ஈரானிடமிருந்து மசகு எண்ணெய் இறக்குமதிக்கு எட்டு நாடுகளுக்கு தடை நீக்கம் | தினகரன் வாரமஞ்சரி

ஈரானிடமிருந்து மசகு எண்ணெய் இறக்குமதிக்கு எட்டு நாடுகளுக்கு தடை நீக்கம்

இந்தியா, ஜப்பான், தென்கொரியா உட்பட 8 நாடுகள், ஈரானிடமிருந்து மசகு எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா விலக்களிக்க முடிவு செய்துள்ளது.

இதன் மூலம், அமெரிக்காவின் பொருளாதாரத் தடையிலிருந்து இந்த 8 நாடுகள் தப்புகின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாளை (05) திங்கட்கிழமை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக்கேல் பாம்பியோ அறிவிப்பார் என கூறப்படுகிறது.

அமெரிக்கா உட்பட 6 வல்லரசு நாடுகளுடன் ஈரான் கடந்த 2015ஆம் ஆண்டு சிவில் அணுசக்தி ஒப்பந்தம் செய்தது. ஆனால், இந்த ஒப்பந்தத்தை மீறி அணு ஆயுத தயாரிப்பில் ஈரான் ஈடுபடுவதைவும், உலகம் முழுவதும் பல தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்வதையும் அமெரிக்கா கண்டுபிடித்தது. இதனால், ஈரானுடன் செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

அந்நாட்டிடமிருந்து மசகு எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள், இறக்குமதி அளவை படிப்படியாக குறைத்து நவம்பர் 5க்குள் முற்றிலுமாக நிறுத்த வேண்டும்

எனவும், இல்லாவிட்டால் பொருளாதார தடை பாயும் எனவும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, இந்தியா உட்பட பல நாடுகள் ஈரானிடம் இருந்து மசகு எண்ணெய் வாங்கும் அளவை குறைத்துள்ளன.

ஆனால், எரிபொருளின் தேவை அதிகமாக இருப்பதால் ஈரானிடம் இருந்து மசகு எண்ணெய் இறக்குமதி செய்வதில் விலக்களிக்க வேண்டும் என இந்தியா உட்பட சில நட்பு நாடுகள் அமெரிக்காவிடம் வேண்டுகோள் விடுத்தன. இதையடுத்து, இந்தியா, ஜப்பான், தென்கொரியா உட்பட 8 நாடுகள், ஈரானிடம் மசகு எண்ணெய் வாங்க அமெரிக்கா சம்மதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாளை திங்கட்கிழமை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக்கேல் பாம்பியோ அறிவிக்கவுள்ளார்.

அமெரிக்காவின் பொருளாதார தடையிலிருந்து விலக்கு பெறும் நாடுகள், ஈரானிடம் எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான பணத்தை தங்களின் உள்நாட்டு கரன்சியில்தான் வழங்க வேண்டும் என அமெரிக்கா கட்டுப்பாடு விதித்துள்ளது. இதன் மூலம், அந்த பணம் ஈரானுக்கு நேரடியாகச் செல்லாது. அந்த பணத்தை உணவு, மருந்து மற்றும் இதர தடையில்லா பொருட்கள் வாங்க மட்டுமே ஈரான் பயன்படுத்த முடியும். இதன்மூலம் ஈரானின் நிதி வருவாயையும், பொருளாதாரத்தையும் அமெரிக்கா கட்டுப்படுத்தியுள்ளது.

Comments