பிரிட்டனின் லுவிஸ் ஹெமில்டன் தொடர்ந்தும் முன்னணியில் | தினகரன் வாரமஞ்சரி

பிரிட்டனின் லுவிஸ் ஹெமில்டன் தொடர்ந்தும் முன்னணியில்

வருடா வருடம் நடைபெறும் பிரபலமான மோட்டார் வாகனப் போட்டியான போமி யுலா-1 மோட்டார் வாகன உலக சம்பியன் தொடரின் மற்றுமொரு போட்டி கடந்த வாரம் ஜப்பான் சுசூகா நகரில் நடைபெற்றது.

இது இவ்வருடத்துக்கான போமியுலா-1 சம்பியன் தொடரின் 16ஆவது சுற்றுப் போட்டியாகும்.

போமியுலா-1 வருடா வருடம் சர்வதேச மோட்டார் வாகன சம்மேளனத்தினால் நடாத்தப்படும் பிரபல்யமான போட்டித் தொடராகும்.

போமியுலா-1 2018 உலக சம்பியன் தொடரில் மொத்தமாக 20 சுற்றுப் போட்டிகள் நடைபெறுகின்றன. வழமை போல் இம்முறையும் வாகனம் ஓட்டுனர் மற்றும் அணி என இரு சம்பியன் கிண்ணத்துக்காக இப்போட்டிகள் நடைபெறுகின்றன.

கடைசியாக கடந்த வாரம் ஜப்பானில் நடைபெற்ற 16வது சுற்றில் மெர்சிடஸ் அணி சார்பில் கலந்துகொண்ட முன்னணி வீரர் 33 வயதான பிரிட்டனின் லுவிஸ் ஹெமில்டன் போட்டித் தூரத்தை 1 மணி 27 நிமிடம் 17 வினாடிகளில் ஓடி முடித்து முதலிடத்தைப் பெற்றார். இது இவ்வருடம் இவர் தொடர்ச்சியாக முதலிடம் பெறும் 4வது சந்தர்ப்பமாகும். இவர் இவ்வருடம் முடிவுற்ற 16 சுற்றுக்களில் இதுவரை மொத்தமாக 9 முதலிடங்களைப் பெற்றுள்ளார். இவர் மொத்தமாக இன்னும் நான்கு சுற்றுக்கள் மீதமுள்ள நிலையில் 331 புள்ளிகளைப் பெற்று முதலிடத்திலுள்ளார். இவரின் பிரதான போட்டியாளரான ஜெர்மனியின் செபஸ்டியன் வெட்டெல் (பெராரி அணி) 264 புள்ளிகளைப் பெற்று 2வது இடத்திலும் பின்லாந்து வீரர் வொல்டெரி போத்தாஸ் (மெர்சிடஸ் அணி) 207 புள்ளிகளுடன் 3வது இடத்திலுமுள்ளனர்.

இப்போட்டித் தொடர் முழுவதும் ​ஹெமில்டனுக்கு கடும் போட்டியாளராக கருதப்படும் ஜேர்மனியின் செபஸ்டியன் வெட்டல் (பெராரி அணி) கடந்த வாரம் ஜப்பானில் நடைபெற்ற சுற்றில் 3வது இடத்தையே பெற்றார்.

இதுவரை நடைபெற்ற 16 சுற்றுப் போட்டிகளின் பெறுபேறுகளின் அடிப்படையில் நடப்பு சம்பியனான லுவிஸ் ஹெமில்டன் பெற்றுள்ள புள்ளிகள் 331. 33 வயதுடைய இவர் 2008, 14, 15, 17ம் ஆண்டுகளில் போமியுலா-1 சம்பியனாகத் தெரிவானாவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது வரை இவர் இச்சுற்றில் சீனா, ஸ்பெயின், கனடா, பிரிட்டன், ஹங்கேரி, இத்தாலி, சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் ஆகிய 9 நாடுகளில் நடைபெற்ற சுற்றுகளில் முதலிடங்களைப் பெற்றுள்ளார். மேலும் இவர் கடைசியாக ஜப்பானில் நடைபெற்ற சுற்றுடன் தொடர்ச்சியாக நான்கு சுற்றுக்களிலும் முதலிடங்களைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னணியிலுள்ளார்.

இம்முறை இதுவரை இரண்டாவது இடத்திலுள்ள ஜெர்மனியைச் சேர்ந்த செபஸ்தியன் வெடோல் 264 புள்ளிகளைப் பெற்றுள்ளார். அவர் இத்தாலி பெராரி அணியைச் சேர்ந்தவர். 31 வயதான இவர் இதுவரை 2010, 11, 12, 13 ஆம் ஆண்டுகளில் போமியுலா-1 சம்பியனாகத் தெரிவாகியுள்ளார். ஹமில்டனுக்கு சிறந்த போட்டியாளராக கருதப்படும் இவர் 12 சுற்றுக்களின் முடிவு வரை லுவிஸ் ஹமில்டனுக்கு கடும் சவால் விடுத்து சொற்பப் புள்ளிகள் அடிப்படையில் பின்னடைந்திருந்தார். 12வது சுற்றுவரை இருவரும் தலா ஐந்து சுற்றிக்களிலேயே முதலிடங்களைப் பெற்றிருந்தனர். ஆனால் கடைசியாக நடைபெற்ற நான்கு சுற்றுகளில் இவர் பின்னடைவைச் சந்தித்ததால் புள்ளிப்பட்டியலில் நிரந்தரமாகவே 2ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

பின்லாந்தின் 29 வயதான வெல்டெரி போத்தாஸ் 207 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்திலுள்ளார். இவரும் மெர்ஸிடிஸ் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இவர் இரு முறை போமியுலா-01 சம்பியனாகத் தெரிவாகியுள்ளார்.

போமியுலா-01 2018ம் ஆண்டு சம்பியன் சுற்றில் இன்னும் 4 சுற்றுக்கள் மீதமிருக்கும் நிலையில் பிரித்தானியாவைச் சேர்ந்த லுவிஸ் ஹெமில்டனுக்கே இம்முறையும் சம்பியனாகும் வாய்ப்பு அதிகமாகவுள்ளது. அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் ஜெர்மனியைச் சேர்ந்த செபஸ்டின் வெட்டோல் மீதமுள்ள சுற்றுக்கள் அனைத்திலும் வென்றாலும் போமியுலா-1 சம்பியனாகும் வாய்ப்பு அரிதாகவேயுள்ளது. இவருக்கும் லுவிஸ் ஹெமில்டனுக்குமிடையில் 77 புள்ளிகள் இடைவெளியுள்ளதால் மீதமுள்ள போட்டிகளில் லுவிஸ் ஹெமில்டன் முதலிடத்தைப் பெறாவிட்டாலும் புள்ளிப்பட்டியலில் அவரது முதலிடத்துக்கு நெருக்கடி ஏற்படும் என கருத முடியாது. இச்சுற்றின் அடுத்த போட்டி எதிர்வரும் 21ம் திகதி அமெரிக்காவில் நடைபெறவுள்ளது.

போட்டியில் வெற்றிபெறுபவர்களுக்கு புள்ளிகள் பெறும் விபரம் வருமாறு:

இத்தொடரில் ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெறும் வீரர் 25 புள்ளிகளைப் பெறுவார்.

2ம் இடம் 18 புள்ளிகள, 3ம் இடம் 16 புள்ளிகள், 4ம் இடம் 12 புள்ளிகள், 5ம் இடம் 10 புள்ளிகள், 6ம் இடம் 8 புள்ளிகள், 7ம் இடம் 6 புள்ளிகள், 8ம் இடம் 4 புள்ளிகள் வீதம் வழங்கப்படுகின்றன.

எம். எஸ். எம். ஹில்மி

Comments