இந்தியாவில் தீபாவளி | தினகரன் வாரமஞ்சரி

இந்தியாவில் தீபாவளி

தீபாவளி எனும் பண்டிகை நரகாசுரனை அழித்தது, ராவணனைக் கொன்றது, ஒளித் திருவிழா என பல்வேறு காரணங்களுக்காக குறிப்பிட்ட காலக் கட்டத்தில் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் மட்டுமல்ல பெயர்களும் பலவாறு அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் தீப ஒளித் திருநாள் என்று அழைக்கப்படும் இந்த பண்டிகை வட மாநிலங்களில் நரக் சதுர்த்தி என்று அழைக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அங்கு ஓரிரு நாட்கள் முன் பின் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதைவிட முக்கியமான விடயம் என்னெவென்றால் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் மிகவும் வித்தியாசமான முறையில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. கோவாவில் தீபாவளி கொண்டாடப்படுமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். ஆனால் கோவாவில் கொண்டாடப்படும் தீபாவளி நமக்கு புதியதாக இருக்கும். அது மிகவும் வித்தியாசமானது. இரண்டு முதல் மூன்று நாட்கள் தீபாவளி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை கோவாவில் நரக சதுர்த்தி தினத்திலேயே தொடங்கப்பட்டுவிடும். வீடுகளை சுத்தம் செய்து அலங்கரித்து தோரணங்கள் தொங்கவிட்டு, வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் தீபாவளியை வரவேற்கின்றனர். கோவாவின் தீபாவளி கொண்டாட்டத்தில் ஒரு விடயத்தை மட்டும் நாம் மறந்துவிடக்கூடாது. அதை தவறவிடவும் கூடாது. அதுதான் நரகனின் உருவ பொம்மை. அத்துடன் கிருஷ்ணரின் பொம்மையும் கூட. கிருஷ்ணர் நரகாசுரனை எதிர்த்து வதம் செய்ததை கொண்டாடும் வகையில் இந்த விழா மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்படும். புனித திருவிழாவாக நரகசுரன் பொம்மை எரிக்கும் விழா நடக்கும். அதனுடன் கூடவே வெடிகளையும் பட்டாசுகளையும் கொளுத்தி போட்டு தீபாவளியை வரவேற்கின்றனர். ஜெய்ப்பூரில் தீபாவளி பிங்க் சிட்டி என்று அழைக்கப்படும் ஜெய்ப்பூரில் தீபாவளி களைகட்டும். தீப ஒளி என்று அழைக்கப்பட்டாலும், தீபங்களால் மின்னும் அழகுடன் சேர்த்து வண்ண மின் விளக்குகளும் ஒளிரவிடப்படும்.ஜெய்ப்பூரில் தீபாவளி, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வீடுகளோடு வரவேற்கப்படுகிறது. புத்தாடை உடுத்தி இல்லங்கள் தோறும் பண்டிகைகளை வரவேற்கின்றனர் மக்கள். வண்ண விளக்குகளின் மின்னும் அழகை கண்டு ரசிப்பதா, புனித தீபத்தின் ஒளியில் எண்ணங்களை தவழ விடுவதா என்று குழம்பிடக்கூடும். அம்ரித்சரில் தீபாவளி கோலாகலமாக கொண்டாடப்படும். இது இங்கு சீக்கிய பண்டிகையோடு இணைந்து கொண்டாடப்படுகிறது. இரண்டு பண்டிகைகளை ஒரே நேரத்தில் கொண்டாடுகிறார்கள் இவர்கள். மின்னும் தங்க ஒளி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தங்க மண்டபம் சுற்றிலும் அழகிய அம்சங்களால் நிறைந்து காணப்படும் ஒளியில் நம்மை மறந்து ரசிக்க ஏதுவாக இருக்கும். இந்த பண்டிகையின் முக்கிய அம்சமே தங்க கோவில்தான். என்னதான் தீபாவளி இந்து மதப் பண்டிகையாக கூறப்பட்டாலும், சீக்கியர்களும் இதன் நினைவைக் கொண்டாடுகின்றனர். ஆனால் அவர்கள் வெடி வெடிப்பதில்லை. மகிழ்ச்சியின் நகரமான கொல்கத்தாவில் தீபாவளி குதூகலமாக கொண்டாடப்படுகிறது. ஆனால் இங்கு பெயர்தான் வேறு.. காளி பூசை. கிருஷ்ணரும் இல்லை ராமரும் இல்​ைல.. இது காளியின் வதம் என்று இந்த பண்டிகையை கொண்டாடுகிறார்கள். காளி தேவி அரக்கர்களை கொன்ற நினைவில் இந்த பண்டிகை கொண்டாடப்படுது. கொல்கத்தாவில் அதிக அளவு வெடிகள் வெடிப்பதில்லை. அவர்கள் இந்த பண்டிகையை ஒலி இல்லா ஒளித் திருவிழாவாகவே கொண்டாட நினைக்கின்றனர். பல விதமான விளக்குகளை கொண்டு அவர்களது வீட்டை அலங்கரிக்கின்றனர். இனிப்புகளும், பலகாரங்களும் வீடுகளுக்கு வீடு பரிமாறப்படுகின்றன. தீபாவளியில் அன்பும் பாசமும் ஊட்டப்படுகிறது. வேற்றுமையில் ஒற்றுமை காணும் சமூகம் எப்போதும் பண்டிகைகளை எட்டி வைப்பதில்லை.. மாறாக கொண்டாடித் தீர்த்துவிடுகிறது. ஆம். கொண்டாடித் தீர்த்துவிடுவோம்.

தீபங்களின் வரிசை

தீபாவளி என்பதிலேயே அதன் பொருள் அடங்கியுள்ளதே. தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வணங்குதல் தீபாவளி ஆகும். தீபம் என்றால் வெளிச்சம். ஒவ்வொருவர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கனம் போன்ற எதையாவது ஒன்றை தூக்கிப்போட வேண்டும். ஒரு தீய குணத்தை எரித்துவிட வேண்டும்.

சங்க காலத்தில் மகான்கள் எல்லாம் சூசகமாக சில தகவல்களை கூறிவிட்டுச் சென்றுள்ளனர். நரகாசுரன் என்றால் ஒரு அரக்கன், அவனை எரித்தோம், அன்றைய தினம் தீபாவளி என்பதெல்லாம் வேறு.

தீபாவளி தினத்தில் அனைவரும் அதிகாலையில் எழுந்து எண்ணை தேய்த்து குளித்தல் மாலையில் இலட்சுமி குபேர பூசையும் சிறப்பாகும். இதானால் கங்காஸ்ஷ பலன் கிடைக்கும் என துலா மாத மகாதமியம் நூலில் கூறப்பட்டுள்ளது,

இல்லத்தின் மூத்தஉறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு ( மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த கலவை ) இட்டு , பின் எண்ணெய்க் குளியல் ( கங்கா குளியல் )செய்வர் நல்லெண்ணெயில் ஓமம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம் . மக்கள் புத்தாடை உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வர் .

பொதுவாக தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே பெரும்பாலான தென்னிந்திய மக்கள் விரும்புகின்றனர். அன்று அநேக பெண்கள் புடவையும் (குறிப்பாக பட்டுப்புடவை) ஆண்கள் வேட்டியும் உடுப்பர் . தீபாவளி அன்று ஒவ்வொரு இல்லத்திலும் மங்கள இசையான நாதசுவரம் ஒலிக்கும் . அன்று

இனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர் .

தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம் , அன்றைய தினம் , அதிகாலையில் எல்லா இடங்களிலும் , தண்ணீரில் கங்கையும் , எண்ணெயில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும் , குங்குமத்தில் கௌரியும் , சந்தனத்தில் பூமாதேவியும் , புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுவதேயாகும்.

அந்த நீராடலைத்தான் 'கங்கா ஸ்நானம் ஆச்சா' என்று ஒருவருக்கொருவர் விசாரிப்பர் .

அன்றைய தினம், எல்லா நதிகள், ஏரிகள், குளங்கள், கிணறுகளிலும், நீர்நிலைகளும் 'கங்கா தேவி' வியாபித்து இருப்பதாக ஐதீகம். அடிப்படையில் இந்துப் பண்டிகையாய் இருந்தாலும், அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் பண்டிகை தீபாவளி.

ஐந்து நாள் கொண்டாட்டம்

தீபாவளி பண்டிகை தன திரயோதசி தொடங்கி யம துவிதியை வரை 5 நாட்கள் கொண்டாடப்படுகிறது. வரிசையாக விளக்குகளை வைத்து கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளி. நவம்பர் 5ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை 5 தினங்கள் கொண்டாடப்பட வேண்டும் என்கிறது சாஸ்திரம். செல்வம் பெருகும் தன திரயோதசி நவம்பர் 5 ஆம்திகதி யம திரயோதசியாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மாலை நேரத்தில் தெற்கு நோக்கி விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். கடந்த ஒரு மாதம் முன்பு மஹாளய பக்ஷ காலத்தின் போது எமலோகத்திலிருந்து வந்திருந்த நம் முன்னோர் நினைவாக நாம் தர்ப்பணம் கொடுத்து அவர்களுக்கு நம் கடமையை செய்திருப்போம். முன்னோர்கள் மீண்டும் யம லோகம் செல்ல அவர்கள் செல்லும் பாதையில் வெளிச்சம் இருக்க வேண்டும் என்பதற்காக தென் திசை நோக்கி வீட்டிற்கு வெளியே வாசலில் வீட்டில் உள்ள உறுப்பினர்கள் ஒருவருக்கு ஒரு தீபம் வீதம் மாலை நேரத்தில் விளக்கேற்ற வேண்டும். இதன் மூலம் ஆண்டு முழுவதும் முன்னோர்கள் ஆசி கிடைக்கும். வீட்டில் உள்ளவர்களுக்கு பெரிய அளவில் நோய் பாதிப்பு எதுவும் ஏற்படாது என்பது நம்பிக்கை. தன திரயோதசி நாளில் செல்வ வளம் பெருகும் வகையில் நம் வீட்டில் உள்ள தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை வைத்து பூஜை செய்ய வேண்டும். இந்த நாளில் நாம் வாங்கும் பொருட்கள் பெருகும் என்பது நம்பிக்கை. வட இந்தியாவில் இந்த நாட்களில் முதலீடு செய்யப்படுகிறது. தீபாவளி பண்டிகை நரக சதுர்தசி - யம சதுர்தசி நவம்பர் 6 ஆம் திகதி தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

அதிகாலையில் சூரியன் உதயம் ஆவதற்கு முன்பே எழுந்து நல்லெண்ணெய் எனப்படும் எள்ளெண்ணையை உடல் முழுதும் தேய்த்து வெந்நீரில் குளிக்க வேண்டும். அதில் நாயுருவி இலை சுரைக்காய் கோடி இலை போன்றவை சேர்த்து கொள்ளலாம். இதனால் லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும். பொதுவாக சூரியன் உதயத்திற்கு முன்பு எண்ணெய் தேய்த்து குளித்து வரக்கூடாது என்பது சாஸ்திரம். ஆனால் இந்த நரக சதுர்தசியில் மட்டும் செய்யலாம். இதனால் ஆரோக்கியம் உண்டாகும்.

உடலில் உள்ள சூடு குறையும். அதனால் வியாதிகள் நீங்கும். செல்வ வளம் பெருகும். குளித்து முடித்த உடன் சூரிய உதயத்தில் கிழக்கு நோக்கி இருந்து கொண்டு யமனுக்கும் சித்திர குப்தனுக்கும் யம தீர்த்தம் என தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனை தாய் தந்தை உள்ளவர் இல்லாதவர் என அனைவரும் செய்யலாம். ஜோதிட ரீதியாக இந்த தீபாவளி பண்டிகை திதியை அடிப்படையாக கொண்டுள்ளது.

திதிக்கு சூரிய சந்திரர்கள் மட்டுமே முக்கியம். சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள இடைவெளி தொலைவை திதி என்கிறோம். சதுர்தசியில் குளித்து விட்டு யம தர்ப்பணம் செய்து விட்டு பின்னர் குடும்பத்தோடு தெய்வ பூஜைகள் செய்து பின்னர் மாலையில் தீபம் வைக்க வேண்டும். மத்தாப்பு போன்ற வெளிச்சம் தரும் வெடிகளை சந்தோஷமாக வைக்க வேண்டும். அமாவாசையில் லட்சுமி குபேர பூஜை அமாவாசை நாளில் புதன்கிழமை சூரியனும் சந்திரனும் சுக்கிரனின் வீட்டில் உள்ள தினம். அதனால் அன்றைய தினத்தில் லட்சுமி குபேர பூஜை செய்ய வேண்டும். அன்றைய தினம் கம்பளி ஆடைகளை ஏழை எளியோர்க்கு தானம் செய்ய வேண்டும். அகண்ட தீப பூஜை அமாவாசை முடிந்த மறு நாள் பிரதமை நவம்பர் 8 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் துவங்குகிறது.

இது சந்திரமான கணக்கு. பொதுவாக ஜோதிட ரீதியாக மறைவு ராசியான விருச்சிக மாதம் முழுவதும் தீபம் ஏற்றி வைத்து வருவது நல்லது. எந்த பாவத்தின் பலனும் அதன் ஏழாம் பாவம் குறிகாட்டும். அதன் படி விருச்சிகத்திற்கு 7ம் பாவத்தில் தான் கார்த்திகை நட்சத்திர மண்டலம் உள்ளது. அதன் உருவம் ஜோதி சுடர் வடிவம். எனவே அன்றிலிருந்து 30 நாட்கள் அகண்ட தீப பூஜை என தினமும் மாலை நேரத்தில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். இதனால் கடன் தீரும். பசு கன்றுக்கு ஆடு போன்ற வாயில்லா ஜீவ ராசிகளுக்கும் நன்மை உண்டாக அவற்றை பூஜித்து உணவுதர வேண்டும்.

யம துவிதியை அமாவாசை முடிந்து இரண்டாம் நாள் நவம்பர் 9 ஆம் திகதி துவிதியை யம துவிதியை பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. சகோதரிகள் அழைப்பை ஏற்று சகோதரர்கள் அவர்களின் வீடுகளுக்குச் சென்று கையாலே தலை வாழை இலையில் விருந்து உணவு கொடுக்க வேண்டும். இன்று சகோதரர்கள் சகோதரி வீட்டில் சாப்பிட்டு விட்டு பரிசு பொருட்களை பரிமாறி கொண்டு சந்தோஷமாக தீபாவளி கொண்டாட வேண்டும். எனவேதான் இந்த 5 நாட்கள் தீபாவளி பண்டிகை என சாஸ்திரம் கூறுகிறது.

தீபாவளி பண்டிகை உருவான வரலாறு

தீபாவளி கொண்டாடுவதற்கான நிறைய காரணங்களை நமது இந்து புராணங்கள் கூறுகின்றன. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

தீபாவளி பண்டிகை உருவான வரலாறு

தீபாவளி கொண்டாடுவதற்கான நிறைய காரணங்களை நமது இந்து புராணங்கள் கூறுகின்றன. ராமன் தனது 14 ஆண்டு வனவாசத்தை முடித்து அயோத்தி திரும்பி வருவதால் அந்நாட்டில் உள்ள மக்கள் ராமனை வரவேற்பதற்கு தங்கள் வீடுகளில் விளக்கேற்றி வரவேற்பதாக ராமாயணத்தில் சொல்லப்படுகிறது.

கிருஷ்ணன் நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போது அந்த நரகாசுரன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கிருஷ்ணனிடம் வேண்டிக் கொண்டதால் தீபாவளி என்னும் பண்டிகையை கொண்டாடுவதாக கூறப்படுகிறது.

இலங்கையை ஆண்ட ராவணன் சீதையை கடத்திச் சென்று வைத்துக் கொண்டதால் ராமன் ராவணனை எதிர்த்துப் போராடி ராவணனை அழித்து விட்டு சீதையை மீட்டு கொண்டு தனது தம்பியான லட்சுமணனுடன் அயோத்திக்கு செல்லும் போது அங்குள்ள மக்கள் அவர்களை வரவேற்க நாட்டில் விளக்கேற்றி கொண்டாடி மகிழ்ந்தனர். அதனால் அந்த நாள் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது என்று ராமாயணத்தில் சொல்லப்படுகிறது.

சக்தியின் 21 நாள் விரதமான கேதாரகவுரி விரதம் முடிவுற்றதும் அந்த நாளன்று சிவன் சக்தியை தனது பாதியாக ஏற்றுக் கொண்டு “அர்த்தநாரீஸ்வரர்” ஆக உருவெடுத்ததால் தீபாவளி கொண்டாடப்படுவதாக ஸ்கந்த புராணத்தில் கூறப்படுகிறது.

 

Comments