செய்தான். இன்றும் அவள் சந்தையில் கடைவைத்து தன் சீவியத்தை நடத்துகிறாள். பிள்ளை பாடசாலைக்குப் போகிறது.

தமிழனுக்கு குந்த ஒரு கோடியில்லை. சீதனம் மட்டும் கோடிக்கணக்கில் தேவைப்படுகிறது. இந்த நிலை என்று மாறுமோ? பெண்களின் நிலையும் இதுதான். ஒருவர் பெண்தேடிச் சென்றார். ஏன் அமையவில்லை என்று கேட்டேன். அவர் என்னிடம் கூறியதாவது. அக்கா அந்தப்பொம்பிளைக்கு வயசு முப்பது. ரைக்ரர் சில்லேறின தகரப்பேணிமாதிரி முகம் அவ்வளவு நேர், ஆனா அவளுக்கு நான் வேண்டாம். வெளிநாட்டு மாப்பிளைதான் வேணுமாம். சிரிப்பதா அழுவதா?

Comments