Me Too பேச வேண்டும்! | தினகரன் வாரமஞ்சரி

Me Too பேச வேண்டும்!

பத்திரிகைகள், அதிலும் குறிப்பாக இந்திய பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், சமூக வலைத்தளங்கள் என்று எங்குபார்த்தாலும் அவற்றின் இன்றைய பேசுபொருள் Me Too என்பதாகவே இருக்கின்றது. பாலியல் துன்புறுத்தல் எனக்கும்தான் நடந்தது (Me Too) என்பதை பாதிக்கப்பட்ட பெண்களே உலகுக்கு சொல்வதற்காய் உருவாக்கப்பட்ட ஹாஷ் டாக் பற்றிய கதையாடல்களே அவை.

இது உருவாக்கப்பட்டு ஏறத்தாழ ஒரு வருடத்துக்குப் பிறகு இந்த Me Too மீண்டும் பிரபலமடைந்து வருகின்றது. அதுவும் இம்முறை அசுர வேகத்தில்!

‘மீ டூ’ இயக்கம் பற்றி ஒரு வருட காலத்துக்குப்பிறகு மீண்டும் பேச வைத்திருப்பவர் தென்னிந்திய பிரபல திரைப்படப் பாடகி சிம்மயி.

சுமார் பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன்னர், கவிஞர் வைரமுத்து தன்னிடம் முறைகேடாக நடக்க முனைந்தார் என்று சிம்மயி சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தனது இச்சைக்கு இணங்குமாறு பல வழிகளில் வைரமுத்து தன்னை மிரட்டினார் என்றும் சிம்மயி தனது பதிவில் தெரிவித்திருக்கின்றார்.

சுமார் பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவத்தை சிம்மயி ஏன் இப்போதுதான் வெளிப்படுத்தினார்? வைரமுத்து, கோடம்பாக்கத்தை ஆட்டிப்படைக்கும் தேவர் இனத்தைச் சேர்ந்தவர் மற்றும் தி.மு.க பிரமுகர் என்பதைத் தெரிந்துகொண்டே, இப்போது ஏன் அதனை வெளிப்படுத்தினார்? வைரமுத்துவின் இச்சைக்கு மறுத்த பின்னரும் சிம்மயி இவ்வளவு காலமும் ஒரு வெற்றிகரமான பாடகியாக உலா வந்தது எப்படி? சினிமாத்துறையில் இதெல்லாம் சகஜமானவை. அதையெல்லாம் அறிந்துதானே எல்லோரும் போகின்றார்கள்? என்று சிம்மயியின் குற்றச் சாட்டை சமன்படுத்தும் வகையில் பலவாறான விமர்சனங்கள், அவதூறுகள் பலராலும் சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்படுகின்றன.

இவையெல்லவற்றுக்குமான சிம்மயின் பதில், ‘நான் இப்போது சொல்லும்போது பிரபலத்துக்காக அல்லது ஏதோ அரசியல் நோக்கத்துக்காகச் சொல்கின்றேன் என்கின்றீர்களே, இப்போது நான் பல ஆயிரம் பாடல்களைப் பாடிய ஒரு பாடகி. இப்போது எனது கதையையே பொய்யென்றும் உள்நோக்கம் கொண்டதென்றும் சொல்வீர்களானால் அப்போது ஐந்தோ ஆறோ பாடல்களைப்பாடிய ஒரு வள ர்ந்துவரும் பாடகியாக இருந்தபோது இதையே சொல்லியிருந்தால் ஏற்றுக்கொண்டிருப்பீர்களா? என்பதாக உள்ளது.

பொதுவாகவே எந்தவொரு பிரச்சினை குறித்தும் உடனடியாக கருத்துக்கூறும் தமிழ் சினிமா வட்டாரங்கள் இது குறித்து சுமுக்கமாக இருக்கின்றன. காரணம், வைரமுத்து தமிழ் சினிமாவில் செல்வாக்குமிக்கவர் என்பதே. ஆனால் மாறாக அவ்வாறு கருத்துக்கூறும் சிலரும் சிம்மயியை தூற்றுகின்றனரே தவிர வைரமுத்து அவ்வாறான ஒரு காரியத்தைச் செய்திருக்க மாட்டார் என்று சொல்ல முன்வரவில்லை. திமுக பிரமுகரும் கலைஞர் கருணாநிதிக்கு மிகவும் பிடித்தமானவருமான வைரமுத்து மீதான குற்றச்சாட்டு, கலைஞர் உயிரோடிருந்தால் வெளியே வந்திருக்காது என்றும் சிலர் வாதிடுகின்றனர். ஆனால் அவ்வாறவர்களின் வாயை அடைத்திருக்கின்றது, தி.மு.க எம்பியும் கலைஞரின் மகளுமான கனிமொழி மீ டூ பற்றி தெரிவித்திருக்கும் கருத்து.

“Me Too பிரசாரம் சமூகத்தில் விவாதத்தையும் மக்களிடையே ஆய்வையும் உருவாக்க வேண்டும். உலகத்திற்கு உண்மையை கூற வேண்டும். இந்த முயற்சி பாலியல் சுரண்டல்களை தடுக்கும். முகத்திரைக்கு பின் இருக்கும் முகங்களை அடையாளம் காட்டுவதை பெண்கள் ஆதரிப்போம். குற்றம் புரிந்தவர்களிடம் கேள்வி கேளுங்கள், பாதிக்கப்பட்டவர்களிடம் கேட்டுக்கொண்டு இருக்காதீர்கள்' என்று பெண்கள் சார்பாக அமைந்திருக்கிறது கனிமொழியின் கருத்து.

இங்கு பத்திரிகைகளிலோ சமூக வலைத்தளங்களிலே சிம்மயி மீது குற்றச்சாட்டை முன்வைப்பவர்கள், ஏதோ சிம்மயிதான் “மீ டூ” இயக்கத்தை தோற்றுவித்தவர் போலவும், சினிமா உலகுக்கே சகஜமான விடயங்களை தனது பிரபலத்துக்காக அல்லது ஏதோவொரு அரசியல் தேவைகளுக்காகத் தூக்கிப்பிடிக்கின்றார் என்பது போலவும்தான் கருத்துக்கள் முன்வைக்கிறார்கள்.

“மீ டூ” எனும் ஹாஷ் டாக்கானது உருவானதென்னவோ சினிமாத்துறையினரால் தான்.

ஹொலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் ஹார்வி வைன்ஸ்டீனுக்கு எதிராகப் பாலியல் புகார் தெரிவித்த நடிகை ரோஸ் மெகாவெனுக்கு ஆதரவாக, அவரது தோழியும் நடிகையுமான அலிஸா மிலானோ கடந்த ஆண்டு உருவாக்கிய ‘மீ டூ’ எனும் ‘ஹேஷ்டேக்’ ஒரு இணைய இயக்கமாக உருவெடுத்தது.

பெண்கள் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்களை இந்த ‘ஹேஷ்டேக்’கைப் பயன்படுத்திப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினால், இந்தப் பிரச்சினை தொடர்பாக மக்களிடம் ஒரு புரிதலை ஏற்படுத்தலாம் எனும் நோக்கில் ஒரு பெரிய இயக்கமாக இதை முன்னெடுக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அதுதான் தற்போது நடக்கின்றது.

பாதிக்கப்பட்ட பெண்கள் பெரும் எண்ணிக்கையில் பேச முன்வந்ததும், மௌனத்தைக் கலைப்பது, அவமதிப்பை எதிர்கொள்வது, அவநம்பிக்கையைத் தகர்ப்பது, பாதுகாப்பான சூழலை உருவாக்குவது, சமூகங்களுக்கு அதிகாரமளிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக உலக அளவில் விவாதங்களை உருவாக்கியதும் இந்த இயக்கத்தின் முக்கிய பங்களிப்புகள்.

கடந்த வருடம் இந்தியாவின் ரயா சர்க்கார் என்பவர் கல்வியாளர்களினால் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தார். அவ்வாறு இலங்கையின் பல்கலைக்கழகங்களிலும், சில மாணவிகள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்படுவது பற்றி செய்திகளை அரசல் புரசலாக எங்கள் சமூக வலைத்தளங்கள் வெளிக்கொண்டு வந்திருக்கின்றன.

“மீ டூ”வின் மூலம் பல்வேறு பாலியல் துஷ்பிரயோகக் குற்றங்கள் சாட்டப்பட்டதால், இந்தியாவின் அமைச்சரான எம்.ஜே அக்பர் சில நாட்களுக்கு முன்னர்த னது பதவியை இராஜினாமா செய்ய வேண்டியதாயிற்று. அவர் பத்திரிகையொன்றின் ஆசியரியராக இருந்தபோது, பத்திரிகைக்கான நேர்முகத்தேர்வை ஹோட்டல் அறையொன்றின் கட்டிலில் இருந்தே மேற்கொள்வார் என பல இளம் பத்திரிகையாளர்கள் இவர் மீது குற்றம் சுமத்தியிருக்கின்றனர்.

சிம்மயியின் டுவிட்டர் குற்றச்சாட்டுக்கள் இலங்கையைச் சேர்ந்த பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை. இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர், உயர் அரசியல்வாதியொருவர் எனப் பலரும் அந்தப்பட்டியலில் உள்ளனர்.

தமது அரசுகளினாலும் சட்டங்களினாலும் நிவாரணங்களைப் பெற முடியாத, பாலியல் சுரண்டல்களுக்கெதிரான நிவாரணங்கள் கிடைக்காத பெண்கள் தங்கள் குரலை உரத்துச் சொல்வதற்கான தளமாகவும், அவ்வாறு சொல்வதன் மூலம் தாம் எதிர்கொண்ட, அவ்வளவு காலமும் மனதில் பூட்டிவைத்திருந்த உளைச்சலை வெளிக்கொணர்வதற்கான தளமாகவும் ‘மீடூ’ மாறியிருக்கிறது.

பெண் தனக்கு நேர்ந்த பல்வேறு அவலங்களை எளிதில் வெளியே சொல்ல முடியாத வகையிலேயே எமது சமூகம் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. எம்போன்ற இறுக்கமான சமூக அமைப்புக் கொண்ட நாடுகளில் மாத்திரமல்ல அமெரிக்கா போன்ற நாடுகளில்கூட தனக்கு நேர்ந்த அவலத்தை வெளிக் கொண்டுவரும் பெண்கள் மீது சேறு பூசப்படவே செய்கிறது. இது பாதிக்கப்படும் ஏனைய பெண்களின் வாயை இறுகப்பூட்டி விடுகின்றது.

இவ்வாறான இயக்கங்கள் எல்லாம் உணர்த்தும் பாடம் ஒன்றுதான்: பாலினம் என்பதையும் தாண்டி, இனம், சாதி, மதம், நிறம், பிராந்தியம், வயது, உடல்ரீதியான குறைபாடுகள், பாலினத் தேர்வுகள் உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையிலும் பாலியல் துன்புறுத்தல்கள் நிகழ்த்தப்படுகின்றன.

பாலியல் துன்புறுத்தல் என்பது இனம், சாதி ஆகிய காரணிகளினால் மேலும் தீவிரமடைகிறது. பாலியல் துன்புறுத்தல்களைத் தவிர்ப்பது, உதவி கோருவது, பாதிப்பிலிருந்து மீண்டு வருவது என்பன இனம், சாதி ஆகிய சமூக தராதரங்களில் உயர் நிலையில் இருக்கும் சமூகத்தோருக்கு ஓரளவுக்கேனும் சாத்தியமாகிறது.

“மீ டூ” என்பது ஒரு இணைய இயக்கம். இது சாதாரண அடித்தட்டு மக்களிடையே எவ்வாறு எந்தளவில் போய்ச்சேரும் என்பது கேள்விக்குறியே. ஆனாலும் அதிகளவில் பாலியல் ரீதியான சுரண்ல்களை எதிர்கொள்பவர்கள் என்ற வகையில் அடித்தட்டு மக்களின் பாலியல் பிரச்சினைகளைப் பேசுவதாகவும் “மீ டூ” மாறவேண்டும்.

சிம்மயி, கவிஞர் வைரமுத்துவுக்கெதிராக குற்றச்சாட்டு சுமத்தியபோதும் சட்ட ரீதியாக அதனை அணுகமுடியாதென்பதை அவர் அறிந்தேயிருந்தார். ஏனெனில் இவ்வாறான பாலியல் பேரங்கள் எல்லாம் அனேக சந்தர்ப்பங்களில் ஆதாரங்கள் காட்டி நிரூபிக்கப்படக் கூடியவையல்ல. அதனால் தான் சிம்மயி குற்றச்சாட்டை முன்வைத்த பல நாட்களுக்குப் பின்னர், காலம் பதில்சொல்லும் என்றும், நீதிமன்றில் குற்றச்சாட்டை எதிர்கொள்கின்றேன் என்றும் வைரமுத்து பதிலளித்திருக்கின்றார்.

பாலியல் ரீதியான சுரண்டல்களுக்குத் தண்டனை என்பதற்கப்பால் தனக்கு நேர்ந்த அவலத்தை, மனதில் இரகசியமாகப் பூட்டி வைத்திருந்த இரகசியத்தை வெளிக்கொணர பெண்ணுக்கான ஒரு சந்தரப்பமாகவே மீ டூ பார்க்கப்பட வேண்டும்.

கடந்த வருடம் எழுந்து சில நாட்கள் நீடித்த 'மீ டூ' அலைபோலல்லாமல் இம்முறை அது ஒரு பேரியக்கமாக உருக்கொள்ள வேண்டும்.

அனி

Comments