வெட்டுவாய்க்கால் பகுதி மக்களுக்கு நீதி கிடைக்குமா? | தினகரன் வாரமஞ்சரி

வெட்டுவாய்க்கால் பகுதி மக்களுக்கு நீதி கிடைக்குமா?

காரைதீவு வெட்டுவாய்க்கால் பகுதியில் இடம்பெறும் சட்ட விரோதமான செயற்பாடுகள் உரிய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தும், அவர்களின் அசமந்த போக்கினால் எதிர்காலத்தில் பாரிய இயற்கை அனர்த்தம் ஒன்றினை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வெட்டுவாய்க்கால் பிரதேசமானது, பொதுமக்கள் அதிகமாக செறிந்து வாழும் ஒரு பகுதியாகும். இந்த பகுதியில் கடலோரத்தை அண்டியதாக பாரிய சதுப்பு நிலமொன்று காணப்படுகின்றது. மழைக் காலங்களில் வடிகின்ற வெள்ள நீரானது, குறித்த சதுப்பு நிலத்தை வந்தடைந்து பின்னர் கடலுடன் கலக்கின்றது. இதனால் வெள்ள நிலமைகள் ஏற்படும் சாத்தியங்கள் குறைவாகக் காணப்படுகின்றது.

கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் அனுமதி இல்லாமல் அபிவிருத்தி எனும் போர்வையில் இச்சதுப்பு நிலத்தை அடையாளம் இல்லாமல் ஆக்குவதற்கான நடவடிக்கைகள் கடந்த 10 மாதங்களாக அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கட்டட இடிபாடுகள், குப்பைகள் மற்றும் ஏனைய கழிவுப் பொருட்களினால் இச்சதுப்பு நிலம் நிரப்பப்பட்டு வருகின்றது.

இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்திய கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் மாவட்ட இணைப்பாளர் எம்.ஐ.எம் ஜெஸூர், கடந்த 5 மாதங்களுக்கு முன்னராக கிழக்கு மாகாண ஆளுனர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளர், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர், மத்திய சுற்றாடல் அதிகார சபை உதவிப்பணிப்பாளர், காரைதீவு பிரதேச செயலாளர், சம்மாந்துறை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருக்கு தெளிவுபடுத்தியிருந்தார்.

இருந்தும் இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாத நிலையில் தொடர்ச்சியாக குப்பைகளும் ஏனைய கழிவுப் பொருட்களும் போடப்பட்டு வருகின்றன. இச்செயற்பாடானது சட்ட விரோத மண் அகழ்வுக்கு வழிவகுப்பதுடன், மழை காலங்களில் வெள்ள நிலமைகளுக்கும் வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

எனவே இந்த விடயம் தொடர்பில் உடனடியாக கவனம் செலுத்துமாறு அப்பகுதி மக்கள் அதிகாரிகளைக் கோரியுள்ளனர்.

 

அகீல் ஷிஹாப்

Comments