இலங்கையில் ஏன் வெற்றிபெறவில்லை? | தினகரன் வாரமஞ்சரி

இலங்கையில் ஏன் வெற்றிபெறவில்லை?

கலாநிதி எம். கணேசமூர்த்தி, 

 பொருளியல்துறை, 

 கொழும்புப் பல்கலைக்கழகம்.

எந்தவொரு நாடும் அடைந்துகொள்ள எதிர்பார்க்கும் பேரினப் பொருளாதாரக் குறிக்கோள்களை பின்வருமாறு அடையாளப்படுத்தலாம்.

துரிதமானதும் உயர் மட்டத்திலானதுமான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தல், தொழில்வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் நிறைதொழில் மட்டத்தை அடைதல், விலை மட்டங்களை உறுதியாகப் பேணுவதன் ஊடாக பொருளாதார உறுதிப்பாட்டை ஏற்படுத்தல், சென்மதி நிறுவையில் சாதகமான ஒரு நிலைமையை ஏற்படுத்தல் என்பனவே பிரதான பேரினப் பொருளாதாரக் குறிக்கோள்களாகும்.

இக்குறிக்கோள்களை அடைவதில் தனியார்துறையினரின் பங்களிப்பு மிக அத்தியாவசியமானதாக அடையாளம் காணப்பட்ட போதும் பொருளாதாரத்தை மேற்படி இலக்குகளை நோக்கி இயக்கிச் செல்லத் தேவையான 'கடிவாளம்' அரசாங்கத்தின் கையில் இருக்க வேண்டும் என்பதே நடைமுறையில் உள்ள விதிமுறையாகும். தனியார் துறையை முதன்மையாகக் கொண்ட சந்தைப் பொருளாதாரத்தை தனது நிர்வாக நடைமுறைகள் ஊடாகவும் கொள்கைக் கட்டுப்பாடுகள் ஊடாகவும் எதிர்பார்க்கப்படும் பேரினப் பொருளாதார இலக்குகளை நோக்கி நகர்த்தக்கூடிய வல்லமை அரசாங்கத் துறைக்கே உள்ளது.

அரசாங்கம் பிரதானமாக பணக்கொள்கை, இறைக்கொள்கை, வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை, நாணய மாற்றுவீதக் கொள்கை, வருமானம் மற்றும் வேலைவாய்ப்புக் கொள்கை போன்ற பல்வேறு கொள்கைகளைக் கையாள்வதன் மூலம் பேரினப் பொருளாதார குறிக்கோள்களை அடைய எத்தனிக்கும். குறிப்பாக அரசாங்கம் தனது வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக சந்தைப் பொருளாதாரத்தில் தலையீடுகளை மேற்கொள்ளும்.

ஒரு அரசாங்கம் தனது வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வரிவிதிப்பு மூலம் வருமானம் ஈட்டும் அதேவேளை, அரச செலவுகள் ஊடாக பொருளாதார இலக்குகளை அடைய எத்தனிக்கும். வரி மற்றும் அரச செலவு ஊடாக பொருளாதார குறிக்கோள்களை அடைய எத்தனிப்பது இணைக் கொள்கை என அழைக்கப்படுகிறது. குறிப்பாக பொருளாதாரமொன்றின் துரித மற்றும் உயர் பொருளாதார வளர்ச்சி மற்றும் பூரண வேலைவாய்ப்பு மட்டத்தை அடைதல் போன்ற முக்கிய குறிக்கோள்களை அடைய இறைக்கொள்கை பயன்படுத்தப்படுகிறது.

இறைக்கொள்கையின் இரு பிரதான கொள்கைக் கருவிகள் அரசிறை வரிவிதிப்பும், அரசாங்க செலவீடுகளுமாகும். வரிவிதிப்பு மூலம் திரட்டப்படும் அரசிறையே அரசாங்கத்தின் பிரதான வருமான பொருளாதாரமாகும். எனவே அரசாங்க வருமானம் மற்றும் அரசாங்க செலவீடு என்பவற்றையே அரசாங்க வரவு செலவுத்திட்டம் எனக் கூறுகின்றோம். மறுவார்த்தைகளில் கூறுவதாயின் அரச வரவு செலவுத்திட்டத்தினூடாக இறைக்கொள்கைகளை நடைமுறைப்படுத்தலாம். இவ்வகையில் மூன்று வகையான வரவு செலவுத்திட்டங்களை நாம் இனங்காணலாம்.

1. மிகை நிலை வரவு செலவுத்திட்டம்.

2. சமநிலை வரவு செலவுத்திட்டம்.

3. குறை நிலை வரவு செலவுத்திட்டம்.

அரசிறை வருவாய்களை விட அதன் செலவுகள் குறைவாக இருப்பது மிகை நிலை வரவு செலவுத்திட்டமாகும். அரசிறை வருவாய்களும் அரச செலவுகளும் சமமாக இருப்பது சமநிலை வரவு செலவுத்திட்டமாகும்.

அரசிறை வருவாய்களை விட அதன் செலவுகள் அதிகமாக இருப்பது குறை நிலை வரவு செலவுத்திட்டமாகும். இவ்வாறு மூவகை செலவுத்திட்டங்கள் இருந்தபோதிலும் இலங்கை போன்ற அபிவிருத்தியடையாத நாடுகளிலே தொடர்ச்சியாக குறைநிலை வரவு செலவுத்திட்டங்களே நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதைக் காணமுடிகிறது. அதாவது அரச வருவாயை விட அதிகம் செலவீடுகளை மேற்கொள்ளும் வரவு செலவுத்திட்டங்கள் நீண்டகாலமாக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதேன்? வருவாய்க்கு அதிகமாக செலவீட்டை மேற்கொண்டால் ஒரு குடும்பத்தின் எதிர்காலம் எப்படி அமையும் என்பது சிறுபிள்ளைக்கும் நன்கு புரியும் அவ்வாறாயின் அரசாங்கங்கள் தமது வருவாயை விட ஏன் அதிகம் செலவீடுகளை மேற்கொள்கின்றன? ஏன் தொடர்ச்சியாக பாதீட்டுக் குறைநிலையை எதிர்கொண்டு அதனை ஈடுசெய்ய கடன் பெறுகின்றன? ஏன் பெற்ற கடனை மீள்செலுத்த மீண்டும் மீண்டும் கடன் பெற்று கடன் பொறிக்குள் மாட்டிக்கொள்கின்றன? இவை சாதாரணமாக குடிமக்கள் என்ற வகையில் நாம் எழுப்பக்கூடிய சந்தேகங்களாகும்.

இங்கிலாந்தைச் சேர்ந்த மிகவும் வல்லமை வாய்ந்த பிரபல பொருளியல் வல்லுனரும் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் என்பவற்றின் உருவாக்கத்தில் மிகமுக்கிய பங்கு வகித்தவருமான ஜே.எம்.கெயின்ஸ் என்ற பிரபுவே இத்தனைக்கும் காரணமாவார்.

1929 --_ 1936 வரையான காலம் உலக வரலாற்றில் மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்த காலப்பகுதியாகும். உலகின் பிரதான கைத்தொழில்மய நாடுகளின் பொருளாதாரங்கள் மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்ததோடு வேலையின்மை மிகத் தீவிரமான நிலையில் காணப்பட்டது. 'உலகப் பெருமந்தம்' என இதனை அழைத்தனர். அக்காலத்தில் அரசாங்கங்கள் நேரடியாக தனியார் துறையின் தொழில் நடவடிக்கைகளிலே தலையிடாதபடியால் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற முதன்மைக் கைத்தொழில்மய நாடுகள் பல வருடங்களாக மந்தநிலையை அனுபவித்தன.

இந்நிலையிலேயே ஜே.எம். கெயின்ஸ் ஒரு மாற்றுக் கருத்தை முன்வைத்து அரசாங்கங்கள் பொருளாதாரத்தில் அதிகளவு செலவீட்டை மேற்கொள்வதன் மூலம் பெருமந்தத்தில் இருந்து மீட்சி பெறலாம் என்ற ஆலோசனையைக் கூறினார். அவரது கருத்தின்படி இங்கிலாந்து 100 ஸ்ரேலிங் பவுண்களை அரசாங்கமே செலவிட்டு அதே 100 ஸ்ரேலிங் பவுண்களை அரசிறை வரியாகத் திரட்டிக் கொண்டால் அதாவது சமநிலை வரவு செலவுத்திட்டத்தைக் கடைப்பிடித்தால் இங்கிலாந்தின் பொருளாதாரம் 100 ஸ்ரேலிங் பவுண் வளர்ச்சியை அடையும் என்பது அவரது கோட்பாடாக இருந்தது.

இக்காலப்பகுதியில் இக்கருத்து புரட்சிகரமானதாக இருந்தது. பிரதான கைத்தொழில்மய நாடுகள் அரசாங்க செலவீட்டை அதிகரிப்பதன் மூலம் மந்தத்தில் இருந்து மீட்சிபெற்றன. 'ஒரு அரசாங்கம் சமநிலை வரவு செலவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் அதன் பொருளாதாரம் வரவு செலவுத்திட்டத்தின் அளவினால் வளர்ச்சியடையும் என்பதே இதன் சாராம்சமாகும். மிகப்பெரிய கஷ்டமான நிலையில் உள்ள ஒருவரை கைதூக்கி விடுவதற்கு கடன் வழங்கி உதவுவது தவறில்லை. ஆயினும் தொடர்ந்தும் கடன் வழங்கி அதன்மூலம் அவரது வாழ்வை நடத்திச் செல்வது யதார்த்தமானது அன்று.

அரசாங்க வருவாயை விட அதிகமாக செலவீட்டை மேற்கொள்வது வரிவாக்க இறைக்கொள்கை என அழைக்கப்படுகிறது. கெயின்ஸ் கூறியதுபோல அரசாங்க செலவீட்டின் மூலம் பொருளாதாரம் வளர்ச்சியடையுமாயின் அரசாங்க வருவாயை விட அதிகம் செலவிடுவதன் மூலம் அப்பொருளாதார வளர்ச்சியை மேலும் விரிவாக்கவும் துரிதப்படுத்தவும் இயல வேண்டும்.

1950களில் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் பலவும் காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றதன் பின்னர் குறைநிலை வரவு செலவுத்திட்டத்தையே தமது பொருளாதார வளர்ச்சிக்கான பிரதான கொள்கையாகக் கொண்டன. இதன் மூலம் வேலை வாய்ப்புக்களை அதிகரிக்க முடியும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆயினும் விரிவாக்க இறைக்கொள்கையின் அடிப்படையில் குறைநிலை வரவு செலவுத்திட்டத்தின் மூலம் பொருளாதார வளர்ச்சியினதும் தொழில் வாய்ப்புகளையும் அதிகரிக்க எத்தனித்த நாடுகள் அதில் வெற்றிபெறவில்லை. மாறாக தொடர்ச்சியாக கடன் பெறும் நிலையை எதிர்நோக்கியதுடன் கடன் சுமையை எதிர்கொண்டதுடன் பணவீக்கப் பிரச்சினையையும் சந்திக்க நேர்ந்தது.

இலங்கையும் கூட தொடர்ச்சியாக குறைநிலை வரவு செலவுத்திட்டத்தையே நடைமுறைப்படுத்தி வருகிறது. ஆனால் இலங்கைப் பொருளாதாரம் அதன் மூலம் மிகப்பெரிய பொருளாதாரப் பாய்ச்சலையோ வளர்ச்சியையோ பதிவு செய்யவில்லை.

மாறாக பூதாகரமானதொரு அரசாங்க கட்டமைப்பின் உருவாக்கத்தையும் தேசிய, மாகாண, மற்றும் உள்ளூராட்சி மட்டங்களில் அதைப் போஷிப்பதற்காக அதிகளவு வளங்களை ஒதுக்க வேண்டிய நிலைக்கும் வருவாய்களை அதிகரிக்க முடியாத கையறு நிலைக்கும் செலவுகளை ஈடுசெய்ய கடன் வாங்கும் நிலைக்கும் பெற்ற கடனை ஈடுசெய்ய மீண்டும் மீண்டும் கடன் வழங்கும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது.

இலங்கைக்கு பொருத்தமான அரசாங்கத் துறையின் அளவு என்ன என்பதை சிந்திக்க வேண்டிய ஒரு காலம் வந்திருப்பதாகவே தோன்றுகிறது. இலங்கை போன்ற மிகச்சிறிய ஒரு நாட்டில் அரசாங்கத்தின் பருமன் கொக்குத் தலையில் பனங்காயைத் தூக்கிவைத்தது போல் உள்ளது. மிகச் சிறிய ஒரு பொருளாதாரத்தில் வரி இறுப்பாளர்களின் வருவாயைக் கொண்டு மிகப்பெரிய தொகையினரான அரசியல்வாதிகளையும் அதிகார மட்டத்தினையும் போஷித்து இலவசமாகப் பராமரிப்பது மிகவும் செலவு கூடியதாகும். இத்தகைய இலவச சவாரிகளின் எண்ணிக்கையை குறைக்காமல் எதிர்கால வளர்ச்சியோ விரிவாக்கமோ எதிர்பார்த்தவாறு அமையப்போவதில்லை.

 

Comments