வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்; கிழக்கை நோக்கி நகர்வு | தினகரன் வாரமஞ்சரி

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்; கிழக்கை நோக்கி நகர்வு

வங்காள விரிகுடாவின் தென்மேற்கு பகுதியில் தாழமுக்கம் உருவாகி வருவதுடன் அது இலங்கையை நோக்கி நகரத்தொடங்கியுள்ளதால் நாட்டில் பெய்துவரும் மழை மேலும் அதிகரிக்கலாம் என வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. நாட்டின் வடக்கு கிழக்கு வட மத்திய, வடமேல், சப்ரகமுவ மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு மேல் இடியுடன் கூடிய மழை மேலும்

அதிகரிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உருவாகிவரும் தாழமுக்கம் மேலும் வலுப்பெற்று அதிகூடிய தாழமுக்கமாக உருவெடுத்த பின்னரே சூறாவளியாக மாறும் வாய்ப்புள்ளதாகவும் தற்போது அந்த நிலை இல்லை என்றும் வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.

இலங்கையை அண்மித்த பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த தாழமுக்கம் வலுவடைந்து சூறாவளியாக மாறும் அபாயமும் உள்ளதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சில பகுதிகளில் 100-150 மி.மீற்றர் அளவில் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கிறது.

வங்காள விரிகுடாவில் உருவாகிவரும் தாழமுக்கம் நகரத் தொடங்கி அது இலங்கை கிழக்கு பக்கமாக பொத்துவில் பகுதியை ஊடறுத்து செல்லும் வாய்ப்பும் உள்ளது.

சூறாவளியாக உருமாறாவிடின் இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புகள் இல்லை. எனினும் அதிகூடிய தாழமுக்கமாக உருவாகும் வரை இதுபற்றி கூறமுடியாது என வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.

இதேவேளை வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள இந்நிலைமையை ஆழ்கடல் மீன்பிடிப்புக்கள் செல்லும் மீனவர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தற்காலிகமாக கடும் காற்றும் மற்றும் மின்னலினால் ஏற்படுகின்ற ஆபத்துக்களை குறைத்து கொள்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

Comments