பகையாளியின் குடியை உறவாடிக் கெடுக்கும் இயல்பு கொண்ட இடப இராசிக்காரர்கள்! | தினகரன் வாரமஞ்சரி

பகையாளியின் குடியை உறவாடிக் கெடுக்கும் இயல்பு கொண்ட இடப இராசிக்காரர்கள்!

திருவோணம்

கனவுகளின் தொழிற்சாலையென்று சினிமாத்துறையை சிலேடையாகக் குறிப்பிடுவார்கள். இடபராசியும் ஒரு கனவுத் தொழிற்சாலைதான். அதன் அதிபதி சுக்கிரன் சுகபோகங்களுக்கெல்லாம் அதிபதி. அதன் ராசியில் பிறந்த நீங்கள் உலகியல் இன்பங்களைச்சார்ந்த கனவுகளை அதிகம் காண்பதோடு கற்பனையாகப் பேசுவதிலும் வாழ்வில் அவைகளை நிஜமாக்குவதிலும் வல்லவராயிருப்பீர்கள்.

எவரோடும் அறிமுகமான நாளிலிருந்தே அவரோடு அதிகநாள் பழகியவர்போல நட்புக் கொண்டாடுவீர்கள். இதுதான் உங்கள் பலமும் பலவீனமும். உங்கள் ராசிக்கு அதிபதியான சுக்கிரன்தான், அதிலிருந்து ஆறாவது ராசியாக வரும் துலாமிற்கும் அதிபதியாக வருகிறார். அந்த ஆறாம் வீடானது உங்களது கடன், நோய் மற்றும் எதிரிகளைக் குறிக்கும் வீடுமாகும். எனவே இதன் மூலம் உங்களுக்கு நீங்கள்தான் எதிரி என்றாகிவிடுவீர்கள்!

அதேபோல நீங்கள் ஒருவரை எதிரியாக நினைத்து விட்டால் அவரோடு உறவாடிக் கெடுக்கவும் செய்வீர்கள். சுக்கிரன் உங்களது எதிரிஸ்தானத்திற்கும் அதிபதியாக வருவதால், கூட இருந்தே குழிபறிப்பீர்கள். நைச்சியமாக தக்க தருணம் பார்த்து பழிவாங்குவீர்கள். எவரோடும் எந்த விடயத்திலும் மூர்க்கத்தனம் காட்டமாட்டீர்கள்.

அதேபோல உங்களுக்கு ஆபத்து என்று தெரிந்தாலும் வெளியிலிருந்து பார்ப்போருக்கு நெருங்கிய நண்பர்போல ஒரு நெருக்கமான தோற்றத்தைக் காட்டிக் கொண்டேயிருப்பீர்கள்.

நண்பர்களைத் தரப் பிரிப்பதில் சிலநேரங்களில் அறிவு பூர்வமாக நடந்து கொண்டாலும், அவ்வப்போது சிறு பிள்ளைத் தனமாகவும் பேசி சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள். பலவீனங்களை மறைக்கத் தெரியாது. நட்புக்காக மிகவும் வளைந்து கொடுப்பீர்கள். அப்படிப் பணிந்துபோவதை சிலர் தங்களுக்குச் சாதகமாகவும் எடுத்துக் கொண்டு உங்களை வீழ்த்தவும் செய்வார்கள்.

“சின்ன வயதிலிருந்தே நண்பர்களாயிருக்கிறோம். பிணையாளிக்குக் கையெழுத்துப் போடமாட்டேன் என்கிறாயே? அப்படியானால் எவன் வங்கிக் கடன் கொடுப்பான்?” என்று கேட்கும் நண்பனுக்காக கையெழுத்துப் போடப்போய், கடைசியில் கடன் செலுத்தப்படாமல் உங்கள் தலையில் வந்து விழும்போது ஆப்பிழுத்த குரங்குபோல் அவதிப்படுவீர்கள். உங்கள் முன்பாக யாரேனும் நண்பர்கள், முக்கியமாக பெண்கள் கண்ணீர் விட்டுப் பேசினால் பதிலுக்கு நீங்களும் எழுது சட்டைப்பையிலுள்ள பணத்தை எண்ணிப்பார்க்காமல் அள்ளிக் கொடுப்பீர்கள். பலதிலும் பட்டுத் தேறி தாமதமாகத்தான் மற்றவர்களைப் புரிந்து கொள்வீர்கள். ஏறத்தாழ நாற்பது வயதின்மேல்தான் அனுபவத்தோடும் உள்ளர்த்தத்தோடும் பேசும் திறனே வரும். நண்பர்களிடம் அதிக உரிமையெடுத்துக் கொள்ளும்போது அவர்களால் புறந்தள்ளப்படுவீர்கள்.

யாராவது உங்கள்மீது குற்றம் சுமத்து முன்பே “அவர் அப்படி நினைத்திருப்பாரோ, இப்படி எண்ணியிருப்பாரோ” என மன உளைச்சலுக்கு உள்ளாகி விடுவீர்கள். உங்களுக்கு உடலால் ஏற்படும் நோய்களைவிட மனதால் உடலுக்கு நீங்களாகவே உண்டாக்கிக் கொள்ளும் நோய்களே அதிகம். பயணங்கள் போக நேர்ந்தால் மணிபர்ஸை மறந்தாலும் மறப்பீர்களே தவிர தலைவலி மாத்திரையை ஒருபோதும் மறக்க மாட்டீர்கள். அந்தளவுக்கு தலைவலியால் அவதிப்படுவீர்கள். ஆனால் அடிக்கடி குளிப்பதிலும், கடல், நதி, குளங்களில் நீராடுவதிலும் அவாதியான விருப்பமிருக்கும். ஜெனன சாதகத்தில் சுக்கிரனோடு ராகுவோ, செவ்வாயோ இருந்தால் பால்வினை சம்பந்தமான நோய்கள் வரவாய்ப்புண்டு. அதே போல உங்களது உடல் பருமனாகும் போதும் கவனமெடுக்க வேண்டும். இடபராசியினருக்கு உடம்பில் ஏதும் பாரிய வருத்தம் வாதைகள் ஏற்படுவதற்கு முன்னால் அவர்களது உடம்பு பருத்து உப்பிவரும்.

இடபராசி ஆண்களுக்கு உடல் பருத்துவருமென்றால் இடபராசிப்பெண்களுக்கு வயிறும் இடுப்பும் உப்பிவரும். இடுப்பைச் சுற்றிலும் டயர் ஒன்றை மாட்டிக் கொண்டதுபோல் சதைத்திரட்சி உருவாகும். மேலும், வளர்த்த கடா மார்பில் பாய்வதென்பதும் உங்களுக்குத்தான் பொருந்தும். வெளியிலிருந்து யாரும் உங்களுக்கு எதிரிகளாக வரமாட்டார்கள். “என் பிள்ளைபோல வளர்தேன்! அவனே எனக்குத் துரோகம் பண்ணிவிட்டானே...!” என்று நீங்கள் மனம் வருந்திப் புலம்புமளவுக்கு எதிரிகள் உங்களிடையேயிருந்துதான் வெளிவருவார்கள். உங்கள் பட்டறையிலிருந்து வெளியேறியவர்களே உங்களுக்குகெதிராக போர்க்கொடி தூக்குவார்கள். உங்கள் நிழல்போல இருப்பவரிடம்தான் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எனவே ஒரே நபரிடம் எல்லாவற்றையும் ஒப்படைக்காமல் பலரிடமும் பிரித்துக் கொடுத்து வேலை வாங்கினால் நல்லது.

பொதுவாக நீங்கள் நல்லது செய்யப்போய் அது தீங்காக மாறுவதுதான் அதிகம். “உன் உதவியே எனக்கு வேண்டாம்! என் வாழ்க்கையைப் பார்த்துக் கொள்ள எனக்குத் தெரியும்!” என்று சொற்கணைகளால் சூடுபட்ட பிறகுதான் நீங்கள் மாறுவீர்கள். அதுவரை கொஞ்சம் வெகுவளித் தனமாகத்தான் வலம் வருவீர்கள்.

உங்களைப் பொறுத்தவரை வழக்கு பிணக்கு என்று வாழ்க்கையில் வருவதெல்லாம் வீடு, காணி, வாகனம் பற்றிய வழக்குகள்தான். புது வீடொன்றை வாங்கினால் கூட அதில் ஒழுங்கைத்தகராறுவரும். நீங்கள் ஒரு கிராமத்தில் இருந்தால் வயல், வாய்க்கால், வரப்புப் பற்றி பிரச்சினைவரும். நகரத்தில் இருந்தால் வீட்டு சாக்கடை நீர் அடுத்த விட்டுக்குள் வருவதாக தகராறு மூளும். பொதுவாகவே இடபராசியினர் அக்கம் பக்கத்தவருடன் கொஞ்சம் விட்டுக்கொடுத்துப்போவது நல்லது.

கூட்டுத் தொழில் எப்போதுமே சரிவராது. மறந்து போய்க்கூட கோயில்களுக்கு அருகிலோ, எதிரிலோ உள்ளகாணிகளையோ வீடுகளையோ வாங்காதீர்கள். அவ்விதம் வாங்கும் அவசியம் நேர்ந்தால் காணியின் அளவைகள், எல்லைகள், உறுதியின் மூலப்பிரதி அனைத்தும் சரியாக இருந்தால் மட்டுமே வாங்குங்கள். வீட்டு உறுதியை (DEED) வைத்து கடன் வாங்கினாலும் மீட்பதரிது.

உங்கள் ராசிநாதனான சுக்கிரன் வாகனத்திற்கும் காரகனாவார். அத்துடன் எதிரி, கடன் போன்றவைகளைக் குறிக்கும் ஆறாம் வீடாகிய துலாமிற்கும் அவரே உரித்தாளி. எனவே வாகனமென்று எதைவாங்கினாலும் அதனால் வில்லங்கமிருக்கும். விபத்துக்களை ஏற்படுத்தும். வருமானத்தின் பெரும்பகுதியை ‘ரிப்பேர்’ செலவு கொண்டுபோகும். காயமுற்றும் வழக்குகளை எதிர்கொண்டும் அவதிப்படவும் நேரும்.

இதைத்தவிர தனகாரகன் வியாழன் அட்டமத்தானாதிபதியாக வருவதால் (எட்டாம் வீட்டோனாக) வருவதால் திடீர்ச்செலவுக்களுக்கும் பஞ்சமிராது. ஆறுமாதங்களில் கொடுப்பதாக பொருந்திக்கொண்ட கடனை ஒரே மாதத்தில் தரச் சொல்லி கடன்கொடுத்தவர் வந்து கழுத்தைப் எடிப்பார். அதுபோக, மனைவி வழிச் சொந்தங்களாலும் உங்களில் பலர் கடனாளியாகிவிடுவீர்கள். “அவர்களின் நல்லது கெட்டதுகளுக்கு செலவு பண்ணியே நான் ஓட்டாண்டியாகி விட்டேன்!” என்றும் புலம்புவீர்கள். அதனால் காலத்துக்குத் தகுந்தாற்போல எது எதுக்கெல்லமாம் முக்கியத்துவம் கொடுக்கவேண்டுமென்பதை யோசித்துச் செய்யுங்கள்.

ஒருபோதும் வீட்டு உறுதிகளை (DEEDS) அடகுவைத்துக் கடன் வாங்க வேண்டாம்.

தங்கத்தை வைத்து வாங்கலாம். அதுவும் கல்பதித்து நகைகளாக வைத்தால்தான் சுபலத்தில் மீளலாம். நீங்கள் பாசம் கொண்டு ஏமாறுவது ஒருவிதமென்றால், பணம் கொடுத்து ஏமாறுவது இன்னொருவிதம். இதுவே அதிகம். யாராவது நூறு ரூபாய் கேட்டால், என்னிடம் ஐம்பது ரூபாய்தான் இருக்கிறது என்று சொல்லப் பழகுவது நல்லது. இப்படிச் சொல்லிக் கொடுத்தால் நீங்கள் அந்தக் கடனை திருப்பிக் கேட்கமாட்டீர்களென்று தெரியும். எனவே பெரிய தொகைகளை கடனாகக் கொடுக்கும்போது, அது திரும்பி வருமா என்று நன்றாக ஆராய்ந்து பின்னரே கொடுக்கவேண்டும்.

நீங்கள் அரசியலில் இருந்தால், யார் ஆட்சிக்கு வந்தாலும் எதிர்ப்பீர்கள். ஆளும் கட்சியின் குற்றம் குறைகளை கண்காணித்துக் கொண்டேயிருப்பீர்கள். குற்றங்கள் மட்டுமே உங்கள் கண்களுக்கு தெரியும்.

இளவயதில் அடிக்கடி உண்ணாவிரதம், ஊர்வலமென்று போராட்டக்களத்தில் இருப்பீர்கள். முக்கியமாக பெறும்பாலாரின் பிரச்சினைகளை முன்னின்று தீர்ப்பீர்கள். பாலியல் வன்முறைகள், சீதனக் கொடுமைகளுக்கு எதிராக கடுமையாய்க் கொதித் தெழுவீர்கள்.

உரியவர்களுக்கு தண்டனை வாங்கித்தராமல் தூங்கமாட்டீர்கள். ஏறக்குறைய 40 வயதுக்குமேல்தான் எல்லோரையும் புரிந்து கொள்கிற பக்குவம் வரும்!. “நீ குதிரையாக இருந்தாலும் இரு, கழுதையாக வேண்டுமானாலும் இரு. ஆனால் கழுதையாக இருந்து கொண்டு குதிரை மாதிரி நடிக்காதே! நீ நீயாகவே இரு!” என்று சூட்சுமமாகப் பேசுவீர்கள்!

Comments