ராமண்ணே | தினகரன் வாரமஞ்சரி

ராமண்ணே

“அண்ண இந்த முறை 5ஆம் வகுப்பு கொலர்சிப் பரீட்சையில எங்கட பெடியள் நல்ல மார்க் எடுத்திருக்கினம் என்ன.”

“எங்கட பெடியள் நல்ல மார்க் வாங்கினம் என்டா சந்தோசமான விசயந்தான். ஆனா இந்த முறை பரீட்சையில கப் அடிச்சது யார் தெரியுமா?”

“கப் அடிச்சதோ. யார் என்டு தெரியேல்லியே?”

‘இங்க பார் சின்னராசு. பரீட்சையில அதிக மார்க் வாங்கேல்ல. ஆனா ஒரு பிள்ளை பேர் வாங்கிப் போட்டுது. சரியே?”

“பேர் வாங்கினா போதுமென்ன,”

“உந்தப் பிள்ள பரீட்சையில பேர்வாங்கினது எப்பிடி தெரியுமா. உவை மத்தவையளப்போல கையால பரீட்சை எழுதேல்ல.”

“பின்ன காலால எழுதினவளே?”

“காலால இல்லப்பா வாயாள எழுதினவ.”

“வாயாள எழுதினவளே. மெய்யே சொல்லுறியள்.”

“உண்மையத்தான சொல்லுறனான். அப்படித்தான் பேப்பரில போட்டுக்கிடக்கு. உவவுக்கு கையும் காலும் இயங்காது. உவ ஒரு மாற்றுத் திறனாளி. வாயாள பிரஸை பிடிச்சுக்கொண்டு நல்லா சித்திரம் வரைய முடியும். நல்லா பாட்டு பாடவும் இயலும்.”

“உவ எப்பிடியண்ண பாடசாலைக்கு வாறவ?”

“எங்கட பாடசாலையில இந்த முறை 5ஆம் வகுப்பு கொலர்சிப் பரீட்சைக்கு 5 பிள்ளையள அனுப்பினனாங்கள். 5 பேரில தினுசாதான் அதிக அளவில ஊனமான மாணவி. உவ வாயாலதான் பரீட்சை எழுதுறா என்டு முன்னமே சொல்லியிருந்தனாங்கள். என்டபடியா அதுக்கு ஏற்ற மாதிரி ஏற்பாடு செஞ்சி வச்சிருந்தினம். உவள் ஒரு மாற்றுத்திறனாளி என்டபடியா மத்த பரீட்சார்த்தியள விட 10 நிமிசம் அதிகமா குடுக்கிறதுக்கும் அனுமதி கொடுத்திருந்தவை. நாங்கள்பரீட்சைக்கு அனுப்பிய 5 பேரில அதிக மார்க் எடுத்தவை தினுசாதான். அது எங்களுக்கு சந்தோசமாகவும் பெருமையாகவும் இருக்குதென்டு உந்தப் பிள்ளையின்ட பாடசாலை பிரின்சிபல் சொன்னவையென்டு பேப்பரில போட்டுக்கிடக்கு.’

“சந்தோசமில்லாம இருக்குமே.”

“மாவனல்லையில அசோகபுர விசேட பாடசாலைய உது மாதிரி மாற்றுத் திறனாளி பிள்ளையளுக்கென்டு 1972 ஆரம்பிச்சிருக்கினம். உந்த பாடசாலைய ஆரம்பிக்கிறதுக்கு முன்னோடியா இருந்தவர் பிரயன் டி கிரெட்சர் என்ட வெளிநாட்டுக்காரர்.”

“ உது மாதிரி விசயங்கள வெளிநாட்டினர்தான செய்வினம்.”

“உந்தப் பிள்ளை தினுசா கொழும்பிலதான் பிறந்திருக்குது. பிள்ளையின்ட அம்மா அப்பா குருணாகலை ஆக்கள். பிள்ளையின்ட நிலையைக்கண்டு அவை மிகுந்த கவலையடைஞ்சவை. அவவை காப்பாத்துறது லேசில்லயென்டு டாக்டர்மார் சொல்லியிருக்கினம். அவை பிள்ளைய அசோகபுர விசேட பாடசாலையின்ட தாய் பாடசாலையான பிரீதிபுர பாடசாலையில சேத்திருக்கினம். அங்கிருந்துதான் அசோகபுர பாடசாலைக்கு போனவை. சின்னக் காலத்திலயே உந்த பாடசாலைக்கு போனதால பாடசாலையில நடக்குற எந்த நிகழ்ச்சியென்டாலும் உவ தன்னால முடிஞ்ச அளவில பங்குபற்றுவா என்டு அவவின்ட பிரின்சிபல் சொல்லுறா.”

“ உந்த பிள்ளைக்கு நல்ல ஆர்வமென்ன?”

“உது மாதிரி பிள்ளையளிட்ட குறை இருந்தாலும் தங்களிட்ட திறமை இருக்குது என்டதை காட்ட அவை மிகுந்த அக்கறை காட்டுவினம். அவையின்ட சில அவயங்களில குறை இருக்கும் ஆனா மற்றைய அவயங்களில இரட்டிப்பு மடங்கு செயற்பாடு இருக்கும். உதை அவை சரியா பயன்படுத்திக் கொள்வினம்.”

“நீங்கள் சொல்லுறது சரிதான். எங்களுக்கு வாயால வரையேலுமெ. உந்தப் பிள்ளை வாயால வரையுதென்ன?”

“ஓம் சின்னராசு. யாரிட்டை இருந்தாலும் திறமைய மதிக்க வேணும் கண்டியோ?”

“மற்றவை மதிக்காட்டியும் நாங்களாவது மதிப்பமென்ன.”

“திறமைய நாங்கள் எப்பவுமே மதிக்காமல் விட்டதில்ல. உனக்குத்தான் தெரியுமே. உது போலத்தான் தென்னிந்திய தமிழ் டி.வி நிகழ்ச்சி ஒன்டில கண் தெரியாத ஒரு பிள்ளை பாட்டுப்பாடுது. கேட்கைக்க அருமையாக்கிடக்குது. அதுவும் பியானோ வாசிச்சிக்கொண்டுதான் பாட்டுப் பாடுது. நுல்ல திறமையான பெட்டை.”

“ஓமன்ன. நானும் கேட்டிருக்கிறனான். பெட்டை நர்லாப பாடுவா.”

“உவவின்ட பெயர்... சஹானா. இப்பத்தான் ஞாபகத்துக்கு வருகுது. பியானோவில கட்டையைத் தட்டிப்போட்டு அது என்ன சுரம் என்டு ஆங்கிலத்தில சொல்லுவா. சத்தத்தை காதால கிரகிச்சிப்போட்டு நமக்கு சொல்லேலுமே?”

“எங்களுக்கோ. ஒரு பாட்டை 100 தடவை கேட்டுப்போட்டு வார்த்தையள கேட்டாலும் சொல்லத் தெரியாது. பிறகெங்க பாட்டுப் பாடுறது.”

“உப்பிடிப்பட்ட மாற்றுத்திறனாளியள் எங்கட நாட்டிலயும் இந்தியாவிலயும் மட்டுமில்ல. உலகம் முழுக்க இருக்கினம்.”

“உப்படிப்பட்ட எத்தின பேரண்ண இருப்பினம்?”

“இங்க பார் சின்னராசு. உலகத்தின்ட சனத்தொகை 7 பில்லியன். இதில 15 சத வீதம், அதாவது 1 பில்லியனுக்கு மேல ஏதோ ஒரு குறையோடத்தான் இருக்கினம். உதில 80 சத வீதம் அபிவிருத்தி அடைஞ்சி வரும் நாடுகளிலதான் இருக்கினம். குறையோட இருக்கிறவையில 100 மில்லியனுக்கு மேல சிறுவர்கள் என்டு புள்ளி விபரங்கள் கூறுது.”

Comments