இலங்கை படத் தயாரிப்பாளர்களை இகழ்ந்து விரட்டிய தினகரன் பத்திரிகையாளர் | தினகரன் வாரமஞ்சரி

இலங்கை படத் தயாரிப்பாளர்களை இகழ்ந்து விரட்டிய தினகரன் பத்திரிகையாளர்

தினகரன் வார மஞ்சரி செப்டம்பர் 9ஆம் திகதி இதழில் ‘ஆயிரம் வோல்ட் பல்ப் பாலு மகேந்திரா!’ என்று தலைப்பின் கீழ் நான் எழுதிய கட்டுரையில் ஒரு சிறு பகுதியை வாசகர்களின் நினைவுக்கு கொண்டு வந்த பின்னர் “குத்து விளக்கு” திரைப்படத்தைப் பற்றி தொடரலாம் என நினைக்கிறேன்

‘அதன் பின்னர் சுமார் ஒரு வருடம் போல் பாலா ஊருக்கு போவதும் கொழும்பு வருவதும் என்னோடு தங்குவதும் சிலோன் ஸ்டூடியோவுக்கு வருவதுமாக காலம் கழிந்தது.

இக் காலக் கட்டத்தில் தான் அக் காலத்தில் புகழ்பெற்று விளங்கிய கட்டட வடிவமைப்பாளராக விளங்கிய வீ. எஸ். துரைராஜா குத்து விளக்கு திரைபபடத்தை தயாரித்தார். இதற்கு ஒளிப்பதிவாளராக டப்ளியூ. எம். எஸ். மகேந்திரன என்ற பழமை வாய்ந்த ஒளிப்பதிவாளர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

எங்களுடைய டாக்சி ரைவர் திரைப்படத்தை மலேசியாவில் திரையிடுவதற்காக மலேசியா சென்றிருந்த சுண்டிக்குளி ரீ. சோமசேகரன் இரண்டு மாதங்களுக்குப் பின்னர் திரும்பி வந்திருந்தார். நீண்ட நாட்களுக்குப் பின்னர் பாலாவும் அன்று ஸ்டூடியோவுக்கு வந்திருந்தான். அதே சமயம் குத்து விளக்கு உதவி இயக்குனர் பீ. எஸ். நாகலிங்கமும் வந்திருந்தார்.

“என்ன நாகா! குத்துவிளக்கு சூட்டிங் எல்லாம் முடிஞ்சுதா?” என சுண்டிக்குளி ரீ.சோமசேகரன் கேட்டார்.

“இல்ல. என்னோட ஒரு முக்கியமான வேலையா நான் கொழும்புக்கு வந்துட்டேன். இன்னைக்கும் யாழ்ப்பாணத்துல சூட்டிங்” என்றார் நாகலிங்கம்.

“அப்போ இவர் இங்க நிற்கிறார்” என்றார், பாலாவைக் காட்டி சுண்டிக்குளி ரீ. சோமசேகரன்.

“இவர் யார்?” என்றார், நாகலிங்கம். “மகேந்திரன்னு கெமராமேன் பையன் ஒருத்தன் இருக்கிறான்னு சொல்லிட்டுப் போனேனே அது இவர் தான்.”

அத நான் துரைராஜாவுக்கு சொன்னேன். துரைராஜா ஸ்டூடியோவுக்கு பணம் கட்ட வந்த நேரம் எக்கவுண்டனட் நவரத்னம் கிட்ட “ இங்க மகேந்திரன்னு ஒரு கெமராமேன் இருக்கிராராமே” என கேட்டிருக்கிறார்.

உடனே நவரத்னம், டப்ளியூ. எம். எஸ். மகேந்திரனை ஸ்டூடியோவுக்கு கூப்பிட்டு துரைராஜாவுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார். அந்த மகேந்திரன் தான் இப்போ குத்து விளக்குக்குக் கெமராமேன்” என்ற நாகலிங்கத்தின் பதிலைக் கேட்டு நானும் பாலா என்ற பாலு மகேந்திரனும் சுண்டிக்குளி ரீ. சோமசேகரன் திக்பிரமை பிடித்தவர்களானோம்.

எனவே நன்மைக்கோ தீமைக்கோ பாலுமகேந்திரனுக்கு இநதச் சந்தர்ப்பம் கை நழுவி போனது. இந்த “குத்து விளக்கு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த லீலா நராயணன் ஏற்கனவே “மஞ்சள் குங்குமம்” திரைப்படத்தில் நடன மங்கையாக அறிமுகமானவர். நாட்டிய பயிற்சியும் நல்ல அழகும் உள்ளவர்.

இலங்கை தேசிய தமிழ் சினிமாவில் பிரபலமான கிசு கிசுக்களும் வதந்திகளும் அதிகமாக உலாவிய திரைப் படம் இந்த “குத்து விளக்கு” திரைப்படமாகும்.

அந்த பிரபலமான கிசு கிசுக்களும் வதந்திகளும் இந்த “ குத்து விளக்கு ” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த லீலா நாராயணன், தயாரிப்பாளர், திரைக்கதாசிரியர், இயக்குனர், போன்றவர்களை மையப்படுத்தியவையாக இருந்தன.

திரைக்கதாசிரியர், இயக்குனர் போன்றோருடனான கிசு கிசுக்கள் துணை நடிகைளோடு சம்பந்தப்பட்டவையாக இருந்தன. அவற்றில் சில கேட்கவே அசிங்கமாகவும் இருந்தன.

மேலும் சில கிசு கிசுக்களும் வதந்திகள் தயாரிப்பாளரையும் சம்பந்தப்படுத்தியதாக இருந்தன.

தயாரிப்பாளர் வீட்டுக்குள்ளும் இந்த புயல் வீசியதால் குடும்பம் விரிசல் கண்டு பல முறை படப்பிடிப்பு ஆசிரியர் இல்லாத வகுப்பாக நடந்தது. இடை இடையே படப்பிடிப்பு நிறுத்தப்படுவதும் தொடர்வதுமாக இருந்தது.

தயாரிப்பாளரின் வீட்டுக்குள் இந்த புயல் வீசியதால் தயாரிப்பாளர் தீக்குளிக்க முயற்சித்ததாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளிவந்தன.

“குத்து விளக்கு” திரைப்படத்தில் பீ. எஸ். நாகலிங்கம் என்பவர் உதவி இயக்குனராக பணி புரிந்தார். இவர் வெகுவான சிங்களத் திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணி புரிந்த நல்ல அனுபவமுள்ளவர்.

இவரின் பெரு முயற்சி காரணமாகவே குத்து விளக்கு திரைப்படம் இறுதியாக திரைக்கு வந்தது.

அதில்நமது புரட்சிக் கவிஞம் ஈழத்து ரத்தினம் எழுதிய தேசிய பாடல் இது: ஈழத்திருநாடே! என்னருமைத் தாயகமே இருகரம் கூப்புகிறோம் வணக்கம் அம்மா

வாழும் இனங்கள் இங்கு

பேசும் மொழியிரண்டு

வழங்கிய உனக்கு நாங்கள்

பிள்ளைகள் அம்மா

கங்கை மகாவலியும்

களனியும் எங்களுக்கு

மங்கை நீ ஊட்டிவரும்

அமுதமம்மா

சிங்களமும் செந்தமிழும்

செல்வியுன் இருவிழியாம்

சேர்ந்திங்கு வாழ்வது உன்றன் கருணையம்மா.... என்று அப்பாடல் ஆரம்பமானது.

“டாக்சி ரைவர்” திரைப்படம் தயாரிப்பு சம்பந்தமாக,

சுண்டுக்குளி ரீ.சோமசேகரனின் ‘தங்கமணி பிக்சர்ஸ்’ லெட்டர் ஹெட்டில் அவர் கைப்பட எழுதி தந்த தகவல்களை தினகரன் பத்திரிகையில் பிரசுரிப்பதற்காக லேக்ஹவுசுக்கு அதை எடுத்துச் சென்றேன். செய்திப் பகுதியில் இருந்த பொறுப்பான ஒருவரிடம் அதைக் கொடுத்த போது, அவர் அதை வாசித்து பார்த்து விட்டு “யார் இந்த சுண்டுக்குளி?” எனக் கேட்டார்.

“அவர் தான் சேர் புரடியூசர்” என்றேன்.

பக்கத்திலுள்ள அவரது சகாவைப் பார்த்து “இங்க பாரும். இவன்கள் சினிமா எடுக்கப் போறாங்களாம்” என்றார் அவர் என்னை ஏளனமாக பார்த்துக் கொண்டே.

“அவன்களுக்கும் விசர் எனறால் உமக்கும் விசரே! தூக்கி எறிஞ்சு, விரட்டி அடியும்” சொல்லிய வாறே எழுந்து அப்பால் சென்றார். அவரது சகா.

“ நீர் இப்ப இதக் கொண்டு போய், படம் எடுத்து முடிஞ்சதும் கொண்டு வாரும் என்ன” என்று, செய்தியை திருப்பி தந்தார் அந்த மனிதர்.

அதனை எடுத்துச் சென்று சுண்டுக்குளி ரீ.சோமசேகரனிடம் கொடுத்து விஷயத்தை சொன்னேன்.

இதைக் கேட்டு அவர் மிகவும் வேதனைப் பட்டதை அவரது முகம் எனக்கு காட்டியது. அவரின் முகத்தின் நெளிவு சுளிவுகளைப் படித்தே சினிமா கற்றவன் நான்.

கடுமையான போராட்டங்களின் பின்னர் “டாக்சி ரைவர் படத்தை முடிந்து திரைக்கு வரும் அன்று காலை, சுண்டுக்குளி ரீ. சோமசேகரன் என்னை அழைத்து “ஐசே! இந்த இன்விடேசனைக் கொண்டு போய், லேக் ஹவுஸ்ல உம்ம விரட்டினவரோட பேரக் கேட்டு இதுல எழுதிக் கொடும்” என்றார்.

அவரின் இந்தச் செயலில் எனக்கு துளியும் உடன் பாடு இல்லை. எனினும் அதன் படியே நான் செய்தேன்.

லேக் ஹவுஸ்ஸில் என்னை துரத்தியவரைக் கண்டு அவர் பெயர் எம் எஸ். ரத்னம் என அறிந்து அழைப்பிதழை அவரிடம் கொடுத்தேன். எனினும் அவர் படம் பார்க்க வரவில்லை.

குத்து விளக்கு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த எம் எஸ். ரத்னத்தை சந்தித்து ஆரம்ப கால சம்பவத்தைச் சொல்லி “சினிமாவுல நடிக்கறீங்களா?” எனக் கேட்டேன். அவர் அசடு வழிந்தார்.

Comments