சட்ட சபையில் இருந்து ஸ்டாலின் வெளியேற்றப்படுவாரா? | தினகரன் வாரமஞ்சரி

சட்ட சபையில் இருந்து ஸ்டாலின் வெளியேற்றப்படுவாரா?

அருள் சத்தியநாதன்

[email protected]

எடப்பாடி பழனிச்சாமி காட்டில் மழை என்றுதான் சொல்ல வேண்டும். 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில், சபாநாயகரின் தீர்ப்பு செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டதையடுத்து ஆளும் அ.தி.மு.க. உற்சாகமாகி இருக்கிறது. இதையடுத்து, தமிழகத்தில் குட்கா என்ற தடை செய்யப்பட்டுள்ள மென்போதைப் பொருளை சட்ட மன்றத்துக்கு எடுத்து வந்ததால் எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின் சபை ஒழுங்கை மீறி விட்டார் என்றும் அது சபை அவமதிப்புக்கு சமமானது என்றும் கருதப்படுவதால் சபாநாயகர் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து தகுதி நீக்கம் செய்யலாம் என்ற அர்த்தம் வரும் வகையில் அ.தி.மு.க உறுப்பினர் கடம்பூர் ராஜூ கடந்த வாரம் தெரிவித்திருந்த கருத்து தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

18பேர் தகுதி நீக்கம் செல்லும் என்ற தீர்ப்பு வந்ததையடுத்து, சட்டசபையில் அ.தி.மு.க வை எதிர்த்து வந்த 18 பேர் இப்போது சபையில் இல்லை. தினகரனின் பலம் மிகவும் குறைந்து விட்டது. சபாநாயகர் என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதை அங்கீகரிப்பது போல நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்குவதால், சபாநாயகரின் தீர்ப்புகளில் குறுக்கிடுவதற்கு விரும்பவில்லை என நீதிமன்றங்கள் கருதுவதால், இந்தச் சூழலைப் பயன்படுத்தி குட்காவை கையில் எடுத்து ஸ்டாலினையே வெளியே தூக்கி எறிந்து கொக்கரிக்கலாமா என அ.தி.மு.க அரசு ஆலோசித்து வருவதையே கடம்பூராரின் பேச்சு சுட்டிக்காட்டுகிறது என்பது அவதானிகளின் கருத்தாக இருக்கிறது.

இது இப்படி இருக்க, அ.தி.மு.க.வுக்கு எதிரான இன்னொரு வழக்கும் விசாரணையில் இருக்கிறது. அ.தி.மு.க, எடப்பாடி அணி, ஓ. பன்னீர் செல்வம் அணி என இரண்டாகப் பிரிந்திருந்தபோது, எடப்பாடியார் புதிய அரசை அமைத்து நம்பிக்கை வாக்கெடுப்புக்கு சட்ட சபையில் முகம் கொடுத்தார். அப்போது தி.மு.கவும் தோழமை உறுப்பினர்களும் எதிர்த்து வாக்களிக்க அ.தி.மு.க உறுப்பினர்கள் எடப்பாடிக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஆனால் அ.தி.மு.க.வில் அங்கம் வகிக்கும் பன்னீர் செல்வமும் அவரது ஆதரவாளர்களான 10 உறுப்பினர்களும் எடப்பாடிக்கு எதிராக, ‘எமக்கு எடப்பாடி அரசில் நம்பிக்கை இல்லை’ என்று வாக்களித்தனர். இப்படி வாக்களித்தது அ.தி.மு.க அவை கொறடாவின் உத்தரவுக்கு மாறானது.

அவை கொறடாவின் உத்தரவுக்கு மாறாக சபையில் செயற்படுவது கட்சித் தீர்மானத்துக்கு எதிராக செயல்படுவதற்கு ஒப்பானது என்பதால், கொறடா சபாநாயகரிடம் அத்தகையோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் தெரிவிக்கும் பட்சத்தில் அவர்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்யலாம் என்பது அவையின் விதி.

ஆனால் அந்த 11 உறுப்பினர்கள் மீது கொறடாவோ, சபாநாயகரோ நடவடிக்கை எடுக்கவில்லை. அதாவது ஒரு கட்சிக்குள் இருந்து கொண்டே அக் கட்சி அமைத்த அரசுக்கு எதிராக சில கட்சி உறுப்பினர்கள் வெளிப்படையாகவே செயற்பட்டும் கூட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், ஆட்சி தொடரட்டும் ஆனால் முதல்வரை மட்டும் மாற்ற வேண்டும் என 19 அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக ஆளுநரை சந்தித்து மனு கொடுத்த போது அது கட்சியின் கட்டுப்பாட்டையும் கொறடாவின் உத்தரவையும் மீறிய செயல் எனக் கருதி 18 உறுப்பினர்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதே குற்றத்தைச் செய்த 19வது உறுப்பினரான ஜக்கையனை மட்டும் தகுதி நீக்கம் செய்யவில்லை சபாநாயகர் தனபால். ஏனெனில் அவர் தவறை ஏற்றுக் கொண்டு எடப்பாடியிடம் சரணடைந்ததால் அவர் குற்றமற்றவரானார்.

சபாநாயகரின் இந்த இருவேறு பக்கச் சார்பான நிலைப்பாடுகளையும் குறிப்பிட்டு, அதே குற்றத்தைச் செய்த ஓ. பன்னீர் செல்வத்தையும் உள்ளடக்கிய 11 பேர் மீதும் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற மனுவை தி.மு.க சார்பாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் தீர்ப்பு தமக்கு எதிராக வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகக் கருதிய துணை முதல்வர் பன்னீர் செல்வம், உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்து, இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படக் கூடாது என உத்தரவிடும்படி கேட்டுக் கொண்டார்.

இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், பன்னீர் செல்வத்தின் கோரிக்கையை நிராகரித்ததோடு, தி.மு.க வின் மனுவை விசாரிக்க உத்தரவிட்டது.

இம்மனுமீதான விசாரணை முடிவுக்கு வந்து அது பன்னீர் செல்வத்துக்கு எதிராக இருக்குமானால் பன்னீரும் ஏனைய பத்து உறுப்பினர்களும் சட்ட சபையில் இருந்து வெளியேற வேண்டியிருக்கும். மேலும் சபாநாயகரும் சமநிலை தவறியவராகக் கருதப்பட்டு தன் பதவியைத் துறக்க வேண்டியும் ஏற்படலாம். அதேசமயம், சபாநாயகருக்கு ஆதரவாகவும் தீர்ப்பு வரலாம் என்றும் அவதானிகள், பழைய வழக்குகளை சுட்டிக்காட்டி, சொல்கிறார்கள்.

அ.தி.மு.க அரசு இப்போது அதிகாரத்தில் நீடித்து வருவது, உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுத்தல், வழக்குகளில் வரும் தீர்ப்பு என்பனவற்றின் மூலம் தான் என்பது வெட்ட வெளிச்சமானது. இதன் காரணமாகவே, 18பேர் தகுதி நீக்க தீர்ப்பை தாம் மேன்முறையீடு செய்யப் போவதில்லை என தினகரன் தெரிவித்திருக்கிறார். மேன்முறையீடு செய்து தீர்ப்பு வரும்வரைக் காத்திருப்பது எடப்பாடி அரசுக்கு ஆட்சியில் நீடிக்க அவகாசம் வழங்குவதற்கு ஒப்பானது எனக் கருதும் டி.டி.வி தினகரன், 18 சட்ட மன்ற ஆசனங்களுக்கான இடைத்தேர்தலை சந்திக்கத் தாம் தயார் என்று கூறியிருக்கிறார்.

திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகியவற்றையும் சேர்த்துக் கொண்டால் 20 சட்டமன்ற ஆசனங்களுக்கான இடைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். பெரும்பாலும் பெப்ரவரி மாதத்துக்கு முன்பாக இந்த இடைத் தேர்தல்கள் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது இப்படி இருக்க, அ.தி.மு.க வின் பொதுச் செயலாளர் பதவி நீக்கப்பட்டு பதிலாக இரு இணை ஒருங்கிணைப்பாளர்கள் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டதை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதன் மூலம், அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக பதவியேற்றிருந்த சசிகலா, அப் பதவியில் இருந்து அதிகாரபூர்வமாக தூக்கி எறியப்பட்டுள்ளார். இது தினகரன் அணிக்குக் கிடைத்திருக்கும் மற்றொரு அடியாகும். தினகரனின் பலம் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய, எடப்பாடியாரினால் அவர் நிராயுதபாணியாக ஆக்கப்பட்டுள்ளார். இந் நிலையில் நீதிமன்றங்களை நாடுவதைவிட மக்கள் மன்றத்தை−இடைத்தேர்தலை – நாடுவதே சரியாக இருக்கும் எனத் தினகரன் தீர்மானித்திருப்பது அரசியல் ரீதியாக மிகச் சரியான முடிவே.

மேலும், குட்கா விவகாரத்தை சபாநாயகர் கையில் எடுத்துக் கொண்டு எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலினை தகுதி நீக்கம் செய்வாரா? என்ற கேள்வி மிக முக்கியமானது. அவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க. தலைவருமான ஸ்டாலின் வெளியேற்றப்பட்டால் அதன் விளைவுகள் இரண்டு விதமாகச் செயல்பட முடியும்.

முதலாவது, தி.மு.க ஆதரவாளர்களின் சீற்றத்தை அது கிளப்பிவிடும். எப்பாடுபட்டாவது அ.தி.மு.கவை பதவி இறக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தி.மு.க கூட்டணி உறுதியுடன் செயல்படத் தொடங்கும். மக்கள் மத்தியில் ஸ்டாலின் ஆதரவு அலை ஒரு மட்டத்துக்கு எகிறும். பரவலான எதிர்ப்புக்கு எடப்பாடி அரசு ஆளாகும்.

மறுபுறத்தில் துணிச்சல் மிக்க அரசியல்வாதி, தி.மு.கவின் பல்லையே ஆட்டி அசைத்துப் பார்க்கக் கூடியவர் என்ற ஒரு பெயர் எடப்பாடிக்குக் கிடைக்கும். பிளவுண்டிருக்கக் கூடிய அ.தி.மு.க தொண்டர்களை ஒன்றிணைத்து, அ.தி.மு.க வுக்கு வழிகாட்டக்கூடிய அம்மாவின் வாரிசு என்ற பெயரையும் அவருக்கு பெற்றுத் தரலாம். அ.தி.மு.கவின் அசைக்க முடியாத தலைவர் என்ற பட்டமும் அவருக்குக் கிடைக்கலாம். ஆனால் ‘மௌன பெரும்பான்மை’ என அழைக்கப்படும் எந்தக் கட்சியையும் சாராத நடுநிலை வாக்காளர்களின் ஆதரவை, ஸ்டாலினை சட்ட சபையில் இருந்து வெளியேற்றியதன்மூலம், எடப்பாடியாரால் பெற்றுக் கொள்ளக்கூடும் என்று சொல்ல முடியாது. ஏனெனில் தமிழக வாக்காளர்களின் பரவலான அதிருப்தியை எடப்பாடி அரசு பெற்றுள்ளது என்பது தெளிவானது.

எனவே, தளபதி ஸ்டாலினை சட்ட சபையை விட்டு வெளியேற்றுவது என்பது நீடித்த விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது என்பதால் எடுத்தேன் கவிழ்ந்தேன் என அதனைச் செய்து விட முடியாது.

ஸ்டாலினை வெளியேற்றுவது என எடப்பாடி முடிவெடுத்தால் அது பெரும்பாலும் ‘விநாசகாலே விபரீத புத்தி’யாகி விடலாம். மேலும் ஸ்டாலினின் வெளியேற்றம் ஸ்டாலினுக்கு மட்டுமல்ல, தினகரனின் அரசியலுக்கும் வாய்ப்பாகவே அமைந்துவிடும்!

Comments