வடக்கில் உரம்பெற்று வரும் போதைப்பாவனை | தினகரன் வாரமஞ்சரி

வடக்கில் உரம்பெற்று வரும் போதைப்பாவனை

ஒரு நாட்டின் வளர்ச்சி, அபிவிருத்தி என்பன அந்நாட்டில் சுகதேகிகளாக வாழும் மக்களிடமே தங்கியுள்ளது. அதிலும் நாட்டின் எதிர்காலத்தையும் தலைவிதியையும் தீர்மானிப்பவர்களாக இளந்தலைமுறையினரே காணப்படுகின்றனர். இந்நிலையில், தெற்காசிய வலயத்தில் பல தொன்மையான வரலாறுகளையும், சிறப்புக்களையும் தன்னகத்தே கொண்டு விளங்குகின்ற, இலங்கைத் தீவின் சிரசு என போற்றப்படுகின்ற வட மாகாணமானது கலாசாரம், கல்வி, மக்களின் வாழ்வியல் என அனைத்து மட்டத்திலும் சிறந்து விளங்கியதும், விளங்கிவருவதும் யாவரும் அறிந்ததே.

குறிப்பாக சேர்.பொன் இராமாநாதன், அருணாசலம், செல்வநாயகம், ஆறுமுகநாவலர் போன்ற கல்வி, அரசியல், சமயம் என பல்துறைசார் அறிஞர்களை உருவாக்கியதும், எமது நாட்டு அரசியல் தலைவர்கள் வெளிநாட்டுத்தலைவர் எனப் பலராலும் பாராட்டப்பெற்றதுமான வடமாகாணத்தின் இன்றைய சூழ் நிலையை நோக்குகின்றபோது, அதன் பெருமையை, சிறப்பை இழந்து, இந்த நிலைமை தலைகீழாக மாறிவருகின்றதோ என்ற ஐயப்பாடு வடமாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணம் உள்ளிட்ட நகரங்களில் வாழந்துவரும் ஒவ்வொரு குடிமகனது மனிதில் எழும் முதல் ஏக்கமாகக் காணப்படுகின்றது.

இந்த ஏக்கத்திற்கு முதல் அச்சாணியாக விளங்குவது வடக்கில் என்றுமில்லாத அளவு அதிகரித்தும்வரும் போதைப்பொருள் பாவனையும், போதைப்பொருள் சந்தை, கடத்தலுக்கான முக்கிய கேந்திர நிலையமாக இப்பகுதி மாறி வருவதுமேயாகும். இந்நிலைமை கடந்தகாலங்களுடன் ஒப்பிட்டுபார்க்கும்போது அசுர வளர்ச்சியைப்பெற்று வந்திருப்பதனை காணமுடிகின்றது. குறிப்பாக வடக்கு மாகாணத்தை யுத்தத்திற்கு முன்னரான காலம், யுத்தம் நடைபெற்றகாலம், யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட காலம் என 3 பிரிவாக நோக்காலம். இதில் நாட்டில் 30 வருடகாலமாக புரையோடிப்போயிருந்த உள்நாட்டு யுத்தகாலத்திலும் சரி, அதற்கு முற்பட்ட காலத்திலும் சரி வடக்கில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லாதிருந்த போதைப்பொருட்களானது யுத்தம் முடிவுற்ற அதாவது, 2009 மே 18 ஆம் திகதிக்கு பின்னரான காலத்தில் அசுர வளர்ச்சியடைந்து வந்திருக்கிறது.

இந்த நிலையில், போதைப்பொருட்களின் வகைகள், அவற்றின் பரம்பல், அதற்கு பலியாகும் இளந்தலைமுறையினர், போதைப்பொருட்களின் பாவனையால் ஏற்படும் பாரதூரமான விளைவுகள், போதைப்பொருட்களை இல்லாதொழிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் போன்றவற்றினை ஆராய்வதே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.

போதைப்பொருட்கள்

போதைப்பொருட்களில் மது, ஹெரோயின், பெத்தனால் ஊசி, கஞ்சா, புகையிலை, பான்மசாலா, போதைதரும் இன்ஹேலர்கள் இருமல் மருந்து மற்றும் இன்னும் பலவகைகள் அடங்கும். இவற்றில் மனிதனுக்கு குறுகிய காலத்தில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்துவதாக ஹெரோயின், கொகெய்ன், கஞ்சா போன்ற போதைப்பொருட்களும் இவற்றிற்கு அடிமையானவர்களுமே அதிகமாக உள்ளனர். குறிப்பாக வடமாகாணத்தில் இளைஞர்களும், மாணவர்களுமே அதிகளவில் ஹெரோயின், கொகெய்ன், கஞ்சா போன்றபோதைப்பொருட்களுக்கே அதிகளவில் பலிக்கடாவாகின்றனர்.

போதைப்பொருட்களின் பரம்பல்

போதைப்பொருள் பாவனையில் கொழும்பு மாவட்டமே முதலிடத்தில் காணப்படுகின்றது. 1980 ஆம் ஆண்டிற்கு பின்னரான காலப்பகுதியிலேயே ஹெரோயின் எனும் போதைப்பொருளின் பாவனை அதிகரித்துள்ளதுடன், யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியிலேயே வடமாகாணம் போதைப்பொருள் பாவனையால் பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகி இருக்கிறது. வட மாகாணத்தில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, ஓமந்தை, வவுனியா ஆகிய பகுதிகளில் போதைப்பொருள் பாவனை மட்டுமன்றி, போதைப்பொருள் கடத்தலிலும், கடத்தல்காரர்கள் கைதுசெய்யப்படுவதிலும் முன்னிலையாகத் திகழ்கின்றது. இதனால் யாழ். குடாநாடு இன்று போதைப்பொருள் கடந்தலின் கேந்திர நிலையமாக தோற்றம் பெற்றுள்ளது.

இந்தியாவின் கேரளாப்பகுதியில் இருந்து கடல்வழியாக கேரளா கஞ்சா யாழ்பாணத்திற்கு கடத்தி வரப்படுகிறது. கேராள கஞ்சா கடத்தல் சம்பவங்களே அதிகளவில் நடைபெறுகின்றது. இதிலும் கேரளா கஞ்சா கைப்பற்றப்படுவதும், கடத்தல்காரர்கள் கைது செய்யப்படுவதும் அன்றாடம் நிகழும் சம்பவங்களாக பதிவாகி வருகின்றன.

கடந்த வாரம் 7900 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் ஓமந்தையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். மேலும் வவுனியாவில் 8 கிலோ கஞ்சா மீட்கப்பட்டதுடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட சம்பவமும் பதிவாகியிருந்தது. யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் ஹெரோயின் மற்றும் கஞ்சாவுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இவ்வாறான கடத்தல், கைது சம்பவங்கள் தொடச்சியாக நடைபெற்று வருகின்றன.

பாதிக்கப்படும் இளந் தலைமுறையினர்

சுகாதார அமைச்சின் தகவலின்படி போதைவஸ்துக்கு அடிமையானவர்களில் 50 வீதமானோர் திருமணமாகாத இளைஞர்களாகக் காணப்படுகின்றனர். இவர்களில் பல்கலைக்கழக, பாடசாலை மாணவர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு இளைஞர்கள் பலியாவதற்கான காரணம்தான் என்ன? இன்றைய இளம் தலைமுறையினரிடம் வேரூன்றியுள்ள கலாசார பிறழ்வே பிரதான பங்கு வகிக்கின்றது. குறிப்பாக இன்றைய சினிமாத்துறையை எடுத்துக்கொண்டால் போதைப்பொருட் காட்சிகளும் வன்முறைக்காட்சிகளுமே பெரிதும் காட்சிப்படுத்தப்படுகின்றது. குறிப்பாக ரவுடித்தனம் செய்யும் கும்பல்கள் வன்முறையில் ஈடுபடுவது போலவும், போதைவஸ்துகளை நுகர்வது போலவும் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். அவற்றைப் பார்க்கும் இளம் தலைமுறையினர் தங்களை கதாநாயகர்களாவும், வில்லன்களாவும் சித்தரித்துக்கொண்டு போதைவஸ்துகளை உள்ளெடுப்பதுடன் அடாவடிகளிலும் ஈடுபட்டு தமது எதிர்காலத்தையே தொலைத்து விடுகின்றனர்.

அத்துடன் யுத்தகாலத்தில் ஏதோ ஒரு தரப்பினருக்கு பயந்து அடங்கி ஒடுங்கியிருந்த இளைஞர்கள், இன்று யுத்தம் முடிவுற்ற நிலையில் தமக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது போலவும், தம்மைத்தட்டிக்கேட்க எவருமில்லை என்ற இறுமாப்பும் கொண்டு இத்தகைய தீயசெயல்களில் தம்மை ஈடுபடுத்திக்கொள்கின்றனர்.

மேலும் தொலைத் தொடர்பாடல் துறையின் வளர்ச்சியின் காரணமாக தமக்கு வேண்டத்தகாதவர்களுடன் இலகுவாக தொடர்புகளை மேற்கொண்டு அவர்களிடம் இருந்து போதைவஸ்துகளை பெற்றுக்கொள்கின்றனர். வேலைவாய்ப்பின்மை காரணமாக பணத்திற்காக கடத்தல்களிலும் ஈடுபடுகின்றனர்.

ஏற்படும் விளைவுகள்

காசநோய், இருதயநோய், நீரிழிவுநோய், புற்றுநோய்கள், தொற்றா நோய்கள் போன்றவற்றுக்கு ஒரு காரணமாகவும் அமைகின்றன. மேலும் மகிழ்ச்சியை மறைத்தல், வறுமை, குடும்பப் பிரச்சினைகள், பிள்ளைகளது கல்வி நிலை பாதிக்கப்படுதல், அத்துடன் போதைக்கு அடிமையானவர்கள் போதை தலைக்கேறிய நிலையில் கலாசார சீரழிவுகளில் ஈடுபடுவதனால் சமூகம் பெரும் சீழிவுக்கு முகம்கொடுக்க நேர்தல், போதைவஸ்து பாவனையால் பல்வேறுபட்ட உயிரிழப்புகளும் ஏற்படுதல் என்பவற்றை பாதிப்புகளாகச் சுட்டலாம்.

கொலை, கற்பழிப்பு, கொள்ளை போன்ற பாரிய குற்றச்செயல்களுக்கு முதற்காரணமாக விளங்குவதும் போதைவஸ்து பாவனையே.

இன்று யாழ்ப்பணத்தில் வேரூன்றியுள்ள வாள்வெட்டு கலாசாரத்திற்கு பிரதான பின்னணியாகத் திகழ்வது இந்த போதைவஸ்து பாவனையே. போதை தலைக்கேறிய நிலையில் பணத்திற்காகவும், தமது தனிப்பட்ட காரணங்களுக்காகவும் வாள்வெட்டு, ரவுடித்தனம் போன்றவற்றில் குழுக்களாக இணைந்து செயற்படுகின்றனர்.

2016 ஆம் ஆண்டளவில் வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டு முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் ஆடைத்தொழிற்சாலை ஒன்றை திறந்துவைத்து பேசிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, போதைப்பொருட்கள் என்பது ஆயுதங்களைவிட மிகவும் கொடூரமானது எனவும் அது எமது வாழ்க்கையையே அழித்துவிடும் என்பதால் அவற்றை பாவிப்பவர்கள் அனைவரும் அதனைக் கைவிடவேண்டும் எனக் கூறியிருந்தார். இவ்வாறு நாட்டின் ஜனாதிபதி கூறுமளவிற்கு வடக்கில் எவ்வாறு போதைப்பொருள் பாவனை தலைவிரித்தாடுகிறது என்பதை எம்மால் ஊகித்து உணர முடிகின்றது.

வட மாகாணத்தில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனை மற்றும் கடத்தல்களைக் கட்டுப்படுத்துவதில் ஏற்பட்டுவரும் முன்னேற்றம் தொடர்பில் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தலைமையில் மே மாதமளவில் கூட்டம் இடம்பெற்றிருந்தது.

போதைப் பொருள் பாவனையை எதிர்க்கும் நடவடிக்கைகள் இதன் பின்னர் தீவிரம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துண்டுப்பிரசுரங்கள், சுவரொட்டிகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். போதைப்பொருள் பாவனையை குறைக்க முற்படும் திணைக்களங்களாக இலங்கை பொலிஸ் திணைக்களம், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு, மதுவரித் திணைக்களம், சிறைச்சாலைகள், சுங்கவரித் திணைக்களம், அரச திணைக்களங்கள் காணப்படுகின்றன. இவற்றின் மூலம் போதைவஸ்து கடத்தல்காரர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். போதைப்பொருள் பாவனையைத் தடுப்பதற்கு வழிகளாக பாவனையின் பாதிப்புக்களை நன்கறிந்து கொள்ளல், தான் பாவனை செய்வதில்லை என சபதம் எடுத்தல் வேண்டும். இவ்விழிப்புணர்வை பல மட்டங்களிலும் ஏற்படுத்தல் வேண்டும். மாற்றீடான நல்ல பல பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கைகளை வளர்த்துக்கொள்ளல், பாவனையால் வரும் வீண் விரயத்தை உணர்ந்து அதற்குரிய செலவை சேமிப்பாக மாற்றுதல், வீடுகளில் நடைபெறும் விசேட தினங்களில் பாவனையைக் குறைத்து தவிர்த்து நல்ல விடயங்களில் செலவழித்தல், பாவனையாளரை தலைமைப்பதவியில் அமர்த்தி பொறுப்புணர்வை ஏற்படுத்தல். பாவனைக்கு வற்புறுத்தப்படும் பட்சத்தில் வேண்டாம் இல்லை என சொல்லப் பழகுதல் போன்றவற்றினை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

மேலும் நாட்டு மக்களின் அச்சுறுத்தலற்ற பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக்கொடுப்பது அரசாங்கத்தின் கடமையே. அதாவது கடத்தல்காரர்களை இனங்கண்டு அவர்களை கைது செய்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போதைவஸ்து கடத்தல்காரர்களுக்கு எதிராக மரண தண்டனையை அமுல்படுத்தப்போவதாகக் கூறியிருந்தார். அது செயல்வடிவம் பெற வேண்டும்.

இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம் அரசாங்கம் தனது நாட்டு மக்களை போதைப்பொருள் என்ற கொடிய அரக்கனிடம் இருந்து பாதுகாத்து, நாட்டில் நிலவிய உள்நாட்டுப் போரினை வெற்றிகொண்டதுபோல போதைக்கு எதிரான யுத்தத்தினையும் வெற்றிகொண்டு நாட்டையும், மக்களையும் முன்நோக்கிய நிலையான அபிவிருத்திப்பாதையில் இட்டுச்செல்ல முன்வர வேண்டும். இதுவே நாட்டு மக்களின் எதிர்பார்ப்புமாகும்.

Comments