ஆயிரம் ரூபாய் அடிப்படைச் சம்பளமே இலக்கு | தினகரன் வாரமஞ்சரி

ஆயிரம் ரூபாய் அடிப்படைச் சம்பளமே இலக்கு

  • இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் எம்.பி
  • அமைச்சுப் பதவி இல்லாவிட்டாலும் மக்களின் பலம் எனக்கிருக்கிறது

பெருந்தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளம் உள்ளிட்ட நலன்புரி விடயங்களுடன் தொடர்புடைய கூட்டு ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பதற்கான மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை இணக்கப்பாடுகள் எட்டப்படாமல் முடிந்திருக்கிறது.

இரண்டு வருடங்களுக்குக் கைச்சாத்திடப்பட்ட அந்த ஒப்பந்தம் கடந்த 15ஆம் திகதியுடன் காலாவதியாகிவிட்டது. ஒவ்வொரு முறையும் இவ்வாறு காலாவதியாகிப் பல மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலேயே, அது மீளப்புதுப்பிக்கப்படுகிறது. அவ்வாறு அடுத்த ஈராண்டுகளுக்குப் புதுப்பிக்கப்படும்போது, காலாவதியான திகதியிலிருந்து நிலுவைச் சம்பளத்தைப் பெற்றுக்கொடுப்பதற்குச் சங்கங்கள் பகீரதப்பிரயத்தனப்படுகின்றன.

சென்ற முறை (15-/10-/2016) கைச்சாத்திடப்பட்டபோது, ஒப்பந்தம் காலாவதியாகிப் 19 மாதங்கள் (ஒன்றரை வருடம்) கடந்துவிட்டிருந்தன. அப்போது நிலுவைச் சம்பளத்தைப் பெறுவதற்கு முயற்சித்தபோது அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தலையிட்டு, இடைக்காலக் கொடுப்பனவொன்றைப் பெற்றுக்கொடுத்தார்கள். இது கூட்டு ஒப்பந்தத்தைப் பலவீனப்படுத்திய ஒரு செயற்பாடு என்று சங்கங்கள் தற்போது வெளிப்படையாகக் குற்றஞ்சாட்டுகின்றன. அது மாத்திரமன்றித் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தினர் தான்தோன்றித்தனமாகச் செயற்படவும் வழிசமைக்கப்பட்டிருக்கிறது என்றும் சங்கத் தலைவர்கள் சொல்கிறார்கள்.

இந்தச் சூழ்நிலையின்கீழ்தான் கூட்டு ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பதற்கான பேச்சுவார்த்தை மூன்று தடவை நடைபெற்று முடிவின்றி நிறைவடைந்திருக்கிறது.

தொழிலாளர்களின் சம்பள விடயத்துடனும் அவர்களுக்கான நலன்புரிச் செயற்பாடுகளுடனும் சம்பந்தப்பட்ட இந்தக் கூட்டு ஒப்பந்தம், மலையகம் எனப்படுகின்ற மலைப்பாங்கான பிரதேசத்தில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்டது மாத்திரமன்று. மாறாக, தென் பகுதியில் காலி, மாத்தறை மாவட்டங்களில் உள்ள தேயிலை இறப்பர் தோட்டங்களில் உழைக்கும் தொழிலாளர்களுக்கும் தொடர்புடையது.

எனவே, மலையகத் தோட்டத்தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட ஒரு விடயமாக இந்தக் கூட்டு ஒப்பந்தத்தைப் பார்க்க முடியாது. இந்த ஒப்பந்தத்தில், பெருந்தோட்டங்களை நிர்வகிக்கும் 22 முகாமைத்துவக் கம்பனிகளின் சார்பில் இயங்கும் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (ஐக்கிய தேசிய கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது) பெருந்தோட்டத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (சிறு சிறு சங்கங்களின் கூட்டணி) ஆகிய மூன்று பிரதான அமைப்புகள் கைச்சாத்திடுகின்றன.

தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களிடம் அங்கத்துவப் பணத்தைப் பெற்றுக்கொண்டு அவர்களுக்காகப் பணியாற்றும் இன்னும் பல சங்கங்கள் இருந்தபோதிலும், (அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ், அதிலிருந்து பிரிந்து இயங்குகின்ற அசீஸ் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் - (அஷ்ரப் அசீஸ் தலைமையிலானது), அமைச்சர் திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கம், ஜேவிபி தலைமையிலான அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம், லங்கா தோட்டத் தொழிலாளர் யூனியன் (பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலானது), ஐக்கிய லங்கா தோட்டத் தொழிலாளர் யூனியன் (வாசுதேவ நாணாயக்கார தலைமையிலானது), சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான சுதந்திர தோட்டத் தொழிலாளர் சங்கம், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கம், ஆர்.எம்.கிருஷ்ணசாமி தலைமையிலான விவசாய தோட்டத் தொழிலாளர் சங்கம், பெயர் தெரியாத இன்னும் பல) குறித்த மூன்று சங்கங்கங்கள் மீதே சம்பள விடயத்தில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

தற்போது பேச்சுவார்த்தை முடிவு எட்டப்படாமல் ஒத்திவைக்கப்பட்டிருக்கும் நிலையில், மலையகப் பகுதிகளில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றுவோர், கடந்த சில வாரங்களாகத் தொடர்ச்சியாகப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தப் போராட்டங்கள் மூலமாக எதனைச் சாதிக்க முடியும்?

கூட்டு ஒப்பந்தத்தில் முக்கிய தரப்பாக இருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர்-பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமானைச் சந்தித்துக் கலந்துரையாடினோம்.

சம்பளப் பிரச்சினையின் உண்மையான நிலவரம் என்ன?

சம்பளப் பிரச்சினை பற்றி உங்களுக்குத் தெரியும், கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் மூன்று தொழிற்சங்கங்கள்தான் பேச்சுவார்த்தை நடத்தும். ஏற்கனவே, நான்கைந்து வருடங்களுக்கு முன்பு நடந்த பேச்சுவார்த்தையின்போது நான்கு மாதத்திற்கோ, ஆறு மாதத்திற்கோ நிலுவைத்தொகை செலுத்த வேண்டிய தேவை வந்தது. அதனைக்கூடப் பேச்சுவார்த்தையின் ஊடாகப் பெற்றுக்கொடுத் திருக்கின்றோம். கடந்த முறை நடந்த பேச்சுவார்த்தையின்போது ஒன்றரை வருடத்திற்கு நிலுவைத்தொகை செலுத்தவேண்டிவந்தது. நாங்கள் அதனைக் கோரியபோது, அரசாங்கம் அதில் தலையிட்டு, இடைக்கால கொடுப்பனவொன்றைப் பெற்றுக்கொடுத்துக் குழப்பியடித்தது.

இந்தத் தடவையும் பேச்சுவார்த்தையைத் தொடங்கி நடத்தி வருகிறோம். முதற்கட்டப் பேச்சுவார்த்தையின்போது 10 சதவீதம் கூட்டினார்கள் - அப்படியென்றால் ஐம்பது ரூபாய்.(550) அதனை நாங்கள் நிராகரித்துவிட்டோம். இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையில் 14 சதவீதமோ 15 வீதமோ தருகிறோம் என்றார்கள். அப்படியென்றால் 575ரூபாய். அதனையும் முடியாது என்று நிராகரித்துவிட்டோம்.

இந்த இரண்டு தடவையும் நடந்த பேச்சுவார்த்தையின்போது, இதற்கு மேல் அதிகரிக்க முடியாது. கம்பனிகள் நட்டத்தில் இயங்குகின்றன என்றார்கள். அது வழக்கமாகக் கூறும் கதை. நேற்று (15ஆம் திகதி திங்கட்கிழமை) நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 20 சதவீதம் அதிகரிப்பு தருகிறோம் என்றார்கள். அப்படியென்றால், 600 ரூபாய் - 100 ரூபாய் அதிகரிப்பு.

அதேநேரம், ஒன்றைக் கவனிக்க வேண்டும், மக்களைப் பொறுத்தவரை அவர்களின் கடமையை அவர்கள் சரியாகச் செய்திருக்கிறார்கள். அவர்களின் பொறுப்பு, கொழுந்தைப் பறித்துக்கொடுப்பது. அதனைச் சரியாகச் செய்திருக்கிறார்கள். அதனை விற்பனை செய்ய வேண்டியது, உலக சந்தைக்குக் கொண்டு செல்வது, விலை அதிகரிப்பு போன்றவை எல்லாம் நிர்வாகத்தின் பொறுப்பு. அதனைக் கொண்டுவந்து எங்கள் தலையில் திணிக்க வேண்டாம் என்று கூறினோம். மழையோ, வெயிலோ, பனியோ நீங்கள் கேட்ட இறாத்தலைப் பறித்து நாங்கள் கொடுத்திருக்கின்றோம். எங்கள் வேலை அதுதான்.

உதாரணத்திற்கு இன்னொரு பிரச்சினை இருக்கிறது. 18 இறாத்தலுக்குப் பேர் என்று வைத்துக்கொள்ளுங்களன். (ஒரு நாள் சம்பளம்) எம்மவர்கள் என்ன நினைக்கிறார்கள், சரி ஓர் 22 இறாத்தலைப் பறித்துக்கொடுப்போம் என்றும் பறித்துக்கொடுக்கிறார்கள். அப்படியென்றால் நான்கு கிலோவிற்கு மேலதிகமாக 100 ரூபாய் கிடைக்கும். கிலோவிற்கு 25 ரூபாய் வீதம். ஆனால், கொழுந்தைப் பறித்துக்கொண்டு போனால், அங்குள்ள துரை (அதிகாரி) என்ன செய்கிறார், கூடைக்கும் தண்ணீர் பாரத்திற்கும் என்று நான்கு கிலோவைக் கழித்துவிடுகிறார். அதனால், மீண்டும் 18 கிலோவிற்கு வந்துவிடுகிறோம். மடுவத்தில் வைத்துக் கொழுந்தைப் பெற்றுக்கொண்டுவிட்டு, மாலையில் சொல்கிறார்கள், தொழிற்சாலையில் இறாத்தல் குறைகிறது என்று. அப்படிக்கூறி, மீண்டும் இரண்டு கிலோவை வெட்டுகிறார்கள். அப்படியென்றால் என்ன நடக்கும், அங்கே குறிப்பிடப்பட்டுள்ள 140 ரூபாய் கொடுப்பனவு இல்லாமற்போகும். (கொடுத்த பணிப்பொறுப்பை நிறைவேற்றினால் வழங்கப்படுவதாகச் சொல்லப்பட்ட தொகை)

அதனால்தான் நான் இம்முறை முடிவு செய்தேன், “எனக்கு அவ்வாறு வேண்டியதில்லை, அடிப்படைச் சம்பளத்தை மாத்திரம் தாருங்கள், மற்றைய கொடுப்பனவுகள் பற்றித் தோட்ட மட்டத்தில் உள்ள தலைவர்களுடன் பேசிக்கொள்ளுங்கள். எனக்கு அடிப்படைச் சம்பளம் ஆயிரம் ரூபாய் வேண்டும்!” என்ற கோரிக்கையை முன்வைத்துத்தான் இப்போது பேச்சு நடத்திக்கொண்டிருக்கின்றோம். அழுத்தங்கள் அதிகரிக்க அதிகரிக்க சம்பள உயர்வில் மேலே வந்துவிடலாம் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. அப்படி உயர்வை வழங்காதபட்சத்தில் ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்தித்து, சம்பளத்தை அதிகரித்துத் தாருங்கள், நாங்கள் அதற்குக் கைமாறாக வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கின்றோம் என்று கூறலாம் என நினைத்திருக்கின்றேன்.

அழுத்தம் என்று எதனைச் சொல்கிறீர்கள்?

இப்போது தோட்டங்களில் நடந்துகொண்டிருக்கின்றதே அழுத்தங்கள்! போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றதே..!

அதனை எந்தத் தலைமைத்துவமும் இன்றி மக்களாகத்தானே செய்வதாகச் சொல்லப்படுகிறது?

மக்களாகத்தான் செய்கிறார்கள். அதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். அதனைப் பற்றிப் பிரச்சினை இல்லை. இது போட்டாபோட்டி போடும் விடயமல்ல. இது மக்களின் நியாயமான சம்பள உயர்வுக் கோரிக்கை. நான் வாங்கிக் கொடுத்தேனா, நீ வாங்கிக் கொடுத்தாயா? என்று கிடையாது. மக்களுக்கு நன்மை போய்ச் சேர வேண்டும்.

நீங்கள் அழுத்தம் என்று சொல்வதை, அதாவது உங்களுக்கு எதிராக வெளியில் உள்ள தரப்புகளின் அழுத்தம் வலுவாக இருப்பதால்தான், சம்பள விடயத்தில் விடாப்பிடியாக இருக்கிறீர்கள் என்று சொல்கிறார்களே?

ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள், எனக்கு எதிராக வெளியில் இருந்தோ, உள்ளிருந்தோ அழுத்தம் கொடுப்பதால் எதுவும் நடக்காது! எனக்கு யாரும் அழுத்தம் கொடுக்கவும் முடியாது. ஐயா காலத்திலிருந்து அவர் எனக்குக் கற்றுத்தந்தது என்னவென்றால், மக்களுடைய விடயத்தில் நேர்மையாக, நியாயமாக நடக்க வேண்டும் என்பது.

சென்றமுறை ஒப்பந்தம் கைச்சாத்திட்டபோது அமைச்சர்கள் சேர்ந்து இந்த உடன்படிக்கையில் ஒரு சரத்தைச் சேர்த்ததாகவும் அதனால், உடன்படிக்கையைப் புதுப்பிக்காவிட்டாலும், கம்பனிகள் அதனைத் தொடர முடியும் என்று சொல்லப்படுகிறதே?

தொடரலாம் என்று அல்ல, அரசாங்கத்தின் ஆதரவு இருப்பதால், அவர்கள் அவ்வாறு செய்துகொண்டிருப்பார்கள். நாங்கள் தொழிற்சங்கம்தான். சென்ற முறை எவ்வாறு ஆறு மாத நிலுவையைப் பெற்றுக்கொண்டோம்? அரசாங்கம் தலையிடாதவரை தொழிற்சங்கத்தின் பலத்தை வைத்துச் சாதிக்க முடியும். கம்பனிகள் அரசாங்கத்துடன் ஒன்றாக இருப்பதால், அரசாங்கம் தலையிடும்போது அவர்களுக்குச் சாதகமாகிறது. இல்லையென்றால், மூன்று அமைச்சர்கள் வந்து பேச்சுவார்த்தையில் அமர்ந்தபோது ஒன்றரை வருட நிலுவையைக் கொடுத்தேதான் ஆகவேண்டும் எனச் சொல்லியிருக்கலாம் அல்லவா. ஏன் ஓர் இடைக்கால கொடுப்பனவைக் கொண்டு வந்தார்கள்?

அமைச்சர்கள் வந்து அந்தச் சரத்தைச் சேர்த்தார்கள் என்றால், ஏன் அதனைத் தடுக்கவில்லை, அந்த சமயத்தில் அஃது இயலாமற்போய்விட்டதா?

நீங்கள் ஒன்றை யோசிக்க வேண்டும். அரசாங்கமும் கம்பனியும் சேர்ந்தால் பலமாக இருக்குமா, இல்லையா? இந்தக் கூட்டு ஒப்பந்தத்திற்கு முன்னர் சம்பளச் சபை இருந்தது. ஐயா அதிலிருந்து விடுவித்து ஏன் இந்த உடன்படிக்கையைக் கொண்டு வந்தார் என்றால், அரசாங்கமும் கம்பனியும் சங்கங்கங்களும் இருக்கும்போது அவர்கள் இரு தரப்பினரும் ஒன்றுசேர்ந்துகொள்கிறார்கள். நாங்கள் சிறுபான்மையாகிவிடுகிறோம். உடன்படிக்கையில் தொழிலாளர்களுக்குத் தேவையான விடயங்களைப் பற்றிப் பேச முடியும்.

அடுத்த கட்டமாக என்ன செய்யப்போகிறீர்கள், பேச்சுவார்த்தையை யார் முன்னெடுப்பது?

அடுத்த கட்டத்தை எப்படி தொடங்குவது, என்ன செய்வது என்பதைப் பற்றி மூன்று சங்கங்களும் கூடிப்பேசி முடிவெடுக்கவிருக்கின்றோம்.

வடக்கு, கிழக்குக் கட்சிகளுடன் பேச்சு நடத்துவதாகச் சொன்னீர்களே?

நான் சொன்னதைப்போல, தேவை ஏற்பட்டால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஜேவிபி, ஈபிடிபி எனப் பல கட்சிகளிடம் ஆதரவு கேட்போம். எமக்குச் சம்பள உயர்வைப் பெறுவதற்குச் சற்று அழுத்தம் கொடுங்கள் என்று கேட்கவிருக்கின்றேன்.

பிரதமருடன் பேச்சை ஆரம்பித்திருக்கிறீர்கள் என்று தகவல் வந்திருக்கிறதே?

சம்பள உயர்வைப் பெற்றுத்தருமாறு பிரதமரிடம் சொல்லியிருக்கின்றேன்; பேச்சு நடத்தியிருக்கின்றேன், அவ்வளவுதான்!

தோட்டத் தொழிலாளர்கள் தீபாவளியை சந்தோசமாகக் கொண்டாடக்கூடிய நிலை வருமா?

அதற்குத்தான் முயற்சிக்கின்றோம். இல்லாவிட்டாலும், தீபாவளிக்குப் பத்தாயிரம் ரூபாய் முற்பணம் தருமாறு கேட்டிருக்கின்றேன். முதலாளிமார் சம்மேளனத்திற்கு இன்று (16) கடிதம் அனுப்பி வைத்திருக்கின்றேன். தொலைபேசியிலும் தொடர்புகொண்டிருக்கின்றோம். எண்ணாயிரம் போதாது, பத்தாயிரம் வேண்டும் எனக் கேட்டிருக்கின்றோம். நல்ல முடிவு வரும் என நம்புகின்றேன்.

சம்பள உயர்வு விடயத்தில் அரசாங்கத்திற்கும் கம்பனிகளுக்கும் தொடர்பே கிடையாது என்று சிலர் சொல்கிறார்களே, இதுபற்றி என்ன சொல்கிறீர்கள்?

யாரும் எதை வேண்டுமானாலும் சொல்லட்டும். எனது ஒரே குறிக்கோள், ஆயிரம் ரூபாய் அடிப்படைச் சம்பளம் வாங்க வேண்டும் என்பதே. அதற்கு நான் என்ன செய்ய வேண்டுமோ அவ்வளவையும் செய்வேன். அவர்கள் சொன்னதற்காக, இவர்கள் சொன்னதற்காக வாங்கிக்கொடுக்க வேண்டும் என்றெல்லாம் கிடையாது.

ஏனென்று சொன்னால், நடந்து முடிந்த மூன்று கட்டப் பேச்சுவார்த்தையிலும் 100 ரூபாய்க்கு மேல் தர முடியாது என்று சொல்லியிருக்கும்போது, ஆயிரம் ரூபாய் சாத்தியமா? என்று சிலர் சந்தேகம் வெளியிட்டிருக்கிறார்களே?

பேச்சுவார்த்தை என்றால் என்ன? நான் உங்களிடம் கேள்வி கேட்கின்றேன். பேச்சுவார்த்தை என்றால் என்ன? சொல்லுங்கள்! நாம் நினைக்கின்ற வேகத்தில் நடக்காவிட்டாலும், முதலில் 50 என்றார்கள், பின்னர் 75 என்றார்கள், அதற்குப் பிறகு 100 என்றார்கள். அப்படி உயரலாம் அல்லவா. முதலில் நம்பிக்கை வைப்போம்.

வாங்கிவிடலாம் என்ற நம்பிக்கை இருக்கின்றது. அதனை எப்படி வாங்குவது என்றுதான் பார்க்க வேண்டும்.

அரசியல் கைதிகள் விடயத்தில் வடக்கு, கிழக்குத் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் வரவு செலவுத்திட்டத்தின்போது அழுத்தம் கொடுக்கவிருப்பதாகச் சொல்கிறார்கள். நீங்கள் அவர்களுடன் சேர்ந்து அழுத்தம் கொடுப்பீர்களா?

தேவை ஏற்பட்டால் நிச்சயமாக அழுத்தம் கொடுப்போம். எல்லோரும் நம் தமிழ் இளைஞர்கள்தானே! நிச்சயம் ஆதரவு கொடுப்போம். நாம் மட்டுமல்ல, தமிழ் பேசும் எல்லோருமே ஆதரவு கொடுக்க வேண்டும்.

நேற்று (15) நடந்த சம்பளப் பேச்சுவார்த்தைக்குக் கருப்பு ஆடை அணிந்திருந்தீர்களே?

இன்றைக்கும்தான் அணிந்திருக்கின்றேன்!

இல்லை, நேற்று (15) நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடையும் என்று நினைத்து அணிந்தீர்களா?

அப்படியில்லை. நேற்றோடு உடன்படிக்கை காலாவதியாகிவிட்டது. அதற்கு எமது எதிர்ப்பைக் காட்டவும் கூடிய விரைவில் சம்பள அதிகரிப்பை வழங்குமாறு வலியுறுத்தவும்தான் கருப்பு அணிந்து சென்றோம். இன்று நான் அணிந்திருக்கின்றேன். அதைப் பார்த்துவிட்டு இன்னும்கொஞ்சப்பேர் அணிவார்கள். அதனைத்தொடர்ந்து மேலும் சிலர் அணிவார்கள். சிலவேளை, தோட்டத் துரைமார் அணிந்தாலும் அணிவார்கள்.

பிரதேச சபை உறுப்பினர்களைக் கருப்பு ஆடை அணியுமாறு சொன்னீர்கள் என்று தெரியவருகிறதே?

என் குடும்பத்தில் நான் என்ன செய்தாலும் என் குடும்பமும் செய்யும். நான் செய்வதைத்தானே என் மகனும் செய்வார்! நாளை நான் வீதியில் நடந்துசென்றால், என் மகனும் பின்தொடர்வார்தானே! அதுபோல், நான் செய்வதை என் குடும்பமும் செய்யும். காங்கிரஸ்தான் என் குடும்பம்.

ஒவ்வொரு தடவையும் இந்த ஒப்பந்தம் பல மாதங்கள் கடந்த பின்னர்தான் புதுப்பிக்கப்படுகிறது. காலாவதியாகும் திகதி நன்றாகவே தெரிந்ததுதானே, அப்படியென்றால், ஏன் முன்கூட்டியே பேச்சுவார்த்தை தொடங்கப்படுவதில்லை?

தொடங்கலாம். தேயிலை விலை எவ்வாறு இருக்கிறது என்பதைப் பார்த்துத்தான் பேச்சை ஆரம்பிக்க வேண்டும். அதுதான் சிறந்தது. அதேநேரம், உங்களுக்குத் தெரியும், இந்த மூன்று வருடம்தான் இப்படியொரு சிக்கல் வந்தது. அதற்கு முன்பெல்லாம், மிகச் சுமுகமாகப் பேசி, நிலுவைச் சம்பளத்துடன் வாங்கியிருக்கின்றோமா இல்லையா? இதிலிருந்து எல்லோருக்கும் புரியும், இதில் அரசியல் பின்னணி இருக்கிறது என்று. யார் என்ன தடங்கலை ஏற்படுத்தினாலும், காங்கிரஸ், எல்ஜேஈடபிள்யூ, ஜேபிரியூசி ஆகிய மூன்று சங்கங்களுக்கும் சம்பள அதிகரிப்பை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற கடப்பாடு இருக்கிறது. அதனை நோக்காகக் கொண்டே எமது செயற்பாட்டை முன்னெடுத்து வருகிறோம்.

நீங்கள் அரசாங்கத்தில் அமைச்சராக இல்லாமல் இருப்பது, உங்கள் செயற்பாட்டில், சம்பள உயர்வு விடயத்திலும் சரி அல்லது வேறு எந்த விடயத்திலும் சரி, ஏதோ ஒரு விதத்தில் பலவீனத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று கருதுகிறீர்களா?

ஏன் அப்படி நினைப்பதைவிட இப்படி நினைப்போமே, அரசாங்கமும் கம்பனியும் ஒன்று சேர்ந்து பலமாக இருக்கிறார்கள் என்று நினைப்போமே! நான் ஏன் Negative ஆக (எதிர்மறையாக) நினைக்க வேண்டும்? நான் Positive ஆக (நேர்மறையாக) மற்றைய வலமாகப் பார்க்கின்றேன். முன்பு நாங்கள் இருக்கும்போது அரசாங்கம் கம்பனிகளுக்கு ஆதரவு வழங்கவில்லை. தற்போது கம்பனியும் அரசாங்கமும் ஒன்றாக இருக்கின்றது. அப்படி பாருங்களன்!

ஏன் அந்த நிலை வந்தது என்றுதான் கேட்கின்றேன்!?

நான் ஏன் என்னை நெகட்டிவ்வாக எண்ண வேண்டும்? எனக்கு மக்கள் இருக்கிறார்கள், எனக்குப் பலம் இருக்கின்றது. அமைச்சராக இருந்தால்தான் பலம் என்றில்லை. நான் சமூக ரீதியாகப் பணியாற்றுகிறேன். சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுத்தால், இந்த மூன்று சங்ககக்காரர்களுக்கு மட்டும் அல்லவே, தோட்டத் தொழிலாளர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ, எல்லோரும் நன்மையடைவார்கள். அதில் இனம், மதம், நிறம், கட்சி என்றெல்லாம் கிடையாது.

சம்பள விடயத்திற்குப் புறம்பாக ஒரு விடயம். தற்போது மலையகத்தில் வீடமைப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இதனை காங்கிரஸ் வாய்ப்பிருந்தும் செய்யவில்லையே!அவர்கள் செய்திருக்கலாமே என்ற ஒரு விமர்சனம் இருக்கிறது. இதற்கு என்ன சொல்கிறீர்கள்?

காங்கிரஸ், சோனியா காந்தியைச் சந்தித்து நான்காயிரம் வீடுகளை வாங்கி வந்ததால்தான் இன்று வீடமைப்பு நடந்துகொண்டிருக்கின்றது. அதற்கு முன்னர் ‘ட்ரஸ்ற்’ (பெருந்தோட்ட அபிவிருத்தி நிதியம்) மூலம் சுமார் முப்பதினாயிரம் வீடுகள் கட்டியிருக்கின்றோம். நான் போய் எதனையும் திறந்து வைக்காததால், பிரசாரம் இல்லை. அந்தப் பகுதியில் யார் இருக்கிறார்களோ, நீங்கள் திறவுங்கள் என்று அவர்களிடம் விட்டுவிடுவேன். எங்களைப் பொறுத்தவரை சேவைதான் முக்கியம். பெயர் போட வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

வீடமைப்பைப் பெற்றுக்கொடுத்தது காங்கிரஸ் என்கிறீர்கள்?

காங்கிரஸ்தான் பெற்றுக்கொடுத்தது. யாரும் இல்லை என்று சொல்ல முடியுமா? சோனியா காந்தி காலத்தில் நாங்கள்தான் அவரைச் சந்தித்துப் பேசி, இங்கு முன்னாள் அமைச்சர் பசிலுடனும் பேச்சுவார்த்தை நடத்தி நாலாயிரம் வீடுகளைப் பெற்றுக்கொண்டோம். பிரதமர் மோடி நோர்வூட்டுக்கு வந்தபோது இன்னும் பத்தாயிரம் வீடுகளைத் தருவதாகச் சொல்லியிருக்கிறார். அந்த வைபவத்தில் எனக்குக் கதிரைகூடப் போடப்பட்டிருக்கவில்லை. உயர்ஸ்தானிகர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அதில் நான் கலந்துகொண்டேன். ஆனால், மோடி அவர்கள் ஐயாவின் பெயரைச் சொல்லிவிட்டுச் சென்றார். எமக்குப் பெருமையாக இருந்தது.

சில இடங்களில் வீடமைப்புக்குக் காணியைப் பெறுவதில் காங்கிரஸ் தடையாக செயற்பட்டதாகச் சொல்லப்பட்டதே?

எங்காவது நான் செய்ததாகச் சொல்லுங்கள், பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன். என் மக்களுக்குக் கிடைப்பதை நான் ஏன் தடுக்கப்போகிறேன். சொல்பவர்கள் ஆயிரத்தெட்டுக் கதைகள் சொல்லலாம். என் மக்களுக்குக் கிடைப்பதை நான் ஏன் தடுக்கப்போகிறேன்?

 

Comments