துரோகி முத்திரை குத்துவதா? | தினகரன் வாரமஞ்சரி

துரோகி முத்திரை குத்துவதா?

கிழக்கு அபிவிருத்திப் பிரதியமைச்சரும், தமிழ் தேசியக்

கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற

உறுப்பினருமான சதாசிவம் வியாழேந்திரனுடனான செவ்வி

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் கடந்த சனிக்கிழமைமாலை புதிய அரசாங்கத்தில் இணைந்து கொண்டு கிழக்கு அபிவிருத்திப் பிரதியமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார். இது தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் மாத்திரமின்றி வழக்கு கிழக்கு உள்ளிட்ட இலங்கை வாழ் தமிழ் மக்கள் மத்தியிலும், புலம் பெயர் தமிழ் மக்கள் மத்தியிலும் பெரும் வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளதோடு தமிழ் அரசியல் பரப்பில் பெரும் பரபரப்பையும் உண்டு பண்ணியுள்ளது.

இதுவரை காலமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள் கட்டிக்காக்கப்பட்டுவந்த ஒன்றுமை அற்ப சலுகைகளுக்காக குலைக்கப்பட்டுள்ளதாக, தமிழ் மக்கள் பெரும் அதிருப்தி வௌியிடுகின்றனர். இந்நிலையில் பிரதியமைச்சராக பதவியேற்றுள்ள சதாசிவம் வியாழேந்திரன், தான் பிரதியமைச்சர் பதவியை ஏற்று, புதிய அரசுக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்த காரணத்தை விளக்குகின்றார். தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

கேள்வி : தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்த நீங்கள் என்ன காரணத்திற்காக புதிய அரசாங்கத்தின் பக்கம் திடீரென சாய்ந்தீர்கள்?

பதில் : நான் தமிழ் தேசியக்கூட்டமைப்பில்தான் இன்னமும் இருக்கின்றேன், கூட்மைப்பை விட்டுச் செல்லவில்லை. ஆனால் ஜனாதிபதியின் அழைப்பின் பெயரில் கிழக்கு அபிவிருத்தி அமைச்சைப் பொறுப்பேற்றிருக்கின்றேன். கடந்த 3 வருடகாலமாக அரசுக்கு நாங்கள் ஆதரவு வழங்கி வந்திருக்கின்றோம். ஐக்கிய தேசிக் கட்சியையும், ரணில் விக்கிரமசிங்கவைப் பாதுகாப்பதை, ஆதரித்து கை உயர்த்தியுள்ளோம், வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கை உயர்த்தியுள்ளோம், ஆனால் இந்த 3 வருடத்தில் எதுவும் எமக்கு நடைபெறவில்லை. அந்த அரசாங்கத்தினால் சொல்லப்பட்ட விடயங்கள் எதுவும் நடைபெறவில்லை.

காணி விடுவிப்பு இடம்பெறவில்லை, கைதிகள் விடுவிப்பு, அபிவிருத்தி சார்ந்த விடயங்கள் எவையும் முழுமையாக இடம்பெறவில்லை. இவை அனைத்தும் முழுமையடையவில்லை. இந்நிலையில் வடக்கு, மேற்கு போன்ற மாகாணங்களுக்கு அபிவிருத்தி அமைச்சுக்கள் இருக்கின்றன. ஆனால் கிழக்கிற்கென அபிவிருத்தி அமைச்சு இல்லை. இதனை நான் தொடர்ந்து நாடாளுமன்றில் பேசி வந்திருக்கின்றேன். அண்மையில் நடைபெற்ற வடக்கு, கிழக்கு செயலணிக் கூட்டத்தில் எதிர்வரும் டிசம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் சகல காணிகளையும் விடுவித்து தருவதாக, புல்லுமலை தண்ணீர் பிரச்சினையைத் தீர்த்துத் தருவதாக ஜனாதிபதி உறுதியளித்திருந்தார். பட்டிப்பளைக் காணி விடுவிக்கப்பட்டுள்ளது, இவையெல்லாம் ஜனாதிபதியால் சாத்தியமாகியவையே. மாறாக கிழக்கு தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் கவனம் செலுத்துவதில்லை. கிழக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் நாங்கள் பல போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும், நடத்தியிருக்கின்றோம். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் அதனை உரிய இடத்திற்கு கொண்டு செல்லவும் இல்லை, அது பற்றி பேசவும் இல்லை. இவ்வாறு போராட்டங்களை தனித்துவமான முறையில் நடாத்துவதென்பது ஏனோதானோ என்று போகின்றது.

நாங்கள் தற்போதைய நிலையில் உரிமைக்குச் சமாந்தரமாக அபிவிருத்தியையும் கொண்டு செல்லவேண்டும். இதனைக் கதைத்துக் கொண்டிருக்கின்றோம், ஆனால் செயற்பாட்டிற்கு வருவதில்லை. அரச அதிகாரம் எம்மிடம் இல்லாததினால் எமது வளங்கள் எமது கண்ணுக்கு முன்னால் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. தற்போதைய நிலையில் அதிகாரங்களையும், பதவிகளையும் கொண்டிருப்பவர்கள் அதனை சிறந்த முறையில் கொண்டு செல்கின்றார்கள்.

எங்களை இன்றைக்கு துரோகி என பலவாறு சொல்லலாம். அதுபற்றிப் பிரச்சினை இல்லை, நாங்கள் யாருக்கும் எதிராகச் செயற்பட்டதில்லை. ஆனால் வடக்கில் உரிமை சார்ந்து பேசுவதற்கும், அபிவிருதி சார்ந்து பேசுவதற்கு ஆட்கள் இருக்கின்றார்கள். டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இராமநாதன் போன்றோர் அமைச்சர்களாக உள்ளார்கள், விஜயகலா மகேஸ்வரன் அமைச்சராக இருந்துள்ளார். அதே நேரம் உரிமை சார்ந்த பேசுவதற்கு ஆட்கள் அங்கே இருக்கின்றார்கள். ஆனால் கிழக்கு தொடர்பில், அமைச்சரவையில் எடுக்கும் முடிவுகள் பிழையாக இருந்தால் அதனை எதிர்ப்பதற்கு யாருமில்லாத நிலை உள்ளது.

கேள்வி : உங்களுக்குக் கிடைத்திருக்கின்ற அமைச்சுப் பதவியை வைத்துக் கொண்டு எவ்வாறான திட்டங்களை எதிர்காலத்தில் முன்னெடுக்கத் திட்டமிட்டிருக்கின்றீர்கள்?

பதில் : நான் ஜனாதிபதியிடம் முக்கிய கோரிக்கைகளை முன் வைத்திருக்கின்றேன், கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும், காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும், விதவைத் தாய்மார்களின் வாழ்வாதாரத்தில் முன்னேற்றம் காணவேண்டும். மாற்றுத்திறனாளிகளின் விடையத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டும். எமது உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படல் வேண்டும், கிழக்கிலுள்ள மீன்பிடி, விவசாயம் போன்றவற்றில் துரித கவனம் செலுத்தப்படல் வேண்டும். கிழக்கின் நில வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இவ்வாறான பல கோரிக்கைகளை நான் முன்வைத்துக் கொண்டும், எமது அமைச்சினூடாக அதிகளவு வேலைத்திட்டங்கைள மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளையும், முன்வைத்துதான் நான் ஆதரவு வழங்கி இந்த அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்றிருக்கின்றேன்.

கேள்வி : நாங்கள் வாக்களித்து வெற்றிபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் எம்மிடம் ஆலோசனை பெறாமல் திடீரென புதிய அரசு பக்கம் தாவிட்டாரே, இது வாக்களித்த எமக்கு அவர் செய்த பாரிய துரோகம் என மட்டக்களப்பு மக்கள் சமூக வலைத்தளங்களில் குற்றம் சுமத்துகின்றார்களே?

பதில் : தமிழ் மக்கள் மத்தியில் நான் முன்வைத்த உரிமை சார்ந்த, மற்றும் அபிவிருத்தி சார்ந்த, இரண்டு விடயங்களையும் வைத்துதான் எனக்கு 40000 ஆயிரம் மக்கள் வாக்களித்தார்கள். இதுவரையில் இவை இரண்டிலும் எதுவும் நடைபெறவில்லை. உரிமை சார்ந்த விடயத்தில் மக்களுக்கு எதுவும் பெற்றுக் கொடுக்கவில்லை. அனைத்து விடயங்களுக்கும் அரசாங்கத்திற்கு கையுயர்த்தி, கையுயர்த்திக் கொண்டுதான் இருந்தோம். ஆனால் இதுவரைக்கும் ஆனது ஒன்றுமில்லை. கடந்த அரசாங்தக்தில் ரணில் விக்கிரமசிங்கவைப் பாதுகாத்ததற்கு கையுயர்த்தியது தியாகம் என்றால், இதுவும் தியாகம்தான்

கேள்வி : உங்களை யார் புதிய அரசு பக்கம் அழைத்தார்கள்?

பதில் : நான் ஜனாதிபதியின் அழைப்பின் பெயரில்தான் போயிருக்கின்றேனே தவிர மற்றும்படி புதிய பிரதமரின் அழைப்பின் பெயரிலோ, அல்லது வேறு யாரினதும் அழைப்பின் பெயரிலோ நான் போகவில்லை.

கேள்வி : உங்களுக்கு வாக்களித்த மட்டக்களப்பு மக்களுக்கு என்ன கூறுகின்றீர்கள்?

பதில் : நான் மக்கள் மத்தியில் முன்வைத்த உரிமை, மற்றும் அபிவிருத்தி ஆகிய 2 விடயங்களையும் சமாந்தரமாக கொண்டு செல்ல வேண்டும். இவை இரண்டும் சமாந்தரமாக செல்லவில்லையாயின் கிழக்கில் நாங்கள் துடைத்தெறியப்படும் இனமாக மாறிவிடுவோம். ஆனால் நாங்கள் கடந்த 3 வருட காலத்தில் வெறுமனே கையுயத்தித்திய ஆட்களாவே இருந்திருக்கின்றோமே தவிர ஆனது ஒன்றுமில்லை. எதிர்க் கட்சியிலிருந்து கொண்டு வெறுமனே கையுயர்த்திக் கொண்டு இருந்ததை விடுத்து ஆளும் கட்சியில் இருந்து கொண்டு செயற்பட்டிருக்கலாம்.

கேள்வி : தமிழ் தேசியக் கட்சியில் அங்கத்துவம் வகிக்கும் புளொட் அமைப்பைப் பிரதிநிதித்துவப் படுத்தும் நீங்கள் உங்களுடைய புளொட் கட்சியின் தலைமைப் பீடத்திற்கோ அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை பீடத்திற்கோ தெரியப்படுத்திவிட்டா இந்த அமைச்சுப் பதவியை எடுத்தீர்கள்?

பதில் : நான் புெளாட்டிலிருந்தே அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகவே இல்லை. நான் இந்த அமைச்சைப் பொறுப்பேற்று வேலை செய்யவுள்ளேன். நான் ஒருபோதும் கூட்டமைப்பை விட்டு வெளியேறவில்லை. மாறாக (கூட்டமைப்பினர் எனது இவ்விடையம் தொடர்பில் எவ்வகையான முடிவை எடுப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்) அனைத்திற்கும் எதிர்க்கட்சியிலிருந்து கொண்டு ஆதரவு வழங்கிக் கொண்டு இருக்க முடியாது. கிடைத்திருக்கின்ற பதவியை, பொறுப்பை வைத்துக் கொண்டு மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்ற வேண்டும்.

கேள்வி : பெரியதொரு நிதியைப் பெற்றுக் கொண்டு தாங்கள் இந்த அமைச்சுப் பதவியை எடுத்துள்ளதாகவும், அடுத்து வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிடுவதாகவும், அதில் சிலவேளைகளில தோல்வியடைந்தால் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பிர் பதவி கோரியுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களிலும், மக்கள் மத்தியிலும், பரவலாகப் பேசப்பட்டு வருகின்றதே இதன் உண்மைத்தன்மை என்ன?

பதில் : சமூக வ​ைலத்தளங்களில் ஏதோ அறிந்ததை எழுதுகின்றார்கள், சரியானதை அறிந்து கொண்டு எடுதுகின்றார்கள் இல்லை. இந்த விடயத்தில் ஒரு சதம் காசு கூட எனக்கு யாரும் தந்ததுமில்லை. நான் கை நீட்டி வாங்கியதுமில்லை. கடந்த அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்கு ஒவ்வொரு முறையும் கையுயர்த்தியவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையும் தலா 2 கோடி ரூபா வாங்கி விட்டுத்தான் கையுயர்த்தியுள்ளார்களா என எம்மாலும் கேள்வி எழுப்ப முடியும். எதனோல் தொழிற்சாலைக்கு எதிராக போராடும்போதும், தண்ணீர் தொழிற்சாலைக்கு எதிராகவும் போராடும் போது இவ்வாறுதான் காசு வாங்கிக் கொண்டு செயற்படுகின்றார் என தெரிவித்தார்கள்.

இச்சந்தர்ப்பத்தில் நான் அமைச்சுப் பதவி எடுத்ததற்கும் இவ்வாறுதான் கூறுகிறார்கள். இதனை கூறுபவர்கள் எவ்வாறு நிரூபிக்க முடியும், ஒரு சல்லிக் காசுகூட வாங்கவும் இல்லை, வாங்கப்போவதும் இல்லை.

 

 

Comments