MeToo உளவியல் சார்ந்த வெற்றி | தினகரன் வாரமஞ்சரி

MeToo உளவியல் சார்ந்த வெற்றி

‘MeToo’ சமீப காலமாக ஆண்கள் மத்தியில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியிருக்கும் சொல் இது. சமூக வலைத்தளங்களில் MeToo பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தாலும் முழு உலகமுமே வெகுண்டெழுந்து வாசிக்கும் செயலியாக (App) இது விஸ்வரூபம் எடுத்துள்ளது. மேலைத்தேய நாடுகளிலே பிரபல்யம் அடைந்துள்ள MeToo அண்மையில் ஆசியாவையும் உலுக்கி வருகிறது. ஆண்களால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் பெண்கள், பதிவிறக்கம் செய்யும் தகவல்களால் பல பிரபல்யங்கள் முதல் சாதாரண ஆண்கள் வரை அனைவரையும் பீதியடைச் செய்துள்ளது.

MeToo இயக்கம் பெண்களுக்கு உளவியல் ரீதியான வெற்றியைத் தரும்.அதே வேளையில் எளிய பின்னணியில் உள்ள பெண்கள் இது போன்ற துன்புறுத்தலை சந்தித்தால் அதை எளிதாக​ கூற இயலுமா என்று தெரியவில்லை.

'ஆனால், பாலியல் துன்புறுத்தல் மற்றும் அத்துமீறல்களுக்கு எதிரான முயற்சி மற்றும் வெற்றிகளில் இது நிச்சயம் ஒரு நல்ல தொடக்கமாகும்.

Metoo என்பது அமெரிக்காவில் வாழ்ந்து வரும் ஆபிரிக்க பெண்மணியான Tarana burke (டரானா பேர்க்) என்பவரே இவ் இயக்கத்தை ஆரம்பித்தவர். இவர் ஒரு மனித உரிமை சிவில் செயற்பாட்டாளர். 2006 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இவ் இயக்கத்தை ஆரம்பித்த இவர், பெண்கள் தாம் எச்சந்தர்ப்பத்தில் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கோ அல்லது தொல்லைகளுக்கோ முகங்கொடுத்தோமா அதை தைரியமாக சமூகத்துக்கு சொல்ல வேண்டும் என்று பெண்களை வலுவூட்டும் செயற்பாடுகளில் ஈடுபட்டார். டைம்ஸ் சஞ்சிகை இவரை 2017 ஆம் ஆண்டின் சிறந்த நபர் என்று கௌரவப்படுத்தியது. ஆனால் தற்போது தான் Metoo பிரபல்யமடைந்துள்ளது.

Metoo தகவல்களால் அச்சமடைந்திருக்கும் ஆண்கள் பற்றி பிபிசி ஒரு பத்திரிகையாளரின் மனந்திறந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளது.

சமூகத்திலுள்ள பெரும்பாலானவர்களை போல் ஒவ்வொரு ஐந்து நிமிடமும் தன்னை அறியாமலேயே வாட்ஸ்ஆப், சமூக ஊடகங்களை கைபேசியில் பார்ப்பவர்களில் பத்திரிகையாளரான நானும் ஒருவன். ஆனால், கடந்த நான்கு -ஐந்து தினங்களாக, "Ms XYZ mentioned you in their tweet" என்பது போன்ற அறிவிப்பு எனக்கும் வந்திருக்குமோ என்ற பயத்தில் கைபேசியை கையில் எடுப்பதற்கே தயங்குகிறேன்.

என்னை போன்ற ஆயிரக்கணக்கான ஆண்கள் ட்விட்டரில் பூதாகரமாகி வரும் MeToo-வில் தாங்களும் சிக்கிவிடுவோமோ என்ற பயத்தில் கடந்த ஒரு வாரமாக வாழ்ந்து வருகிறோம்.

ஆண்களின் பாலியல் அத்துமீறல்களை பெண்கள் ட்விட்டரில் MeToo என்ற பதத்தை பயன்படுத்தி வெளிக்கொணரும் நிகழ்வு கடந்த ஒருவருடத்திற்கு முன்பு ​ெஹாலிவூட்டில் தொடங்கி, பிறகு ​ெபாலிவூட்டை அடைந்து, தற்போது இந்திய ஊடகங்களையே வந்தடைந்திருக்கிறது. பல வகைகளில் தங்களிடம் அத்துமீறிய ஆண்களின் செயல்பாட்டை பல தசாப்தங்களாக மனதில் மூடி வைத்திருந்த பெண்கள், கடைசியாக தற்போது முழு மனவுறுதியுடன் அதை ட்விட்டரில் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

ஆனால், சட்டரீதியாக பார்க்கும்போது தற்போது வெளிவந்துள்ள குற்றச்சாட்டுகளில் எத்தனை உண்மையான குற்றச்சாட்டுகள் என்பதில் தெளிவில்லாமல் பலர் சமூக ஊடகங்களில் போரிட்டு வருகிறார்கள்.

ட்விட்டரில் எழுத்துகள் மூலமாகவும், படங்கள் மூலமாகவும், ஸ்கிரீன் ​ெஷாட்டுகள் மூலமாகவும் வெளிவந்துள்ள பல்வேறு குற்றச்சாட்டுகளை நான் மறுக்கிறேன் என்றோ, எதிர்த்து பேசுகிறேன் என்றோ இதற்கு அர்த்தமல்ல. ஆனால், சில விடயங்களில் மற்றொரு கோணமும் இருக்கும். இந்த இயக்கம் தனிப்பட்ட முறையில் பெண்கள் தங்களுக்கு வேண்டாதவர்களை பழித் தீர்த்துக்கொள்வதற்காக தவறான வழியில் பயன்படுத்தபடுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.

என்னுடைய ட்விட்டர் செய்தியோடையில் பலரும் MeToo இயக்கத்தை செம்மையாகவும், நீர்த்துப்போகாமலும், நேர்மையுடனும் தொடர்ந்து செயல்பட வைப்பதற்கு வலியுறுத்துகின்றனர்.

MeToo வாயிலாக குற்றச்சாட்டுக்குள்ளான ஒருவர், தன் மீதமான குற்றச்சாட்டுகள் குறித்து மறுப்பு கூட தெரிவிக்காமல், "இன்றைய காலகட்டத்தில் பெண்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு எதிர்வினையாற்றுவதென்பது வீண் செயல். ஏனெனில், பெண்கள் என்ன கூறுகிறார்களோ அது..." என்ற பதிலோடு முடித்துக்கொண்டார்.

MeToo வாயிலாக வெளிவந்த குற்றச்சாட்டுகள் குறித்து பல ஊடக நிறுவனங்களில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. அதுமட்டுமன்றி, பல ஊடகங்களின் ஆசிரியர்கள் பதவி விலகினர், சிலர் தாங்கள் பல வருடங்களுக்கு முன்னர் அத்துமீறிய பெண்களிடம் குற்றத்தை ஒப்புக்கொண்டு, மன்னிப்பு கேட்க முயன்று வருகிறார்கள்.

நீங்கள் இதுவரை பெண்ணொருவரை தொந்தரவு செய்துள்ளீர்களா? என்ற கேள்விக்கு உங்களது அடிமனது கூறும் பதில் இதற்கு போதுமானது.

இந்த கடுமையான சூழலை எப்படி கடந்து செல்வது?

முதலில் இந்த MeToo என்பதை ஆண்களை மையமாக கொண்ட ஒன்றாக மட்டும் ஆக்கிவிட வேண்டாம். இதன் பிறகும் உங்களுக்கு பயமிருந்தால், பெண்களின் உலகத்திற்கு வாருங்கள். ஆம், தங்களது வாழ்க்கையின் பெரும்பகுதியை பெண்கள் இப்படித்தான் கழிக்கிறார்கள்.

இரண்டாவதாக, MeToo இயக்கம் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ள அளவையும், இதுபோன்ற ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தைகள் சமூகத்தில் எப்படி ஆழ வேரூன்றியுள்ளது என்பதையும் புரிந்துகொள்ளுங்கள்.

மூன்றாவதாக, இனியாவது பெண்களிடம் தவறாக நடந்துகொண்ட உங்களது நண்பர்களை புகழ்வதை, பாராட்டுவதை நிறுத்திவிட்டு, அதன் வீரியத்தை யோசித்து பாருங்கள்.

உங்களது ஆண் நண்பர்கள் குழுவில், பைத்தியக்காரத்தனமாக பேசும் விடயங்கள் எப்படி ஒரு பெண்ணுக்கு வாழ்நாள் முழுவதும் பயத்தை உண்டாக்கும் நிகழ்வாக மாறுகிறது என்பது குறித்து பெரும்பாலானவர்கள் புரிந்துகொள்வதில்லை.

இனி பெண்களிடம் தவறாக நடந்துகொள்ளும் உங்களது நண்பர்களை ஆதரிப்பதை நிறுத்துங்கள், இல்லையெனில் நீங்களும் அந்த குற்றத்திற்கு துணை போனவராக கருதப்படுவீர்கள்.

கிட்டத்தட்ட கடந்த ஒருவாரமாக பரபரப்பை உண்டாக்கி இருக்கும் இந்த விவகாரம், ஆண்களின் செயல் மற்றும் பேச்சுரீதியிலான நடத்தையில் சுய-விழிப்பை உண்டாக்கியுள்ளது. பணியிடத்தை பெண்களுக்கு பாதுகாப்பானதாக்கும் முயற்சியில் இது ஒரு படி முன்னேறியதை காட்டுகிறது.

ஆனால், இந்த MeToo இயக்கம் ஆண்களை தனிமைப்படுத்தி, மோசமான நிலைக்கு இட்டுச்செல்லும் ஒன்றாக மாறாது என்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். ஆண்கள் தங்களது நிகழ்கால செயல்பாடுகள் எதிர்காலத்தில் பிரச்சினைகளை உண்டாக்கலாம் என்று உணர்வதை போன்று, ட்விட்டுகள் நீக்கப்படலாம், ஆனால் ஸ்கிரீன் ​ெஷாட்டுகள் அப்படியே இருக்கும் என்பதை பெண்களும் உணர வேண்டும்.

Comments