விக்கினேஸ்வரன் பிரிந்துசெல்வதை ஆதரிக்கமாட்டோம்! | தினகரன் வாரமஞ்சரி

விக்கினேஸ்வரன் பிரிந்துசெல்வதை ஆதரிக்கமாட்டோம்!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுதரப்புடன் பல கட்டங்களில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது. தற்போது ஈடுபட்டுக் கொண்டுமிருக்கின்றது. அவர்களது விடுதலை தொடர்பில் இன்றைய நிலை என்ன?

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து நாங்கள் கடந்த வெள்ளியன்றும் ஜனாதிபதியைச் சந்தித்தோம். மீண்டும் எதிர்வரும் 17 ஆம் திகதி இதுதொடர்பில் ஜனாதிபதியுடனும், பிரதமருடனும், ஏனைய முக்கிய பிரதிநிதிகளுடனும் சந்திக்கவிருக்கின்றோம். அன்றைய சந்திப்பில் கைதிகளின் விடுதலை தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்று ஜனாதிபதி எங்களுக்கு உறுதியளித்திருக்கின்றார்.

பாதுகாப்புப் படையினருக்கும், தமிழ் அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பினை வழங்குவது தொடர்பில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க முன்வைத்த யோசனையை கூட்டமைப்பு உடனடியாக மறுதலித்து விட்டதாகவும் அந்தப்புள்ளியில் இருந்து இப் பேச்சுவார்தைகளை ஆரம்பித்திருக்க வேண்டும் என்றும் அமைச்சர் மனோ கணேசன் கூறியிருக்கிறாரே?

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளியுங்கள் என்றுதானே நாங்களும் இவ்வளவு காலமாகச் சொல்லி வருகின்றோம்! இப்போது போராடிவரும் கைதிகளின் விடுதலைக்காக நாங்கள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோருடன்தான் பேசலாம். அவ்வாறான பேச்சுவார்த்தைகளின்போது எஞ்சியிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு அல்லது புனர்வாழ்வளித்து விடுவிக்குமாறுதான் வலியுறுத்தி வந்திருக்கின்றோம். அமைச்சர் சம்பிக்க பொது மன்னிப்பின் அடிப்படையில் கைதிகளை விடுவிக்குமாறு மட்டும் கோரவில்லை மாறாக அவர் பொதுமன்னிப்பின் அடிப்படையில் இராணுவத்தினரையும் போர்க்குற்றங்களில் இருந்து விடுவிப்பதையே வலியுறுத்துகின்றார். அதனைத்தான் தமிழ்க் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளவில்லை. என்றைக்கும் ஏற்றுக்கொள்ளாது. தமிழ் அரசியல் கைதிகளையும், இராணுவத்தினரையும் ஒரே தராசில் வைத்து பொதுமன்னிப்பு வழங்க இயலாது. காணாமல் போன தங்களது உறவுகளை மீட்டுத் தருமாறு கோரும் எங்கள் மக்களின் போராட்டங்கள் தொடரும் நிலையில் அதற்குப் பொறுப்பானவர்களை எந்தவித தண்டனையும் இன்றி பொதுமன்னிப்பில் விடுதலை செய்ய இயலாது. தமிழ் அரசியல் கைதிகளில் சிலருக்கு நீதிமன்றில் விசாரணைகள் நடைபெறுகின்றன. சிலர் விசாரணைகள் ஏதுமின்றி பல வருடங்களாக சிறையில் இருக்கின்றனர். அவ்வாறானவர்களுக்கு பொதுமன்னிப்பினை வழங்குங்கள் என்று கேட்பது நியாயமானதுதானே! எல்லாக் குற்றங்களையும் புரிந்த இராணுவத்தினர், சுதந்திரமாக நடமாடித்திரிகின்றனர். ஆனால் எங்கள் அரசியல் கைதிகளோ விசாரணை கூட இன்றி பல வருடங்களாக சிறைத் தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம், வடக்கில் அதிகரித்துவரும் இராணுவப் பிரசன்னம், காணிவிடுவிப்பு என்பனவற்றில் அரசுகாட்டிவரும் அசமந்தப் போக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் வங்குரோத்து நிலைமையையே காட்டுவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. எதிர்க்கட்சியைப் போன்றில்லாமல் கூட்டமைப்பு ஆளும் கட்சியைப்போன்றே செயற்படுவதாகவே பலர் விமர்சிக்கின்றார்களே?

முதலில் பலர் அவ்வாறு விமர்சிக்கின்றார்கள் என்பதே தவறானது. தமிழ்க் கூட்டமைப்பைப் பிடிக்காத சிலர் முன்வைக்கும் விசமத்தனமான பிரசாரங்கள் அவை. அவ்வாறானவர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவானவர்கள். ஆனால் பரபரப்பை விரும்பும் ஊடகங்களால் அவ்வாறன கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. அவை உண்மையில் கூட்டமைப்பை பலவீனப்படுத்த விரும்புவோரின் கருத்துக்கள். மக்களின் உண்மையான கருத்து அதுவல்ல.

இதுவரை தமிழ் அரசியல் கைதிகள் எவரும் விடுதலை செய்யப்படாமல் இல்லை. இவர்கள் எல்லோரும் கூட்டமைப்பு அரசுக்கு வழங்கிய அழுத்தத்தாலும், அரசுடனான தொடர் பேச்சுவார்த்தைகளாலும் தான் விடுவிக்கப்பட்டனர். எங்களது அழுத்தங்களால் தான் இராணுவத்தின் வசமிருந்த பல காணிகள் விடுவிக்கப்பட்டன. காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் ஒன்று அமைக்கப்பட்டு, அதன்மூலம் காணாமல்போனவர்களின் உறவினர்களுக்கு நியாயமான தீர்வு கிட்டவேண்டும் என்று நாங்கள் போராடுகின்றோம். போரால் பாதிக்கபட்டவர்களுக்கான நஷ்ட ஈடுகளைப் பெற்றுக்கொடுப்பதில் எங்களது பங்களிப்பு அளப்பரியது. தற்போது வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகள், விடுவிக்கப்பட்ட அரசியல் கைதிகள், என தமிழர் அரசியல் பரப்பில் ஏற்பட்ட முன்னேற்றகரமான நடவடிக்கைகைள் யாவும் கூட்டமைப்பு அரசுடனும் இங்கு வரும் வெளிநாடுப் பிரதிநிதிகளுடனும் நடத்திய பேச்சு வார்த்தைகள், அரசுக்கு கொடுத்த அழுத்தங்களின் விளைவே. கூட்டமைப்பின் அணுகுமுறைகள் பற்றிய சரியான புரிதல்கள் இல்லாதவர்களின் விமர்சனங்கள் பற்றிக் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. ஏனெனில், கூட்டமைப்பின் இறுதி இலக்கானது புதியதொரு அரசியலமைப்பின் மூலமான தமிழர்களின் அபிலாஷைகளுக்கான தீர்வு என்பதாகும். அவ்வாறானதொரு தீர்வு இந்த அரசின் காலத்திலேயே சாத்தியமாகும் என்ற எதிர்பார்ப்பிலும் நம்பிகையிலும்தான் தமிழ் மக்கள் மூன்று வருடங்களுக்கு முன்னர் வாக்களித்து இந்த அரசைக் கொண்டு வந்தனர். அந்த நம்பிக்கை இன்னும் எம்மிடம் உள்ளது. அதனாலேயே முழுமையாக எதிர்நிலைக்குச் செல்லாமல், அரசுக்கான அழுத்தத்தைக் கொடுக்கின்றோம். எல்லோரும் நினைப்பதுபோல அரசுக்கெதிரான நிலைப்பாட்டை நாங்கள் எடுத்துவிட்டால், எமக்கான தீர்வைத் தராதிருப்பதற்கு அரசு அதனை ஒரு சாட்டாக எடுத்துக் கொள்ளும். எல்லாவற்றையும் அவதானித்தே நாங்கள், எங்கள் நடவடிக்கைகைகளைத் திட்டமிட வேண்டியிருக்கிறது. புதிய அரசியலமைப்பினூடாக எங்கள் மக்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு கிட்டும் என்ற நம்பிக்கையில் தான் நாங்கள் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். அந்த நம்பிக்கை என்று பிழைக்கின்றதோ அன்று ஆதரவை விலக்கிக் கொள்ளவும் நாங்கள் தயங்க மாட்டோம். புதிய அரசியலமைப்புருவாக்கம் தொடர்பில் அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை பாராளுமன்றில் சமர்ப்பிக்கும். அதன் பின்னர் அரசுக்கான ஆதரவை தொடர்வதா இல்லையா என்பது பற்றி நாங்கள் சிந்திக்கலாம். அரசியலமைப்புருவாக்கப் பணிகள் குழம்பக்கூடாதென்பதற்காகவே நாங்கள் அரசுக்கெதிரான நிலைப்பாட்டை எடுக்காமல் பொறுமை காத்தோம். தற்போதும் பொறுமை காக்கின்றோம். ஆனால் அதனை நாங்கள் அரசுக்கு எந்தவிதமான அழுத்தத்தையும் கொடுக்காமல் இருக்கின்றோம் என்று அர்த்தப்படுத்தக்கூடாது. விரைவில் அடுத்த வரவு செலவுத்திட்டம் முன்வைக்கப்பட விருக்கின்றது, அரசுக்கான அழுத்தத்தை பிரயோகிக்க எமக்குக் கிடைத்த இன்னுமொரு சந்தர்ப்பம் அது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களின் போராட்டத்துக்கு என்றைக்குமே மதிப்பளிக்கின்றது. அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில், காணி விடுவிப்பு தொடர்பில் என தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நாங்கள் அயராமல் முயற்சித்துக்கொண்டுதான் இருக்கின்றோம். வியாழனன்றும் மகாவலி 'எல்' வலய குடியேற்றத்திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாராளுமன்றில் நாங்கள் விவாதமொன்றைச் செய்தோம். காணாமல்போனோர் தொடர்பில் விவாதித்திருக்கின்றோம். அரசியல்கைதிகள் விடயத்தில் கூட ஜனாதிபதியின் முன்னிலையில் விவாதித்திருக்கின்றேன். ஆனால் எங்களுக்கெதிரான செய்திகளுக்கு முக்கியத்துவமளிக்கப்படுமளவுக்கு நாங்கள் எங்கள் மக்களுக்காக ஆற்றும் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை.

அண்மையில் மட்டக்களப்பில் இடம்பெற்ற ரெலோவின் தேசிய மாநாட்டிலும் அரசியலமைப்பு இவ்வருட இறுதிக்குள் உருப்பெறாவிட்டால் அரசுக்கான ஆதரவை விலக்குவதென்ற தீர்மானம் நிறைவேற்றபட்டிருக்கின்றதே?

ஆமாம். அன்றைய தினம் நிறைவேற்றபட்ட தீர்மானங்களுள் முக்கியமானது இது. புதிய அரசியலமைப்பு டிசம்பர் மாதத்துக்குள் உருவாக்கப்பட்ட வேண்டும். அல்லாவிட்டால் அரசுக்கான ஆதரவு குறித்து மாற்றான ஒரு முடிவை எடுக்கும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டு விடுவோம் என்பதுதான் அது. ஆனால் அது எங்களது, ரெலோவின் சார்பாக எடுக்கப்பட்ட தீர்மானம். கூட்டமைப்பும் அவ்வாறானதொரு தீர்மானத்தினை எடுப்பதற்கு நாங்கள் அழுத்தம் கொடுப்போம். அது கட்சியின் முடிவாக இருந்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அந்த முடிவுக்கு இணங்கவேண்டும் என நாங்கள் வலியுறுத்துவோம். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளும் அந்த நிலைப்பாட்டிலேயே இருப்பதாகவே நானும் எண்ணுகின்றேன்.

வட மாகாண சபையின் ஆயுட்காலம் முடிவுற இன்னமும் சில நாட்களே உள்ளன. இந்நிலையில் முதலமைச்சர் சீ.வி விக்கினேஸ்வரன் கூட்டமைப்புத் தவிர்ந்த வேறொரு அணிக்கு எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல்களில் தலைமை தாங்கலாம் என்ற பேச்சடிபடுகின்றது. கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக சீ.வி. விக்கினேஸ்வரனே நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி வந்த ரெலோ இன்னமும் அதே நிலைப்பாட்டிலேயா இருக்கின்றது?

நிச்சயமாக, நாங்கள் எப்போதும் ஒற்றுமையையே வலியுறுத்தி வந்திருக்கின்றோம். ஏனெனில் நாங்கள் பிரிந்திருந்தால் அது எதிரிக்கே வசதியாகி விடும். நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையில் பார்த்துக்கொண்டிருந்தால் ஐக்கிய தேசியக் கட்சியும், சுதந்திரக்கட்சியும் வடக்கில் நன்கு காலூன்றி வலுப்பெற வாய்ப்பாகிவிடும். இதில் எல்லோரும் தான் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். விக்கினேஸ்வரனும் யோசிக்க வேண்டும். சம்பந்தன் ஐயாவும் யோசிக்க வேண்டும். கூட்டமைப்பும் யோசிக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு பிரிந்து ஆளாளுக்கு ஒவ்வோர் திசையில் நிற்போம் என்றால் தென்னிலங்கைக் கட்சிகள் அங்கு காலூன்றுவதற்கான வாய்ப்பை நாங்களே அவர்களிடம் தாரை வார்க்கின்றோம் என்றுதானே அர்த்தம்!

வாசுகி சிவகுமார்

[email protected]

Comments