வினை விதைத்தவன் | தினகரன் வாரமஞ்சரி

வினை விதைத்தவன்

விடியற்காலையிலே ட்ரிங், ட்ரிங், என்று ரெலிபோன் மணி ஒலித்துக் கொண்டிருந்தது. கணேசன் வேலைக்குச் செல்வதற்காக அவசரமாக ரெடியாகிக் கொண்டிருந்தான்.

“இந்தப் போன் வேற நேரம் காலம் தெரியாமல் சிணுங்கித்து இருக்கும்” என்று முணுமுணுத்தபடி ரிசீவரை எடுத்து காதில் வைத்து “ஹலோ” என்றாள் கணேசன் மனைவி உமா.

மறுபக்கத்திலிருந்து “எப்படியிருக்காம்மா, என்ட பேரப்பிள்ளைகள் சுகமாக இருக்கிறாங்களா?” என்று பார்வதியின் குரல் கேட்டதும் “ஐயோ இதுவா” என்று சலித்துக் கொண்டு பதில் எதுவும் சொல்லாமல் “என்னங்க உங்களுக்குத்தான்” என்று ரிசீவரைக் கீழே வைத்தாள் உமா.

“யாரது வேலைக்குப் போற நேரத்தில நேரத்தை வீணடிச்சிட்டு” என்று கூறியவாறே ரிசீவரை எடுத்து “ஹலோ என்றான் கணேசன். “அப்பா கணேசா, எப்படி இருக்காய்யா, உன்னைப் பாக்கணும் என்று துரை ஐயாட்ட கேட்டன். அவருதான் போன் பண்ணிக் குடுத்தாரு. நீ நல்லா இருக்கயா ராசா” என்று பாசத்துடணும் ஏக்கத்துடனும் கேட்டாள் பார்வதி.

“ஏம்மா எத்தனை தரம் சொல்லிருக்கன், நான் நேரம் கிடைக்கும் போது உன்னைப் பாக்க வருவன் என்று. என்னத்துக்கு இப்போ வேலைக்கு போற நேரத்தில போன் பண்ணி நேரத்தை வீணடிச்சிட்டு இருக்கா?” என்று எரிஞ்சு விழுந்தான் கணேசன்.

“இல்லப்பு விடியற்காலையிலே கெட்ட கெட்ட கனவாக் கண்டனான். அதுதான் உனக்கு ஒண்ணும் வரக்கூடாது எண்டு கோயில்ல அர்ச்சனை செய்திட்டு ஐயரிட்ட சொல்லி ஒரு தாயத்தும் வாங்கிட்டு வந்திருக்கன். அதைக் கொஞ்சம் வந்து வாங்கி இடுப்பில கட்டித்து போங்கப்பு. எனக்கு வேற ஒண்ணும் வேணாமய்யா” என்றாள் பார்வதி.

“எனக்கு ஒன்றும் வராது, தாயத்தும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம். நான் நேரம் கிடைக்கும்போது வாறன் இப்போ போனை வை” என்று கோபமாக ரசீவரை வைத்தான் கணேசன். “என்னங்க உங்கட அம்மா என்ன சொல்றாவு” என்று கேட்டாள் உமா. “அவக்கு வேற வேலை வேணுமே! இங்க இருந்தால் பிரச்சினை என்றுதானே முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டன். அங்க போயும் எனக்குத் தொல்லை குடுக்குது. இந்த மனுசி சீ..” என்று எரிச்சல்பட்டான் கணேசன். “சரி சரி பிள்ளைகளையும் விட்டுத்து வேலைக்கு போகணும் நான் வாறன்” என்று புறப்பட்டான் கணேசன்.

கணேசன் வங்கி ஒன்றில் முகாமையாளராகக் கடமையாற்றுகின்றான். அவனது மனைவி உமா, வேலைக்குச் செல்வதில்லை. பிள்ளைகள் பிறந்ததும் அவர்களைப் பார்த்துக் கொள்வதற்காக ஆசிரியர் தொழிலை விட்டு இடையிலே நின்று விட்டாள். அரவிந், அக்சனா என்று இரண்டு பிள்ளைகள். கணேசனுக்கு இரண்டு வயது இருக்கும் போதே தனது கணவனை இழந்தவள் பார்வதி. யுத்தம் காரணமாக பதினெட்டு வயதிலே பார்வதிக்கு அவளது பெற்றோர் கூலி வேலை செய்யும் முப்பது வயதுடைய தியாகராஜனைத் திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். தியாகராஜனும் ஒரு நாள் கூலி வேலைக்குச் சென்று விட்டு வீடு திரும்பும்போது வெடிப்பட்டு இறந்து போனான். விதைப்பவர்களிடம் குறைந்த விலைக்கு நெல்லு வாங்கி அதனைத் தன் கையாலே அவித்துக் குற்றி அரிசியாக்கி ஊரூராகச் சென்று விற்று, அந்த வருமானத்திலே கணேசனைப் படிப்பித்தவள். பார்வதி நல்ல துப்பரவு என்பதனாலும் கைக்குத்து அரிசி என்பதாலும் நிறைய வாடிக்கையாளர்கள் பார்வதிக்கு இருந்ததால் ஓரளவிற்கு வருமானத்தைப் பெற்று தன் மகனைப் படிப்பித்தவள் பார்வதி.

இன்று கணேசனின் கையில் புரளும் ஒவ்வொரு காசுத்தாளும் பார்வதி அன்று சிந்திய வியர்வைத் துளிகள். வெயில் மழை பாராது தன் மகனுக்காக அல்லும் பகலும் உழைத்தவள். அதுமட்டுமில்லாது அவள் தன் கணவனை இழக்கும் போது அவளுக்கு வயது இருபது மட்டுமே. இன்னுமொரு திருமணம் செய்து கொள்ளாமல் கணேசனுக்காகத் தன் வாழ்ககையை அர்பணித்தவள். எத்தனையோ மரநிழல்களின் கீழ் அவள் வழித்தெறிந்த வியர்வைத்துளிகள் முத்தாய் உருண்டோடியிருக்கின்றன. எந்தக் கஷ்ரமும் தெரியாமல் தன் மகனை வளர்த்த மகன்தான் இன்று பார்வதியை சாரதா முதியோர் இல்லத்தில் விட்டிருந்தான்.

சாரதா முதியோர் இல்லத்தில் ஐம்பதுக்கு மேற்பட்ட பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளால் கொண்டு வந்து விடப்பட்டிருந்தனர். அவர்களில் பார்வதியும் ஒருத்தி. முதியோர் இல்லத்தில் இருக்கும் ஒவ்வொரு தாய் தந்தையும் ஒவ்வொரு நாளும் பேசி சிரித்து உணவுண்டு உறங்கினாலும் தங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடன் இருக்க முடியவில்லையே என்ற ஏக்கத்துடனும் தங்கள் பிள்ளைகளே தங்களை இங்கே கொண்டு வந்து விட்டுவிட்டார்களே என்ற கவலையுடனும் எல்லோரும் ஒரு​ெவாருக்கொருவர் தங்கள் கவலைகளைப் பகிர்ந்து கொண்டு பல ஆசைகளை மனத்தில் புதைத்துக் கொண்டும் வாழ்பவர்கள். பார்வதியும் அப்படித்தான். தன் மகன் போனில் பேசியதை மனத்திலிருத்தாது தாயத்தை எடுக்க வரவில்லையே என்று எல்லோரிடமும் சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்தாள். தன் மகனுக்கு ஏதும் ஆபத்து நேர்ந்து விடுமோ என்று பரிதவித்தாள். மகன் வருவான்; வருவான் என்று தாயத்தை முந்தானையில் முடிந்து வைத்துக் கொண்டு காத்திருந்தாள் பார்வதி. ஆனால், கணேசன் வரவேயில்லை. அந்த ஏக்கமே அவளின் உயிர் பிரிவதற்கும் காரணமானது.

கணேசனுக்குத் தகவல் சொல்லப்பட்டது. “அப்பாடா தொல்லை விட்டிச்சி” என்று மனத்தில் எண்ணிக் கொண்டாள் உமா. பார்வதியின் சடலத்தை எடுக்க வந்தான் கணேசன். “இந்தாப்பா உன் அம்மா உனக்கு வாங்கி வைத்திருந்த தாயத்து” என்று பார்வதியின் முந்தானையில் முடிந்திருந்ததை அவிட்டுக் கொடுத்தார் துரை ஐயா.

துரை ஐயா, சாராதா இல்லத்தை நடத்துபவர். அவருக்கு வயது வெறும் முப்பது மட்டுமே. ஆனால், அவரை சிறியவர்கள் பெரியவர்கள் என்ற வேறுபாடின்றி துரை ஐயா என்றுதான் அழைப்பார்கள். அந்தளவற்கு அத்தனை முதியவர்களையும் மிகவும் அன்பாகவும் கண்ணியமாகவும் நடத்துபவர். தாயத்தை வேண்டா வெறுப்பாக வாங்கிக் கொண்டு, “எனக்கு நேரமில்லை சடலத்தை எடுத்திட்டுப் போகலாமா? என்றான் கணேசன்.

“தேவையில்லை. பார்வதி அம்மாக்கு எல்லாக் காரியத்தையும் இங்கே செய்திட்டம். நீங்க வாய்க்கு அரிசியைப் போட்டுக் காலையும் கழுவி முட்டி உடைச்சா சரி. என்ன முட்டி உடைப்பீங்கதானே” என்று கேட்டார் துரை ஐயா. துரை ஐயாவை கோபமாகப் பார்த்தான் கணேசன். பார்வதியின் ஈமைக்கிரியைகள் அனைத்தும் முடிந்தன. பார்வதி பத்திரமாக வைத்திருந்த தாயத்தை போகும் வழியிலே எறிந்து விட்டுச் சென்றான் கணேசன்.

காலச்சக்கரம் வேகமாக உருண்டோடியது. கணேசனின் பெண் பிள்ளை திருமணம் முடித்து வெளிநாடு சென்றாள். மகனைத் தொழில்நுட்பம் சார்ந்து படிக்க வைத்ததால், அவன் வெளிநாட்டிலே செட்டிலாகினான். இதனால் கணேசனும் உமாவும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்கள். ஏதும் கதைப்பது என்றால், பக்கத்து வீட்டுக் கோபாலனுடன் மட்டுமே. கோபாலன் பார்வதியை முதியோர் இல்லத்தில் விடவேண்டாம் என்று சொல்லப்போய் அவனுடன் வாக்குவாதப்பட்டு நீண்ட காலம் கதைக்காமலிருந்தவன் கணேசன். இப்போது கொஞ்சக் காலமாகத்தான் அவனுடனும் கதைக்கின்றான் கணேசன். எப்போதாவது மகனும் மகளும் போன் பண்ணி “அப்பா நான் கொஞ்சம் பிஸி ரைம் கிடைக்கிறப்போ எடுக்கிறன்” என்று சொல்லிவிட்டு வைத்துவிடுவார்கள். அந்தப் போணுக்காக காத்திருப்பதே கணேசனின் முழுநேர வேலை. ஒருநாள் போன் மணி ஒலித்தது. ஆவலாக தூக்கி காதில் வைத்தார் கணேசன் “ஹலோ அப்பா நான் விரும்புற பிள்ளையை எடுக்க வேண்டியிருக்கிறதால, உங்களை எடுக்க முடியாது. ஒரு வருடம் போகட்டும், உங்களை எடுக்கிறன்; சொரி அப்பா” என்று போனை வைத்தான் மகன் அரவிந். தூக்கிவாரிப் போட்டது கணேசனுக்கு. அப்படியே தூணில் சாய்ந்தார். தன் மகன் ஒரு பெண்ணை விரும்பிய விசயமே தனக்குத் தெரியவில்யையே! இத்தனை வருடம் வளர்த்த எங்களை விட இப்போ வந்தவள் முக்கியமாகி விட்டாளே! என்று எண்ணும் போது அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தூணில் சாய்ந்தவர் எழுந்திருக்கவில்லை. தன் பிள்ளைகளைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தார். கடைசிக் காலத்தில் தனக்குக் கொள்ளி போடக்கூட யாருமில்லையே என்று யோசித்தவனுக்கு இரத்த அழுத்தம் கூடியது. கால், கைகளை அடித்து அவதிப்பட்ட கணேசனைக் கண்ட உமாவுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. ஓவென்று ஒப்பாரி வைத்த சத்தத்தில் கோபாலன் ஓடி வந்து வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றான். கணேசனுக்கு ஒரு கையும் காலும் இழுத்து விட்டது என்று வைத்தியர் சொன்னதும் உமா ஒப்பாரி வைத்து அழுதாள். கணேசனுக்கும் தன் நிலை தெரிய வந்தது. தனக்கு இந்த நிலைமையா? என்று எண்ணி வருந்தினான். மகனுக்கும் மகளுக்கும் தகவல் சொல்லப்பட்டது. தனக்கு இப்போதுதான் சிட்டிசன் கிடைத்ததால், உடனே வரமுடியாது என்று மகனும், கணவருக்கு லீவில்லை என்று மகளும் காரணம் கூறினார்கள். “இதெல்லாம் பிள்ளைகளா? பெத்தவங்க சாகப்போறாங்க என்று தெரிஞ்சும் வாராமலிருக்கிறாங்களே” என்று சலித்துக் கொண்டாள். வைத்தியசாலையிலிருந்து வீட்டுக்கு வந்தான் கணேசன். கோபாலன் கணேசனுக்கு ஆறுதல் கூறிக்கொண்டிருந்தான். ரெலிபோன் மணி ஒலித்தது. கோபாலன்தான் ரிசீவரை எடுத்து “ஹலோ” என்றான் “ஹலோ நான் அரவிந் பேசுறன் என்றதும் “சொல்லப்பா நான் கோபால் அங்கிள் பேசுறன்” என்றதும் “ஓ அங்கிளா? நான் உங்களோடதான் பேசணும் என்று நினைத்தேன் அங்கிள். உங்களுக்குத் தெரியும்தானே! அப்பா இருக்கிற நிலைமைக்கு வெளிநாட்டுக்கு எடுக்கிறது சாத்தியமான விசயமல்ல. அவரால் தனியாக ஒன்றுமே செய்ய முடியாது. அதனால், வீட்டை வித்திட்டு அவங்களை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடலாம் என்று இருக்கன். அவங்களுக்கும் தனியாக இருக்கின்ற உணர்வு இருக்காது. நான் மாதம் மாதம் காசு போட்டு விடுறன். நீங்கள் எனக்கு ஓர் உதவி செய்யணும், அவங்களை முதியோர் இல்லத்தில் சேர்த்து விடணும் அங்கிள்” என்றான் அரவிந். சிரித்து விட்டு, "சரியப்பா" என்று போனை வைத்தார்” கோபாலன். “என்னப்பா யாரது” என்றார் கணேசன். “உன்ட மகன் அரவிந்தான்” என்று அவன் கூறிய விடயத்தைக் கூறினான் கோபாலன். கணேசன் சிரித்துக் கொண்டே “இது எனக்கு கடவுள் கொடுத்த தண்டனை கோபால். என்னைக் கஷ்ரப்பட்டு வளர்த்த என் தாயை எவ்வளவு ஈசியாகத் தூக்கி எறிந்தேன். நீ கூட எவ்வளவு சொல்லியும் நான் கேட்கவில்லையே. வினை விதைத்தவன் வினையை அறுத்துத்தானேயாக வேண்டும். பெத்தவங்களை உதாசீனம் செய்யும் ஒவ்வொரு பிள்ளைக்கும் நான் ஒரு எடுத்துக்காட்டு நீ எனக்கு ஓர் உதவி செய். கடைசி காலத்தில் என் தாய் வாழ்ந்த இடத்திலே வாழ்ந்து செத்துப் போகணும். எங்களை சாரதா முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுவாயா?என்று கெஞ்சலாகக் கேட்டான் கணேசன்.

கணேசனின் ஆசைப்படி சாரதா முதியோர் இல்லத்தில் இருவரையும் சேர்த்துவிட்டான் கோபாலன். துரை ஐயா வயதாகியிருந்தாலும்; கணேசனைக் கண்டதும் “பார்வதி அம்மா மகன்தானே நீங்கள்” என்று அன்புடன் வரவேற்றுப் பார்வதி அம்மா வாழ்ந்த ரூம் இதுதான் நீங்க ரெண்டுபேரும் இங்கேயே தங்கிக்கொள்ளலாம்” என்று கூறிச் சென்றார் துரை ஐயா. கணேசனுக்கு ஒரே ஆச்சரியம் ஏனெனில், அங்கு பார்வதி அம்மாவின் போட்டோ சுவரில் மாட்டி மாலை எல்லாம் போடப்பட்டிருந்தது. அதைப் பார்த்ததும் கணேசன் தன் தாயின் ஒரு போட்டோ கூட தன்னிடமில்லையே என்று அழுதான். தன் அம்மாவின் போட்டோவுடன் வாழக்கிடைத்ததே பெரிய சந்தோசம் என்று எண்ணிக்கொண்டு போட்டோவில் தலை சாய்த்தான் கணேசன்.

Comments