பரவிவரும் லிவிங் டுகெதர் என்கிற புதிய நாகரீகம் | தினகரன் வாரமஞ்சரி

பரவிவரும் லிவிங் டுகெதர் என்கிற புதிய நாகரீகம்

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. என்றொரு பழமொழி உண்டு அநேகமான திருமணங்கள் நரகத்தில் அரங்கேறுகின்றன என்றே சொல்லத்தோன்றுகிறது. கலியாணம் செய்துதான் வாழவேண்டும் என்ற கட்டாயம் உடைந்து வருகிறது. லிவிங் டுகெதர் என்கிற புதிய நாகரீகம் பரவி வருகிறது. எப்போதுமே ஒரு பழமொழி உண்டு. முள் சேலையில் விழுந்தாலும் சேலை முள்ளில் விழுந்தாலும் சேதம் சேலைக்குத்தான் என்று. இந்த சேலை என்பது பெண்களைக் குறிக்கும். முள் என்பது யாரென விளங்கியிருக்கும். இப்போதெல்லாம் பெண்கள் இதற்கெல்லாம் அச்சமடைவதில்லை. காரணம் விஞ்ஞானம் அவர்களுக்கு போதிய பாதுகாப்பை வழங்கிவிட்டது.

ஒரு திரைப்படத்தில் பாடலொன்று உண்டு. 'காதலுக்கு மட்டும்நாங்க பாதை யமைப்போம். அந்த கர்ப்பத்துக்கு மட்டும் நாங்க கதவைச் சாத்துவோம்' என்று. இந்த கதவைச்சாத்தும் வல்லமையை பெண்கள் பெற்று விட்டார்கள் கூடவே இதுகாலவரை கட்டிக்காத்து வந்த அச்சம் மடம் எல்லாம் அவசியமற்றதாகிவிட்டது. வாழ்க்கை வாழ்வதற்கே என்றபடி அவர்கள் தமது சிந்தனையை பலப்படுத்திக் கொள்கிறார்கள். பின் விளைவுகள் பற்றி அலட்டிக் கொள்வதில்லை.

ஆயிரத்து தொளாயிரமாம் ஆண்டு நான் எழுத்தாளரும் பெண்ணியலாளருமான அம்பையின் பேட்டியை படித்தேன். எமது அமைப்பில் அவற்றையெல்லாம் தொகுத்து எமக்கு படிக்கக் கொடுத்திருந்தார்கள் காரணம் போராளிகள் அந்தக் கருத்துகளை அப்படியே ஏற்க வேண்டும் என்பதற்காக என்றே எமது பொறுப்பாளர் கூறினார். அவள் ஒரு திருமணமாகாத முதிர்கன்னி. ஆனால் அப்போது திருமணமாகி பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என கொண்டிருந்த எனக்கு அது அப்படியல்ல, என்ற திடமான நம்பிக்கை இருந்தது. எனவே பிரதான கூட்டமொன்றில் இது பற்றி நான் பேசவேண்டியதாயிற்று. அப்படி பிரஸ்தாபிப்பதற்கு முக்கிய காரணம், அதில் இரண்டு அல்லது மூன்று இடங்களில் அம்பை தன் தாய் தன்னிடம் ஒரு கேள்விக்கான பதிலை வெகுவாக எதிர்பார்த்தார் என்கிறார். அந்தக்கேள்வி. நீ இன்னும் கன்னியாத்தானே இருக்கிறாய்? என்பதாகும்.

ஒரு தாய்க்கு இந்த சந்தேகம் வருமளவுக்கு தனது நடவடிக்கைகள் இருந்ததாக அவர் குறிப்பிடுகிறார். உண்மையிலேயே இந்தப்பேட்டிபற்றி எமது கருத்துக்களை கலந்துரையாடுவதற்கே இந்த பதிவு அனுப்பப்பட்டதாக பின்னர் அறிந்தேன். அவரது கருத்துக்கள் ஆணித்தரமானவை அவற்றை நான் பெரிதும் ஆச்சரியத்தோடு திரும்பத் திரும்ப வாசித்திருக்கிறேன். என்றபோதும் அந்த குறிப்பிட்ட கேள்விக்கான பதிலை நானும் அறிய விரும்பினேன். ஏனெனில் எனக்கும் அப்போது பெண்களுக்கு பாலியல் சுதந்திரம் வேண்டும் என்ற அவா அல்லது எதிர்பார்ப்பு இருந்தது.

என்னதான் பெண்ணுரிமை என்பது மண்ணுரிமையோடு பின்னப்பட்டிருக்கிறது என்று பேசினாலும் நடைமுறையில் பெண்களுக்கு எந்த உரிமையும் இருக்கவில்லை நீளக்காற்சட்டை அணிந்து துப்பாக்கியை தோளில் கொழுவினாலும், பெண்களுக்கு அடக்குமுறை சட்டங்களே நிலவின. சாதாரணமான பெண்கள் இரவில் தனியே வீதியில் போக முடிந்தது. வாகனங்கள் அதிகமாக இல்லாத வீதிகளில் வருகிற பார ஊர்திகளை மறித்து அதிலேறிப் பயணம் செய்ய முடிந்தது. ஆனால் பார ஊர்தி ஓட்டிய பெண்களும் இருந்த அமைப்பில் பெண்போராளிகள் அனுமதியின்றி அப்படியான பயணங்களை செய்ய முடியாதிருந்தது.

காதல் அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆண்களுடன் அனுமதியின்றி உரையாடுதல் தடை செய்யப்பட்டிருந்தது. அப்படியும் காதலித்தனர் காதலிக்கும் பெண் முன்னரங்கக் காவல் பணிக்கு அனுப்பப்பட்டாள். அங்கு அவள் தன் சேவையை முடித்து திரும்பி வந்தால் திருமணம். இல்லையேல் மாவீரர் என்ற மதிப்புடன் மண்ணுக்குள் மறைந்து போவாள். கூறை எடுத்தபின் குழிக்குள் வைக்கப்பட்ட பெண்களும் உண்டு. நூற்றுக்கணக்கான பெண் போராளிகளுக்கு தலைமையேற்று களத்தில் நின்று போரிட்ட தளபதியாயினும் கழுத்தில் கொடியேறினால் குடும்பக்குத்து விளக்காகி விடுவதை கண்டிருக்கிறேன் அவர்கள் மட்டுமல்ல சாதாரண போராளிகளுக்கும் இதேநிலைதான் திருமணமாகிவிட்டால் அவர்கள் சாதாரணப் பெண்களாகிப்போயினர்.

இவ்வளவு கட்டுப்பாடுகளையும் வைத்திருந்த இந்த பிரதேசத்தில்தான் சேர்ந்துவாழுதல் Livins together கொடிகட்டிப்பறக்கிறது. குடும்பக்காட்டு, கூப்பன்முத்திரை, சமுத்தி திட்டம், கலியாணப்பதிவு, காணி பூமி, சொத்து, சுகம், சாதி, சாதகம் எதுவும் தேவையில்லை என்பது, பாராட்டுக்குரியதுதான். ஆனால் மனிதர்களுக்கு வயசு போய்க் கொண்டிருக்குமே. பழகப் பழகப் பாலும் புளிக்குமே, அதற்குப்பிறகு அவர்களுக்கிருக்கப்போகும் சமூகப் பாதுகாப்பு என்ன?

திருமணமே செய்து வாழ்பவர்கள் கூட ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப்பின் தமது வாழ்க்கைக்கு சாட்சியாக ஒரு குழந்தை வேண்டும் என்று அவாவுகிறார்கள் இதற்காக கோயில் குளம் விரதங்கள் வைத்தியம் எனப்பறக்கிறார்கள். இந்த சேர்ந்து வாழும் ஜீவராசிகளுக்கு இதெல்லாம் தேவைப்படாதா? அதிலும் இவர்களுக்குள் என்ன ஒரு திருட்டுத்தனம் பாருங்கள், தமது இணையின் பெயரையோ ஊரையோ சொல்ல மறுக்கிறார்கள். அண்மையில் இந்த மாதிரியான வாழ்க்கை நடாத்தும் சிலருடனான ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்த்தேன். சொல்லி வைத்தமாதிரி அவர்களிடையேயும் தமது வாழ்க்கை இதுதான் என்று சொல்ல முடிகிறது ஆனால் பெயரை வெளியிட மறுக்கிறார்கள். அனைவரும் மேஜராகிவிட்டதால் அது தமது உரிமை என்கிறார்கள்.

ஆனால் திருமணமானவர்கள் என்ற வரையறையை சட்டம் எப்படி வைத்திருக்கிறது என்று பார்த்தால், ஒரு ஆணும் பெண்ணும் சமயாசாரப்படி அல்லது பதிவுத்திருமணம் அல்லது இரண்டையும் செய்யலாம்.

பதிவே முதன்மையானது. இவைதவிர குழந்தை சொத்து பாதுகாப்பு தொடர்பில் பிரச்சினை எழும்போது. ஒரு கூரையின்கீழ் சேர்ந்து வாழ்ந்தார்கள் என்பதை அயலவர்கள் சான்றுரைத்தால் அவர்கள் கணவன் மனைவியாகவே கொள்ளப்படுவார்கள்.

Comments