கொலை குற்றச்சாட்டும் அரசியல் சதிவலையூம் | தினகரன் வாரமஞ்சரி

கொலை குற்றச்சாட்டும் அரசியல் சதிவலையூம்

அரசியலும் சதியும் ஒட்டிப் பிறந்த உறவுகளாகவே அன்று தொட்டு இன்று வரை உலகில் இருந்து வருகின்றன. மக்களின் விருப்பத்தைப் பெற்று அரசியலில் உச்சத்தை எட்ட முடியாத அரசியல் வங்குரோத்துகாரர்களே மற்றவரைக் கொன்று அந்த வெற்றிடத்திற்கு தம்மைக் கொண்டு வந்துவிட வேண்டும் என நினைப்பதும் சூழ்ச்சி செய்வதுமே இந்த அரசியல் சதியின் இயல்பாகும். இது நம் நாட்டு அரசியலுக்கு மாத்திரமன்றி உலக அரசியலுக்கே பொதுவானதோர் தன்மையாகும். முன்னேற்றமடைந்த முதலாம் உலகம் என அழைக்கப்படும் அமெரிக்காவுக்கும் புத்தபகவான் பிறந்த பாரத தேசத்திற்கும் பின்தங்கிய மூன்றாம் உலக நாடு என அழைக்கப்படும் இலங்கைக்கும் அது விதிவிலக்கல்ல.

ஐக்கிய அமெரிக்காவின் 35வது ஜனாதிபதியாகவிருந்த ஜோன் எப். கென்னடியை 1963 ஆம் ஆண்டில் அந்நாட்டின் டலஸ் நகரத்தில் வைத்து லீ ஹாவி ஒஸ்வேல்ட் எனும் துப்பாக்கிதாரி சுட்டுக்கொன்றமையும் அரசியல் சதியே ஆகும். ஆயினும் அதன் சூத்திரதாரிகள் யார் என்பதை உலகறிய செய்ய முடியாத விதத்திலேயே ஒரு வருடமாக நீடித்த கென்னடி கொலை வழக்கு விசாரணை முடிவுக்கு வந்தது. எந்தவித பின்புலமும் பிறரின் தூண்டுதலும் இன்றி சுயவிருப்பத்தின் பேரிலேயே ஒஸ்வேல்ட் கென்னடியை கொலை செய்தான் என்றே வரலாற்றில் எழுதப்பட்டிருக்கின்றது.

பாரத நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்திய பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்தா அகிம்சை வழி போராட்டத்தை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்து அப்போராட்டத்தைக் கொண்டு நடத்திய மகாத்மா காந்தியை கோட்சே கொன்றதும் சதியின் விளைவே அன்றி விதியின் விளையாட்டல்ல. ஐந்து தடவைகள் மேற்கொண்ட கொலை முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் ஆறாவது முயற்சியே மகாத்மா காந்தியை இவ்வுலகிலிருந்து அப்புறப்படுத்தியது.

மகாத்மா காந்தி கொலையால் அதிர்ந்து போன பாரதத்தை மென்மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையிலேயே அடுத்தடுத்து வந்த காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்களின் படுகொலைகள் அமைந்தன. சுதந்திர இந்தியாவின் மூன்றாவது பிரதம மந்திரியாக இருந்த இந்திரா காந்தி அம்மையார் 1984 ஆம் ஆண்டு அவரது சொந்த இல்லத்திலேயே வைத்து சத்வந்த் சிங், லீன்ட் சிங் ஆகிய அவரது மெய்ப்பாதுகாவலர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். சீக்கியர்களின் மிக முக்கிய வணக்கஸ்தலமாகிய பொற்கோவில் மீதான இந்திய இராணுவத்தின் தாக்குதலுக்கு உத்தரவு கொடுத்தமையே இந்திரா காந்தி கொலையின் சதிக்கான காரணம் எனக் கூறப்படுகின்றது.

இந்திரா காந்தி அம்மையாரின் ஆட்சி காலத்தில் பாரத தேசத்தை தளமாகக் கொண்டு தம்மை வளர்த்துக் கொண்ட விடுதலைப் புலிகளே இந்திரா காந்தியின் அரசியல் வாரிசாகிய ராஜீவ் காந்தியை கொலை செய்யும் சதியினைத் திட்டமிட்டு நடத்தியது என்பது இன்று வரலாற்றில் எழுதப்பட்ட விடயமாக இருக்கின்றது. இலங்கை விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரச படைகளுக்கும் இடையில் நீடித்துவந்த ஆயுதப் போராட்டத்தை முடித்து வைக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டதன் விளைவாகவே ராஜீவ் காந்திக்கு தனது உயிரை அக்காலத்தில் பலிகொடுக்க நேர்ந்தது. இவ்வாறு இலங்கையில் உள்ளக ஆயுத மோதலொன்று ஏற்படுவதற்கு அடித்தளத்தை அமைத்துக் கொடுத்த முக்கியதோர் காரணம் சிங்கள தமிழ் இன முறுகலே ஆகும். இந்த இன முறுகலை ஊக்குவித்து வளர்த்தெடுப்பதற்கு 24 மணித்தியாலயத்தில் சிங்களத்தை அரசகரும மொழியாக்கியமையும் ஒரு காரணமாகும். சிங்கள மக்களின் பேராதரவைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தனிச் சிங்கள மொழிச் சட்டத்தைக் கொண்டு வந்த எஸ்.டபிளியு.ஆர்.டி. பண்டாரநாயக்கவே அதனால் எதிர்காலத்தில் ஏற்படப் போகும் அனர்த்தங்களை உணர்ந்து தமிழ் தலைவர்களிடம் சமரசம் செய்ய எடுத்த முயற்சியை பொறுக்காத சிங்கள இனவாத சூழ்ச்சியின் கொலை முயற்சியே தல்தூவே சோமாராம தேரர் தனது காவியுடையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கி வாயிலாக வெளிவந்தது. இலங்கையில் அவ்வாறு கொலை செய்யப்பட்ட தேசிய மட்டத்திலான முதலாவது அரசியல் தலைவர் எஸ்.டபிளியு.ஆர்.டி. பண்டாரநாயக்கவே ஆவார்.

அவரது வெற்றிடத்திற்கு போட்டியின்றி தெரிவான சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்களை கொலை செய்வதற்கான முயற்சி அச்சமயம் தென்னிலங்கையின் அரசியலுக்கு பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தி வந்த ஜே.வி.பியினரால் முன்னெடுக்கப்பட்ட போதிலும் 70களில் மேற்கொள்ளப்பட்ட அக்கொலை முயற்சி கைகூடாது போய்விட்டது. அந்த தாயின் பாதையில் சென்ற மகளாகிய சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் தற்கொலை குண்டுதாரியின் தாக்குதலுக்கு இலக்கான போதிலும் ஒரு கண்ணை இழந்த நிலையில் தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் பாக்கியம் அவருக்கு கிடைத்தது. 1994 ஆம் ஆண்டு வடபுல வாழ் தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று இந்த நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக வரலாறு பதித்த சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கு அவருக்கு பேராதரவை வழங்கிய தமிழ் தரப்பே இக்கொலை முயற்சியை மேற்கொண்டதென்றே வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நம் நாட்டு அரசியல் வரலாற்றில் அரசியல் பின்னணியற்ற மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்த ரணசிங்க பிரேமதாச தனது விடாமுயற்சியினால் நாட்டின் அரச தலைவர் என்ற சிகரத்தை எட்டியபோதிலும் அவரின் நிழலிலேயே இருந்துகொண்டு சதித் திட்டத்தினை தீட்டியவர்களின் சதி வலையில் சிக்கிய அவர் சதியாளர்களால் கொலை செய்யப்பட்ட இந்நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட முதலாவது ஜனாதிபதி ஆவார். ஒரே சமயத்தில் தென்னிலங்கை சமூகத்தின் மத்தியிலும் தமிழ் ஆயுதக் குழுக்கள் மத்தியிலும் அதிருப்திக்கு ஆளாகியிருந்த ரணசிங்க பிரேமதாச கொலை செய்யப்பட்ட தருணத்தில் அதனை நியாயப்படுத்தும் அளவில் இவ்விரு சமூகங்களும் அவர் மீதான கடும் சினத்தையும் வெறுப்பையும் கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும். அந்த சூழ்நிலையே அவரின் கொலையை நியாயப்படுத்துவதற்கான வழியையும் வகுத்துக் கொடுத்தது.

இத்தகைய கறைபடிந்த நீண்ட உலக, உள்நாட்டு அரசியல் தலைமைகள் மீதான கொலை முயற்சிகளும் சதி முயற்சிகளும் இருந்துவரும் பின்னணியிலேயே இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை கொலை செய்வதற்கான சதித் திட்டம் தீட்டப்பட்டு வருகின்றது என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் வெளிவந்திருக்கின்றது. அதுவும் அரச தலைவனையே காக்க வேண்டிய பாதுகாப்பு துறையின் சில உயர் அதிகாரிகளே இந்த கொலை முயற்சியின் சூத்திரதாரிகளாகும் என்ற தகவல் அதிர்ச்சியைத் தந்திருக்கின்றது.

இலங்கை பொலிஸாருக்கு இரகசிய தகவல்களை பெற்றுக்கொடுத்து வந்த நாமல் குமார எனும் நபரே பிரதிப் பொலிஸ்மா அதிபரும் முன்னாள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு பிரதானியுமாகிய நாலக்க டி.சில்வாவே தன்னோடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்வதற்கான திட்டத்தை முன்வைத்ததாக குற்றஞ்சாட்டியுள்ளதுடன், அதற்கு ஆதாரமாக தனக்கும் நாலக்க டி சில்வாவுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடலின் ஒலிநாடாவையும் மேலதிக விசாரணைகளுக்காக பெற்றுக் கொடுத்திருக்கின்றார்.

இதற்கிடையே பொலிஸ் ஆயுதக் களஞ்சியத்தில் வைக்கப்பட்டிருந்த இரு எல்.எம்.ஜீ. ரக துப்பாக்கிகளை சில மாதங்களுக்கு முன்னதாக பொலிஸ் ஆயுதக் களஞ்சியத்திலிருந்து நாலக்க டி சில்வா தமது பிரிவின் செயற்பாடுகளுக்கென பெற்றுக் கொண்டிருக்கின்றார் என்ற செய்தி வெளியாகியிருக்கின்றது. பொலிஸ்மா அதிபரின் அனுமதியின்றி அவ்வாறான துப்பாக்கிகளை பெற முடியாது என்ற நிலைமை மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியை கொலை செய்வதற்கான திட்டம் திரைமறைவில் நடந்து வந்திருக்கின்றதா என்ற கேள்வியை எம்முன் எழுப்புகின்றது.

சிரேஷ்ட வழக்கறிஞர்களும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் ஆலோசகர்களுமாகிய சரத் கோங்காகே மற்றும் ஷிரால் லக்திலக்க ஆகியோர் நடத்திய ஊடக சந்திப்பில் நாட்டின் தலைவரை படுகொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறப்படும் சதித்திட்டத்தை எவரும் குறைத்து மதிப்பிட முடியாது என்றும் பொலிஸ் விசாரணை மீது தமக்கு நம்பிக்கை இருந்தபோதிலும் அரசியல் மற்றும் சமூக நோக்கங்களுக்காக இந்த சதி முயற்சி விவகாரத்தை சிலர் மூடி மறைக்க முயல்வதாகவும் அவர்கள் கூறியிருக்கின்றார்கள். ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரை படுகொலை செய்வதற்கான சதித்திட்டம் பற்றிய தகவல்கள் வெளிவந்த போதிலும் ஆரம்பம் முதலே அது பற்றிய போதிய கவனம் செலுத்தப்படவில்லை எனவும் இது ஒரு அரசியல் நாடகம், போலியான குற்றச்சாட்டு எனக் கூறி இதனைக் குறைத்து மதிப்பிடுவதையோ, மூடி மறைக்க முயற்சிப்பதையோ ஏற்றுக்கொள்ள முடியாது என அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

நாட்டில் பயங்கரவாதம் அற்ற சுமூகமான சூழல் நிலவும் பின்னணியில் ஜனாதிபதியை கொல்வதற்கு தீட்டப்பட்டுள்ள சதித்திட்டத்தின் பின்னால் அரசியல் காரணம் உள்ளதா அல்லது வேறு காரணங்கள் உள்ளதா என்பது விசாரணைகள் மூலம் வெளிப்படுத்தப்பட வேண்டும் எனவும் இச் சதித்திட்டத்தில் சம்பந்தப்பட்டவர் என்ற சந்தேகத்தின் பேரில் இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்ற போதிலும் அந்நபருக்கும் இந்திய புலனாய்வு பிரிவுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாகவோ இச்சதியின் பின்னால் இந்திய புலனாய்வு பிரிவு இருப்பதாகவோ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறவில்லை எனவும் அது அமைச்சரவையின் சிலரால் பிழையான முறையில் ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்டிருக்கலாம் என்றும் ஜனாதிபதியின் ஆலோசகர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

Comments