இலங்கை தமிழ் சினிமாவுக்கு புத்துணர்ச்சி ஊட்டிய வி.பி.கணேசன் | தினகரன் வாரமஞ்சரி

இலங்கை தமிழ் சினிமாவுக்கு புத்துணர்ச்சி ஊட்டிய வி.பி.கணேசன்

சமுதாயம் 16 மிலி மீட்டர் தமிழ்த் திரைப்படத்தைத் தயாரித்த ஹென்றி சந்திரவங்ஸ, ஒரு சிங்களவர், ''இலங்கையில் முதலாவது தமிழ்த் திரைப்படத்தை தயாரித்தவர் ஒரு சிங்களவரே!” என்று தவறாக ஒருவரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது முற்றிலும் தவறானது. இவர் ஒரு மலையாளி. இவரது உறவினர்கள் இன்றும் கொழும்பு கதிரேசன் தெருவில் வசித்து வருகின்றனர்.

இந்த சமுதாயம் திரைப் படத்தில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்த எஸ். என். தனரத்தினம் இந்த படத்தில் தொடர்ந்து நடித்தால் அவர் மீது வெடிகுண்டு வீசுவேன்! என்று நடிகர் லடிஸ் வீரமணி எச்சரிக்ைக விடுத்ததால் அச்சுறுத்தல் படத்தை பாதியில் விட்டு விட்டு, தனது சொந்த ஊரான கொஸ்லந்தைக்கு ஓடிப் போனார் எஸ். என். தனரத்தினம். பல வருடங்களுக்குப் பின்னரே அவர் கொழும்பு திரும்பினார்.

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என்ற தயாள இனிய பண்புள்ளவர்.

கொழும்பு வந்த இவர் ஏற்கனவே இருந்த அறிமுகத்தின் காரணமாக,

அப்போது சிங்கள சினிமாவில் உச்சத்தில் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் இருந்த யசபாலித நாணயக்காரவுடன் சேர்ந்து அவரது தயாரிப்பு நிர்வாகியாக செயல் பட்டார்.

இவரின் மீள் வருகையே இலங்கை தேசிய தமிழ் சினிமாவின் முதுகு எலும்பாக அமைந்தது.

தொழிற்சங்கத் தலைவரான ஏ. எம். அஸீஸை தலைவராகக் கொண்ட ஜனநாயக தொழிலாளர் காங்கிரசின் செயலாளராக விளங்கிய திரு. வி. பி. கணேசனும் (மனோ கணேசனின் தந்தையார்) எஸ். என். தனரத்தினமும் நல்ல நண்பர்கள்.

அக் காலத்தில் வி. பி. கணேசனின் மனதில் தேசிய அரசியல் அலை வீசிக் கொண்டிருந்தது.

தென் இந்தியாவிலும் நடிகர்களின் அரசியல் பிரவேசம் நிகழ்ந்து கொண்டிருந்த காலம் அது.

இதனை பயன் படுத்திக் கொண்ட எஸ். என். தனரத்தினம், வி. பி. கணேசனின் மனதில் சினிமா ஆசை என்ற விதையை விதைத்தார்.

‘புதிய காற்று’ என்ற உணர்வை மட்டுமல்ல, அதில் கதாநாயகனாக நடிக்கும் உந்தலையும் வி. பி. கணேசன் மனதில் ஏற்படுத்தியவரே எஸ். என். தனரத்தினம்.

அந்த விதை ‘புதிய காற்று’ என்ற ஆலமாக முளைத்து விருட்சமானது.

ஏனோ தனோ என்றிருந்த ‘இலங்கை தேசிய தமிழ் சினிமா’ புதிய காற்றின் வரவால் புத்தூக்கம் பெற்றது.

இனி எங்களுக்கு என்று ஒரு தேசிய தமிழ் சினிமாத் துறை உருவாகும் என்ற உணர்வை இதனால் இங்கே தமிழ் சினிமா தயாரிப்பில் ஈடுபட முன்வந்தனர்.

இந்தியாவில் முன்னணியில் இருந்த பல நடிகர்களின் திரைப்படங்கள் இங்கு இறக்குமதியாகிக் கொண்டிருந்த காலத்தில் தமிழக சினிமா என்ற மாயத்திரையைக் கிழித்துக் கொண்டு ஈழத்து திரைவானில் ‘ஹீரோ’வாக மின்னினார் வி. பி. கணேசன்.

எதையும் தாங்கும் இதயமும் சாதிக்க நினைத்ததை என்ன இடர் வந்தாலும் சாதித்தே தீரும் திண்மையான மன ஓர்மையும் கொண்ட வி. பி. கணேசனைப் போன்ற ஆத்ம சக்தியுள்ள. ஒரு மனிதனை காண்பது அபூர்வமே.

இலங்கை தேசிய தமிழ் சினிமாவுக்கு மூன்று முத்தான தமிழ்த் திரைப்படங்களைத் தந்த தயாரிப்பாளர் இவர்.

அந்த முயற்சியில் பொருளாதார ரீதியான வெற்றியும் கண்டார் வி. பி. கணேசன்.

புதிய காற்று திரைப்படம் நல்லதொரு சினிமாவாக வரவேண்டும் எனபதற்காக, வி. பி. கணேசனின் அனுமதியோடு சில நுணுக்கஙகளையும் கையாண்டார். எஸ். என். தனரத்தினம்.

சென்னைத் தமிழ் திரைப்பட தொழில் நுட்பவியலாளர்களின் உதவியைப் பெறுவது என்பது தான், அது. (இவ்வாறு சென்னைத் தமிழ் திரைப்பட தொழில் நுட்பவியலாளர்களின் உதவியை முதலில் பெறப்பட்ட திரைப்படம் ‘வெண் சங்கு’ ஆகும்.

இசையை சங்கர் கணேசும், இரு பாடல்களை கவிஞர்கள் கண்ணதாசனும் பூவை செங்குட்டுவனும் எழுதியிருந்தார்கள்.

'புதிய காற்று' திரைப்படத்தற்கான மூலக் கதையை தயாரிப்பாளர் வி. பி. கணேசனே எழுதினார் என்கிறார். தம்பி ஐயா தேவதாஸ்.

புதிய காற்று திரைப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதியவர் பிரபல எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் என்பதே சரியானது.

படபிடிப்பின் இடை நடுவில் கருத்து வேறுபாடு காரணமாக தெளிவத்தை ஜோசப் வெளியேறி விட்டதாகவும் அந்த நாட்களில் ஒரு ‘கிசு கிசு’.

சமீபத்தில் வசந்தம் தொலைக் காட்சியில் தெளிவத்தை ஜோசப் கலந்துகொண்ட ‘அந்த நாள் ஞாபகம்’என்ற ஒரு மணித்தியாலப் பேட்டியை முழுமையாகவே பார்த்தேன்.

(பொதுவாகவே தெளிவத்தை ஜோசப் “ நான் ” என்ற அகந்தை இல்லாமல் இனிமையான பதில்களைச் சொல்பவர்.)

தெளிவத்தை ஜோசப் புதிய காற்று திரைப்படத்தைப் பற்றி மூச்சு விடவில்லை.

ஒரு திரைப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதுவது என்பது எப்பேர்பட்ட ஒரு சாதனை!

அதுவும் புதிய காற்று திரைப் படத்திற்கு!,

எப்படி அவர் இதை மறந்தார்?

தெளிவத்தை ஜோசப் இது சம்பந்தமாக ஒரு தெளிவைத் தருவாரானால் எமது எதிர்கால பதிவுகளுக்கு உதவியாக இருக்கும் என்று மிகவும் வினயமாக வேண்டுகிறேன்.

 

 

Comments