பாலியல் துன்புறுத்தல் ஆண்களின் அதிகாரமா...? | தினகரன் வாரமஞ்சரி

பாலியல் துன்புறுத்தல் ஆண்களின் அதிகாரமா...?

தற்போது சமூக ஊடகங்களில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி அதிகமாக எழுதி வருகின்றனர். உண்மையில் பாலியல் துன்புறுத்தல் என்பதன் உண்மையான பொருள் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

பெண்ணின் சம்மதத்துடன் சொல்லப்படும் நகைச்சுவையோ, பாராட்டுகளோ, அதில் பயன்படுத்தப்படும் பாலியல் பொருள் தொனிக்கும் வார்த்தைகளோ பிரச்சினையாக கருதப்படாது.

ஒருவருடன் நெருக்கமாக நின்று கைகளை குலுக்குவது, தோளில் கை வைத்து பேசுவது, வாழ்த்துக்களைத் தெரிவிப்பதற்காக லேசாக கட்டியணைப்பது, அலுவலகத்திற்கு வெளியில் தேநீர் அல்லது மது அருந்துவது எல்லாம் பரஸ்பர ஒப்புதலுடன் நடந்தால் அதில் தவறு இல்லை.

பணியிடத்தில் ஒரு ஆண், பெண் ஒருவரால் ஈர்க்கப்படுவது இயல்பானது. அப்படி ஈர்க்கப்பட்டால், அந்த ஆண், தன்னுடைய சக பணியாளருக்கு அதை நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ தெரிவிப்பார்.

அந்த பெண்ணுக்கு அது பிடிக்கவில்லை என்றால், 'பாலியல்' ரீதியாக தொடுவது பிடிக்கவில்லை என்பதை நேரிடையாகவோ, நாசூக்காகவோ தெரிவித்த பிறகும் அந்த ஆணின் நடத்தை மாறாவிட்டால், அதை பாலியல் துன்புறுத்தல் என்று வகைப்படுத்தலாம்.

ஆனால், அந்த பெண், குறிப்பிட்ட அந்த ஆணின் செய்கைகளை விரும்பினாலும், அதற்கு ஏற்றாற்போல் நடந்துக் கொண்டாலும், அது வயதுவந்த இருவரிடையிலான உறவு என்பதால் அதை பாலியல் துன்புறுத்தலாக கருதமுடியாது.

அந்த பெண்ணின் அனுமதியின்றியோ, அவர் நிராகரித்தாலும், ஆண் தனது முயற்சிகளை கைவிடாமல் தொடர்ந்தால், அது பாலியல் துன்புறுத்தலாகும்.

இதில் பாலியல் உறுப்புகளின் படங்களை அனுப்புவது, வார்த்தைகளால் பாலியல் தொந்தரவு செய்வது, பாலியல் தொடர்பான விஷயங்களை நகைச்சுவை என்ற பெயரில் பேசுவது, தேவையில்லாமல் நெருக்கமாக வருவது, தொடுவது என பலவிதமான பாலியல் ரீதியான சீண்டல்கள் பகிரப்படுகின்றன.

இருந்தாலும், இன்னும் பல பெண்கள் தங்கள் அனுபவங்களையும், வலிகளையும் பதிவு செய்யவில்லை. பாலியல் வன்முறைகளை அதிகபட்சம் தங்கள் தோழிகளிடம் மட்டும் பகிர்ந்துக் கொண்டு அத்துடனே முடித்துக் கொள்கிறார்கள்.

பாலியல் துன்புறுத்தல் செய்யும் ஆணை தடுக்கவோ அல்லது அவருக்கு எதிராக புகார் கொடுக்கவோ உரிமை இல்லாத நிலையே தான் தென்படுகிறது.

ஊடகங்களில் சரியான மற்றும் தவறான நடத்தைகள் பற்றிய விவாதங்களும் தொடர்கின்றன. ஆண்களிடம் இதுபற்றி ஒருவித சங்கடமான நிலை நிலவுகிறது. பணியிடங்களில் ஒன்றாக வேலை செய்யும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே பரஸ்பரம் ஏற்படும் உறவு நட்பாக இருந்தாலும், 'பாலியல்' உறவாக மாறியிருந்தாலும் அது துன்புறுத்தல் இல்லை என்பதுதான் இந்த முழு விவாதத்தின் மையம்.

இங்கு முக்கியத்துவம் பெறுவது விருப்பம் அல்லது ஒப்புதல் என்பதன் அடிப்படையில் உள்ளது. பெண்களின் விருப்பத்தையும், ஆசையையும் சொல்லும் சுதந்திரம் பெண்ணுக்கு இருக்கிறதா என்பது வேறு விடயம்.

உதாரணமாக, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் ஆண், பாதிக்கப்படும் பெண்ணின் உயரதிகாரியாக இருக்கும்போது, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி வேறு விதங்களில் தொல்லை கொடுக்கலாம். அது தனது வேலைக்கே உலை வைக்கலாம் என்றோ, தனது முன்னேற்றம் பாதிக்கப்படும் அல்லது குடும்பத்தில் தெரிந்தால் பிரச்சினை வரும் என்பதாலோ சகித்துக் கொண்டு போக வேண்டிய சூழல் ஏற்படலாம்.

ஒப்புதல் கொடுப்பது என்பது, வாய்மொழியாகவோ அல்லது சைகைகளாலோ தெரிவிக்க வேண்டும். இதற்கான பொறுப்பு அந்த பெண்ணுக்கு எந்த அளவுக்கு உண்டோ அதே அளவுக்கு ஆணுக்கும் உண்டு.

 

Comments