மாதவிடாய் | தினகரன் வாரமஞ்சரி

மாதவிடாய்

சரஸ்வதி கோபமடைவாள் என்று நேபாளத்தின் சில பகுதிகளில் சிறுமிகளுக்கு அந்த சில நாட்கள் புத்தகத்தை தொடவோ பாடசாலைக்கு செல்லவோ அனுமதியில்லை

பெண்களுக்கு 28 நாட்களுக்கொருமுறை இயற்கை வழங்கும் அழகான தண்டனையே மாதவிடாயாகும். ஒவ்வொரு 28 நாட்களுக்கு ஒரு தடவை தாய்மை என்னும் பதவிக்கு தயார்படுத்துவதற்காக பரிணாமத்தால் விதிக்கப்பட்ட வேதனையான நியதியாகும். அந்நாட்களில் இரத்தப் பெருக்குடன் அடிவயிற்று வலியும் ஏற்படுகின்றது. இந்த நிகழ்வானது அவள் சுகதேகி என்பதை உறுதி செய்கின்றது.

மாதமொருமுறை பெண்கள் முகங்கொடுக்கும் இயற்கை நிகழ்வும் அதனால் பெண்ணானவள் குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கு அனுபவிக்கும் உடல் மற்றும் உளவேதனை சமூகத்தில் ஒரு சாராருக்கு நகைச்சுவையாகத் தோன்றுகின்றது. பெண்ணாகப் பிறப்பது அவளின் தெரிவு அல்ல, அது இறைவனின் படைப்பாகும். அதனால் இந்த சிரமத்தை அவள் தாங்கிக் கொள்ள வேண்டும் என நாம் எண்ணுகின்றோம்.

இந்த இயற்கையின் கொடுமைக்கு சில கட்டுப்பாடுகளை பல நாடுகள் விதித்த போதிலும், அவை இந்த நவீன காலத்திலும் தொடர்வது ஏற்றுக்கொள்ள கூடியதல்ல என்ற வாதம் வலுபெற்றுள்ளது.

இலங்கையில் மாதவிடாயின் போது பெண்களுக்கு ஏழு நாட்கள் வரை ஜாதகம் பார்க்க முடியாது. வழமையாகச் செல்லும் கோயிலுக்குச் செல்ல முடியாது. ஆனால் இச்சம்பிரதாயங்கள் நாட்டுக்கு நாடு வேறுபட்டு பெண்ணடிமைத்தனங்களாக பேணப்பட்டு வருகின்றன.

நேபாளத்தின் மாதவிடாய் காலங்களில் வீட்டைவிட்டு பெண்களை வெளியே அனுப்பிவிடுவார்கள். அவர்கள் அந்த நாட்களில் வீட்டுக்கு வெளியே குடில்களிலேயே தங்க வேண்டும். அந்தக் குடில் மாட்டுத் தொழுவத்துக்கு சமமானது. சில நேரங்களில் மாடுகளும் அவர்களை மிதித்துச் செல்வதுண்டு. சில நேரங்களில் காமுகர்களின் கைகளில் சிக்குவதுமுண்டு. சிலர் பாம்புக்கடிக்கும் உள்ளாகி மரணமடைந்துள்ளார்கள். சிறுமிகள் மாத்திரமல்ல பெண்களும் சிறு குழந்தைகளுடன் அங்கே தங்குகின்றார்கள். அதற்குக் காரணம் கடவுளுக்கு விளக்கு வைக்க முடியாது எனக் கூறுகின்றார்கள். இதனை ‘பகுபாதி’ எனக் கூறுகின்றார்கள்.

நேபாள உச்ச நீதிமன்றம் 2005ம் ஆண்டு இந்த பகுபாதி முறையை தடை செய்துள்ளது. ஆனால் நேකபாள கிராமப் பெண்களில் 70 சதவீதமானோர் மாதவிடாய் நாட்களில் இரவை மாட்டுத் தொழுவங்களில் கழிக்கின்றார்கள்.

சரஸ்வதி கோபமடைவாள் என்று நேபாளத்தின் சில பகுதிகளில் சிறுமிகளுக்கு அந்த சில நாட்கள் புத்தகத்தை தொடவோ பாடசாலைக்கு செல்லவோ அனுமதியில்லை. பாடசாலைக்கு சென்றாலும் அவர்களுக்கு பாவிப்பதற்கு சுகாதார துவாய்கள் இருப்பதில்லை. கடந்த ஜுலை மாதம் இந்தியாவில் பாடசாலையொன்றில் ஆசிரியை ஒருவர் ஆடையில் கறை பட்டதால் தூற்றியதன் காரணமாக மாணவியொருவர் அவமானம் தாங்காது தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவ்வாறான மோசமான வார்த்தைப் பிரயோகங்கள், நடத்தை காரணமாக, வெட்கப்பட்டு வருடத்திற்கு குறைந்தது மூவாயிரம் பேர் பாடசாலை கல்வியை கைவிடுகின்றார்கள்.

இந்தியாவின் சிவில் சமூக அமைப்புக்கள் இலங்கையில் உள்ளனவற்றை விட மிகவும் சக்தி வாய்ந்தது. அவர்கள் இது குறித்து வெளிப்படையாகக் பேசுகிறார்கள். உதாரணமாக சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவில் ‘இரத்தக்கறை வரி’யை நீக்க புதிய சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன் அர்த்தம் என்னவென்றால் பெண்களின் சுகாதார உற்பத்திப் பொருட்களுக்கு அரசாங்கம் வரி விதிக்கக் கூடாது என்பதாகும். பெண்களின் இரத்த வரி மூலம் அரசாங்கம் பணம் சம்பாதிக்கக் கூடாது என்பதாகும். அது வெட்கக் கேடான செயல் என பகிரங்கமாகக் கூறினார்கள். அதனால் அவற்றின் விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பெண்களின் மாதவிடாய் காலங்களில் பாவிக்கப்படும் மாதவிடாய் துவாய், துணி என்பவற்றை சேகரிக்கும் மத்திய நிலையங்கள் நாடு பூராவும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. அதன்மூலம் டி. என். ஏ. மாதிரிகள் பெறப்பட்டு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இன்று மாதவிடாய் வேதனைக்கு எதிராக குரலெழுப்பப்படுகின்றது. அமெரிக்கா, ஐரோப்பா தொடங்கி நேபாளம் வரையும் வாதங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதேவேளை இலங்கையில் கிராமங்களில் மாத்திரமல்ல, கற்றவர்கள் இடையேயும் சிலரிடம் இது தொடர்பான மூட நம்பிக்கைகள் காணப்படுகின்றன. பெண்களின் மாதவிடாய் தொடர்பான சரியான விளக்கங்களை தங்கள் பிள்ளைகளுடன் பேச வெட்கப்படுகின்றார்கள். அவர்களிடம் தேவையில்லாத கேள்விகளை கேட்காதீர்கள் என்று கூறுகின்றார்கள்.

ஆகவே இந்நிலைமை மாறவேண்டும். பெண்களின் இந்த நாட்களைப் பற்றிய அவதானம், அவர்களுக்கு அளிக்க வேண்டிய பாதுகாப்பு என்பவற்றைப் பற்றி விழிப்புடன் இருக்க வேண்டியது சமூகத்தின் கடமையாகும்.

Comments