'தகுதிகள் இருந்தும் என்னை புறக்கணித்த ரணில் யார் யாருக்கெல்லாமோ பதவிகள் வழங்கினார்!" | தினகரன் வாரமஞ்சரி

'தகுதிகள் இருந்தும் என்னை புறக்கணித்த ரணில் யார் யாருக்கெல்லாமோ பதவிகள் வழங்கினார்!"

வடிவேல் சுரேஷ், நாட்டில் நடைபெற்றுள்ள அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சராக அண்மையில் பதவியேற்றுள்ளார். அமைச்சின் அலுவலகத்தில் அவரைச் சந்தித்து உரையாடியபோது அவர் தெரிவித்த கருத்துக்கள் இங்கு தொகுத்து தரப்படுகிறது.

"பெருந்தோட்ட இராஜாங்க அமைச்சராகப் பொறுப்பேற்ற 24 மணித்தியாலத்திற்குள் இரு விடயங்களைச் செய்திருக்கிறேன். முதலாவதாக, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு, தீபாவளி முற்பணத்தை பெற்றுக்கொடுப்பதற்காக கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் மூன்று தொழிற்சங்கங்கள், முதலாளிமார் சம்மேளனம், 22 கம்பனிகளின் நிறைவேற்று அதிகாரிகள், தொழில் அமைச்சின் ஆணையாளர், இலங்கை தேயிலைச் சபை மற்றும் இரப்பர் ஆராய்ச்சி சபைகளின் தலைவர்கள், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஆகியோரை அழைத்து அமைச்சின் அலுவலகத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறேன். இதுவரை காலமும் இவ்வாறான பேச்சுவார்த்தைகளை இந்த அமைச்சில் நடைபெற்றிருக்கவில்லை" என்று தனக்கே உரிய கம்பீரமான தொனியில் பேசு ஆரம்பித்தார் வடிவேல் சுரேஷ்.

"அடுத்தது தோட்டத்தில் வேலை செய்பவர்கள், வேலையில்லாமல் இருப்பவர்கள், ஓய்வூதியம் பெற்றவர்கள், தோட்ட உத்தியோகத்தர்கள் என பெருந்தோட்டத்துறை சார்ந்த இந்த மக்கள் பயன்படுத்திவரும் காணிகள் அவர்களுக்கே சொந்தமாகும். அவற்றுக்கு எதிராக எந்தவொரு தோட்டக் கம்பனியும் வழக்குபோட முடியாது. கடந்த காலங்களில் இவ்வாறு போடப்பட்ட ஆயிரத்திற்கு மேற்பட்ட வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. வழக்குகள் போடப்பட்டிருந்தால் அவற்றை வாபஸ்பெற நடவடிக்கைகளை உடன் எடுக்குமாறு அமைச்சின் சட்டத்துறை அதிகாரிகளுக்கு பணித்திருக்கிறேன்" என்றும் அவர் தெரிவித்தார்.

"தோட்டக் கம்பனியொன்று மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக ஹப்புத்தளை தம்பேதென்ன வீதியில் 3 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள செயார்வூட் தோட்ட குறிஞ்சி முத்துமாரியம்மன் கோவிலுக்கருகில் பழுதடைந்த பஸ் ஒன்றில் ஒரு குடும்பம் 4 பிள்ளைகளுடன் வாழ்ந்து வருவதாகத் தெரியவருகிறது. இவ்வாறான சம்பவங்கள் இனியும் ஏற்படக்கூடாது. தோட்டக் காணிகளில் குடியிருப்பவர்கள், மரக்கறி செய்கை மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் ஒரு அங்குலக் காணியையேனும் கம்பனிகளுக்கு திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அவர்கள் குடியிருக்கும் காணிகள் அவர்களுக்கே சொந்தமாகும். நான் அமைச்சராக இருக்கும் வரையில் அவ்வாறானவர்களுக்கு எதிராக வழக்குபோட இடமளிக்க மாட்டேன்" என்கிறார் அதிரடியாக!

பெருந்தோட்ட மக்கள் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்வதற்காக பாட்டன், பூட்டன் காலத்திலிருந்தே மரக்கறி செய்கையிலும் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். பெருந்தோட்டத்துறை அமைச்சின் கீழ் இயங்கிவரும் பெருந்தோட்ட கண்காணிப்பு பிரிவுவானது இதுவரை காலமும் கம்பனிகளுக்கு சார்பாகவே இயங்கி வந்திருக்கிறது. இவ்வாறான நடவடிக்கைகள் இனிமேலும் தொடரக்கூடாது என்பது இராஜாங்க அமைச்சரின் கொள்கையாக உள்ளது.

இனி, அவருடனான கேள்வி - _ பதில் உரையாடலுக்கு வருவோம்.

உங்களைப்பற்றி வெளிவரும் தகவல்கள் மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளன. நீங்கள் ஐ.தே.கட்சியை விட்டு விலகி விட்டீர்களா? ஐ.தே.கட்சியின் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் பதவியை இராஜினாமா செய்து விட்டீர்களா?

செயலாளர் பதவியை இராஜினாமா செய்யவில்லை. இது தொடர்பாக உத்தியோகபூர்வமான அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை. கட்சியை விட்டு விலக வேண்டிய அவசியமில்லை. நாட்டில் இருக்கும் அரசியல் யாப்பின்படி 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் யாருக்கு வேண்டுமானாலும் எந்தப் பதவியையும் வழங்கக்கூடிய அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கிறது. ஆகவே ஜனாதிபதி இராஜாங்க அமைச்சர் பதவியை வழங்கியிருக்கிறார். இந்த அமைச்சுப் பதவியின் மூலம் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சிறந்த சேவையாற்றப் போகிறேன்.

பிரதமர் ராஜபக்ஷவுக்கு பொன்னாடை போர்த்தியது மரியாதை நிமித்தம்தான். கட்சியை விட்டு ஓடியெல்லாம் போய்விட மாட்டேன் என்றீர்கள். ஆனால் மறுநாள் அமைச்சுப் பொறுப்பை ஏற்றீர்கள். உங்கள் நம்பகத் தன்மையில் இது பாதிப்பை ஏற்படுத்தாதா? வாக்களித்த மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

எனக்கு வாக்களித்த மக்கள் இதனை நன்கு புரிந்துகொண்டிருப்பார்கள். அவர்களுக்குத் தெரியும் நான் யாரென்று. மகிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றதும் அவருக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்ததற்கான காரணம் அவரது ஆட்சிக்காலத்தில் சுகாதார பிரதியமைச்சராக இருந்து எமது மக்களுக்கு சேவையாற்ற முடிந்தமைக்காகத்தான். மலையக இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு உட்பட மலையக அபிவிருத்தியில் கூடிய கரிசனையுடன் செயற்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளை ஒரு மரியாதையின் நிமித்தமும் அவரைச் சந்தித்தேன். இவ்விடயத்தை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெளிவுபடுத்தினேன். அதனை விளங்கி புரிந்துகொண்டால் சரி. அன்று மாலை ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து எனக்கு அமைச்சு பொறுப்பேற்குமாறு அழைப்பு வந்தது. இது மூன்றும் வெவ்வேறு நிகழ்வுகள். நான் அமைச்சுப் பொறுப்பேற்றதை சிலரால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.

இந்த அமைச்சு மலையகம் சார்ந்த எனக்கு கிடைத்தமை பெரிய வரப்பிரசாதமாகும். எனக்கு குறுகிய காலமாக இருப்பினும் கூட இதனை ஒரு சவாலாகவே கருதுகின்றேன். சவாலைச் சந்திப்பதில் எப்போதுமே எனக்கு மகிழ்ச்சிதான். 4 மாதங்கள் மட்டுமே ஊவா மாகாண தமிழ்க்கல்வி அமைச்சராக இருந்தேன். மூன்று நாட்களாக நடைபெற்ற ஊவா மாகாண சாஹித்திய விழாவை மிகவும் சிறப்பாக நடத்தினேன். 500 இற்கு மேற்பட்ட ஆசிரிய நியமனங்களை வழங்கியுள்ளேன். பாடசாலைக் கட்டடங்களை கட்டுவித்தேன்.

பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிட்டு 54 ஆயிரம் வாக்குகளைப் பெற்று பாராளுமன்ற உறுப்பினராகினேன். நடந்த தேர்தல்களில் வெற்றிலைச் சின்னத்திலும் போட்டியிட்டேன். யானைச் சின்னத்திலும் போட்டியிட்டேன். வண்ணங்கள், சின்னங்கள் எதுவாக இருந்தாலும் எண்ணங்கள் ஒன்றே. எனது எண்ணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. இன்று முகநூல்களில் எனக்கெதிராக தவறான பிரசாரங்கள், விமர்சனங்கள் போடப்படுகின்றன. அதைப்பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ள மாட்டேன். எனக்கென ஒரு இலக்கு இருக்கிறது. எனது பதவிக்காலத்தில் பெருந்தோட்ட மக்களுக்கு சிறந்த சேவை செய்ய வேண்டும் அதுதான் இலக்கு.

54 ஆயிரம் வாக்குகளை அளித்த பதுளை மாவட்ட மக்களையும் என்னையும் ஐ.தே.க அரசாங்கம் ஏமாற்றிவிட்டது. அவர்கள் அளித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. பதுளை மாவட்டத்திலிருந்து சிறுபான்மை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைச்சர் பதவி வழங்கியிருக்க வேண்டும். தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் தேசியப்பட்டியல் மூலம் அமைச்சராகும்போது வெட்கமாக இருந்தது.

வடிவேல் சுரேஸுக்கு வாக்களித்தால் சமூகத்திற்கு சேவை செய்வார் என்ற நம்பிக்கையில் என்னை பாராளுமன்றத்திற்கு அனுப்பினார்கள். அக்கனவு நனவாகும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக முன்னாள் பிரதமரிடம் நேரடியாகவே கேட்டேன். எனக்கு பெருந்தோட்ட மக்களுக்கு சேவையாற்றக்கூடிய விதத்தில் பிரதியமைச்சர் பதவியேனும் தாருங்கள் என்றேன். அது எமது உரிமையும் கூட. அதற்கு வெட்கப்பட வேண்டிய அவசியமில்லை. எனக்கு வேலை செய்யக்கூடிய தகுதியிருக்கிறது. எந்த மொழியிலும் பணியாற்ற தயாராக இருக்கிறேன். சகல தகுதிகளையும் கொண்டிருக்கும் என்னை புறக்கணித்துவிட்டு யார் யாருக்கெல்லாம் பதவிகளை வழங்கினார். இது என்ன நியாயம்? தேசியப்பட்டியலில் வந்த அமைச்சரிடம் சேர் சொல்லி நான் உதவி கேட்க வேண்டும். இது என்ன நியாயம்? தொடரந்து பிச்சை கேட்கமுடியாது. கெஞ்சிக்கேட்பது பிச்சை தட்டிக்கேட்பது உரிமை. இன்று அந்த உரிமை வந்திருக்கிறது.

வாக்களித்த மக்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?

பொறுமையாக இருங்கள். எனக்கு தொடர்ந்து வாழ்த்துகள் வந்தவண்ணம் இருக்கின்றன. வாக்களித்த மக்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. அமைச்சு பதவி கிடைக்கும் என்றும் 20 வருடகாலம் அரசியல் தொழிற்சங்க அனுபவம் கொண்டிருப்பதால் அதன் மூலம் வேலைத்திட்டங்கள் நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். அவர்களின் தேவைகளை கட்டம் கட்டமாக நிறைவேற்றக்கூடிய வாய்ப்பு இப்போது கிடைத்திருக்கிறது.

உங்களுக்கு கிடைத்திருக்கும் பதவி பெருந்தோட்ட கைத்தொழில்துறை. இத்துறை அபிவிருத்தி ஏற்றுமதி சம்பந்தப்பட்டது. அதாவது பெருந்தோட்ட கம்பனிகளின் நலன்களுக்காக நீங்கள் செயல்பட வேண்டும். நவீன் திசாநாயக்க அப்படித்தான் செயல்பட்டார். ஆனால் இந்தப் பதவியில் இருந்துகொண்டு தொழிலாளர்களுக்காக குரல் கொடுக்க முடியாதே!

நல்ல விடயம். நான் எதிர்பார்த்திருந்தது பெருந்தோட்டத்துறை சம்பந்தப்பட்டது எனது பூர்வீகம் மலையகம். இந்த அமைச்சு எனக்கு மட்டுமல்ல, மலையக சமூகத்திற்கு கிடைத்த பெரும் வரப்பிரசாதமாகும். அமைச்சு ஆறு மாதங்களேனும் தொடர்ந்திருக்குமானால், நிறைய மாற்றங்களைச் செய்யக்கூடியதாக இருக்கும். பெருந்தோட்ட உத்தியோகத்தர்கள், தொழிலாளர்கள் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகிறார்கள்.

கம்பனி தரப்பு கூறும் கூட்டு வேதனமான 940 ரூபாவுக்கு ஒத்துக்கொண்டு கையெழுத்திட வேண்டியிருக்கும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பாக இருக்கிறது. நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

அடிப்படைச் சம்பளம் ஆயிரம் ரூபா வழங்கப்படாவிட்டால் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதில் அர்த்தமில்லை. தொழிற்சங்கப் பிரதிநிதியாக இருந்து பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டிருந்தேன். இப்போது கூட்டு ஒப்பந்தத்திலிருந்து விலகிவிட்டேன். அமைச்சு பொறுப்பேற்றதும் அமைச்சின் சார்பில் என்ன செய்ய வேண்டுமோ அவையனைத்தையும் செய்வேன். எது எப்படி இருந்தாலும் எனது இலக்கை அடைய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

கடந்த காலங்களில் பெருந்தோட்டத்துறை அமைச்சினூடாக மானியம் வழங்கப்பட்டிருப்பதைப் பார்த்ததால் அதிர்ச்சியாக இருக்கிறது. தேயிலைக்கொழுந்து நிறுக்கும் தராசின் எடையை குறைத்து காட்டியிருக்கிறார்கள். இவ்வளவு காலமும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் மூலம் கம்பனிகளுக்கு கொடுத்த மானியங்கள் தொடர்பான செய்திகள் வெளிவராமலே இருந்தன.

அமைச்சு பொறுப்பேற்றதும் முழுநாளும் இங்கிருந்து அனைத்து விடயங்களையும் ஆராய்ந்தேன். தொழிலாளர்களுக்கான மலசலகூடங்களை அமைப்பதற்கும், தொழிற்சாலைகள் மற்றும் தேயிலை மலைப்பகுதிகளிலும் பெரட்டுக்களத்திலும் மலசலகூடங்களை அமைப்பதற்கும், மழைக்காலங்களில் தொழிலாளர்கள் பாவிக்கக்கூடிய சுகாதார பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அனைத்து உடைகளுக்கும் மானியம் வழங்கப்பட்டிருந்தது. அரசாங்கம் உட்கட்டமைப்பு வசதிகளை செய்துவரும் நிலையில் அமைச்சு மூலம் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பாக எதுவும் வெளிவரவில்லை. இது மிகவும் இரகசியமாகவே நடைபெற்றிருக்கிறது. இறப்பர் பால் வெட்டும் கத்திக்கு. தொழிலாளர்கள் இடுப்பில் கட்டும் சீட்டுக்கு, கொழுந்து கூடை வாங்க, தொழிற்சாலையில் புதிய இயந்திரம் வாங்க என பலகோடிக்கணக்கில் மானியம் வழங்கப்பட்டிருக்கிறது. கோடிக்கணக்கில் மானியம் வழங்க முடியுமென்றால் தொழிலாளர்களுக்கு தாராளமாக ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கியிருக்கலாம் அல்லவா?

தோட்ட குடியிருப்புகள் கிராமங்களாக மாறுவதும், வீடுகள் கட்டப்படுவதும் இன்று நடைமுறைக்கு வந்துவிட்டது. ஆனால் கிராம மயப்படுத்தல் என்பதுடன் இச்சமூகத்தின் பொருளாதார அபிவிருத்தியும் சம்பந்தப்படுவதால், சுயகைத்தொழில் முயற்சிகள், வெளிவாரி பயிர்ச்செய்கை என்பனவற்றை ஊக்கப்படுத்தவும் வேண்டும். இவ்வகையில் எவ்வாறு செயல்படுவதாக உத்தேசித்திருக்கிறீர்கள்?

இனியும் தோட்டம் தோட்டம் என்றிருக்க முடியாது. கிராம முறைக்கு மாற்றம்பெற வேண்டியது அவசியம். கிராம கட்டமைப்புக்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் சிறப்பாக நடந்திருக்கின்றன. எதிர்காலத்தில் அதனை முழுமையாக மாறுவதற்கான நடவடிக்கைகள் அவசியம். தற்போது பெருந்தோட்ட வீடமைப்பு அமைச்சராக ஆறுமுகன் தொண்டமான் பொறுப்பேற்றிருக்கிறார். பெருந்தோட்ட காணி எனது அமைச்சின் கீழ் இருக்கிறது. எனவே என் குருவான அவருடன் இணைந்து புரிந்துணர்வுடன் செயற்படுவதற்கு நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.

வேலாயுதம் பெருந்தோட்ட இராஜாங்க அமைச்சராக இருந்தபோது பெருந்தோட்டத் தொழிலாளர்களின் காணி உரிமை விடயத்தில் அமைச்சு மட்டத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது. இந்நிலையில் நீங்கள் எவ்வாறு முகங்கொடுப்பீர்கள்?

சாணக்கியமும், ஆளுமையும் இருந்தால் எதனையும் செய்து முடிக்கலாம். இந்த காலப்பகுதியில் இவற்றைச் செய்யாமல் வேறு எப்போதும் செய்து முடிப்பதாம்? நல்லதோ கெட்டதோ எனது வேலைத்திட்டத்தை இதனூடாக முன்னெடுத்துச் செல்லப் போகிறேன். முன்னாள் இராஜாங்க அமைச்சர் மறைந்த வேலாயுதம் அறிமுகப்படுத்திய பசுமை பூமித்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறேன்.

கம்பனிகள் வெளிவாரி பயிர்ச்செய்கைக்கு ஆதரவாகவே உள்ளன. ஆனால் காணிகள் வெளியாருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாவும் சொல்லப்படுகிறது. இந்த வெளிவாரி பயிர்ச்செய்கை பற்றி உங்கள் கொள்கை என்ன?

இந்த வெளிவாரி முறையில் எனக்கு எவ்வித உடன்பாடும் கிடையாது. தோட்டங்கள் இல்லாமல் போய்விடும். ஆரம்பம் நன்றாக இருந்தாலும் பின்னர் எதிர்காலத்தில் அது பாரிய பிரச்சினைகளை கொண்டுவரலாம். அமைச்சர் என்ற வகையில் எதிர்காலத்தில் இவ்வாறான திட்டங்களுக்கு இடமளிக்க மாட்டேன். நான் மக்களின் காவலனாக இருந்து வேலை செய்வேன்.

Comments