சவூதி அரேபியா மேற்கினால் தனிமைப்படுத்தப்படுகிறதா? | தினகரன் வாரமஞ்சரி

சவூதி அரேபியா மேற்கினால் தனிமைப்படுத்தப்படுகிறதா?

உலக அரசியலில் சவூதி அரேபியா மீதான நெருக்கடி அதிகரித்துக் கொண்டு செல்கிறது. பத்திரிகையாளரான ஜமால் காஸோஜியின் படுகொலையானது சர்வதேச மட்டத்தில் அந்த நாட்டின் அரசியலை ஸ்தம்பிதம் அடையச் செய்யுமளவுக்கு மாறியுள்ளது. ஊடக சுதந்திரம் பற்றிய உரையாடல் மேற்கிடம் வளர்ந்துள்ளமையும் அதன் பிரதிபலிப்புக்கு காரணமாகும். சுதந்திரம் சார்ந்த உரையாடல் வலிமைகுன்றிய நாடான சவூதி அரேபியாவில் இத்தகைய மேற்கின் அரசியல் நடவடிக்கை எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது கேள்வியாகும்.இதனை விளங்கிக் கொள்வதே இக்கட்டுரையின் நேக்கமாகும்.

முதலில் சவூதி அரேபியா மீதான தடைகளை மேற்கொண்ட நாடுகளை நோக்குவோம்.

ஆரம்பத்தில் அமெரிக்கா சவூதி அரேபியா மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக அறிவித்த போதும் நடைமுறையில் அவ்வாறு செயல்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா பிரான்ஸ்−ஜேர்மனி மற்றும் சுவிஸ்லாந்து பொருளாதார ரீதியிலும் மற்றும் இராணுவ தளபாட ரீதியிலும் தடை விதிப்பதாக அறிவித்துள்ளன.

இதன் அடிப்படையில் சவூதி மீதான அணுகுமுறை புதிய திருப்பத்தை நோக்கியுள்ளதாக தெரியவருகிறது. இதற்கு மேலதிகமாக துருக்கியின் நடவடிக்கையும் மேற்காசிய வட்டகையில் ஐரோப்பாவின் தீர்மானத்தை திசைதிருப்பியுள்ளது எனலாம். துருக்கிக்கும் சவூதிக்குமான போட்டி அரசியலை தீர்த்துக் கொள்ளும் சந்தர்ப்பமாக கருதும் துருக்கி இதனை பெரிதுபடுத்தி செயல்பட முனைவதாக சவூதி செய்தி வெளியிட்டுள்ளது.

எதுவாயினும் துருக்கியின் நடவடிக்கை என்பதைவிட சவூதியின் அரசியல் மற்றும் பொருளாதார அமைப்பில் மாற்றம் மேற்கொள்வது பற்றிய தீர்மானம் மிக முக்கியமானதாகவுள்ளது. உலகில் எத்தனையோ பத்திரியாளர்கள் படுமேசமாக கொல்லப்பட்டு அச்சுறுத்தலுக்கும் உள்ளாகும் சந்தர்பத்தில் மெளனம் சாதித்த ஐரோப்பா இந்த விடயத்தை ஏன் அதிதீவிரமானதாக கருதுகின்றது என்பது முக்கியமானதே. அப்படியாயின் சவூதியரேபியா பொறுத்து ஏதோ ஓரம்சம் நிகழவுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. அல்லது அப்பத்திரிகையாளன் மேற்கின் நலன்களுக்குரியவர் என்பதாக அமைந்திருக்க வேண்டும். இதில் இரண்டாவது அவர் ஒரு அமெரிக்கப் பத்திரிகையாளர் அமெரிக்கன் போஸ்ட் பத்திரிகையின் பத்தி எழுத்தாளர். அதற்காகவே அமெரிக்கா கர்ச்சித்துவிட்டு அமைதியாகிவிட்டது. அது மட்டுமன்றி ட்ரம்ப் பத்திரிகைக்கும் பத்திரிகையாளருக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் உலகம் அறிந்ததே.

அப்படியான சூழலில் அவர் ஒருபோதும் ஜமாலுக்கு ஆதரவாளனாக செயல்பட மாட்டார். இதனை ஜமாலின் துருக்கிய காதலியின் கருத்துக்களிலிருந்து விளங்கிக் கொள்ள முடியும். அதாவது அமெரிக்காவினதும் உலகத்தினதும் உயர்ந்த அமைப்பான வெள்ளை மாளிகை அழைத்த போது அமெரிக்க ஜனாதிபதி ஜமாலின் படுகொலை தொடர்பாக சவூதியிடம் பணம் வாங்கிக்கொண்டு உண்மையை மறைப்பதாக குற்றம்சாட்டியதுடன் அழைப்பை நிராகரித்திருந்தார் என்பதுவும் கவனிக்கத்தக்கது.

அப்படியாயின் ஏன் ஐரோப்பிய நாடுகள் அதிக கவனம் செலுத்துகின்றன. சவூதியின் முடியாட்சி முறையினால் எத்தகைய மாற்றத்தையும் மேற்கொள்ள முடியாதுள்ளது என்பதை அவை கடந்த காலத்தில் உணர்ந்துள்ளன. மேற்காசிய அரசியலில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் படிப்படியாக மேற்கின் இருப்பை முற்றாக தகர்க்க ஆரம்பித்துள்ளன. இதில் இன்னுமே மேற்குடன் நெருக்கமாக உள்ள நாடுகளில் முதன்மையானது சவூதியாகும். அதன் போக்கானது இலகுவில் ஆட்டங்காணக் கூடியதாக உள்ளது. அதற்கு அடிப்படையில் சவூதியின் அரசியல் கட்டமைப்பு மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பது அவசியமானதென ஐரோப்பா கருதுகிறது. இதில் இஸ்ரேலுக்கும் சவூதிக்குமான உறவு முக்கியமானது. இத்தகைய மறுசீரமைப்பு மேற்காசியாவையும் இஸ்ரேல் சவூதி உறவையும் நெருக்கமானதாகவும் வலிமையுடையதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டது.

இத்தகைய வலிமை சாத்தியமாக அமைந்தால் பெரும் எடுப்பில் வளர்ந்து வரும் ஈரான், ரஷ்யா, சீனாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்த முடியாது விட்டாலும் சவாலானதாக அமையலாம் என்பதே இதன் உள்நோக்கமாகும். தற்போதைய சவூதியானது இஸ்ரேலிய மூதாதைகளின் ஆட்சியாயினும் அங்கு வலிமையடைந்துள்ள மன்னனின் ஆதிக்கத்தையும் மேற்கு நினைப்பதை மாற்றமுடியாத சூழலையும் தந்துள்ளது. இதனால் இத்தகைய அரசியல் போக்கினை மாற்றுதல் அவசியமானது.இதற்கான சந்தர்ப்பமே ஜமாலின் படுகொலையின் பிரதிபலிப்பாகும். ஏற்கனவே சவூதி மன்னன் முழுமையான அளவில் இல்லாதுவிட்டாலும் இராணுவத்தையும் புலனாய்வுத்துறையையும் மறுசீரமைக்க முயன்றுள்ளார். அதனை கட்டுப்படுத்தும் திறனை மீளவும் மன்னனுக்கே உரியதாக ஆக்கியுள்ளார். அதில் நிதிப் பிரமாணங்களை ஐரோப்பிய நாடுகளிலிருந்து தருவித்துக் கொண்டு கட்டமைப்பையும் அதிகாரத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதே மேற்கின் குழப்பமாகும். எனவே இதிலிருந்து மீள்வதென்பது மேற்குக்கு அவசியமானது. மேற்கைப் பொறுத்தவரை சவூதியின் ஆட்சித்துறையின் பங்கினை தமக்கு ஏற்ப ஒரு போலி ஜனநாக மரபுக்கு பயணித்தால் போதுமானது. அதனை எட்டுவதறகு தற்போதைய சந்தர்ப்பம் அவசியமானது. ஜமாலின் படுகொலை இத்தகைய முழு அரசியலையும் பிரதிபலிப்பதாகும்.

இதில் முக்கியமான விடயம் இராணுவ ஆயுத தளபாடங்களின் இறக்குமதியை கட்டுப்படுத்துவதே ஆகும். அது பெருமளவுக்கு சவூதியை உடனடியாகப் பாதிக்கின்ற விடயம். அதனை அடிப்படையாகக் கொண்டே சவூதி மேற்காசியாவில் நிலைத்திருக்க முடியும் என்பதுடன் ஏனைய சக்திகளை கையாளும் வலிமையை பெறும் நிலையை எட்டமுடியும். அதனை சாத்தியப்படுத்த முடியாது விட்டால் ஐஎஸ் இன் நடவடிக்கை மற்றும் யெமன் விவகாரம் என்பனவற்றில் சவூதி நெருக்கடியை சந்திக்கும் அதனை மேற்கு பார்த்துக் கொண்டிருக்குமா? அதாவது சவூதி வீழ்வதை மேற்கு அனுமதிக்குமா? நிச்சயமாக அதற்கான வாய்ப்பினைக் கொடுக்காது. தற்போதைய வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு சவூதி மீதான அதீத செல்வாக்கினை செலுத்துவதே மேற்கின் உபாயமாகும்.

இதனை விளங்கிக் கொள்ள இலங்கையில் நிகழும் அரசியல் கொதி நிலையை மேற்கு எப்படி கையாளுகின்றது என்பதை வைத்துக் கொண்டே புரிந்து கொள்ளமுடியும்.

எனவே சவூதி அரேபிய விவகாரம் மேற்கின் நிகழ்ச்சி நிரலுக்குள் இயங்குவதற்கான முயற்சியாகவே ஜமாலின் படுகொலை பயன்படுத்தப்படுகிறது. அதனை தீர்த்துக் கொள்ளவே படுகொலை விடயம் பெரியளவில் பேசப்படுகிறது.

அதனை முன்னிறுத்தி மேற்கின் கையறுநிலையிலுள்ள அரபு வசந்தத்தை மீளவும் புத்துயிர் பெறவைக்க முடியும் என்பதே இதன் பிரதான உத்தியாகும். இதனூடாக மேற்காசியாவில் கைவிட்டுப் போகும் அரசியல் விம்பத்தினை மேற்கு தம்வசபடுத்த முடியும் எனக் கருதுகிறது. இஸ்ரேலின் பலஸ்தீனம் மீதான தாக்குதல் சவூதியின் யெமன் மீதான தாக்குதலும் மேற்காசிய அரசியலில் அதிக முக்கியத்துவம் வகிக்கின்றன.

இது மேற்கின் நிகழ்ச்சி நிரலை பலப்படுத்தும் விடயமாகும் ஏற்கனவே அமெரிக்கா பணி செய்தது போல் ஐரோப்பிய அரசுகளும் எதிர்காலத்தில் தமது இருப்பை கருதி சவூதி மீதான தடைகளை தகர்த்துவிடும் வாய்ப்பு அதிகமாக உண்டு.

Comments